எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 25 நவம்பர், 2017

சாட்டர்டே ஜாலி கார்னர். சுபிவண்யாவும் சிபிச்சக்கரவர்த்தியும் காதல் அணுக்களும்.

முதன் முதலில் லாவண்யாவின் பெயரை இவள் புதியவளிலும் சூரியக்கதிரிலும்தான் பார்த்தேன். மிக அருமையாக எழுதுவார். நிறைய எழுதி இருக்கிறார். இப்போது அவ்வளவாக எழுதவில்லை. காரணம் எல்லாரும் முகநூலுக்குப் போயிட்டாங்க. நாம விடுவோமா. ஒரு நாள் அவரது போஸ்டில் போய் அர்த்தராத்திரியில் கலாட்டா கமெண்ட்ஸுகளாக எழுதி வைக்க. அவர் பதில் சொல்ல அவரை நான் உடனே சாட்டர்டே போஸ்டுக்கு  எழுதி ( ஆரியக்கூத்தாடினாலும் காரியத்துல கண்ணா இருக்கோணும்னு எங்க ப்லாகாத்தாவும் கூகுளாண்டவரும் சொல்லி இருக்காங்க :)  அனுப்பும்படி கேட்டேன். 

அம்மணி வெளிநாட்டில் ( லண்டனில் ) வசிப்பதால் நாம் தூங்கும் நேரம் அவருக்கு மாலையாக இருக்கும். கேட்டவுடனே அடுத்த 54 ஆவது நிமிஷத்தில் என் லாப்டாப்பில் ஒரே காதல் ஆலய மணி ஓசையிட்டு அடிக்க ஆரம்பித்துவிட்டது. ஓடிப் போய்ப் பார்த்தால் லாவியின் போஸ்ட். படித்ததும் நானும் காதல் கைதியானேன். நீங்களும் படிச்சுப் பாருங்க. செமயா எழுதி இருக்காங்க.


கல்லூரி சென்றதும் எல்லோரும் `தொபுக்கடீர்`ன்னு காதலில் விழுவது போல
நானும் விழுந்தேன். ஆனா யாரைக் காதலிக்கிறேன் என்றுதான் தெரியவில்லை.
மல்லிகை சரம், ஆகாய நிற சுடிதார், கொலுசு சத்தம், லாவண்டர் மனம்,
கொத்துபரோட்டா என கண்ணில், கருத்தில்படும் யாவையும் காதலித்தேன். அப்படி
எல்லாவற்றையும் காதலிக்க கத்துக் கொடுத்தவன் ``சிபி`` . அந்த பெயரைச்
சொல்லும் போதே, பெத்தடின்  ஊசி போட்டது போல் கிறுகிறுக்கும்.  நான் அவனை
எழுத்துக்கள் வழியாக சந்தித்த நாள் அன்று, தேவ கன்னிகள் காதலை
நுகர்ந்திருப்பார்கள்.

அது கல்லூரி சேர்ந்த பிறகு வந்த முதல் வெள்ளிக்கிழமை. பள்ளிப்படிப்புவரை
மதிப்பெண்ணுக்காக கடிவாளம் இட்ட குதிரையாக ஓடிய எனக்கு, இப்போது சுதந்திர
காற்றை சுவாசிக்க முடிந்தது. பாரதியார் கவிதைகள் மட்டும் படித்து நல்ல
(???) புள்ளையாக இருந்தவள், அன்று நூலகத்தில் எதேச்சையாக ஒரு வார
பத்திரிக்கையை புரட்டிப் பார்த்தேன்.

``உன்னை காதலிக்கிறேன்
என்பதற்காக
 நீயும் என்னை காதலித்துவிடாதே.
என் கொடிய காதலை
 உன் பிஞ்சு இதயத்தால்
தாங்கமுடியாது.``

என்ற வரிகள் மனதுக்குள் ரங்கூரமிட்டு அமர்ந்த  நொடி, எனக்குள் இருந்த
ஹார்மோன்கள் ஓவர்டைம் செய்ய ஆரம்பித்தன. எப்படி ஒருவனால் இப்படி
வார்த்தைகளை சமைத்து கவிதை உருவாக்க முடியுமென கிறங்கினேன். அந்த மயக்கம்
`சிபியின் புத்தங்களை தேடித் தேடிப் படிக்க வைத்தது. பார்ப்பதையெல்லாம்
காதலிக்க சொன்னது.

 ஒரு முகம் தெரியாதவனை ஒருவனை எனக்குள்  உருவகப்படுத்தி, அவனை நேசித்து,
அவன் என்னை நேசிப்பதாக கற்பனையில் வாழ்ந்தேன். அது எனக்கு டபுள் ஆக்டிங்
காலம். என் மனது காதலன், காதலி என்ற இரு கதாபாத்திரங்களையும் ஏற்று
நடிக்க வேண்டும். இடையிடையே கல்லூரி பாடங்களையும் கவனிக்க வேண்டும்.
விடுதி அறை தோழிகளோடு,பேசும் போதுதான் அவர்கள் இருவரும் சிபியின் கவிதை
என்னும் போதைக்கு அடிமையாகி இருக்கிறார்கள் என்ற  வரலாற்றுச் சம்பவம்
தெரிந்தது. பிறகென்ன, மலையும், மலைசார்ந்த இடத்தில் எங்கள் கல்லூரி
இருக்க, நாங்களோ, `சிபியும் சிபியின் கவிதையும் சார்ந்த இடத்தில்
வாழ்ந்தோம்.

