எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 27 நவம்பர், 2023

எழுத்தில் எனைக் கண்டு கொண்டேன் !

 எழுத்தில் எனைக் கண்டு கொண்டேன் !நான்நாகாவின் நான்மீடியாவுக்காக எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். எனது பெயர் தேனம்மைலெக்ஷ்மணன். வலைப்பதிவர், எழுத்தாளர், சுதந்திரப் பத்திரிக்கையாளர். அடையாள அட்டைகளில் மட்டுமே அடையாளமாய் இருந்த என் பெயர் இன்று இணையத்தில் உயிர்ப்புடன் இனங்காணப்படுவதற்கு என் தொடர் எழுத்துக்களே காரணம். ஏழு வலைப்பூக்களிலும், தமிழ் கூறும் நல்லுலகின் பல இணைய மற்றும் அச்சு இதழ்களிலும் பங்களிப்புச் செய்துள்ளேன். அச்சில் 24 நூல்களும் அமேஸானில் 57 நூல்களும் வெளியாகி உள்ளன. 25 இணைய விருதுகளும், 20 க்கும் மேற்பட்ட பட்டயங்களும் சான்றிதழ்களும் என் தொடர் முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட கௌரவங்கள்.

எனது தொடர் உழைப்புக்கும் எழுத்துலகில் எனது பங்களிப்புக்கும் நான்மீடியா நாகா போன்ற பல மீடியா நண்பர்களும், தோழிகளுமே காரணம். என் மனத் தடைகளை மீறி நான் எழுத வந்தது போல் பல்வேறு தடைகளைத் தாண்டி சாதனை படைத்து வரும் மகளிர் பற்றிய எனது முதல் தொகுப்பே ”சாதனை அரசிகள்”. என் எழுத்துத் திறனைக் கண்டுபிடித்து ஊக்குவித்தவர்கள் என் தமிழாசிரியை சுசீலாம்மா, அடுத்து 24 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் இணையத்தில் எழுதத் தொடங்கிய என்னைப் பத்ரிக்கையில் எழுத அழைத்தவர்கள் லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியை கிரிஜாம்மா. இவர்கள் இல்லாமல் இன்று இருக்கும் நான் இல்லை.

அடுத்து குழந்தைகள் பற்றிய கவிதைத் தொகுதி “ங்கா”. எந்த மொழியிலும் இல்லாத வார்த்தை. எல்லா மொழியினருக்கும் புரிந்த வார்த்தை. இதுதான் கேப்ஷன். நீரிலிருந்து பாலைப் பிரித்தெடுத்து அன்னம் அருந்துவது போல என்னைச் சுற்றியுள்ளவற்றில் இருந்து எனக்கானவைகளைப் பிரித்துப் பகுத்து நல்லனவற்றை மட்டுமே எடுத்துக்கொள்ள யாத்ததுதான் “அன்னபட்சி” கவிதைத் தொகுதி. பெண்கள், பூக்கள், ரொமான்ஸ் என்ற கருப்பொருளில் பேதை, பெதும்பை, அரிவை, தெரிவையிலிருந்து பேரிளம் பெண்கள் வரை பெண்மக்களைப் பூக்களோடு ஒப்புமைப்படுத்தி ஆண்பார்வையிலும் பெண்பார்வையிலும் பூத்தவைதான் ”பெண்பூக்கள்” கவிதைத் தொகுதி.


என்னைப் பாதித்த சில நிகழ்வுகளைச் சிறுகதையாக ஆக்கம் செய்ததுதான் “ சிவப்புப் பட்டுக் கயிறு”. பிரிவு, இறப்பு, தனிமை இவற்றோடு தன்னம்பிக்கையும் தன்னைத் தானே தேற்றிக்கொண்டு இயங்குவதும் இக்கதைகளின் மையப் பொருள். ”விடுதலை வேந்தர்கள்” நம் நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட மன்னர்கள் ராணிகளின் வீரக்கதைகள் அடங்கியது. ”தேனம்மைலெக்ஷ்மணனின் படைப்புலகம்” தேனம்மையாகிய என்னுடைய நேர்காணலுடன் கவிதைகளும் கலந்தது. கலைஞன் பதிப்பக வெளியீடு.

””பெண்மொழி, பெண் அறம், பெண்ணின் மரபு, மஞ்சளும் குங்குமமும் “ இவை நான்கும் மதுரை தானம் அறக்கட்டளையின் சுய உதவிப் பெண்களின் குழுக்களுக்காக வெளியிடப்படும் நமது மண்வாசம் என்ற இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. இல்லத்தரசிகள், வேலைக்குச் செல்லும்பெண்கள், புலம்பெயர்ந்தோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், சிசுக்கொலை, கருக்கொலை, கொத்தடிமைத் திட்டம், குழந்தைத் திருமணம், வாடகைத் தாய், பேறுகாலம், கல்வி மறுப்பு, கருத்து மறுப்பு,  முதியோர் உடல்நலம், பெண்களும் ஏன் குழந்தைகளுமே எதிர்கொள்ளும் பாலியல் பலாத்காரம்,  மூன்றாம் பாலினத்தவரின் பிரச்சனைகள், பாலியல் தொழிலாளிகளுக்கான தீர்வுத் திட்டங்கள், அரசியல், திரையுலகம், நிர்வாகம் இவற்றில் பெண்களின் சாதனைகள் ஆகியவற்றோடு தீர்வாகப் பெண்களுக்கான உதவித்திட்டங்களும் உதவும் சட்டங்களும் ஆகியவற்றையும் பேசின.

