எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 14 நவம்பர், 2017

பாரதி வந்தால் இன்றைய கல்விநிலை பற்றி என்ன உரைப்பார் ? ( கவியரங்கக் கவிதை )

பாரதி இன்று வந்தால். இன்றையக் கல்வி பற்றி என்ன சொல்லி இருப்பார்.?

தமிழ்த்தாய் வாழ்த்து.

தீஞ்சுவைப் பாலெடுத்து 
நறுஞ்சுவைத் தேன் கலந்து
பழச்சாறும் ஊற்றிக் கொடுத்தாலும் 

புளிக்குதென்பேன்.,
தமிழ்த்தாயிடம் மதலை நான் 

தாய்ப்பால் குடித்து வளர்ந்த காரணத்தால்
இல்லையில்லை அன்னையவள் பரிவுகொண்டு 

என்னை வளர்த்த காரணத்தால் 
அவள்தாளில் தெண்டனிட்டேன்.
தமிழன்னைக்குக் குழந்தையின் வணக்கங்கள்.

காரைமாநகர் வாழ்த்து:-

காரைக்கட்டிடங்கள் செறிந்திருக்கும் காரைக்குடி
கல்விக்குடியானது கொடைவள்ளலின் விடாமுயற்சியால்
கல்விக்கோட்டை கட்டி ஞாலம் புகழவைத்த
வள்ளலின் அழகூருக்கு வற்றாத வணக்கங்கள்.

பள்ளி வாழ்த்து.:-

நூற்றெட்டுப் பள்ளிகள் திறந்திருக்கும் காரைநகர்.
நூற்றில் ஒரு பள்ளியாய் நிர்வாகம் சிறக்க
விந்தியமலைபோல் உயர்ந்து நின்றாலும்
வித்யா கர்வமில்லாத வித்யாகிரிக்கு வணக்கங்கள். 

கல்வி என்னும் பிரணவத்தைக்
காரைக்குடியின் மூச்சாகக் கொண்டிருக்கும் தகப்பன்
(சுவாமிநாத) சுவாமிக்கும் சிரம்தாழ்ந்த வணக்கங்கள்.
ஹேமாமாலினி சுவாமிநாதன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள். 

தலைவர் வாழ்த்து:-

கண்ணதாசனைக் கண்டதில்லை.
வண்ணதாசனைக் கண்டதில்லை
சக்திதாசனைக் கண்டதில்லை ஆனால்
கனவுதாசனைக் கண்டதுண்டு.

முப்பத்தொரு ஆண்டுகளுக்கு முன்பு
சிறுவயல் பொன்னழகியம்மன் கோவில் திருவிழாவில்
கவிக்கையுடன் வந்தது ஒரு ரவிக்கை என்றழைத்துக்
கவிபாடச் சொன்னார் தலைவர் கனவுதாசர்.

அதே ரவிக்கை இன்றும் கவிக்கையுடன் வந்திருக்கிறது.
வித்யாகிரியில் என்னை ஏற்றிவிட்டு 
என் கனவுகளைத் திரும்பவும் நனவாக்கிய 
கனவுதாசருக்குக் கருத்தான வணக்கங்கள். 

பிரம்மன் சரஸ்வதியை படைப்புலகுக்குத் தந்ததுபோல்
கல்யாணியம்மையைக் கவிபாட வைத்து
ஐம்பது சதத்தை அன்போடு அள்ளித்தந்த
கனவுதாசருக்குக் கனிவான வாழ்த்துக்கள்.

ஆறாண்டு காணும் பாரதி தமிழ்க் கழகம்
நூறாண்டு காண மனமார்ந்த வாழ்த்துக்கள். 

பாரதியார் வாழ்த்து :-

பாரதத்தின் விடுதலைக்காய் 
பா ரதத்தில் உலா வந்தவர்.
பெண் விடுதலை மண் விடுதலை 
பெண் கல்வியைப் பாடியவர்
சமத்துவமற்ற சமுதாயத்தையும் 
சாதி பேதங்களையும் சாடியவர்.
இளைய சமுதாயத்தின் முன்னேற்றம் நாடியவர்.

பதினெட்டாம் நூற்றாண்டில் தோன்றிய 
அந்த நெருப்புக் கவிஞன்
நாற்பதாண்டுகள் கூட வாழாமல் 
நாலாயிரம் ஆண்டுகளுக்கான பாடல்கள் பாடியவன்..
மகா கவியே நின்னைச் சரணடைந்தேன்
என் நாவினிலே குடி கொள்வாய்.  

