எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 1 நவம்பர், 2022

திராவிடப் பேரழகி, நடிப்பு இராட்சசி சரிதா !

திராவிடப் பேரழகி நடிப்பு இராட்சசி சரிதா !


 

நமக்கு சுஜாதா, இந்திரா காந்தி அம்மா, இவங்க போல நடிகை சரிதான்னாலும் ஒரு காலத்துல உயிர். இப்பவும் சரிதாவைப் பிடிக்கும். ஜூலி கணபதி போன்ற படத்தில் நெகட்டிவ் காரெக்டரில் பார்த்த போது கொஞ்சம் கெதக் என்றிருந்தாலும் சரிதாவை ரொம்ப பிடிக்கும். ஏனெனில் மௌனகீதங்கள் வந்தபோது நான் டென்த் படித்துக் கொண்டிருந்தேன். ஊருக்கு ஒரு உறவினர் திருமணத்துக்கு வந்தபோது எங்கள் மாமா மூக்குக் குத்திக் கொள்ளும் எல்லாருக்கும் மூக்குத்தி கொடுப்பதாகக் கூற ஒரு ஆர்வக்கோளாறில் நானும் என் பெரியம்மா பெண்களும் மூக்கைக் குத்திக் கொண்டு வலியால் கண்ணெல்லாம் கலங்கி ( நரம்பில் இறங்கிவிட்டது ஆணி ) ஒரு வழியாக பள்ளிக்குச் சென்றோம்.



அங்கே எங்கள் ஆசிரியை கேட்டார், என்னடி உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா.

இல்லீங்க மிஸ்.

அப்புறம் ஏண்டி மூக்குக் குத்திக்கிட்டு இருக்கே

பெரிய பெண் ஆனா மூக்குக் குத்திக்கணும்னு சொன்னாங்க என்று கொஞ்சம் மழுப்பித் தப்பித்தபோது வந்த படம் மௌனகீதம். அதில் சரிதா மூக்குத்தி மின்ன மின்ன கோபம் ஜொலிக்க நடிப்பார். ரொம்ப ரொம்பப் பிடிச்சுப் போச்சு. காதோரம் மடித்தாற்போல வரும் அதே ஹேர் ஸ்டைலை வேறு பல்வேறு ஆண்டுகளாக ஃபாலோ பண்ணினேன். :)

எங்களுக்குத் தமிழ் வகுப்பு எடுத்தஅறம்வாழிமாஸ்டரின் ஐந்து வயதுப் பேரன் என்னைப் பார்த்தால் மூக்குத்திப் பூ மேலே காத்து உக்கார்ந்து பேசுதையா என்று பாடுவான். நாம சரிதாவோ என்ற நினைப்பில் மூக்குத்தி பிடித்துப் போனது உண்மை.

அப்புறம் நூல் வேலி, அவள் அப்படித்தான், நெற்றிக்கண், தண்ணீர் தண்ணீர், ஊமை விழிகள், பொண்ணு ஊருக்குப் புதுசு, தங்கைக்கோர் கீதம், வேதம் புதிது, கீழ்வானம் சிவக்கும்  ஆகிய படங்கள் கொஞ்சம் குழப்பத்தோடு பிடித்தன. காரணம் அன்றைய ஹீரோயின்ஸ் வெறும் மெழுகு பொம்மைகளாக வந்தபோது வெவ்வேறு காரெக்டர்களில் உணர்வு பூர்வமாய் நடித்து மனதைக் கவர்ந்தவர் சரிதா.

நல்லா பார்த்தீங்கன்னா தெரியும் அந்தக் காலத்துல நட்ட நடு நெத்தில பொட்டு வைச்சுக்குவாங்க. சரிதாவின் கண்ணும் நாக்கை மடித்து அவர் செய்யும் குறும்பும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும். மலையூர் மம்பட்டியானில் ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம்என்ற பாட்டை என்றைக்குக் கேட்டாலும் நான் ஃப்ளாட்தான். அவ்ளோ ரசிகை அவருக்கு நான்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனக் கிட்டத்தட்ட 215 படங்களில் நடித்திருக்கிறாராம். தமிழின் மிகச் சிறந்த நடிகைகளைப் பட்டியலிட்டால் நிச்சயம் சரிதாவுக்கு அதில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு இடம் உண்டு. 1978 இல் மரோசரித்திராவின் தெலுங்குப் பதிப்பில் அறிமுகமானார். கேபியின் கதாநாயகிகளின் பலமே முகபாவங்களும் வசனங்களும்தான். கேபி அறிமுகப்படுத்திய கதாநாயகிகளில் சரிதா மிகச் சிறப்பானவர்.  

