எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 25 நவம்பர், 2023

வம்சம் தழைக்கச் செய்யும் ஊனையூர் ஸ்ரீ முத்து வெள்ளைச் சாத்தையனார்.

வம்சம் தழைக்கச் செய்யும் ஊனையூர் ஸ்ரீ முத்து வெள்ளைச் சாத்தையனார்.


சிவகங்கை மாவட்டம்  காரைக்குடிக்கு அருகிலுள்ள கானாடுகாத்தானிலிருந்து திருமயம் செல்லும் வழியில் இருக்கிறது  ஊனையூர்.  இங்கே பூரணா புஷ்கலா சமேத ஸ்ரீ முத்து வெள்ளைச் சாத்தையனார் கோயில் கொண்டிருக்கிறார். சக்தி வாய்ந்த தெய்வம். சாத்தன் என்ற பெயர் சமணச் சார்புடைத்தாம். சமண மதம் சார்ந்த சாத்தன் என்ற பெயர் ஐயனாரையும் குறிப்பது. ஐயனார் & சாத்தன் வணிகர்களின் குலதெய்வம். சாத்தன் என்றால் காப்பவன் என்று பேராம்.


தனது வணிகக் குழுக்களைக் காக்கும் தலைவன் பெயர் சாத்தன் என்றிருந்தது போல, மக்களைக் காக்கும் பேரரசர்களுக்கும் சாத்தன் என்ற பெயர் வழங்கப்பட்டிருக்கிறது வியக்கவைக்கும் ஒற்றுமை. அரசர்களின் பெயர்கள்  சாத்தன், சாத்தன் மாறன் , சாத்தன் பூதி, சாத்தன் பழியிலி மற்றும் ராணியின் பெயரும் சாத்தன் காளி என்று வழங்கப்பட்டிருக்கிறது.

இவ்வாறு காக்கும் தெய்வமான சாத்தையன் வம்சம் தழைக்கவும் அருள்பாலிக்கிறார் இங்கே. ஊனையூர் ஸ்ரீ முத்து வெள்ளைச் சாத்தையனார் கோவிலில் சன்னிதிக்கு எதிரே  வேண்டுதல் தொட்டில்கள் அசைந்தாடுகின்றன. வீட்டில் தொட்டிலாடவும் வம்சம் தழைக்கவும் இத்தொட்டில் கட்டி விடப்படுகிறது.

கிழக்குமுகமாகக் கண்மாயைப் பார்த்த கர்ப்பக்கிரகத்தில் விநாயகரும், பூரணை புஷ்கலையுடன் ஸ்ரீ முத்துவெள்ளைச் சாத்தையனாரும் அருள்பாலிக்க அதன் வெளிப்புற மண்டபத்தில் முன்னோடியும் தனிச்சந்நிதிகளில் ஸ்ரீ ஊனையூர் கருப்பர், ஸ்ரீ பண்டாரத்தையா, ஸ்ரீ வீரப்ப சுவாமி, ஸ்ரீ அகோரவீரபத்திரர் ஆகியோர் காட்சி அளிக்கிறார்கள். வெளி மண்டபத்தை ஒட்டிப் பத்ர காளிக்கும் தனி பீடம் உண்டு.


சுற்றுப் பிரகாரத்தில் பண்ணி வீரப்பர், செட்டிச்சி அம்மன் (இச்சந்நிதி உள்ளேயே சப்த கன்னியர்) , பிள்ளையார், சுப்ரமணியர், பைரவர் ஆகியோர் தனிக்கோயில் கொண்டிருக்கிரார்கள். அய்யனார் சந்நிதிக்கு எதிரே பலிபீடமும் அவரது வாகனமான  யானையும்  இருக்கிறது. பண்ணி வீரப்பர் சந்நிதியைச் சுற்றி உள்ள தோட்டத்தில்  வாடாமல்லி  நிரம்பிப் பூத்துக் கிடக்கும்.

அக்கம் பக்கம் கிராமத்தார் தங்கள் புது விளைச்சலை முன்னோடிக்கு முன்னே தெரியும் உயர்ந்த பளிங்குத் தளத்தில் கொட்டிக் கோவிலுக்கு அர்பணிப்பார்கள். இதை நெல் அளக்கும் இடம் என்று சொல்வார்கள். தோட்டம் & வயல் எதானாலும்  முதல் விளைச்சலை இங்கே கொண்டு வந்து கொட்டிக் கோவிலுக்குக் கொடுக்கிறார்கள்.

