எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 7 ஜூலை, 2011

அவர் பெயர் பழநி....

எங்காவது ஊருணியிலோ
கம்மாய்க் கரையிலோ
கண்டிருக்கலாம்,
கேள்விக்கு்றியாய் வளைந்து
கருத்து துவைக்கும் உருவத்தை..

வெளுத்து வெளுத்து
வெள்ளாவிப் பானையில்
வெந்தது போக..
உவர்மண்ணோடு உவர்மண்ணாய்
வெடித்த கைகளும் கால்களும்.


சமைந்த தீட்டெடுத்து
பூரம் கழிக்க நின்று
ஓலைக் கொட்டான்களில்
சோறும் பலகாரமும்..

நீல மாத்துக் கட்டி
பிள்ளைக்கு மாராயம் சொல்லி
சிகப்பு மாத்து விரித்து..

தலைமுறையெல்லாம்
தலையெடுத்தபோதும்
இவரின் கரங்களில்
வர்ணங்களை அலசும்
வர்ணமற்ற வாழ்வு..

கிணற்றடியில் உக்கார்ந்து
கற்றுக் கொண்டது
கொசுவிப் போட்டுக்
கொய்ய கொய்யத்
துவைக்கும் அழகும்
மடிப்பு மடிப்பாய்
பெட்டி போடும் நறுக்கும்..

ஆடிமாச குடிவண்ணார் கூலி
மாசக்கூலியாய் மாறிய பின்னும்
குடித்துக் குடல் கெடுத்து..

பஸ் பயணத்தில்.. காய்ந்த நதிகளில்
பட்டையாய் விரிந்து கண்பறிக்கும்
வெள்ளுடுப்புகளைப் பார்க்கும்போதெல்லாம்

பழநி அண்ணனின் வெள்ளை கண்ணுள் வர..
வறண்ட கம்மாய் ஊத்தாய் கசியும்
ரெண்டு சொட்டு கண்ணீர்..

(குறிப்பு. திருமணத்தில் நீல மாத்து கட்டுவார்கள். பிள்ளைப் பெற்றவுடன் தடுக்கில் நின்று நடு வீட்டில் மாராயம் சொல்லுவார்கள். இறப்பில் சிகப்பு மாத்து் விரிப்பார்கள்..

மாத்து- துணி
மாராயம் - அறிவித்தல்..)

டிஸ்கி:- இந்தக் கவிதை 2.15. 2011 கீற்றுவில் வெளிவந்துள்ளது. :)

10 கருத்துகள்:

  1. அருமையான கவிதை.
    அத்தனையும் நிஜம்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. //தலைமுறையெல்லாம்
    தலையெடுத்தபோதும்
    இவரின் கரங்களில்
    வர்ணங்களை அலசும்
    வர்ணமற்ற வாழ்வு..//

    ஆஹா என்ன அருமையான வரிகள்.
    பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  3. பிறருக்காய் வருந்தி உழைக்கும் வெள்ளை மனம் கொண்டோரின் இயல்புகளைக் கவிதையில் காட்சிப்படுத்தியிருக்கிறீங்க.

    பதிலளிநீக்கு
  4. //தலைமுறையெல்லாம்
    தலையெடுத்தபோதும்
    இவரின் கரங்களில்
    வர்ணங்களை அலசும்
    வர்ணமற்ற வாழ்வு..//

    தேனக்கா,

    அவர்கள் தொழிலை நேசித்து செய்த(ப)வர்கள். தொழிலை வாழ்வாக்கிக் கொண்டவர்கள்.

    நன்றியுணர்ச்சியினை கவிதையின் கடைசி வரி சொல்லிச் செல்கிறது.

    பதிலளிநீக்கு
  5. ஒரு கவிதை கூட மிஸ் ஆக மாட்டேங்குது எல்லாமே பத்திரிக்கைல வந்துடுது

    பதிலளிநீக்கு
  6. அருமை...தொடர்ந்து எழுதுங்க...


    Reverie

    http://reverienreality.blogspot.com/

    பதிலளிநீக்கு
  7. நன்றி ரத்னவேல் ஐயா., குணா., கோபால் சார்., நிரூபன்., சத்ரியன்., ஸ்ரீராம்., சசி., ரெவரி

    பதிலளிநீக்கு
  8. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...