எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 30 ஜனவரி, 2012

மணிமேகலையின் தலைப்பொங்கல்., இவள் புதியவளில்.



மணிமேகலையின் (நகரத்தார் மக்கள் கொண்டாடும்) தலைப் பொங்கல் :-
****************************************************************************************

மணிமேகலை செட்டிநாட்டுப் பகுதியைச் சேர்ந்தவர். இவர்கள் ஊரில் பொங்கல் வீட்டில் மிகுந்த சீரோடும் சிறப்போடும் கொண்டாடப்படும். தீபாவளி சீர் போல பொங்கல் சீரும் பெண்ணுக்கு ரொம்ப முக்கியம். அந்தப் பொங்கல் சீரை தந்தை அல்லது அண்ணன் தம்பி கொண்டுவந்து தருவார்கள். ஒரு பெண்ணுக்கு பிறந்த வீட்டிலிருந்து மகிழ்வளிக்கக்கூடியது இந்த சீர்.. உன்னை நாங்கள் மறந்து விடவில்லை. உன் மனதில் என்றும் சந்தோஷம்ம் பொங்கட்டும் என பொங்கல் சீர் அளிப்பார்கள். பொங்கல் பொங்கியதும் பால் பொங்கிற்றா என கேட்பார்கள். தாய் வீட்டிற்கும் மாலையில் சென்று பால் பொங்கிற்றா என கேட்பார்கள். அவர்கள் எங்களுக்கு நல்லா பால் பொங்கிற்று. உங்களுக்கு நல்லா பால் பொங்கிற்றா என கேட்பார்கள். எனவே ஒவ்வொரு வருட பொங்கலும் பெண்களுக்கு தாய் வீட்டின் பிடிப்பை இன்னும் அதிகப்படுத்துவதாகவே அமையும்.


********************************************************

தலைப்பொங்கல்..:-
****************************

தை முதல்நாள் பொங்கலிட்டு சூரியனை வழிபடுவது தமிழர் மரபு. நாளெல்லாம் நமக்காக உழைத்துக் களைத்திட்ட பசுக்களையும் உழவு மாடுகளையும் சீராட்டி பாராட்டி பூசை செய்யும் மாட்டும் பொங்கலும் அடுத்த நாள் கொண்டாடப்படுகிறது.

ஆனால் இது என்ன தலைப்பொங்கல் என்று தோன்றுகிறதா..? புதிதாய்த் திருமணமான ஒரு பெண் தன் கணவனது வீட்டிற்குச் சென்ற பிறகு அதுவே அவளது வீடு. அங்கே அவள் வைக்கும் முதல் பொங்கல்தான் தலைப்பொங்கல். என் வாழ்விலும் அது சிறப்பாக நடந்தேறியது. அந்த சுவையான அனுபவத்தைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

என் அம்மா வீட்டில் நான் இருந்தபோது பொங்கல் என்றாலே குஷிதான். புது உடை சர்க்கைரைப் பொங்கல், கட்டுக் கரும்பு எல்லாம் கிடைக்கும். பள்ளிக்கு விடுமுறை எல்லாம் சேர்ந்து ஒரே மகிழ்ச்சிதான்.

ஆனால் திருமணமானதும் எல்லாம் வித்யாசமாக இருந்தது. அன்று பொங்கலுக்கு இருநாள் முன்னதாக என்னுடைய சகோதரன் என்னைப் பார்க்க அலுவலகம் வந்தான்.எனக்கு ஒரே ஆச்சர்யம். வா வீட்டுக்குப் போகலாம் என்றான். கீழே வந்தால் ஒரே திகைப்பு.. கீழே ஒரு கார் நின்றது. அதன் மேலே ஒரு கட்டுக் கரும்பு இருந்தது. உள்ளே ஏறு என்றான். உள்ளே ஒரே பெட்டியும் கூடையுமாய் இருந்தது. என்னண்ணா இது என்றேன். ஒன்றூம் இல்லை வா.. உன் விட்டுக்குத்தான் போகிறேன் அதனால் உன்னையும் அழைத்துச் செல்ல வந்தேன் என்றான்.

ஒரு வழியாக காரில் ஊர்வலமாக கரும்பு சகிதம் போய் சேர்ந்தோம். என் மாமியாருக்கோ ஒரே மகிழ்ச்சி. வாருங்கள் என வரவேற்றார்.என் அண்ணன் சிரித்தவாறு பெட்டிகளையும் கூடைகளையும் உள்ளே கொண்டுவந்தான்.

என் மாமியார் விளக்கேற்றி தடுக்கு எடுத்துப் போட்டார்கள். என் அண்ணன் எனக்கு பொங்கல் சீர் கொண்டுவந்துள்ளான் என்று மாமியார் சொன்னார்கள். இதற்குத்தான் இத்தனை தடபுடலா என வியந்தேன். ஒரு சூப்பர் மார்க்கெட்டையே அண்ணன் ஹாலில் இறக்கி இருந்தார்.

