எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 5 நவம்பர், 2022

புரட்சிச் சதுக்கம் - கில்லெட் - லக்ஸர் ஸ்தூபி (PLACE DE LA CONCORDE,PARIS,LUXOR OBELISK)

 யூரோப் டூரின் ஒன்பதாம் நாள். பூலோக சொர்க்கமாம் பாரிஸில் இருந்தோம். 

முதல் நாள் இரவு பார்த்த இந்த லக்ஸர் ஸ்தூபியின் அருகில் உள்ள (ப்ளேஸ் டி லா கன்கார்ட் ) ப்ரெஸ்ட் சிலையின் அருகில்தான் பதினாழாம் நூற்றாண்டில் நடந்த பிரஞ்சுப் புரட்சியில் அதன் அக்கிரம ஆட்சியாளர்கள், பிரபுக்கள் கில்லட் கொண்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். விக்டர் ஹியூகோ எழுதிய ( லே மிஸரபிள்ஸ்) ஏழை படும் பாடு நாவலில் வரும் ஜீன் வால் ஜீன்( ஜான் வல் ஜான்/ ழான் வல் ழான் ) , கோஸ்த் எல்லாம் ஞாபகம் வந்தார்கள். 

இந்த இடத்தின் பெயரே புரட்சிச் சதுக்கம்தான். இங்கே இருக்கும் இந்த லக்ஸர் ஸ்தூபி இரு நாடுகளுக்கிடையேயான நல்லெண்ண அடிப்படையில் கொண்டு வந்து வைக்கப்பட்டுள்ளது. 

நவம்பர் 1830 இல் எகிப்தின் ஒட்டாமான் பேரரசின் அதிபர் முகம்மத் அலி பாஷாவிடமிருந்து பரிசாகக் கிடைத்தது இந்த லக்ஸர் ஸ்தூபி. 

இதுக்குப் பதில் பரிசா ஃப்ரான்ஸ் ஒட்டாமான் அரசுக்கு 1840 இல் ஒரு மெக்கானிக்கல் கடிகாரத்தை வழங்கியது. அதுக்கு இன்றையப் பெயர் கெய்ரோ சிட்டாடல் க்ளாக். 


இந்த லக்ஸர் ஒபிலிக்ஸ் ஸ்தூபி 3,300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது (எகிப்தியத் தூண்கள்.) இரண்டாம் ரமேஸஸ் என்பவரின் ஆட்சிப் பகுதியில் இருந்து லக்ஸர் கோயில்களின் முன்னால் இருபக்கங்களிலும் நிறுவப்பட்டிருந்தன இவை.

இவற்றில் ஒன்றைத்தான் அப்படியே அலேக்காகத் தூக்கி அகன்ற படகில் வைத்து அனுப்பி இருக்காங்க. 

ப்ளேஸ் டி லா கன்கார்டில் பல்வேறு சிலைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. 
நடுவில் இந்த மாதிரி சிற்பங்கள் அடங்கிய நீர்வீழ்ச்சி வேறு. 





இது செந்நிறத்தாலான கிரானைட்டில் ஒரே கல்லால் ஆன ஸ்தூபி என்பது மிகச் சிறப்பு. இதில் பல்வேறு அந்தக்கால உருவ எழுத்து/உரைநடை வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 

ஹைரோக்ளைஃபிக்ஸ் எனப்படும் பல்வேறு பறவைகள், உருவங்கள், பொருட்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 23 மீட்டர் உயரமுள்ளது இது. கிட்டத்தட்ட 75 அடி உயரம். 
இதைக் கொண்டு வந்த வழிமுறைகள், அதன் சிக்கலான கணிதங்கள், பயன்படுத்தப்பட்ட இயந்திரங்கள், போக்குவரத்துகள் அனைத்துமே இதிலேயே வரையப்பட்டுள்ளன. 


ப்ளேஸ் டி லா கன்கார்ட் என்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள இது 1936 இல் ஃபிரான்ஸின் தேசிய நினைவுச் சின்னமாகப் அறிவிக்கப்பட்டுள்ளது. 


1700 களில் நெப்போலியன் காலத்திலேயே இதுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தும் 1830 இல் தான் இந்த ஸ்தூபி இங்கே எகிப்து ப்ரான்ஸ் கலாச்சார பரிவர்த்தனையைப் பிரதிபலிக்கும் பொருட்டு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

அதன் அருகே நிற்கத் தயங்கி எதிர்த்திசையில் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். 






