கல்லூரியில் படிக்கும்போது பாடம் நல்லா எழுதுறமோ இல்லையோ படம்நல்லாப் போடுவேன். தினம் ரெக்கார்ட் நோட் வரையிறதையே ப்ளஸ்டூவில் இருந்து காலேஜ் வரை ஒரு தவம் மாதிரிப் பண்ணிட்டு இருந்தேன்.
முதல் இரண்டு வருடம் பிஸிக்கிஸ் ஆன்சில்லரி. மூன்றாம் வருடம் ஸூவாலஜி. அதே போல் முதல் இரண்டு வருடம் மொழிப்பாடங்கள் உண்டு. தமிழ் & ஆங்கிலம். மூன்றாம் வருடம் மேஜர் சப்ஜெக்ட்ஸ் மட்டும்தான்.
இந்தப் படம் THE SECRET OF WORK BY VIVEKANANDA என்ற ஒரு ஆங்கில அசைன்மெண்டுக்காக வரைந்தது. மிஸ் இதுக்காக நாலரை மதிப்பெண் கொடுத்திருக்காங்க. :)
மணியம் செல்வன், கோபுலு, ராமு, ஆதிமூலம், ட்ராட்ஸ்கி மருது, ஜெயராஜ், மாருதி என்று எனக்குப் பிடித்த ஓவியர்கள் அதிகம். இவர்களின் பாணியை வைத்தே சொல்லிவிடலாம். மசெவின் நாயகிகள் ஆங்கில வனிதைகளாகவும் ஜொலிப்பார்கள். திட்டமான எல் போன்ற மூக்கும் நேர்க்கோடுகளும் இவர் ஸ்பெஷல். சொஃபிஸ்டிகேடட் & ரிச் லுக் இருக்கும் இவரது ஓவியங்களில். மேன்மக்களைப் போல இருப்பார்கள் அனைவருமே.
கோபுலு அதிகம் நாடகம், சிறுகதைகளில் மனிதர்களின் செழிப்பான உருவத்தையும் நல்ல கிளி போன்ற மூக்கையும் வரைவார். தீர்க்கமான ஓவியங்கள். சமூகத் தொடர்களில் இவரது ஓவியம் பரிச்சயம்.
ராமுவின் ஓவியங்கள் சுருட்டைக் கேசம் போல் சுருண்டு சுருண்டு இருக்கும் . அந்த ஒவ்வொரு சுருளும் வெகு அழகாக வந்து மனதிற்குள் ஒரு உருவைப் படைப்பது அற்புதம். அக உணர்வைப் படைக்கும் ஓவியங்கள். வெகு தீவிரமான ஓவியமொழி இவருடையது.
ஆதிமூலம் ஓவியத்தில் முகத்தின் நிழல்களும் பேசும். !. கோட்டுச்சித்திரபாணி இவருடையது. வெகு சிக்கலானது . சில சமயம் கறுப்பு வெள்ளைப் புகைப்படங்கள் போன்றது.
ட்ராட்ஸ்கி மருதுவின் ஓவியம் கம்பீரமானது. ஒன்றில் ஒன்றைக் கொண்ட இரட்டை ஓவியங்களாக இருக்கும். மனிதர்களும் பொருட்களும் கலந்து கட்டி நம்மை அக்கதையின் கருவை தீவிரமாக உணரவைப்பார்கள். சாட்டையை வீசியது மாதிரி ஒரு அடர் மொழி கொண்டது இவரின் ஓவியங்கள்.
ஜெயராஜ் கேட்கவே வேண்டாம் ஓவிய உலக பிரம்மா. பெண்களையும் ஆண்களையும் செக்ஸியாகப் படைத்து உலவ விடுபவர். சுஜாதா கதைகள் என்றால் இவர் படம்தான் ஞாபகம் வரும். அபாரமான , அபாயகரமான சடன் ஸ்ட்ரோக்குகள் இவரின் ஸ்பெஷாலிட்டி.
மாருதி காவியக் காரிகைகளைப் படைத்துக் காதலிக்க வைப்பவர். இவரின் நாயகிகள் சுருட்டைக் கேசமும், அழகிய இதழ்களும் காந்தப் பார்வையும் கொண்டு காதலிக்க வைப்பவர்கள். இவரது ஓவியங்களைப் பார்க்கும்போது தண்ணென்ற குளிர்ச்சி பரவும். இவர்கள் அனைவருமே என் ஆசான்கள். நான் ஒரு பத்துப்பன்னிரெண்டு படம்தான் வரைந்திருப்பேன். அதுவும் மூன்று நான்கு மணி நேரம் எடுக்கும். ரப்பர் எல்லாம் போட்டு அழிப்பதுண்டு :) எடுத்தவுடன் மெல்லிசாக அவுட்லைன் போட்டுப் பின் வரைவேன். பென்சிலாலும், பேனாவாலும் இண்டியன் இங்காலும் ( பேனாவில் தொட்டு ) வரைந்ததுண்டு. முன்பு கூட நான் கலந்துகொண்ட காம்பெடிஷன்களின் வரைந்த விழிப்புணர்வு ஓவியங்களைப் போட்டிருந்தேன்.
இந்த ஓவியப் பெண் மண்டி போட்டிருக்கும் பொஸிஷன் சரியில்லை என்று இப்போது தோன்றுகிறது . அதேபோல் டிசைன் சங்குபோல் அல்லது குட்டிக் கொம்பு போல் ( கொம்பூதுதல் ) ஒன்றை வரைந்துள்ளேன். சங்கு இப்படி இருக்குமா தெரியல. :) தலையிலிருந்து விழும் சல்லாத்துணி ரொம்பப் பிடித்தது.
இது யாரோ வரைந்ததை பத்ரிக்கையில் பார்த்து வரைந்திருப்பேன் என நினைக்கிறேன். ஹாஸ்டலில் இருக்கும்போது ஓவியக்காரி என நினைத்துப் பார்த்த வெட்டி வேலைகள் இப்போது ப்லாக் போஸ்டாக உதவுகின்றன. :)