பரங்கிக்காய், அவரைக்காய், வெங்காயம்., பச்சைமிளகாய், கருணைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பனங்கிழங்கு, வாழைக்காய், கத்திரிக்கார்ய், பலாக்காய், தக்காளி, கரும்பு, மஞ்சள் கொத்து, பொங்கல் பானை 2,வெல்லம், நெய், பச்சரிசி., கொத்துமல்லி கருவேப்பிலை என கொலு வீற்றிருந்தது. அத்தோடு வெற்றிலை பாக்கில் பணம் வைத்து அண்ணன் பொங்கல் பானை எனக்குத்தந்தான். வீடே குதூகலமாய் இருந்தது. மாமியார் அண்ணனை உபசரித்து அனுப்பி வைத்தார்.

அடுத்த நாள் கோலமிடும் படலம். அண்ணன் கொண்டுவந்த பானை, விளக்குச்சட்டி, அடுப்பு எல்லாம் எடுத்து வந்து கொடுத்து மாமியார் என்னை கோலமிடச் சொன்னார்கள். நான் ‘ஙே’ என்று விழித்தேன். அதன் பிறகு அத்தை எப்படிக் கோலமிடுவது என சொல்லிக் கொடுங்கள் என கேட்டேன். என்ன பொண்ணே இது துட நீ தெரிஞ்சுக்கலயா என்று மனதுக்குள் எண்ணிய மாமியார் ஒரு கிண்ணத்தில் கோலமாவும் , ஒரு கிண்ணத்தில் கோபியும் கரைத்து ஒரு விளக்குமாற்றுக் குச்சியை முனையில் மெல்லத் தட்டி பிரஷ் போல செய்து கொடுத்து பானையில் கோலம் போட கற்றுக் கொடுத்தார்கள்.

நானும் எனக்குத் தெரிந்த மயில் , தாமரை எல்லாம் போட்டு அசத்தி விட்டேன். அடுத்து தரையில் கோலமிடல்.அங்கேதான் வந்தது தலைவலி. மாமியார் கட்டம் கட்டி கோபுரம் போட்டு உள்ளே அடைக்கச் சொன்னார்கள். ஒரு வழியாக அதை முடித்து நிமிருவதற்குள் இடுப்பு வலி வந்துவிட்டது. அதற்கு அப்புறம் பொட்டு குத்தினாற்போல புள்ளி இட வேண்டும். என்றார்கள். ஒன்று சிறியதாக வந்தது. மற்றொன்று பெரியதாக வந்தது. என்ன செய்வதென்று தெரியாமல் பாவமாக அமர்ந்திருந்த என்னைப் பார்த்து அவர்கள் இதோ பாரும்மா என்று லாவகமாக கை எடுக்காமல் புள்ளி குத்தி காண்பித்தார்கள்.இதில் இவ்வளவு விஷயமா என அசந்து போனேன்.

அடுத்தநாள் பொங்கல். அமர்க்களமான சமையல். கத்திரிக்காய் குழம்பு., கருணைக்கிழங்கு குழம்பு, பரங்கிக்காய் குழம்பு, அவரைக்காய் பொரியல், வாழைக்காய் பொரியல், சர்க்கரை வள்ளிக்கிழங்கு பொரியல், பலாக்காய் கூட்டு, பருப்பு மசியல். இதெல்லாம் முடித்து பொங்கல் வைக்கும் வைபவம் தொடங்கியது,..!

கோலத்தின் நடுவில் அடுப்பு வைக்கப்பட அதன் மேல் மூன்று பானைகள் வைத்து இரண்டில் வெண்பொங்கலும் ஒன்றில் சர்க்கரைப் பொங்கலும் வைக்கப்பட்டது. விறகு அடுப்பு என்பதால் புகையோடு மல்லுக்கட்டு வேறு. பால் பொங்கியதும் சங்கு ஊதி அரிசி உலையில் இட்டார்கள். பால் பொங்கிற்றா என ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டோம்.

மாமியாரும் விளக்கிடும் சட்டியில் பனங்கிழங்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு வைத்து தேங்காய் உடைத்து வைத்து வெற்றிலை பாக்கும் வாழைப்பழமும் கரும்பும் வைத்து சாமியிடம் வைத்தார்கள்.

மாமனார் கரும்பு வெட்டி எங்களுக்கெல்லாம் கொடுத்தார்கள். பொங்கலிட்ட பின் இலை போட்டு படைத்து இரு விளக்குகள் ஏற்றி படையல் இட்ட இலைகளை சுளகில் வைத்து சாமி வீட்டில் வைத்து சாமி கும்பிட்டோம். காக்காய்க்கு சோறு வைத்து பின்னர் அனைவரும் கூடி பொங்கல் உண்டோம்.

அப்பாடா பொங்கல் என்றால் இவ்வளவு செய்ய வேண்டுமா., பேசாமல் சின்னப் பிள்ளையாய் இருந்திருக்கலாமே என்றது மனது.

ஆனாலும் வருடாவருடம் அண்ணன் பொங்கல் பானை கொண்டுவந்து தரும்போது மனதுக்கு நிறைவாயும் மகிழ்வாயும் உள்ளது

என்ன இருந்தாலும் தாய் வீட்டு சீர் நமக்கு வருடாவருடம் கிடைக்க வழி செய்யும் பண்டிகை பொங்கல் என்பதால் எனக்கு அதன் மீது ஒரு தனி ஈடுபாடு உண்டு.

--- மணிமேகலை.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...