பாரதி வந்தால் இன்றைய கல்விநிலை பற்றி என்ன உரைப்பார் ?

பாரதியார் இன்று வந்திருந்தால்
சிலவற்றில் இனிது உவந்திருப்பார்.
பலவற்றில் சீறிச் சினந்திருப்பார்.

கல்விச்சாலைகள் செய்வோம் என்றேன்.
இன்று பாரதம் முழுக்கப் பள்ளிகள்.
சர்வசிக்‌ஷா அப்யான் அனைவருக்கும் கல்வி
சமச்சீர் கல்வி. செயல்வழிக்கற்றல்.
செண்ட்ரல் போர்டு, ஸ்டேட் போர்டு
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ
மெட்ரிக்குலேஷன் என்சிஈஆர்டி
சீனியர் கேம்பிரிட்ஜ், ரெசிடென்ஷியல் ஸ்கூல்
ஸ்மார்ட் போர்ட்,ஸ்மார்ட் ஸ்கூல்.
தாய்மொழிக் கல்வி, ஆங்கில வழிக்கல்வி்
காலத்துக்கேற்ப மாறுது கல்வி.
எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்துவிட்டதா.

மாநிலப்பாடத்தை மத்தியிலே முடிவெடுத்தால்
மாணவர்க்கு எது முக்கியமென்பது 

எப்படித் தெளிவாகும்.?
மாநிலத்தின் பண்பாடு 

கலை இலக்கியம் வரலாறு பற்றி
மாணவர் தெரிந்துகொள்ளல் வேண்டாமா. ?
மத்தியிலே அளிக்கும் கல்விநிதியை 

மாநிலங்கள் பயன்படுத்தி
அரசுப்பள்ளியில் வகுப்பறையும் கழிப்பறையும் 

அமைத்துவைத்தல் அதிமுக்கியம் அதிமுக்கியம்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடென்றேன்
இந்தியாவிலேயே 22 ஆம் இடத்தில் 
இருக்கிறது தமிழகக்கல்வித்தரம்.  

பள்ளித்தலமனைத்தும் கோயில் செய்குவோம் என்றேன்
ஆனால் இன்று தெப்பம்போல் மிதக்கின்றன பள்ளிகள்.

இன்று கல்வித்தந்தைகள் இருக்கிறார்கள்.
கல்விதான் தாயற்ற பிள்ளையாகிவிட்டது. 

காளான்கள் போல் முளைக்கின்றன கல்விக்கூடங்கள்.
கல்விக்கூடங்களா இல்லை இவை கொள்ளைக்கூடங்களா.

கல்விக்கூடங்கள் கொழுத்துவிட்டன.
கல்விதான் மெக்காலே முறையில் சவலையாகிவிட்டது.

வகுப்பில் நன்கு பயிற்றுவித்தால் 
தனித்தனி ட்யூஷன் வகுப்புஎதற்கு.
பல ட்யூஷன், பல கைடு, பல எக்ஸாம்.

படிப்பறிவு வரும் அளவு பட்டறிவு வருவதில்லை.
அனைவருமே தேர்ச்சி ஆனால் கல்வித்தரமோ வீழ்ச்சி.

இவர்கள் மாணவர்களா மனன இயந்திரங்களா
இல்லை மார்க் வாங்கும் கருவிகளா.

அவர்கள் ஆசிரியர்களா இல்லை 
செண்டம் மேக்கிங் மெஷின்களா 

ஒழுக்கம் விழுப்பம் தரலான் அன்று .
இன்று மதிப்பெண் விழுக்காடு தரத்தான் கல்வி. 

காம்பஸ் இண்டர்வியூவில் செலக்ட் ஆகவே கல்வி.
இன்று கல்விக்கும் ஐ எஸ் ஐ தர முத்திரைச் சான்றிதழ்

ஒரே ஐக்யூ உள்ள ஜெராக்ஸ் காப்பிகளை உருவாக்குவதா பள்ளி
காரண காரியங்களை அறிந்து பயில்வதே கல்வி. 

மனித மந்தைகளை  அடைக்கும் லாயமல்ல பள்ளி
மூளைக்குள் விஷயங்களை திணிப்பது அல்ல கல்வி.

அறிவுச்சிறைக்குள் தள்ளுவதோ கல்வி
ஆளுமைத்திறனை வளர்த்தெடுப்பதே கல்வி. 

உலகியலோடு ஒட்ட ஒழுகவேண்டும் கல்வி.
இங்கே ஒரே மெர்சலாக இருக்கிறது கல்வி.

அன்று பணிவுடமை அறிவுறுத்தியது கல்வி
இன்று பணவுடமை செய்திருக்கிறது கல்வி. 