எல்லா அய்யனார் கோவில்களைப் போலவும் இங்கேயும் சிவன்ராத்திரி பிரசித்தம். உறவினர்கள் ஒன்று கூடி மாட்டு வண்டி கட்டிக்கொண்டு வந்து இரவு தங்கி அபிஷேகம், அலங்காரம் பூசை செய்து வடித்து  உண்பார்கள்.இவ்வாறு  வண்டி கட்டி வடித்துண்க வருவோர் தூங்காமல் விடிய விடிய விழிக்கக் கல்தரையில் செதுக்கியுள்ள இக்கட்டங்களில் ஆடுபுலி ஆட்டத்தை விளையாடுவார்களாம்.

சாதாரண நாட்களிலும் திருமணம், பிறந்தநாள், தீபாவளி, சிவன்ராத்திரி, குடிபுகுதல் போன்ற பண்டிகைகள், திருவிழாக்களின் போதும் இங்கே சென்று எல்லா திரவியங்களாலும் எல்லாச் சாமிகளையும் அபிஷேகம் செய்து, வஸ்திரம் பூமாலை சார்த்தி அர்ச்சனை செய்து தளிகை படைத்து வணங்குவது வழக்கம். சிலர் சுருட்டு சாராயமும் படைப்பார்கள். கிடாய்ப் பூசை, கோழிப்பூசையும் செய்து படைப்பார்கள். பண்ணி வீரப்பர் சந்நிதிக்குப் பக்கவாட்டில் ஒவ்வொரு தெய்வத்துக்கும் பலிபீடங்கள் உள்ளன. அங்கே இவற்றைப் படைப்பார்கள். சைவமாகப் படையல் செய்ய விரும்புவர்கள் சர்க்கரை சாதம், புளிசாதம் ஆகிய தளிகைகள் படைப்பார்கள்.


சோணையனுக்கு கோவிலின் எதிரில் கம்மாயினுள் தனிச்சந்நிதி அமைந்துள்ளது. காவல் தெய்வம் இவர். இவருக்குப் பொரி கடலை வெல்லம் படைத்து இளநீர் கண் திறந்து வைத்து சிதர்காய் செலுத்தி வருவது வழக்கம். கண்மாயைக் காப்பவர்  சோணையன். மனப் பயம் நீங்க மற்றும் நினைத்தது நிறைவேற இவருக்கு மண்புரவி செய்து வைப்பதாக நேர்ந்து கொள்கிறார்கள். அதன்படி உள்ளே சிறிதும் பெரிதுமான புரவிகள் அணிவகுக்கின்றன. 


வாயிலில் உயர்ந்து நிற்கும் ஐயனின் மாபெரும் புரவிதான் எவ்வளவு பேரழகு. புரவியின் கீழே திருவிழாக் கொண்டாட்டமாக நடனப் பெண், நட்டுவனார், வாத்தியக்காரர்கள் சுதைச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளார்கள். ஸ்ரீ முத்துவெள்ளைச்சாத்தையனார் கோவிலுக்குள் நுழைந்ததும் இடதுபுறம் பிரம்மாண்டமாக வரவேற்பார் இந்தக் குதிரை வீரர்.

கோயிலின் எதிரே பரந்து விரிந்த கண்மாய் என்றால் கோவிலின் இடப்புறம் ஒரு அழகான தாமரைத் தடாகம் காட்சி அளிக்கும். . இங்கே விடுமுறை நாட்களில் குழந்தைகள் குளித்துக் கும்மாளமிடுவார்கள். ஒருபுறம் கரை உயர்ந்து ஆலமரங்கள் வரிசையாக நின்று கவினுறக் காட்சி அளிக்கும். கொஞ்சம் சுத்தம். கொஞ்சம் கலங்கல் இதுதான்  இந்தத் தடாகம் மற்றும் கண்மாயின் நிலைமை. ஆனால் வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனைய உயர்வு என்பது போல் இந்தத் தாமரைத் தடாகம் அல்லிகளாலும் நீண்ட தண்டுகளுடனான தாமரைகளாலும் நிரம்பி இருக்கிறது.

