எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 16 நவம்பர், 2017

பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர்ஸில் எங்கள் வில்லுப்பாட்டு.

கல்லூரிகளுக்கிடையேயான கல்சுரல் காம்பெடிஷன்களில் ( INTERCOLLEGIATE CURTURAL COMPETITIONS )  பங்கேற்கும் வாய்ப்புக் கிட்டியது. அப்போது பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர்ஸில் மொத்தமாக 5 போட்டிகளில் பங்குபெற மாணவியர் சென்றோம். நான் தமிழ் வெர்ஸ் ரைட்டிங் ( VERSE WRITING.) -  ஆன் த ஸ்பாட் கவிதை எழுதும்  போட்டியில் கலந்துகொள்ளச் சென்றிருந்தேன்.  இன்னும் சில தோழியரும் ப்ளாக்போர்ட் ட்ராயிங், கார்ட்டூன் ட்ராயிங் , கட்டுரைப் போட்டி போன்றவற்றிற்கு வந்திருந்தார்கள். சென்றவர்களே ஸ்கிட் போன்ற ப்ரோக்ராமிலும் பங்கேற்றோம். அதில் ஒன்று இந்த வில்லுப் பாட்டு. இதில் நாங்கள் எல்லாம் பக்கத்துணையாக அமர்ந்து கதை சொல்பவர் சொல்லிவிட்டு வில்லைத் தட்டும்போது  சீடர்களாகக்  கோரஸாகப் பாடினோம்.

ஆண்கள் மாதிரி தலையைச் சுற்றி மடித்து கிராப் போல அமைந்து வெள்ளை சட்டை வேஷ்டி அங்கவஸ்திரம் அணிந்து அந்த ஆண்கள் கல்லூரியில் ( ஹோ ஹோ என்று ஒரே சத்தம் ) திகிலோடு பாடியது மறக்க முடியாத அனுபவம்.  இதில் என் தோழி கே ஆர் கே கீதாவும் பங்கேற்றதாக ஞாபகம்.

ரயில்வே ஸ்டேஷனில் மதுரையில் இருந்து பாளைசெல்லும் வரையிலும் திரும்பி வரும்போதும் அந்த வில்லையும் குடத்தையும் வைத்துக் கொண்டு இடம் இடமாக அலைந்தோம். அந்த வில் வேறு லேசாகப் பட்டாலே ஜல் ஜல் என்றது வித்யாசமான அனுபவம். :)

எங்களுடன் வந்த மிஸ் நாங்கள் நன்றாகப் பாடினால் நெல்லையின் தொண்டையடைச்சான் உருண்டை/நெஞ்சடைச்சான் பக்கோடா வாங்கித்தருவதாக ப்ராமிஸ் செய்தார். ஹாஹா பின்னர் ட்ரெயின் ஏறும்போது இருட்டுக் கடை அல்வா வாங்கிக் கொடுத்தார். வாழையிலையில் சுருள் போல சூடாக இருந்தது அல்வா. அட்டகாசம்.

இனி நிகழ்ச்சியில் பாடிய பாடல்களைப் பார்ப்போம். ( யதேச்சையாக இது பழைய காலேஜ் பேப்பர்களுடன் அகப்பட்டது. :) இல்லாட்டி நீங்க மாட்டிக்கிட்டீங்க. என்ன சொல்றது ஹாஹா :)

(( வில்லுப்பாட்டு ஆறுமுகம்,  அவரது குழுவினர் & மகள் எங்களை மன்னிப்பார்களாக !  ))

கணபதி துதி. ( கோரஸ் )

கணபதியே அருள்வாய் துணை எமக்கு
கணபதியே அருள்வாய்
கதாகாலட்சேபம் செய்ய வந்துள்ளோம் நாங்கள்
கேட்பவர் அனைவரும் ஓடிவிடாமலே.
கணபதியே அருள்வாய்.

கீதா  சீ - 1 :- ஆதௌ கீர்த்தனாரம்பத்திலே


பத்மா சீ - 2 :- அண்ணா இன்னிக்கு என்ன கதை சொல்லப் போறேள்.

பா ( ஃபாத்திமா )  :- புதுசா ஒரு கதை உங்களுக்கெல்லாம் பிடிக்கிறது மாதிரி இளமையான இனிமையான ஒரு கதை.

தேனம்மை  சீ - 3 :- கேக்குறப்பவே நாக்கில தண்ணீ ஊறது. சீக்கிரம் சொல்லுங்கோண்ணா.

சீ  - 2 :- அவசரக் குடுக்கை,  அண்ணாவை கதை சொல்ல விட்ரு.

