எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 5 பிப்ரவரி, 2015

கரையோர அகதியாய்

இந்தக் கனவுகள்
பசித்துப் பரந்து கிடக்கின்றன.
குளத்தோரப் பாசியாய்

கப்பல்கள் சென்றுவிட்டன
கரையோர அகதியாய்
வானம் வெறிக்கும் நான்

தன்னாராய்ச்சி
அலைகளுக்கு ஓய்வே கிடையாது
இந்த விரல்கள்
அழுதுகொண்டேதான் அசைகின்றன.

என்னுடைய கொலுசுகள்
கண்ணாடிக்கூண்டுக்குள்ளே
சிறைப்பட்டுப் பாதம்
பார்த்துப் பரிதவிக்கும்.

இருட்டு வானம் மெல்லவந்து
குளிர்க்காசைச் சுண்டிப் போடும்.


கரையோர அகதியாய்க்
கவிழ்ந்து கிடக்கும் நான்.

வான் சுண்டிய குளிர்காசு
பொறுக்க ஓடித் திரியும்
சிறுவர்களாய் மரங்கள்.

கறுப்புக் குளிர்களை
மன இலைகளுக்குள்
நிரப்பிக் குலுக்கி
நீர்ச்சில்லறை சிந்தும்.

கரையோர அகதியாய்
விரைத்துச் சாகும் நான்.

ஆகாயம் தூங்கவிட்டுப்
பறவைகள் பறந்து போயின.’

மணல் தைர்யமாய்
முதுகிலேறிச் சவாரி செய்யும்
நிலா வெள்ளைச் சாயம்
அடித்துக் கிளுகிளுக்கும்.

அங்கமிழந்த
வெற்று முண்டமாய்க்
கரையோரம்
சிதறிக்கிடக்கும் நான்.

போர்வைகள் நூல் நீக்கி
நிர்வாணித்துக் கிடக்கும்.
மன ஆகாயம் பகலில்
சும்மாயிருந்துவிட்டு
இரவில் கறுப்புக்கண் கொண்டு
பச்சையங்கள் தேடும்.

மனச்சாரளத்துள்
அழுக்குப் பனி சிந்தும்
ட்யூப்லைட் நிலவுகள்.

காற்றிலாடு துணிகள்
விசிறி அடிக்கும்
நீர்ச் சொட்டுக்களாய்க்
கசகசவென்ற நட்சத்திர ஊசிகள்
முதுகில் குத்தும்.

கரையோர அகதியாய்
மண்ணில் முகம் பதித்திருக்கும் நான்.

- 83 ஆம் வருட டைரி.

4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...