”காதல்வனம்” காதலர் தினத்தில் வெளியிடப்பட்ட ஒரு வெகுஜனப் பொழுதுபோக்கு நாவல். இத்துடன் ”கீரைகள்” உடல் ஆரோக்கியத்துக்கான நூல். வருடம் முழுவதும் நடக்கும் பல்வேறு திருவிழாக்கள், பண்டிகைகள், கடவுளர்க்கான கருப்பொருளோடு இளையோரும் நம் ஆன்மீகப் பாரம்பரியத்தை அறிந்து கொள்ளும் வண்ணம் வரையப்பட்ட “கோலங்கள்” நூலாக்கம் பெற்றுள்ளது. குழந்தைகளுக்கான உலகில் திரும்பப் புகுந்து பார்க்கும் ஆவலில் எழுதப்பட்ட நூல்கள் ”ஆத்திச்சூடிக் கதைகள், நன்னெறிக்கதைகள் பாகம் 1, நன்னெறிக் கதைகள் பாகம் 2, மகாபாரதத் துணைக் கதைகள்”.


ஐஞ்சிறு காப்பியங்களை இளையோருக்கு எளிமையாக எடுத்துக் கூறும் முயற்சியாக உரை எழுதப்பட்டவை ”வளையாபதி & குண்டலகேசி, நாககுமார காவியம், நீலகேசி” இதில் நீலகேசியைப் புதினமாக ஆக்கியுள்ளேன். அவள் என்னைப் புதுப்பித்தவள். கிமு மூன்றாம் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட ”சாணக்ய நீதி”யை இன்றையத் தலைமுறையினரும் பள்ளி, கல்லூரி மாணாக்கரும் புரிந்துகொள்ளும் வண்ணம் தமிழில் பதம்பிரித்துப் பதவுரை, பொழிப்புரையுடன் கொடுத்துள்ளேன்.

இந்திய விடுதலைக்குப் பாடுபட்ட சாதாரணப் பெண்மணிகளிலிருந்து செங்கோல் ஏந்திய மகாராணிகள் வரை ”ஒப்பற்ற இந்தியப் பேரரசிகளில்” இடம் பெற்றுள்ளார்கள். சிறுகதைத் தொகுப்பில் நகரத்தார் வாழ்வியல் ஓரிரு கதைகளில் இடம்பெற்றிருந்தாலும், முக்கால் நூற்றாண்டுகளாகப் பழமையின் இறுகிய பிடியில் தன்னைத் திணித்துத் தனித்து வாழும் ஒரு வெள்ளைச்சீலைக்கார ஆச்சியின் சரித்திரம்தான் “சோகி சிவா” நாவல்.
 
என் எழுத்துக்களின் கருப்பொருள் அநேகமாகப் பெண்கள் தங்கள் பல்வேறு பருவத்திலும் எதிர்கொண்ட, எதிர்கொள்ளும் பிரச்சனைகளைப் பேசுவதாக இருக்கும். ஒவ்வொரு முறையும் அவர்களைப் பற்றி எழுதும்போது நானும் அவர்கள் நிலையில் மூழ்கித் தவிக்கிறேன். பின் மூச்சுப் பிடித்து முக்குளித்து எழுந்து அவர்களைப் போலவே என்னை இன்னும் தெளிவாக்கி இரும்பைப் போல் உறுதியாக்கிக் கொள்கிறேன்.

எழுத்து ஒரு வடிகால். அதற்கும் ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும். பிரச்சனையின் ஆணி வேரைக் களைதல். விஷ வித்துக்களை அகற்றுதல், எதிர்மறை எண்ணம் கொண்டோரிடமிருந்து விலகி இருத்தல், தடைக்கற்களை எல்லாம் படிக்கற்களாக்கி முன்னேறுதல், சோர்வு எழும் போதெல்லாம் தன்னைத் தானே அவ்வப்போது  ஊக்கமூட்டியும் பாராட்டியும் கொள்ளல், தொடர்ந்து செயல்படுதல், நலம்விரும்பிகளுடன் உரையாடுதல் இதன்படியே என்னை நான் புதுப்பித்துக் கொள்கிறேன். உங்களைப் புதுப்பித்துக் கொள்ளுங்கள். இதுவே நான் ஒவ்வொரு மகளிருக்கும் சொல்லும் தன்னம்பிக்கைச் செய்தி.  என் புத்தகங்களின், எழுத்துக்களின் வாயிலாகப் பலருக்கும் சில நல்ல விஷயங்களைச் சொல்ல முடிந்ததில் நன்றி நான்மீடியாவுக்கும் நான்நாகாவுக்கும். அவர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...