எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 28 ஏப்ரல், 2018

உறங்காப்புளிக்குள் உறைந்திருந்த குருகூர் நம்பி. தினமலர் சிறுவர்மலர் -15.

உறங்காப்புளிக்குள் உறைந்திருந்த குருகூர் நம்பி.
தாமிரபரணி ஆறு சலசலத்தோடிக் கொண்டிருக்கிறது. அதன் கரையில் அமைந்திருக்கிறது குருகூர் என்ற ஊர். அந்த ஊரில் மிகப் பெரிய புளியமரம் ஒன்றிருந்தது. மிக நீண்ட அடர்ந்த கிளைகள், நல்ல சாட்டை சாட்டையாய்ப் புளியம்பழங்கள் நிரம்பி இருந்தன. அதன் ஒருபுற வேரும் கிளைகளும் நீரைத் துழாவிக் கொண்டிருந்தன.
அந்த மாபெரும் புளியமரத்தில் பல்வேறு பறவைகளும் கானம் பாடிக் கொண்டிருந்தன. இரவில்கூட அம்மரத்தின் இலைகள் சலசலத்துக் கொண்டிருக்கும்.  எனவே அதை ஊரார் உறங்காப்புளி என அழைத்தார்கள். அந்தப் புளியமரத்தில் ஒரு மிகப் பெரும் பொந்து ஒன்று இருந்தது. அங்கே அமர்ந்திருக்கும் ஒருவரைத்தான் நாம் பார்க்கப் போகின்றோம்.
ஆமாம். யார் அவர்? ஏன் அந்தப் பொந்துக்குள் அமர்ந்திருக்கிறார். இத்தனைக்கும் அவருக்குப் பதினாறே வயதுதான். இச்சிறுவயதில் அங்கே அமர்ந்திருக்கக் காரணம் என்ன ?

வர்தான் பன்னிரு ஆழ்வார்களில் முதல் ஆழ்வார் நம்மாழ்வார். கலியுகத்தில் விஷ்ணுவின் பக்தர்களாக அவதரித்தவர்களே ஆழ்வார்கள். அதன்படி திருநகரியில் விஷ்வக்சேனர் நம்மாழ்வாராக காரியர் என்பாருக்கும், உதயமங்கை என்பாருக்கும் மகவாக கலியுகம் பிறந்து நாற்பத்தி மூன்றாவது நாளில் அவதரித்தார். அவருக்குப் பெற்றோர் இட்டபெயர் பாராங்குசம்.
மிக அழகான செக்கச் சிவந்த கைகள், சின்னஞ்சிறுகால்கள், பொம்மையைப் போன்று பொலிந்த உடல்.. இறையம்சமாகப் பிறந்ததால் ஏற்பட்ட தேஜஸ். மயங்கிப் போய் நின்றார்கள் பெற்றவர்கள்.
திருக்குருகூர் நம்பியின் கோயிலில் இருந்த புளியமரத்தடியில்  தங்கத் தொட்டில் கட்டிப் பிள்ளையைப் போட்டார்கள். அந்தத் தங்கத் தொட்டில் அழகா இல்லை தங்கம்போல் பொலிந்த பிள்ளை அழகா என வியந்து நின்றார்கள் ஊரார்.
ஐயகோ இதென்ன கொடுமை. பிறந்த பிள்ளையிடம் அசைவேதுமில்லையே. அது பேசுவதுமில்லை, பால் குடிப்பதுமில்லை. ஏன் அழுவது கூட இல்லை.. என்ன செய்வோம் என திருக்குருங்குடி நம்பியிடம் பெற்றவர்கள் “நம்பியே உன்னை நம்பினோமே, எங்கள் நம்பிக்கையை அழித்துவிட்டாயே. நீ ஏன் எங்கள் குழந்தை இயற்கைக்கு மாறாக இருக்கும்படி படைத்தாய்” என அழுது தொழுது அரற்றிக் கிடந்தார்கள்.
”மாறாமல் அசைவில்லாமல் கிடக்கும் இவனை மாறன் எனலாமா. இறைவா உன்னைத் தன் அன்பால் கட்டியமையால் பாராங்குசம் என அழைத்தோமே.. சட நாடியில்லாமல் கிடக்கும் சடகோபனாகயிருக்கிறானே. இவனை எப்படியாவது உயிர்ப்பி “ என அழுது தொழுது தினம் இறைவனிடம் தங்கள் வேண்டுதலைச் சமர்ப்பித்து வந்தார்கள் பெற்றவர்கள். அவர்களது வேண்டுகோளை நிறைவேற்ற இன்னொருவரை அனுப்பினார் பெருமாள். யார் அவர் ?
யோத்தியில் இருந்து புறப்பட்டுத் தென்மார்க்கமாக வந்தார் மதுரகவி என்பார். அவர் பிறந்ததும் திருக்குருகூரின் பக்கத்திலிருந்த திருக்கோளூர்தான். தாமிரபரணியும் சலசலத்து அலைக்கரம் தட்டிக் கொண்டிருக்கிறாள் இரு கரையிலும். இரு ஆழ்வார்களை ஒரே நேரத்தில் காணப்போவதாலா.? ஆசிரியனும் சீடனும் ஒன்று நோக்கும் காலம் கைகூடிவிட்டதா..