ஆந்திரப் பிரதேசத்தில் 1964 இல் முனிப்பள்ளியில் பிறந்த சரிதாவின் இயற்பெயர் அபிலாஷா. 1988 செப்டம்பர் 2 இல் முகேஷை மணந்து கொண்டார். இவர்களுக்கு ஷ்ரவண், தேஜாஸ் என இரு மகன்கள் உண்டு. 2011 இல் இருந்து இவரும் முகேஷும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

குட்டையாய் பூசினாற்போன்ற உடல்வாகு, நம்மை விழுங்கி விடுவதுபோன்ற மாபெரும் கண்கள், வடிவழகான மோவாய், தன்னையே எள்ளும் புன்னகை, எல்லையற்ற குறும்புத்தனம், கோபத்தில் எரிமலை, குளிர்ந்தால் பனிமலை இவைதான் சரிதா. பின்கொசுவச் சேலை கட்டி வந்தால் அசல் கிராமத்துப் பேரழகியேதான். நமக்கு மிக நெருக்கமான ஒருவரைப் பார்ப்பது போன்ற தோரணைதான் சரிதாவின் பலமே.

அவள் அப்படித்தானில் முடிவில் கமலை மணந்துகொள்ளும் ஒரு கிராமியப் பெண் கதாபாத்திரம். அக்னி சாட்சி ஓரிரு சீன்கள் பார்த்திருக்கிறேன். மனநோய் பீடித்த மனைவியாக வித்யாசமான கேரக்டர். தப்புத்தாளங்களும் அப்படித்தான். விளிம்பு நிலை மனிதர்களை ஆவணப்படுத்திய படம். இதிலும் சரசுவாக சரிதா, தேவுவாக ரஜனியின் நடிப்பு அபாரம். நூல் வேலியில் ஒரு நடிகையின் மகளாக அவர் மறைவுக்குப் பின் ஆதரவற்றுப் போகும் பாத்திரம். பக்கத்து வீட்டின் சரத்பாபு இவரிடம் தவறாக நடந்து கொள்ள அவர் மனைவி சுஜாதாவும் இவரும் உணர்ச்சிக் கொந்தளிப்பில் நடிப்பில் போட்டி போடுவார்கள். இவர் அதிலும் முதிர்ச்சியாக இருப்பதுபோல் பாத்திர அமைப்பு.

எல்லாப் பரிமாணங்களிலும் நடித்திருக்கிறார் சரிதா. அக்னி சாட்சியில் பொறாமை கொண்ட மனைவியாக, தப்புத்தாளங்களில் விலைமகளாக, நூல்வேலியில் நடிகையின் மகளாக பாலியல் சுரண்டலுக்கு ஆளாகும் பதின்பருவப் பெண்ணாக, அச்சமில்லை அச்சமில்லையில் கோபமும் ஆக்ரோஷமும் கொண்ட புரட்சிப் பெண்ணாக, மௌனகீதங்களில் சுயகௌரவமும் கோபமும் கொண்டவளாக, ஜுலி கணபதியில் தான் நினைத்ததை அடையவிரும்பும் மனச்சிக்கல்கள் கொண்ட பெண்ணாக எனப் பல்வேறு பரிணாமங்களில் நம் மனதைக் கொள்ளை கொண்ட நடிப்பு ராட்சசி.