லட்சங்களில் பலரின் லட்சியங்கள் விலைபோகின்றன.
விலைக்கு வாங்கியவர்களின் லட்சணம் போலியாய் உரிகிறது.

மதிப்பெண்களைத் துரத்தித் துரத்தி அவர்கள்
மதிப்பீடுகளை இழந்தார்கள்.
மதிகலங்கிப் போனார்கள். 
விதியென்று சோர்ந்தார்கள்.

கூலிக்காரனைப் போலப் பாரம் சுமக்கிறார்கள்
பள்ளிப் பாடம் எழுதி எழுதி விரலொடிந்து போனார்கள்.

காசு கொடுத்துக் கற்கும் கல்வி
காசு சம்பாதிக்கக் கற்றுத்தரும் கல்வி
அவ்வளவுதான் அதன் பர்ப்பஸ். அதாவது
பரஸ்பரம் பர்ஸை நிரப்புவது.

அரசுப் பள்ளியிலோ ஓராசிரியர்களே இருக்கிறார்கள்.
அவர்கள் பிள்ளைகளோ தனியார் பள்ளியில் படிக்கிறார்கள்.
ஒரு அரசு கொடுத்த பாடத்தை மறு அரசு மாத்துது
பள்ளிக்கே ஆள்வரலைன்னு பள்ளிகளை இணைக்குது. 

மாணவர்கள் வராவிட்டால் கண்காணிக்கலாம்
சரியாக வராத ஆசிரியர்களைக் கண்காணித்தல் தகுமா. ?

கற்றோர் பெரியோர் 
கல்லாதார் சிறியோர் அன்று ,
இன்று காழ்ப்புணர்வும் காமஉணர்வும் கொண்டுவிட்டனர் 
சில கல்விக்கடவுள்கள். 

கவிஞர்களையா உருவாக்குகிறது இன்றைய கல்வி
கசடதபற தெரியாத கசடர்களை அல்லவா உருவாக்குகிறது

மொழிப்போருக்காகப் பலர் உயிர் துறந்திருக்க
தமிழ்ப்பாடம் என்றால் விழிப்பார்கள் பலர்
மொழிப்பாடம் என்றால் 
அது ப்ரெஞ்ச், சான்ஸ்க்ரீட், ஹிந்தி மட்டுமே.

தமிழ் அறிவு கால்கள் போன்றது
ஆங்கில அறிவு ஊன்றுகோல் போன்றது.
தமிழ் அறிவோம் ஆங்கிலம் அறிவோம்
தமிழைக் கொன்று தங்கிலீசுக்கு .மாறிவிட்டோம். 

கல்விக்காக மட்டும்தான் பாடப்புத்தகம் படிக்கிறான்.
வாட்ஸாப் மெசேஜ் பார்த்துக் காலம் கழிக்கிறான்.
எதையும் எழுதாமல் ஃபார்வேர்டிலேயே காலத்த ஓட்டுறான்.
எழுதச் சொன்னா எழுத்து மறந்து கிடுகிடுன்னு டைப்படிக்கிறான்.

பிழையான பேருடன் ஒடுது பேருந்து
பிழையான எழுத்துக்களுடன் ஒளிருது விளம்பர போர்டு
பிழையான உச்சரிப்போடு வாசிக்கப்படுது
அன்றாட தொலைக்காட்சிச் செய்திகளும்.

நீதிநெறிவகுப்பு உண்டா. நன்னெறிக்கதைகள் உண்டா
ஓவியமும், காவியமும், கைத்தொழிலும் உண்டா,
விளையாட்டு மைதானமில்லாப் பள்ளியில்
ஓடி விளையாடுவதும் கூடி விளையாடுவதுமெப்படி. ?

உற்றாருமில்லை சுற்றத்தாருமில்லை.
கேளிக்கையுமில்லை.
நான்கு சுவருக்குள்ளே 
பைத்தியம் பிடிக்குமளவு படிப்பு.

ஏடறிவேன் எழுத்தறிவேன்
ஏட்டுப் பள்ளிக்கூடம் அறிவேன்
நாட்டைப் புரட்டிப் போடும்
நற்கவிகள் எழுதிக் காத்திருந்தேன்.

இன்று கேட் என்கிறார் 
நீட் என்கிறார்
கோட்டா என்கிறார். 
பின்பு கோட்டை விட்டோமென்கிறார்
(பண ) நோட்டை விட்டு 
வேட்டை ஆடுகிறார் சீட்டை.

