எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

வியாழன், 6 டிசம்பர், 2012

குளம்.

பற்களான படிக்கட்டுக்களோடு
பாசம் புதையக் காத்திருந்தது குளம்.

தட்டுச் சுற்றான வேட்டியுடன்
தலை குப்புறப் பார்த்தபடி இருந்தான் அவன்.

விரால் மீன்களாய் விழுந்து
துள்ளியபடி இருந்தார்கள் சிறுவர்கள்.

இரவுக்குள் ஒளிய நினைத்து
கருக்கத் துவங்கியது தண்ணீர்.


மொழியற்றவனைப் பார்த்து
நாவசைத்துப் பாடத்துவங்கியது குளம்.

நிலவும் சேர்ந்து இசையமைக்க
அவனும் இசைய விரும்பினான்.

தாலாட்டுப் பாடிய தாயை அணைக்க
நீரை நெகிழ்ந்து இறங்கினான்..

உடல்களையும் உடைகளையும் கழுவிக்
கிடந்த குளம் இவனைத் தழுவியது.

ஈசானமூலைக் கிணறுப் பள்ளம்
கைநீட்டி அரவணைப்பில் விழுங்கியது.

நிந்தனைகளற்ற சுழலுக்குள்
நிபந்தனைகளற்ற நித்திரையில் ஆழ்ந்தான் அவன்.

வருடம் ஒரு காவு என வசவுகேட்டு
வாய் பேசாமல் அலைந்தது குளம்.

 டிஸ்கி:- இந்தக் கவிதை 7, நவம்பர் , 2011 திண்ணையில் வெளியானது.


4 கருத்துகள்:

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...