செவ்வாய், 12 நவம்பர், 2013

புதிய தலைமுறையில் பெண்கள் டைரிக்காக.

கல்லூரியில் படிக்கும்போது  எடுத்த பாடம் வேதியலாக இருந்தாலும் எனக்குப் பிடித்த பாடம் தமிழ்தான். தமிழம்மா அனைவருமே என் பாசத்திற்குரியவர்கள். ஃபாத்திமா மிஸ், பாலாம்பா மிஸ் ஆகியோருடன் நான் இன்றும் அதிகம் நேசிப்பது என்னுடைய சுசீலாம்மாவையே.


சிம்மக் குரலோன் என்று சிவாஜியைச் சொல்வது வழக்கம். எங்க சுசீலாம்மாவைப் பெண் சிம்மம் என்று சொல்லலாம்.  நிமிர்ந்த நன்னடை , நேர் கொண்ட பார்வையுடன், கணீர்க்குரலில் வகுப்பெடுத்தாரென்றால் மொத்த வகுப்பும் தமிழில் கட்டுண்டு கிடக்கும்.

மதிய நேரம் முதல் வகுப்பில் ஆர்கானிக், இனார்கானிக், பிசிகல் கெமிஸ்ட்ரி வகுப்புக்களில் கைமேல் தலையை வைத்துத் தாலாட்டுவது போல மயங்கிக் கிடக்கும் நாங்கள் சுசீலாம்மா வகுப்பென்றால் அட்டென்ஷனில் இருப்போம். காரணம் அந்த வசீகரக் கம்பீரக் குரல். அவர்களின் எழுத்தும்கூட பளிச்சென்று அழுத்தம்  திருத்தமாகக் கம்பீரமாக இருக்கும். டீச்சர்களை ரசிக்காத குழந்தைகள் உண்டா என்ன..

என்னுடைய தமிழாசிரியை சுசீலாம்மா தினமும் தன்னுடைய ஆராய்ச்சிக்காக வாங்கிய தமிழ் புத்தகங்களை எனக்கும் என்னுடைய தோழி உமா மகேஸ்வரிக்கும் வாசிக்கக் கொடுப்பார்கள். அதைப் படித்தவுடன் தோன்றும் கருத்துக்களை எழுதிக் கொடுப்பது வழக்கம். அதையும் வாசித்து அவர்கள் திருத்தங்கள் சொல்வார்கள்.

சில சமயம் அக்கருத்துக்களைக் கவிதை வடிவில் எழுதுவதும் வழக்கம். பொதுவாய்த் தோன்றும் கவிதைகளை விட இதுபோல புத்தகங்களைப் படித்தபின் தோன்றும் கவிதைகள் வித்யாசமாக இருக்கும்.

பதின்பருவம் என்பதால் அந்த வயதிற்கே உரிய இரண்டுங்கெட்டான் மனநிலை நிலவுவது வழக்கம். அவ்வப்போது தோழிகளுடன் ஏற்படும் மனவருத்தம், ஏக்கம், ஆசை, அபிலாஷை எல்லாவற்றையும் கவிதையாகக் கிறுக்கித் தள்ளுவது உண்டு.

நடுவில் சிறிது சுய இரக்கமும் எட்டிப் பார்க்கும். நாம் மற்ற பெண்களைப் போல வெள்ளைச் சிவப்பில்லை, தலை நிறையக் கூந்தலில்லை. கிளியைப் போல கூர்மையான மூக்கில்லை, நாம் ஏதோ எழுதுகிறோம், அது ரசிக்கும்படி இருக்கிறதாவெனத் தெரியாது , மனதில் இந்தப் புலம்பல்களுக்கு மத்தியில் ஆங்கில இலக்கியம் படிக்கும் உமா மகேஸ் எழுதுவது சிறப்பாக இருக்கிறது. நாம் எழுதுவது அவ்வளவு சிறப்பாக இருக்கிறதாவெனத் தெரியவில்லை.
தமிழம்மாவுக்கு நாம் எழுதுவது பிடித்திருக்கிறதாவெனத் தெரியவில்லை என்று நானே ஏதோ நினைத்துக் கொண்டு  டைரியின் ஒரு பக்கத்தில் ஏகத்துக்கும் சுய இரக்கம் பீரிடக் கிறுக்கி இருந்தேன்.

”நான் எனக்காக எனக்கு மட்டுமே எழுதிக் கொள்வதாகக் கூறினாலும் அதை ரசிக்க விமர்சிக்க  ஒரு உயிர் வேண்டும் என்ற எண்ணம் ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டு இருக்கிறது போலிருக்கிறது. “ என்றும்,
காயங்கள் என்ற தலைப்பில் ஒரு கவிதையும் எழுதி இருந்தேன்.

“வானின் காயங்கள்
கறுப்பு மேகங்கள்
மண்ணின் காயங்கள்
மலட்டு பாகங்கள்
நிலவின் காயங்கள்
நிலையில்லா அலைச்சல்கள்
காலக் காயங்கள்
இரவின் ( இருளின்) பூசல்கள்.
வெளிச்சத்தின் காயங்கள்
வெற்று நிழற்பிம்பங்கள்.
காலையின் காயங்கள்
உறையும் குளிர்த்துளிகள்
மாலையின் காயங்கள்
மஞ்சள் பரவல்கள்.
மலையின் காயங்கள்
மடிந்து வீழும் மடுக்கள்
உறவின் காயங்கள்
உரசல் பேதங்கள்
உணர்வின் காயங்கள்
உணராத உள்ளங்கள்
கனவின் காயங்கள்
கலங்கிய கண்விழிகள்
மனதின் காயங்கள்
நிரந்தர சூன்யங்கள்..”

