சனி, 25 நவம்பர், 2017

மூன்றாவது முள் – ஒரு பார்வை.

மூன்றாவது முள் – ஒரு பார்வை. 


கல்யாண்ஜியின் கவிதைகளில் காலம்தான் அதிகம் பாடுபொருள். அதைப் போன்றே கானகமும். காலம் உறையும் நகரும். முக்காலமும் இக்காலமாகும். இக்காலமும் எக்காலமும் நம் கண்முன்னே நகர நகர அக்காலத்தோடு நாமும் நகர்தலும் நிற்றலும் நம்மைவிட்டுக் காலம் நழுவிச் சென்றுவிடுதலும் நாம் துரத்துதலும் அல்லது உறைதலும் நிகழும்.

இயற்கையை நாம் எப்படி எல்லாம் வசதிக்கேற்ப சீரழித்து அங்கே வாழும் உயிர்களையும் மரங்களையும் நாசப்படுத்தி இருக்கிறோம் என்பதை அறிவுரையற்ற யதார்த்த வார்த்தைகளால் கூறிய கவிதைகள் கவனத்துக்குரியவை. 

ஒரே கணத்தில் இரு வேறு மரங்களில் மட்டுமல்ல, பல்வேறு மரங்களிலும் அமரும் பறவையாய் நகரும் கவிதைகளோடு பயணித்தால் முள் கூட உங்களுக்கு இறக்கையாகும். நீங்களும் கவிதைகளின் கைகோர்த்துப் பறக்கத் துவங்குவீர்கள். அப்படிப்பட்ட கவிதைகள் என் கண்முன்னே விரிந்து என்னைப் பறவையாக்கின

உங்களையும் கைபிடித்துச் செல்ல யத்தனிக்கிறேன். வெகு பகுமானத்துடன் இருந்தாலும் காற்றின் உரசலில் இறக்கைகள் தேய்ந்து எழுவது தவிர வேறெந்த கனத்தையும் உணரப்போவதில்லை நீங்கள்.

விதையில்லா வேளாண்மையும் பூனையாகுதல் என்பதும் முன்னுரையில் யதார்த்தப்போக்கில் தூவப்படும் வருத்த விதைகள். பொய் இருபுறமும் இருக்க உண்மையின் கதவு துருப்பிடித்துக் கிடக்க ஒற்றைப் பழைய சேலைக்காகக் காத்திருக்கும் அவசத்தில் இக்கவிதைகளின் வாசல் விரிகிறது. 

விரிந்தும் உடையாத முட்டை போன்ற வாழ்வு கீறல்களுடன் பயணிக்கிறது எடுத்த எடுப்பில். அலைந்து திரிந்து அடங்கிய வீட்டில் தாத்தனும் பாட்டியும் மஞ்சள் கிழங்காவதும் வெற்றிலைச் சருகாவதும் பிடிமண்ணாவதும் காலத்தின் கோலம். 

எந்த ஜன்னலைத் திறப்பது எதை அடைப்பது என்பதற்கான வயது வரம்பு எல்லையற்றது. தொண்ணூற்றாறிலும் எங்கள் பாட்டன் பாட்டிக்கு அப்படித்தான். நாய் இருந்த இடத்தில் நாயைப் பார்ப்பது கவிக்கண்ணுக்கே வாய்க்கும். கனவுப் பட்டங்களும் கனவுப் பெண்களும் எல்லாருக்கும் பொதுவானவைதான். 

மூன்றாவது முள் கவிதை பேச்சற வைத்தது. எவ்வளவு கருணை.

“ ஒரு நொடி கூட ஆகாது
என் மணிக்கட்டில் ஊரும் பூச்சியைச்
சுலபமாய்க் கொன்றுவிடலாம்
கொல்லும் அந்த நொடி அற்ற
காலத்துடன் அல்லவா
ஓடிக்கொண்டிருக்கிறது என் கடிகாரம்.
கருணையின் பாடலைப் பாடி அல்லவா
குதித்துச் செல்கிறது
அந்த மூன்றாவது முள். 

முத்தக் கவிதை இயல்பான அழகு. ஊமத்தம்பூச்செடிகளின் கருநீலம் ஒரு முறை கண்ணுக்குள் அசைந்து சென்றது தருணங்களின் விசித்திரக் கலவையில். 

ஒரு யானை சாலையை அடர்வனம் ஆக்கியதும் யானையின் மாயவனத்துக்குள் மனிதன் மிருகமாகப் புகுந்து அடக்குவதும் அற்புதமும் அதிவினையும். 

நாயும் நதியும் நானும் இணையும் இடம் அதிசயம் அதேபோல் நிர்வாணத்துக்கும் அணிதலுக்கும் நடுவில் பசி நீத்த உடலுடன் கடக்கும் கடவுளும். 

ஹாஹா என்று வாய்விட்டுச் சிரிக்க வைத்த கவிதை ஒன்று. எல்லா இடங்களிலும் பார்த்திருக்கிறேன் உங்களை எனப் பட்டியலிட்டுவிட்டு அந்த இடங்களில் எல்லாம் என்னைப் பார்க்காததுபோல உங்களால் போக முடிவது எப்படி என்ற கேள்வியில் தொக்கி நிற்கும் நுண்மையான பரிகாசத்தை ரசித்தேன். 

வாதையின் கூடாரம் வலி மிகுந்த கவிதை. அகல் விடுதல் காட்சிச் சுவை. அது தன்னைக் குறிப்பதாகவும் ஒரு குறியீடு. இக்கவிதை முழுதுமே பெருஞ்சுவை. படகும் படகுப் பெண்ணும் அகலும் இரவையும் உறவையும் உணர்த்துகிறார்கள். 