தெற்கு நோக்கித் தன் ஊர்ப்பக்கமாக வர வர அவரை மிகப் ப்ரகாசமான ஒரு ஒளி ஈர்க்கிறது. ”ஒரே காடாகக் கிடக்கிறதே. எங்கேயிருந்து வருகிறது இந்த ஒளி.. ? தன்னை ஈர்க்கும் காரணம் புரியாமல் அத்திக்கே நோக்கி நடக்கிறார். இவருடைய ஞானாசிரியர் இருக்கும் இடம் அது எனத் தெரியாமல் அந்தப் புளியமரத்தடியை வந்தடைகிறார். அங்கே ஒரு பெரிய பொந்து காட்சி அளிக்கிறது. அதிலிருந்துதான் மிகப்பெரும் வெளிச்சம் வருகிறது. பொந்துமட்டும் இருக்கிறது. வேறொன்றுமில்லையே.. இதென்ன விசித்திரம்.. ?
என்னதான் இருக்கிறது அதில்.. எட்டிப் பார்த்தார் மதுரகவி. அஹா ஒரு பதினாறு வயதுச் சிறுவன் நிஷ்டையில் இருக்கிறான். என்ன இது எந்த ஒரு அசைவுமில்லையே. ஒரு சிறுகல்லை விட்டெறிகிறார். அப்போதும் பெரிதாக அசைவேதுமில்லை. பதிலுமில்லை. நல்லவேளை மூச்சு விடுகிறான். உயிரோடுதான் இருக்கிறான். லேசாகக் கண் திறந்து பார்க்கிறானோ..
”ரொம்ப மண்டைக்கனம் பிடித்தவனாய் இருப்பானோ. ஏன் இந்த அபாயமான பொந்துக்குள் அமர்ந்துள்ளான். அவனைக் கண்டால் ஏன் தனக்கு மிகப் பிடிக்கிறது..”என நினைத்தார் மதுரகவி.
அவனிடம் கேள்வி ஏதும் கேட்கலாமா. மௌனச்சாமியார் மாதிரி அமர்ந்திருக்கிறானே..
”யார் இந்த ஆளு?” ஊர்க்காரர் ஒருவரிடம் வினவுகிறார்.
”அவர் பேரு மாறன்”. ஊர்க்காரர் சொல்கிறார்.
”என்ன செய்கிறார் இங்கே.”
”அது தெரிலீங்க. அவரு பொறந்ததுலேருந்து பதினாறு வருஷமா இங்கேதான் இருக்குறாரு. பொறந்ததுலேருந்து பேச்சும் இல்லை சாப்பாடும் இல்ல. அசைவும் இல்லை. இந்தப் பொந்துக்குள்ளேதான் உக்கார்ந்துருக்காரு. இவரு அப்பா அம்மா இவர் பொறந்ததும் இங்கே தங்கத் தொட்டில் கட்டிப் போட்டு இவரை அதில் போட்டு ஆட்டினாங்க. இவர் பேச்சு அசைவு இல்லாம இருக்கது கண்டு பெருமாள்கிட்ட முறையிட்டுட்டு ஒருத்தர் பின்னாடி ஒருத்தரா பரமபதம் போய்ச் சேர்ந்துட்டாங்க. “
”என்னது பேச்சும் அசைவும் இல்லையா. அதுவும் பதினாறு வருஷமா.”. கேட்டதும் அதிர்கிறார் மதுரகவி.
யாராயிருக்கும் இவர்.. அவர் மண்டை குடைகிறது. விஷ்ணுவின் அம்சமோ. சரி ஏதும் கேள்வியைக் கேட்டு வைப்போம்.
“ செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால் எத்தைத் தின்று எங்கே கிடக்கும் ? “ இந்தக் கேள்விக்கு அர்த்தம் ”இறப்பு நேரக்கூடிய மனிதனுக்குக் குழந்தை பிறந்தால் என்ன தின்று எங்கே வாழும் ?..”
எதிர்பாராமல் ஒரு சத்தம். அட பதில் சொல்லி விட்டானே அந்த மௌனச்சாமி. அவன் தானா சொன்னான். ஆமாம் பதினாறு வருஷங்களாகப் பேசாத அவன் தான் சொன்னான். “ அத்தைத் தின்று அங்கே கிடக்கும். ?” கேட்டதும் புல்லரிக்கிறது , விதிர்விதிர்க்கிறது மதுரகவி ஆழ்வாருக்கு. அந்த மௌனச்சாமி சொல்லியதன் அர்த்தம் இதுதான். “  அக்குழந்தை தான் வாழும்வரை உள்ள கர்மாவை அனுபவித்து அங்கேதான் கிடக்கும்”.
ஊரே கூடி நின்று வியப்பாகப் பாக்கிறது. பதினாறு வருஷமாகப் பேசாதவன் பேசிவிட்டான். அவனைப் பேசவைத்தவரையும் ஆச்சர்யமாகப் பார்க்கிறது ஊர்.
எப்பேர்ப்பட்ட ஞானம் இச்சிறுவயதிலேயே. அதிலும் சிஷ்யன் வந்ததும் ஆசிரியர் வெளிப்படுவது எவ்வளவு பெரிய விஷயம். அவரையே ஞான குருவாக ஏற்றார் மதுரகவி. அவரைப் பற்றிக் கண்ணிநுண்சிறுதாம்பு என்ற நூலை இயற்றுகிறார்.. பெருமாளைப் பாடியதுபோல் தன் ஆசிரியரான நம்மாழ்வாரைப் பற்றி அதிகம் பாடி இருக்கிறார் மதுரகவி ஆழ்வார்.  
நம்மாழ்வாரோ சீடனிடம் பதில் அளித்ததில் இருந்து மௌனம் துறந்து பெருமாளைப் புகழ்ந்து பாடத் தொடங்கினார். முப்பத்தைந்து வயதுவரை வாழ்ந்த இவருக்கு முப்பத்துநான்கு திருநாமங்கள் உண்டு. சீடனைக் கண்டதும் உயிர்த்துப் பாடிய ஆழ்வார் இவர் ஒருவர்தான்.
உறங்காப்புளிக்குள் உறைந்திருந்த குருகூர் நம்பி எனப்படும் நம்மாழ்வார் முப்பதைந்து ஆண்டுகளே வாழ்ந்தார். ஆனால் நாலாயிரம் திவ்யப் ப்ரபந்தத்தில் ஆயிரத்து இருநூற்றுத் தொண்ணூற்றாறு பாடல்கள் இவர் பாடியதுதான்.