தண்ணீர் தண்ணீர், புதுக்கவிதை என இயக்குநர் இமயம் பாலச்சந்தரின் 22 படங்களில் நாயகியாக நடித்திருக்கிறார் இவர் !. பலவிருதுகளும் வென்றிருக்கிறார். நெஞ்சில் ஓர் ராகம், கொம்பேறி மூக்கன், ஊமை விழிகள், சாட்டை இல்லாத பம்பரம், வீட்டுக்கொரு கண்ணகி, அண்ணி, கல்யாண அகதிகள், எங்க ஊரு பொண்ணு, சிவப்பு சூரியன், தங்கைக்கோர் கீதம், பூப்பூவா பூத்திருக்கு, ஒரு புல்லாங்குழல் அடுப்பூதுகிறது, ருசி கண்ட பூனை, தாய் மூகாம்பிகை, மேல் மருவத்தூர் ஆதி பராசக்தி, வண்டிச்சக்கரம், எங்க ஊர் கண்ணகி, பணம் பெண் பாசம், சக்களத்தி, மங்கை ஒரு கங்கை, ஃப்ரெண்ட்ஸ், ஆல்பம் ஆகியவை இவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தக்கவை.

அக்னி சாட்சியில் ”கனா காணும் கண்கள் மெல்ல உறங்காதோ” என்ற பாடலும், மலையூர் மம்பட்டியானில் ”சின்னப் பொண்ணு சேலை” பாடலும் மிகவும் பேசப்பட்டன. நெற்றிக்கண்ணில் பாடம் புகட்டும் பெண்மணியாக ரஜனியுடனும், கீழ் வானம் சிவக்கும் படத்தில் மருத்துவரான சிவாஜியின் மருமகளாக சிவாஜியுடனும் போட்டி போட்டு நடித்திருப்பார். பொண்ணு ஊருக்குப் புதுசு படத்தில் ஊருக்கு வரும் புது அரசு அலுவலர் ருக்மணியாக சைக்கிளில் வலம் வருவார். சாமக்கோழி, சோலைக்குயிலே பாடல்கள் வித்யாசமானவை.  வேதம் புதிதில் பேச்சியாகவே வாழ்ந்திருப்பார்.

அச்சமில்லை அச்சமில்லையில் தேன்மொழியாக ”ஓடுகிற தண்ணியில ஒரச்சு விட்டேன் சந்தனத்த.. சேர்ந்துச்சோ சேரலையோ செவத்த மச்சான் நெத்தியில” என உலகநாதனை (இராஜேஷை) நினைத்துப் பாடுவது அழகியல். அதேசமயம் நேர்மையான அவரின் கணவர் அரசியலுக்குள் நுழைந்ததும் செய்யும் அல்லுசில்லுகளைப் பொறுக்க முடியாமல் விலகுவது விவேகம். ஆதாயத்துக்காகக் கொள்கைகளையும் கட்சியையும் மாற்றிக் கலவரத்தைத் தூண்ட நினைக்கும் கணவனை தான் மணந்துகொண்ட அதே ஆகஸ்ட் 15 இல் மாலை போட்டுக் கத்தியால் குத்துவது விபரீதம்.  

அதேபோல் தண்ணீர் தண்ணீர் மிக முக்கியமான படம். தண்ணீர் சுமக்க  30 கிமீ பெண்கள் நடந்து சென்று படும் துயரத்தை ஆவணப்படுத்திய படம். இப்படமும், அச்சமில்லை அச்சமில்லை படமும் சரிதாவின் முத்திரைப் படங்கள்.

சுஜாதாவில் “ நீ வருவாய் என நான் இருந்தேன்.. ஏன் மறந்தாய் என நான் அறியேன் “  பாடலைப் பாடுவது இராஜலெக்ஷ்மியானாலும் சுஜாதாவின் மௌனமான பாவனைகள், உதட்டுச் சுழிப்பு, புருவநெளிப்பு , தோழியில் தோளில் கைபோட்டு வளைப்பது எல்லாம் ரசனைக்குரியதாக இருக்கும்.

