எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 11 மே, 2022

சிறகில்லா தேவதை தேவயானி

சிறகில்லா தேவதை தேவயானி


மென்மையான முயல்குட்டிப் பாதங்கள்தான். மனம் மயக்கும் மோனாலிஸா புன்னகைதான். ஆனால் அவர் இராஜகுமாரனை மணந்துகொண்ட அழகிய சிண்ட்ரெல்லா. ”வெள்ளை வெளேர்னு ஒரு ஜப்பான் பொம்மை” என்று சூரியவம்சம் 25 ஆம் ஆண்டு நிறைவில் எடுக்கப்பட்ட பேட்டியில் கணவரால் புகழப்பட்டவர். அவர்தான் அழகு ராணி தேவயானி.  

இத்தனை வருடம் கழித்தும் இன்னமும் இராஜகுமாரன் சொல்வது போல் வெண்மையா மென்மையா ஜப்பான் பொம்மை போலவேதான் இருந்தார். சௌந்தர்யா, சுவலெட்சுமி, சினேகா போல் தன்மையான அழகு தேவதை தேவயானி. க்ளாஸ்கோ பேபி, அமுல் பேபி போல் தோற்றம். எப்போதும் சிறிது நீரைப் பொழியத் தயாராய் இருக்கும் ஈரமான கண்கள். குட்டியாய்க் குவிந்த இதழ்கள் அடர்த்தியான சுருண்ட கேசம். பூவினும் மெல்லிய பூங்கொடி இதுதான் தேவயானி.

டைரக்டரின் கைகளில் நாங்களெல்லாம் பொம்மைகள்தான். எங்கள் காரெக்டரை உருவாக்கி திரையில் உலவ விட்டவர்கள் டைரக்டர்கள்தான். அதிலும் விக்ரமன் சார் நம்மால் எல்லாமே முடியும் எனத் தன்னம்பிக்கை கொடுத்தவர் எனப் பேட்டியில் கூறினார்.

எளிய குடும்பத்தில் 74 இல் பிறந்தவர் சுஷ்மா ஜெயதேவ் என்கிற தேவயானி. பிரியங்கா, இனியா ஆகிய இரு மகள்களும், மயூர், நகுல் என்ற சகோதரர்களும் உண்டு. “ஆட்ராட்ரா நாக்க மூக்கா” என்ற பாடலில் குதியாட்டம் போட்டு இளைய உலகத்தையே ஆட வைத்த நகுல் இவரது சகோதரர்தான். 2001 இல் டைரக்டர் இராஜகுமாரனுடன் திருமணம்.  

1993 முதல் 2013 வரை இருபது வருடங்கள் தமிழ்த் திரையில் மட்டுமல்ல. தெலுங்கு, மலையாள, வங்காளத் திரைகளிலும் தன் நளினமான நடிப்பால் ஜொலித்தவர். இதுவரை 77 படங்கள் நடித்திருக்கிறார். கோலங்கள் தொடருக்காக விருது, கலைமாமணி விருது. சிறந்த சின்னத்திரை நடிகைக்கான விருதுகள் பெற்றவர். பாரதி படத்தில் செல்லம்மாளாக நடித்துச் சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது பெற்றவர்.

மேலும் வித்யாசமான விருதைப் பெற்றது இவர் நடித்த படமாகத்தான் இருக்கும். லிவிங்ஸ்டனுடன் இவர் நடித்த ”குருவம்மா”  பெண்களை சிறப்பாக சித்தரிக்கும் திரைப்படத்திற்கான தமிழக அரசு திரைப்பட விருதினைப் பெற்றது.

பெரிய இடத்து மாப்பிள்ளையில் இரண்டுஹீரோயின்களில் ஒருவராக  நடித்துள்ளார். சொல்லப்போனால் தமிழில் ஆதியில் இருந்தே அநேக படங்களில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக நடித்து வந்துள்ளார். கிரி படத்தில் அர்ஜுன், ரீமா சென், ரம்யாவோடு நடித்திருப்பார். நினைத்தேன் வந்தாய் படத்தில் ”மல்லிகையே மல்லிகையே மாலையிடும் மன்னவன் யார் சொல்லு” பாடலில் ரம்பாவும் இவருமே விஜயிடம் மனதைப் பறிகொடுத்துப் பாடும்பாடல் அழகு. ஆனந்தம், ஐந்தாம் படை ஆகியனவும் சிறந்த படங்கள்.

இவர் நடித்ததில் எனக்கு மிகவும் பிடித்த படங்கள் காதல் கோட்டை, ஃப்ரெண்ட்ஸ், தெனாலி, அழகி, பஞ்சதந்திரம், நீ வருவாய் என. இவை நல்ல திரைக்கதை அம்சம் உள்ள படங்களும் கூட. பாடல்களும் அருமை.

நீ வருவாய் என என்ற படத்தில் அஜீத், பார்த்திபன் ஆகியோரோடு நந்தினியாக, “பூங்குயில் பாட்டுப் பிடிச்சிருக்கா, ஒரு தேவதை வந்துவிட்டாள் உன்னைத் தேடியே” ஆகியன சிம்ப்ளி சூப்பர்ப்.