பா :- மதுரை என்றொரு நகரினிலே மங்கையர் இருவர் இருந்தனராம். தங்கை மிகவும் பயந்தனளாம் , அக்கா அவளைத் தேற்றினளாம்.

சீ - 1 :- என்ன பயம் ?

சீ - 2  :- ஏன்னா பயந்துண்டாளாம்.?

சீ - 3 :- எதுக்குப் பயப்படணும். ?

பா :- அக்காவாண்ட தங்கச்சி சொல்றா கேளு.

‘அக்கா அக்கா ஹாஸ்டலுக்குப் போறத நினைச்சாலே நேக்குப் பயமா இருக்கு ‘

சீ - 4 :- ஹாஸ்டல்ல என்ன பேயா இருக்கு பிடிச்சிண்டு போக. ?

பா :- அதத்தானே அக்காக்காரியும் கேட்டா ‘ஏண்டி அசடு இப்பிடிப் பயந்து சாகறேன்னு. தங்கச்சி அதுக்கு என்ன சொன்னா தெரியுமோ ? “

சீ ( எல்லாரும் ) :- என்ன சொன்னா ?

பா :- சாப்பாட்ட நினைச்சாலே நேக்குத் தூக்கம் வரலே.

“ நித்தம் நித்தம் கல்லுச் சோறு
குழைஞ்சு போன கத்திரிக்கா
நேத்து வைச்ச புளிக்குழம்பு
என்னை விரட்டுதம்மா
நெஞ்சுக்குள்ளே அந்த நினைப்பு இன்னும் கலக்குதம்மா  ( 2 )

சீ - 2 :- படிக்கிற குழந்தேள் சாப்பாட்டப் பத்தி கவலைப்படுவாளோ.

பா:- சாப்பாடு மட்டும்தான் பிரச்சனைன்னா பரவால்லை

சீ - 1 :- அப்புறம் வேற என்ன பிரச்சனை ?

பா :- அவளே அத அவ அக்காளாண்ட சொல்றா கேளு

“ என்னக்கா பொல்லாத மெஸ்ஸு
அட என்னக்கா பொல்லாத மெஸ்ஸு;
கேண்டீன் இருக்கும்போது என்னடீ கவலை
அட போகுமிடம் அதுதான் வைச்சுக்க கணக்கு
இதுக்குப் போயி அலட்டிக்கலாமா
அட இதுக்குப் போயி அலட்டிக்கலாமா ?”

சீ - 3 :- அப்பிடீன்னா  ஏன்னா அப்ப சாப்பாட்டை விட பெரிய பிரச்சனைல்லாம் இருக்கா ?

அக்காக்காரி என்னடி அது அப்பிடினாளாம். தங்கச்சி சொல்றா பாரு.

“ இது ராத்திரி நேரம். அம்மம்மா
என் தூக்கத்தைக் காணோம்
கொசுக்கடி  அய்யய்யோ கொசுக்கடி
அது பத்தாதுன்னு “

“சோதனை மேல் சோதனை
சொறிஞ்சுவிட்டால் வேதனை “ ந்னு  ( எல்லாரும் பிடில்  வாசிக்க வேண்டியது. )

சீ - 2 :- ஏன்னா அதுக்குத்தான் கடையில ஓடாமஸ்ஸு, டார்ட்டாய்ஸுன்னு விக்கிறானே . வாங்கி வைச்சுக்க வேண்டியதுதானே.

பா ;- கொசுக்கடியிலேருந்தாவது இதெல்லாம் யூஸ் பண்ணித் தப்பிச்சிண்டுடுவா. அத விட இன்னொன்னு இருக்கே.

சீடர்கள்  ( எல்லாரும்) :- என்னண்ணா அது ?

பா :- பாலசந்தர் பாத்திருந்தார்னா, தண்ணீர் தண்ணீர் படத்துக்கு இதையே லொக்கேஷன் ஆக்கியிருப்பார். அங்க சீனியர்ஸ் பேசிக்குவாங்களாம். எப்பப்பார்த்தாலும் இந்தப் பாட்ட வேற பாடிண்டு இருப்பாளாம்.

“ என்னடி முனியம்மா உன் கையிலே பக்கெட்டு
எங்க போற பொண்ணு, இந்த முனியாண்டி போடல தண்ணி “

சீ - 1 :- ஐயோ பாவம் அப்ப தண்ணியே போட மாட்டாளா.

பா :- தண்ணி வந்தா மட்டும் போறுமா, பாத்ரூம் கதை அதவிட பரிதாபம்.