இது இரண்டையும் எழுதி இருந்த டைரியில் இன்னொரு கதைக்கான விமர்சனத்தையும் எழுதி இருந்தேன். இதை எழுதியதை மறந்து விட்டு வழக்கம்போல சுசீலாம்மாவிடம் விமர்சனத்தை வாசிக்க என்னுடைய டைரியைக் கொடுத்தேன்.

மறுநாள் வகுப்புக்கு வந்த சுசீலாம்மா ஒன்றும் பேசவில்லை, தினமும் வகுப்பு முடிந்து செல்லும்போது எங்களுடைய டைரியைத் திருப்பி அளிப்பது வழக்கம்.

தீர்க்கமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு என் டைரியைக் கொடுத்துச் சென்றார்கள். ஆர்வத்தோடு விடுதிக்குச் சென்ற நான் டைரியைப் பிரித்தால் அதன் முன் பக்கங்களில் கறுப்பு மசியில் நான் எழுதிய சுய இரக்க வரிகளைக் கோடிட்டு ” ஏனிந்த சோகம்? சோர்வு? தன்னம்பிக்கையின்மை ? ரசிக்க விமர்சிக்க  மறுப்பு யாரிடமிருந்து? ஒவ்வொரு அங்குலத்தை எழுதியவுடனும் பிறரால் அது ரசிக்கப்படவேண்டும் என எதிர்பார்ப்பது படைப்பாளியின் இயல்பு. ஆனால் ரசனை, விமர்சனம் பற்றிய எதிர்பார்ப்புக்களில் மட்டுமே பொழுதுகள் நகர்த்தப்படுகையில் அன்றாடக் கடமைகள் முடங்கிப் போகும், அதுவே என் அறிவுரை. புரிந்தால் சரி. Susila. ’’என எழுதி இருந்தார்.

ஒரு நிமிடம் உலகமே சுழன்றது போல இருந்தது. என்னடா நம்முடைய சுய இரக்கத்தை இப்படித் தம்பட்டம் அடித்து எழுதி அதை அம்மாவின் பார்வைக்கும் அனுப்பி விட்டோமே என்று. சொரேல் என்று அவர்கள் உரைத்திருந்த கருத்துக்கள் உறைத்தன.

அங்கீகாரத்துக்காகப் பாராட்டுக்காக ஏங்கவேண்டியதுதான் ஆனால் இப்படியா எனப் பலதும் போட்டுக் குழப்பி ஒரு வழியாக இரவைக் கழித்தேன். திரும்ப விழிக்கும்போது தன்னம்பிக்கையோடு விழித்தேன்.  ஓரளவு அந்தத் தாழ்வு மனப்பான்மை, சுய இரக்கம் போன்றவற்றில் இருந்து மீண்டாலும் வாழ்க்கையின் அடுத்து வந்த காலகட்டங்களில் எப்போதேனும் அது திடீரென்று தாக்கினால் இந்த எழுத்துக்களை எடுத்துப் படித்துக் கொள்வேன் . சக்தி வந்தது போல் இருக்கும்.

இதில் இன்னும் சிறப்பென்னவென்றால் விவேகானந்தரைப் பற்றிய கவியரங்கத்துக்கு என் பெயரையும் முன்மொழிந்ததோடு கவியரங்கம் முடிந்ததும் ”இவர்கள் எல்லாம் பேனாவின் கழுத்து வலிக்க எழுதுபவர்கள் ” என்று சபையில் பாராட்டி ஒரு பேனாவையும் பரிசளித்தார். இதுதான் நான் வாழ்வில் பெற்ற அரியதும் பெரியதுமான பரிசு.

இன்று நான் வலைத்தளம் எழுதுவதற்கும் அவர்கள்தான் முன்னோடி. அவர்களை விட்டுப் பிரிந்ததும் எழுத்தை மறந்த நான் திரும்ப அவர்களைச் சந்தித்ததும் எழுதத் துவங்கினேன். ஒரு மந்திரம் போல அது நிகழ்ந்தது .

இன்றும் இரு ரஷ்ய நூல்களை மொழிபெயர்த்து திக்கெட்டும் விருதுகளைக் குவித்துக் கொண்டிருக்கும்( பாஷா பூஷண் விருது, கனடா இலக்கியத் தோட்ட விருது, எஸ் ஆர் எம் யூனிவர்சிட்டி வழங்கிய ஜி யு போப் விருது )  என் ஆசிரியையை நான் இன்னும் வியந்து பார்த்துப் பெருமையுறுவதோடு என் தன்னம்பிக்கை முன்னோடியாகக் கொள்கிறேன்.


டிஸ்கி:- 19, செப்டம்பர் 2013, புதிய தலைமுறை பெண்கள் டைரியில் வெளியானது.

1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...