“ ஓடாதது போல் ஓடுகிற நதியில்
மிதக்காமல் மிதக்கும் கேசரி நிறப் பூ ஒன்று
சுழிக்காமல் சுழிக்கும் ஓரிடம் காட்டும்.”

பெண்களின் வலது ஸ்தனத்தைவிட இடது அருகில் இதயம் இருப்பதால் கருணையும் காருண்யமும் பொலிவும் பொழியும்.. ஆண்பாதி பெண்பாதி என்றான அதைத் தன் வசீகரமான வார்த்தைகளால் 

“ ஒரு பக்கம் முலை விலகித் துடுப்பிடும்
சிவனொரு பாகியை வணங்கி
வயிறு எக்கிக் குனிந்து
முதலில் ஒளிரும் அகலைவிடுவேன்
அப்புறம் என்னையும். “ 

நடனக்குதிரை/பந்தயக் குதிரையும் இப்படிப்பட்ட குறியீட்டுக் கவிதை. தன்னைச் சாதாரண வண்டிக்குதிரையாக அது அங்கீகரித்துக் கொள்ளும் தருணம் புல்வெளி காணாமல்போய் வெளிச்சமற்ற லாயம் சமீபிக்கும் இடம் வலிகொண்டது. 

ககனம் சுழற்றும் பூ என்னையும் பிச்சியாக்கி இருக்கிறது. மீன்கள் நீந்தி வரும் காலவெளி. , யாரும் வந்திராத போயிராத வீடு, சிறியதைப் பெரியதில் வைப்பதும் பெரியதை மிகச் சிறியதில் வைப்பதும் என்று எல்லாமே தத்துவம் என்று முத்திரையிடாத சிந்தனை புதுக்கும் கவிதைகள். 

இதில் அயல் மகரந்தச் சேர்க்கையாக ஒரு கவிதை வெகு வித்யாசம். நெல்லி மரமும் கருவேப்பிலை மரமும்  இருவேறு தோட்டங்களில் பறவைகளின் மாறிப் பறத்தலால் இரு மரங்களும் இருவரின் தோட்டங்களிலும் உருவாவது அழகு. மனங்களின் விசாலப்படுதல் எனவும் கொள்ளலாம். பட்டாம் பூச்சிகளாகப் பறக்கும் முதியவர்களும் மிக அழகு.


வெய்யிலைக் குடித்தல், வீடு அல்லது வீடு போகும் வழி மறத்தல், பகடியை வற்புறுத்திச் செய்யவைப்பது, உள் வரும் கதவும் வெளியேறும் கதவும், அறுப்பு ரொட்டியும், பேராறு தீராமல் ஓடுவதும், ஆதிப் பிறழ்வும், பூனை ஆதலும், குப்பையில் எறிந்த புகைப்படமும் திருநங்கைச் சிரிப்பும், வெதுவெதுத்த காடும், கடைசி நெற்றியின் நடுவிற்கு வைத்திருக்கும் ஒற்றைக்காசும், துலாக்கோலை துளசியைப் போல் சமன் செய்யும் ஒற்றைப் பைத்தியமும்  மிக அவசம் உண்டாக்கின. 

இடையில் ஏதாவது இருக்கட்டும் என்ற கவிதை ஆச்சர்யப்படுத்தியது. மாம்பழவண்ண நீள் துகில் பறவையைப் போல அலைவது வெகு அழகு. இருப்பையும் இருப்பின்மையையும் சேர்த்தே படைக்கப்பட்ட கவிதைகள் இவருடையவை. நிகழ்ந்த ஒன்றை நமக்கே நிகழும் ஒன்றை இன்னொருவர் பார்வையில் பார்க்க முடிவது பேரானந்தம். அதிலும் நிமிஷ முட்களைப் போன்ற இருவர் மற்றும் இரட்டைச் சம்பவங்கள் தவிர்த்து அங்கே இல்லாத மூன்றாமவர் மற்றும் மூன்றாவதான சம்பவம் குறித்த நொடிமுள்ளின் பார்வையை வழங்குகின்றன இக்கவிதைகள் 

நொடி முள்ளைக் கருக்கொண்டது இத்தொகுதி.

எந்த ஒரு நொடியிலும் நாம் காணத் தவற விட்டிருக்கும் விஷயங்கள், செய்திகள், நிகழ்வுகள், மனிதர்கள் கல்யாண்ஜியில் பார்வையில் கவிதையாகும் பேறு பெற்று விடுகின்றனர். இதன்மூலம் நகரும் நொடி முள் கூட அமரத்துவம் பெற்று விடுகிறது.  

சரி வாருங்கள் இந்தப் பறத்தலில் இருந்து இந்த நொடி முள்ளில் கவனமாகக் கால்பதித்து இறங்குங்கள். உங்களைத் தூக்கிச் சென்றதும் பின் இறக்கி விட்டதும் இந்த மூன்றாம் முள்ளிலால் ஆன ( நொடி முள்ளிலாலான )இறக்கைகள்தான். 

சாகித்ய அகாதமி விருது பெற்ற கல்யாண்ஜி அவர்களுக்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.

நூல் :- மூன்றாவது முள்
ஆசிரியர் :- கல்யாண்ஜி
பதிப்பகம் :- சந்தியா பதிப்பகம்
விலை :- ரூ . 55/-


1 கருத்து :

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...