“ காத்திருந்தேன் காத்திருந்தேன்
காலமெல்லாம் காத்திருந்தேன்
காத்திருந்த காலமெல்லாம் கதவுகள் திறக்கலையே

சீ - 3 :- ஏன்னா, ஹாஸ்டல்லா இவ்வளவு கஷ்டமா ?

பா :- ஹாஸ்டல்ல மட்டுமில்ல காலேஜ் பிரச்சனையப் பாரு

“கட்டடிக்க முடியாதுங்க.
கதை பேசக் கூடாதுங்க
பேசினாலும் தப்புத்தானுங்க
சிரிச்சாலும் குத்தந்தானுங்க “ ( 2 )

சீ  - 2 :- அப்புறம் ராங்கி எல்லாம் கிடையாதே.

பா :- அந்தக் கதையைக் கேளு

“ புதிய காலேஜ் புதிய ஹாஸ்டல் எங்கும் ராகிங் நடக்கிறது
நாங்கள் வருகையிலே எம்மை வரவேற்க ரொம்ப ஆவலும் இருக்கிறது “

சீ - 3 :- ஏன்னா அப்புறம் அந்தப் பொண்ணு ஹாஸ்டலுக்கு வரவேயில்லையா.

பா :- அதெப்படி ! அக்காக்காரி தங்கச்சி நன்னா படிக்கணும்னு எவ்வளவு ஆசைப்பட்டா தெரியுமோன்னோ ? சும்மா விட்ருவாளா ? ரொம்ப அழகா அவளுக்கு அட்வைஸ் பண்றா !. நீங்களும் கேட்டுக்கோங்கோ

“இடமொன்று கிடைத்தது ஃபாத்திமாவில் இன்று
இனியதோர் சப்ஜெக்ட் கிடைத்ததும் நன்று.
இதயத்தின் மூலையில் இனியென்ன அழுக்கு
ஹாஸ்டல் நமக்கினி ஆனந்தக் கோலம்
அழுகை என்பதே இல்லை இனிமேல்
சிரிப்பு ஒன்றுதான் உண்மை.

சீ- 1 :-  இதக் கேட்டதும் தங்கச்சி திகைச்சுப் போயிருப்பாளே

பா:- இல்லாம.. அக்கா இன்னும் நிறைய அட்வைஸ் சொல்றா பாரு

“ஹாஸ்டலிலே வாழப்போற பெண்ணே
ஃபாத்திமா
ஹாஸ்டலிலே வாழப்போற பெண்ணே
சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே
வார்டனையும் சிஸ்டரையும் மதிக்கணும்
உனக்கு வைத்தியம் செய்யும் மம்மியையும் துதிக்கணும்
சாமக்கோழி கூவையிலே முழிக்கணும்
உங்க பாடங்களை ஒழுங்காகப் படிக்கணும்
ஹாஸ்டலிலே வாழப்போற பெண்ணே ( 2 )

சீ - 2 :- அந்த ஹாஸ்டலிலே இந்த கஷ்டங்களெல்லாம் இருக்காதா. அங்க இருக்குற சீனியர்ஸ் எல்லாம் ராக் பண்ண மாட்டாங்களா.

பா :- அவ அக்கா அங்கே படிச்சவதானே . ஜூனியர்ஸ் வந்தா சீனியர்ஸ் எவ்ளோ அழகா அவாளை வெல்கம் பண்ணுவா தெரியுமோ.

“வெல்கம் ஸ்டூடண்ட்ஸ்
ஹாப்பி காலேஜ்
ஃபாத்திமாவின் புதுமுகங்கள்
பள்ளிப்பாடம் சொல்லக் கேட்கும்
உள்ளங்களின் அறிமுகங்கள். “ ( 2 )

நிச்சயம் நீ அவங்க கொடுக்குற பார்ட்டியை என்ஜாய் பண்ணுவேன்னா.

சீ - 3 :- தங்கச்சி ஒரு வழியா சாட்டிஸ்ஃபை ஆகி ஹாஸ்டலுக்கு வந்துட்டாளோ.

பா :- வந்துட்டாளோவா அதோ அந்தத் தங்கைதானே இவா எல்லாம்

என்ன நான் சொன்ன கதை சரிதானே

சரிடா அம்பி நேக்குத் தேங்காமூடிக் கச்சேரிக்கு டயமாயிடுத்து கதையை முடிச்சுருவோமா

“கதைகேட்ட உங்களுக்கும்
கதை சொன்ன எங்களுக்கும்
மங்களம் - சுப
மங்களம் - நித்ய
மங்களம். ! “

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...