காரைக்குடியில் இருந்து திருமயம் செல்லும் வழியில் நேமத்தான் பட்டி தாண்டி இருக்கிறது ஊனையூர். இக்கோயிலின் சிறப்பு என்னவெனில் குழந்தை பாக்கியம் பெற வேண்டி நேர்ந்து கொண்டவர்கள் மரத்தால் ஆன தொட்டிலைக் கொண்டு வந்து வேளாரிடம் கொடுத்துப் பூசை செய்கிறார்கள். அதன்பின் ஸ்ரீ முத்து வெள்ளை சாத்தையனார் சந்நிதிக்கு வெளிப்புர மண்டப விட்டத்தின் மையத்தில் உள்ள தாமரைப் புடைப்புச் சுதைச் சிற்பத்தின் நாற்புறமும் உள்ள வளையங்களில் வேண்டுதல் மரத் தொட்டில்கள் மாட்டித் தொங்க விடப்படுகின்றன. சிலர் அதிலும் குழந்தை பொம்மைகளையும் போட்டு இருக்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறியதும் திரும்பக் குழந்தையுடன் வந்து பூசை செய்து வணங்குகிறார்கள்.

இக்கோயில் சுற்றி உள்ள கிராமங்களில் வசிக்கும் வேளார்களால் நிர்வகிக்கப்படுகிறது. ஒவ்வொரு வேளாரும் முறை வைத்துக் கொண்டு இக்கோயிலில் பூசைகள் செய்கிறார்கள்.  நகரத்தார்களும் தங்கள் குலதெய்வமாகக் கொண்டாடி மகிழ்கிறார்கள். 2009 ஆம் வருடத்துக்குப் பிறகு தற்போது கும்பாபிஷேகப் புனருத்தாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தைமாதம்வாகில் கும்பாபிஷேகம் இருக்கும் என்று சொன்னார்கள்.

காடு கழனி விளைச்சல் பெருகவும், மனப் பயம் நீங்கவும், வம்சம் தழைத்துப் பெருகவும் ஆசீர்வதித்து அருள்கிறார் ஸ்ரீ முத்துவெள்ளைச் சாத்தையனார். எனவே வருடத்திற்கு ஒருமுறையேனும் சென்று கடவுளர்களின் அருளைப் பெற்று ஆராதனை செய்து அகமகிழ்ந்து வருவோம்.

கோவிலுக்குச் செல்வது எப்படி - காரைக்குடியில் இருந்து திருச்சி செல்லும் பேருந்தில் ஏறி ஊனையூர் நிறுத்தத்தில் இறங்கி கம்மாய்க்கரை வழியாக நடந்து செல்லலாம். அல்லது காரைக்குடியில் இருந்து கானாடு காத்தான் அல்லது நேமத்தான் பட்டி சென்று அங்கிருந்து ஆட்டோவில் சென்று வரலாம்.கோவில் திறந்திருக்கும் நேரம் காலை 8 மணியிலிருந்து மாலை3 மணிவரை. 3 கால பூஜை நடைபெறுகிறது.

ஊனையூர் வேளார் நாதனின் கைபேசி எண் -- 9943037739

ஊனையூர் வேளார் பெரியசாமியின் கைபேசி எண்  -- 7502284174

ஊனையூர் வேளார் ராஜேந்திரனின் கைபேசி எண் -- 9943847380

ஊனையூர் வேளார் ரவியின் கைபேசி எண் -- 9786786034

5 கருத்துகள்:

 1. அப்பர் ஸ்வாமிகளின் திருவாக்கில் இடம் பெற்று வருகின்றது - சாத்தன்..

  பதிலளிநீக்கு
 2. புதியதொரு கோயிலைப் பற்றித் தெரிந்து கொண்டேன்..

  சகல ஜனங்களையும் சாத்தனார் காத்தருளட்டும்..

  பதிலளிநீக்கு
 3. தமிழக அரசியலில் தமிழ்க்குடிமகன் என்றொருவர் இருந்தார்..

  அவரது இயற்பெயர் சாத்தையன் என்று நினைவு..

  பதிலளிநீக்கு
 4. ஸ்ரீ சாத்தையனார் பற்றிய பதிவு மகிழ்ச்சி.. நன்றி..

  பதிலளிநீக்கு
 5. மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் துரை சார்

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...