டிஸ்கி:-  இந்தக் கதை இதிகாச புராணக் கதைகள் என்ற தலைப்பில் 20. 4. 2018  தினமலர் சிறுவர்மலர் இதழில் இடம்பெற்றுள்ளது. நன்றி தினமலர் சிறுவர் மலர் & தேவராஜன் ஷண்முகம் சார்.

6 கருத்துகள்:

 1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு
 2. நம்மாழ்வாரின் பாடல்களைப் படித்துள்ளேன். தொடர்புடைய கதையை தற்போதுதான் அறிந்தேன். நன்றி.

  பதிலளிநீக்கு
 3. அறியாத அரிய, புராணக்கதையை அறிய தந்தமைக்கு நன்றி சகோ.

  பதிலளிநீக்கு
 4. நேற்றுப்படித்ததில் இருந்து கொஞ்சம் சந்தேகம்.

  நம்மாழ்வார், திருவாய்மொழி முழுதும் பாடினார். மதுரகவி ஆழ்வார், பிறகுதான் அவரது ஒரே திவ்யப்ப்ரபந்தப் பாடலான 'கண்ணி நுண் சிறுத்தாம்பு' இயற்றினார். (அதில், வேதம் முழுமையும் தமிழில் செய்த குருகூர் சடகோபன்' என்று தன் ஆசிரியரைச் சொல்கிறார்.

  பதிலளிநீக்கு
 5. நம்மாழ்வார் பற்றிய பதிவு அற்புதம்.

  பதிலளிநீக்கு
 6. நன்றி ஜம்பு சார்

  நன்றி கில்லர்ஜி சகோ

  நன்றி நெல்லைத் தமிழன். நீங்கள் சொல்வதுதான் சரி .

  நன்றி முத்துசாமி சகோ.

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...