விருதுபெற்ற படமான சூர்ய வம்சத்தில் சரத்குமாரோடு ”சலக்கு சலக்கு சரிகை சேலை சலக்கு சலக்கு. அடடா அல்வாத்துண்டு இடுப்பு அது இடுப்பு” எனக் குட்டிப் பெண்ணாகக் குத்தாட்டமும் போட்டிருக்கிறார்!

இவருக்கு நிஜமான டர்னிங் பாயிண்ட், நேஷனல் அவார்ட் வின்னிங் படம், ப்ரேக் கொடுத்த படம் காதல் கோட்டை. இதிலும் இன்னொரு நாயகியாக ஹீராவும் உண்டு. கடுதாசிக் காதல், மௌனக் காதல், பேசாக் காதல், முடிவில் ஜெயிப்பது சுபம். கமலி மனசுள் கட்டும் காதல் கோட்டை ஜெய்ப்பூர்க் கோட்டையிலிருந்து சூர்யாவைக் கட்டி இழுத்து வந்துவிடும் விதம் அற்புதம்.   


ஃப்ரெண்ட்ஸ் படத்தில் ”குண்டுமல்லிக் கொடியைக் கொள்ளை அடிக்காதே” என்னும் “தென்றல் வரும் வழியைப் பூக்கள் அறியாதா” என்ற பாடலில் நீல சாட்டின் உடையணிந்த குட்டி முயலாக இவர் துள்ளி ஓடுவதும் வெண்பாதங்களும் வெகு அழகு.  

தெனாலி படத்தில் தமிழ்மகன்களின் ஆதர்ச மனைவி போன்றதொரு பாத்திரத்தில் நடித்திருப்பார். ஜெயராமுக்கும் இவருக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகும் அதே நேரம் கமலுடனான அத்தினி சித்தினி பாடல் காட்சியிலும் கெமிஸ்ட்ரி, பிஸிக்ஸ், அனாடமி என எல்லாமே இயைந்து காட்சியளிப்பது கண்ணுக்கு விருந்து.

அழகி தங்கர்பச்சான் இயக்கத்தில் நந்திதா தாஸோடு இவர் நடித்த படம், பார்த்திபன் மனைவியாக நற்குணப் படிவம்.

பஞ்சதந்திரம் படம் பற்றி ஹிந்துவில் சினிமா விமர்சனம் வெளிவந்தது அதில் “தேவயானி ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ்” என ஹிந்து என் ராம் புகழ்ந்திருந்தார். ஹே ராம் ஹே ராம் என அவர் கிளி போலக் கொஞ்சும் போது ராம் என்ற பெயர் உள்ள யாருமே மயங்காமல் இருக்க முடியுமா என்ன ?! இத்தனைக்கும் அதில் சிம்ரன், சங்கவி, ஊர்வசி, ஐஸ்வர்யா, வித்யா ஆகிய ஐவரோடு ரம்யா கிருஷ்ணனும் அல்போன்சாவும் கூட நடித்திருந்தார்கள்.

விண்ணுக்கும் மண்ணுக்கும் ராஜகுமாரன் எடுத்த காதல் படம். காதலுடன் – தேவயானி நடித்து காதலர் தினத்தில் வெளியான இப்படத்தை இயக்கியவர் இராஜகுமாரன். தயாரிப்பு தேவயானி. காதல் கோட்டையில் தேவயானியாக ஆரம்பித்துத் திருமதி ராஜகுமாரனாக நடித்த கடைசிப் படம் திருமதி தமிழ். இது இவர் நடித்த 75 ஆவது படம். இரட்டை வேடத்தில் நடித்த படமும் கூட.

எனக்கு இவரிடம் மிகப் பிடித்தது திரு வி என் சி டி அவர்கள் மறைவுக்குப் பின் கமலா தியேட்டரில் இவர் பேசிய இரங்கல் உரை. நன்றி மறப்பது நன்றன்று என்பதன்படி இவர் திரு வி என் சிடி அவர்களை ஐயா என்று மரியாதையாக விளித்தும், தன் குழந்தைகளுக்கும் தனக்குமான காட்ஃபாதராகப் புகழ்ந்தும் நெக்குருகியதுதான்.

சென்னைக்கு நடிக்க வந்த முதல் நாள் அவரை அழைத்து வந்தவர்கள் வடபழனி முருகன் கோயிலுக்கு அழைத்துச் சென்றார்களாம். அதன் பின் கமலா தியேட்டர் வழியாக வந்தார்களாம். அப்போது கமலா தியேட்டரைக் காட்டிச் சொன்னார்களாம், நம்மைப் போன்ற சினிமாக்காரர்களுக்கு  இதுதான்மா கோயில் என்று. உடனே அவர் கமலா தியேட்டரைப் பார்த்து வணங்கினாராம். அதன் பின் அவர் தமிழ்த் திரையுலகிலும் சின்னத்திரையிலும் மிகப்பெரும் வட்டத்தில் உலா வந்தார். இவ்வாறு செய்நன்றி மறவாத தேவயானி இன்றும் சிறகில்லா அழகு தேவதையாகவே காட்சியளிப்பதில் வியப்பென்ன! 

3 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...