கலைமாமணி விருது, ஒரு வெள்ளாடு வேங்கையாகிறது என்றபடத்துக்காக 1979 இல் விருது, வண்டிச்சக்கரத்துக்காக 1980 இல் விருது, அக்னி சாட்சிக்காக 1982 இல் விருது, அச்சமில்லை அச்சமில்லைக்காக 1984 இல் விருது பூ பூத்த நந்தவனத்துக்காக 1988 இல் விருது பெற்றிருக்கிறார். ஃபிலிம்பேர்அவார்டு, நந்தி அவார்டு, ஸ்பெஷல் ஜூரி அவார்டு, தமிழக அரசின் திரைப்பட விருதுகளும், கர்நாடக அரசின் திரைப்பட விருதுகளும் பெற்றிருக்கிறார்.

பின்னணிக் குரல் கொடுப்பதிலும் சிறந்தவர். பத்து வயதுச் சிறுமியிலிருந்து பல்வேறு வயது கொண்ட நடிகைகளுக்கும் ( நக்மா, தபூ, சௌந்தர்யா, லைலா, ஊர்மிளா மடோன்கர், சுஷ்மிதா சென், சிம்ரன், குஷ்பூ, சுகாசினி, ரஞ்சிதா, ரோஜா, வினிதா, விஜி, மாதவி, சுகாசினி, சுதா சந்திரன், பானுப்பிரியா, விஜயஷாந்தி, ராதா, நதியா, ஷோபனா, அமலா, ஸ்ரீதேவி, மதுபாலா, மீனாக்ஷி சேஷாத்ரி, மீனா, ரம்யா கிருஷ்ணன், பிரியா ராமன் , ஊர்வசி ஆகியோருக்கும் ) பின்னணிக் குரல் கொடுத்திருக்கிறார். சிறந்த பின்னணிக் குரலுக்காகவும் விருதுகள் வாங்கி இருக்கிறார்.

இதழ்களைக் குவிக்கும் விதம், ஒருகண்ணை மூடி மறுகண்ணால் தலைசாய்த்துப் பார்க்கும் அழகு, நாவின் நுனியால் உதட்டைத் தொடும் குறும்பு, அந்தக் கண் நிகழ்த்தும் அத்தனை சாகத்தையும் அவரின் குரலும் நிகழ்த்தும். திராவிடப் பேரழகியான அவரைப் பார்த்து மிகக் குள்ளம், கறுப்பு, குண்டு என்று பிறர் காணும் குறைபாடுகளை எல்லாம் கண் செய்யும் வசியமும், குரலின் கவர்ச்சியும் காணாமல் போக்கி விடும். ஆரம்பகாலங்களில் புஷ்டியாக இருந்தாலும் பார்வைக்கு மெலிவாக நளினமாக இருந்த சரிதாதான் ஜூலி கணபதியின் கனத்த கேரக்டருக்காக இருமடங்காக ஆனார். கேன்சர் பாதித்த பெண்ணாக நடிக்க மொட்டை அடித்துக் கொண்டவரும் இவரே!

”நீ வருவாய் என நான் இருந்தேன். ஏன் மறந்தாய் என நான் அறியேன். சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு” என்ற ஒரு பாடல் போதும். என் பதின்பருவத்தையும் திராவிடப் பேரழகி, நடிப்பு இராட்சசி சரிதாவையும் ஒருசேர மீட்டுக்கொண்டு வரும் வல்லமை வாய்ந்தது.



டிஸ்கி:- மணி மடல்களில் எனது சினிமாப் பார்வைக் கட்டுரைகளைப் பாராட்டிய கடியாபட்டி வாசகர் திரு. நாராயணன் அவர்களுக்கு நன்றி. இக்கடிதத்தை வெளியிட்ட தனவணிகனுக்கும் நன்றி. 

4 கருத்துகள்:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு
  2. எனக்குப் பிடித்த நடிகைகளில் சரிதாவும் ஒருவர். அவருடைய படங்களை, குறிப்பாக பாலசந்தர் இயக்கத்தில் வெளிவந்தவற்றை, பல முறை பார்த்துள்ளேன். அவரைப் பற்றிய இக்கட்டுரை சிறப்பாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  3. இக்கட்டுரை சிறப்பாக உள்ளது

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஜம்பு சார்,

    நன்றி அஷோக்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...