1820இல் ஐந்தாம் சார்லஸ் அரசர் எகிப்து மியூசியம் ஒன்றைத் திறக்க விரும்பி இதைக் கேட்டிருக்கிறார். ஜான் ஃப்ரான்காயிஸ் சாம்போலியன் என்ற மொழியியல் வல்லுநர்தான் இதன் சிறப்பைக் கூறி இங்கே நிறுவ உறுதுணையா இருந்திருக்கிறார். 



1830 இல் இதை கொண்டுவர திட்டமிட்டு, 1833 இல் தான் இது நீர்ப்பயணம் செய்து இங்கே வந்தது. அதன் பின் 1836 இல் மன்னன் லூயி ஃபிலிப் காலத்தில்தான் இதை ப்ளேஸ் டி லா கன்கார்டில் நிறுவினார்கள்..



அந்தக் காலத்துலேயே இந்த ஒரு ஸ்தூபியைக் கொண்டு வரவே  இரண்டரை மில்லியன் ஃப்ரான்க் செலவழிச்சதால இன்னொரு ஸ்தூபியை எகிப்திலேருந்து தூக்காம விட்டுட்டாங்க.



1998 இல் ஃப்ரான்ஸ் அரசு இந்த ஸ்தூபியின் உச்சியைத்  தங்கத்தகடு கொண்டு மூடி இருக்கு.

மில்லியனக் கொண்டாட்டத்தின் விளைவா இதைச் சுற்றி 1999 முதல் 2000 வரை சன் டயல் கூடப் பொருத்தி இருக்காங்க. 



மேலும் பாரிஸின் பிரபலப் பெண் கலைஞர் ஒருவர் 2015 இல் இதை ஒளி வீசச் செய்ய பக்கங்களில் தகடு போன்ற அமைப்புக்களை வடிவமைத்துள்ளார். 

ஆனா என்னவோ போங்க. கில்லட் இருந்த இடம்னு தெரிஞ்சதும் கொஞ்சம் கிலியாத்தான் இருந்துச்சு. காத்துல கூட ஒரு மாதிரி வரட்சியும் வெறுமையும் வெப்பமும். 

சில ராஜாக்கள் தங்கள் ஆட்சிக்காலத்துலேயே இந்த கில்லட்டைப் பயன்படுத்தி பொது இடங்களில் குற்றவாளிகளைத் தண்டிச்சிருக்காங்க. அது பின்னால அவங்க கழுத்தைத் துண்டாக்கவே பயன்பட்டிருக்கு.

ஒரு ராஜா அதன் ப்ளேடு சரியில்லை , வளைவா இருக்கு அப்பிடி இருந்தா ஒரே வெட்டுல கழுத்து துண்டாகாதுன்னு சொல்லி கில்லட்டோட ப்ளேடை இன்னும் நேராக்கி சாணை பிடிக்கச் சொல்லி இருக்காரு. 

அதேதான் அவருக்கும் நிகழ்ந்தது. காலை மாட்டி ஒரு கட்டையைப் போட்டுப் பூட்டி பலி பீடம் போன்ற இந்த கில்லட் மேடையில் படுக்க வைத்து ( முகத்தின் மேலே துணியைப் போடுவாங்க போல தெரியுது) சர்னு கில்லட்டை இறக்கி வெட்டிக் கொன்னுருக்காங்க. துண்டான தலை விழ பக்கத்துலேயே பக்கெட்டு வேற வைச்சிருப்பாங்களாம். காலக் கொடுமைடா சாமி. இப்பிடி தண்டிக்கப்படுறவங்க ராஜாவானாலும் ஏழைகளானாலும் கேக்கவே கஷ்டமா இருந்தது. 

ஏழைகளை வாட்டிய பிரபுக்களும் ஆட்சியாளர்களும் ரத்த வெள்ளத்தில் துண்டு துண்டா தண்டிக்கப்பட்ட இடம்னு இங்கே இருக்கப் பிடிக்கல.சீக்கிரம் கிளம்பி பாட்டிக்ஸ் மௌச்சஸில் (பறக்கும் படகில் சீன் நதியின் மேல்) ஊரைச் சுத்திப் பார்த்துட்டுக் கிளம்பினோம். அமைதிப் பூங்காவாம் (!) ஜெர்மனிக்குத் திரும்பினோம். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...