நீட்டாம் கேட்டாம்
அன்று
நீட் என்று நீட்டி முழக்குவதும் இல்லை
கேட் என்று கதவைச் சாத்துவதும் இல்லை.

இவை போட்டித் தேர்வுகளா 
உயிர் போக்கும் தேர்வுகளா.

ஏட்டையும் பெண்கள் தொடுவது
தீமையென்றெண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்.
ஆனால் கேட்டையும் நீட்டையும் பூட்டையும் போட்டுப்
பூட்டிவைத்தார் நிலை மாற்றி வைத்தார்

ஆசிரியர்க்கும் பயிற்சி வகுப்புத் தேவை.
அவ்வப்போது தன்னைக் கூர்தீட்டிக் கொள்ளல் நன்று.
வழிகாட்டிகள் தகவல் சுரங்கங்களாய் இருக்க வேண்டாம்
தகுந்த தகவல்களைத் தரலாம்தானே.

அனிதா நீ ஆசைப்பட்ட
இந்தப் பாடம்போனால் அடுத்த பாடம் படி
இந்த வருடம்போனால் அடுத்த வருடம் பிடி.
உன்னையே ஏன் முடித்துக் கொண்டாய்
தன்னம்பிக்கையை ஏன் குலைத்துக் கொண்டாய்
தைரியத்தை ஏன் இழந்துவிட்டாய்
தற்கொலை கோழைகளின் செயல் அல்லவா

நல்ல மேய்ப்பரின் மந்தைகள் 
வழி தவறுவதில்லை
நல்ல வழிகாட்டியின் மாணவர்கள் 
சோடை போவதில்லை.

அரசின் பத்துக் கல்விக் கட்டளைகள் 
காலத்துக்கேற்ற சாட்டைகள்.
ஒன்பதாம் பதினொன்றாம் வகுப்பையும் 
நன்றாகப் படிக்கவேண்டும்.
காலம் ஏவல் தாண்டிக் 
கற்றதைப் 
பிரயோகம் செய்வதே சமச்சீர் கல்வி. 
இதனால் நீட்டையும் எதிர்கொள்ளலாம் 
கேட்டையும் உடைக்கலாம்.

தேமதுரத் தமிழோசை எங்கும் துலங்கவேண்டும். 
இதுவே என்னாசை.  

மகாபாரதம் வினாடி வினா புத்தகத்தை எழுதியது
இங்கே ஒன்பதாம் வகுப்பில் பயின்ற ஒரு தத்தை.
அந்த அழகம்மை பிறந்தது மானகிரி பாரதி பிறந்தநாளில்
அவள் கனவை அழகாக்கியது இந்த வித்யாகிரி.

இப்படித்தான் இருக்கவேண்டும் 
பள்ளியும் கல்வியும்.!!!

பாரதியின் புதிய ஆத்திச்சூடி
பொதுப்பள்ளி முறை கொணர்.
சமச்சீர் கல்வி கொள்.

அறிவே தெய்வம்.
ஓம் சக்தி ஓம். !

நன்றி அனைவருக்கும். !!!

7 கருத்துகள்:

  1. பாரதியை நினைவுகூர்ந்த விதம் அருமை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  2. ஏற்கன்வே ஒரு சுவரொட்டி சரியாகப்போடப்பட்டிருக்கிறது. அதே சுவரொட்டி கிழிக்கப்பட்டிருக்கிறது அடுத்த படத்தில். It could have been avoided here.

    பதிலளிநீக்கு
  3. கல்வி பற்றிய கணிப்புகள் எல்லாமே சரி எது மிகச்சரி என்று தெரிகிறதா

    பதிலளிநீக்கு
  4. மிகவும் நன்றாக இருக்கிறது சகோ/ தேனு...வாழ்த்துகள்.

    அனிதா நீ ஆசைப்பட்ட
    இந்தப் பாடம்போனால் அடுத்த பாடம் படி
    இந்த வருடம்போனால் அடுத்த வருடம் பிடி.
    உன்னையே ஏன் முடித்துக் கொண்டாய்
    தன்னம்பிக்கையை ஏன் குலைத்துக் கொண்டாய்
    தைரியத்தை ஏன் இழந்துவிட்டாய்
    தற்கொலை கோழைகளின் செயல் அல்லவா// யெஸ் என் கருத்தும் இதேதான்....--கீதா

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஜம்பு சார்.

    நன்றி விநாயகம் சார்

    நன்றி குமார் சகோ

    நன்றி பாலா சார். அதுதான் கொடுத்திருக்கிறேன் என நினைக்கிறேன் :)

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி துளசி சகோ & கீத்ஸ்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...