அந்த நாட்களில், எந்த வாரப்பத்திரிக்கை திறந்தாலும்,  சிபியின் கவிதையாக
இருக்கும். தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும், கவிதை வரிகளை மனப்பாடமாய்
ஒப்பிப்போம். எங்களுக்குள் யார் அதிகமாக கவிதையை நேசிக்கிறார்கள் என்ற
போட்டியும், அவ்வப்போது முரண்பாடுகளும் வரும். பரிட்சை நேரமும் கவிதை,
காதலென புலம்பி, அரியர் வைத்து வீட்டில் பரேடு நடந்தது தனிக்கதை.


என் தோழி வைதேகிக்கு அந்த கவிதை நாயகனையே திருமணம் செய்ய வேண்டும் என்ற
பெரும் வெறி. படிப்பு முடிந்தபிறகு அப்பாவிடம் தன் விருப்பத்தை சொல்வதாக
இருந்தாள். இன்னோரு தோழி காவ்யாவிற்கு அப்படியெல்லாம் எண்ணமில்லை. (வேறு
சாதிக்காரராக இருந்தால்??? என்ற பிரச்சனை அவளுக்கு). நாம எப்பவுமே
வித்தியாசமா சிந்திப்போம். என்ன செய்ய, நம்ம டிசைன் அப்படி(???).


இப்படி உருகி உருகி காதலை கவிதையாய் கொட்டும், சிபி, நிஜத்தில் யாரை
காதலிப்பான், அந்த அதிர்ஷட தேவதை யார்?  இருவருக்கும் இடையேயான காதல்
எத்தனை அழகானது? என்பதைத்தான் என் கற்பனை குதிரை தேடும். அவள் மீது நான்
பொறாமை கொள்ள தனிப்பட்ட காரணம் வேண்டுமா என்ன?  நல்லவேளை, அவனின் முகவரி
தேடி தெருதெருவாக  நாங்கள் அலைவில்லை. எங்கள் பெற்றோர்கள்   எந்த
ஜென்மத்திலோ புண்ணியம் செய்திருக்கவேண்டும்


இப்படியாக எங்கள் நாட்கள் உருள, கல்லூரி கடைசி வருடம் , விளையாட்டாக
பத்திரிக்கை ஒன்றிற்கு சிறுகதை எழுதி அனுப்பினேன். அது பிரசுரித்த
ஆசிரியர் குழு என் எழுத்து நடை நன்றாக இருப்பதாக சொல்லி, தொடர்ந்து எழுத
ஊக்கப்படுத்த, `ஃபிரிலான்ஸராக அப்பத்திரிக்கையில் வேலை பார்த்தேன்.


சிபியை முதன்முதலாக இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்திய பத்திரிக்கை
அதுதான். அதில் வேலை பார்ப்பதில் எனக்கு அப்படி ஒரு ஆனந்தம். ஒரு முறை
சிபியின் கவிதை வந்த அதே வாரத்திலே என் கட்டுரையும் வந்திருந்தது. இருவர்
பெயரையும் தாங்கிவந்த அந்த புத்தகம் என் வாழ்நாள் பொக்கிஷமானது.
படிப்பு முடிந்ததும், சென்னையில் அதே பத்திரிக்கையில் முழுநேர நிருபராக
பணியில் சேர்ந்து சில மாதங்கள் கடந்திருந்த சமயம். இதுவும் ஒரு வெள்ளிக்
கிழமைதான். என்னுடன் வேலை பார்க்கும் நிருபர் ஒருநபரை அழைத்து
வந்திருந்தார். அந்த முகத்தை பார்த்ததும், ஏதோ நன்கு பரிச்சயமான உணர்வு.
சட்டென அடையாளம் பிடிபடவில்லை.


``இவரு சிபி, கவிஞர், நம்ம பத்திரிக்கைக்கு நிறைய எழுதியிருக்கார், `
என்று எங்கள் நிருபர் சொன்னதும், அப்படியே ஜிவ்வென்று இருந்தது.
சந்தோஷத்தில் கைகால்கள் நடுங்க ஆரம்பித்தன. அவரிடம் பேசுவதற்கு
லட்சக்கணக்கான வார்த்தைகள் என்னுள் முண்டியடிக்கிறது. எப்படி தொடங்கவென
நான்  தவிக்க,
``எனக்கு கல்யாணம், அவசியம் உங்க பத்திரிகைலிருந்து எல்லோரும் வரணும்``
என்று சிபி சொன்ன  அந்த நொடி எனக்குள் ஓராயிரம் பூகம்பத்தை
ஏற்படுத்தியது. அவர் தந்த பத்திரிக்கையை கூட வாங்காமல் அதிர்ந்து
நின்றேன்.


நம் சந்திப்பு இப்படியா அமையவேண்டும், என் காதல்களின் சக்ரவர்த்தியே,
உன்னை நான் காண்பது இவ்வாறா என ஓலமிட்டது என் மனது. இப்பத்தானே
சந்தித்தோம், அதற்குள் என்ன அவசரம் உன் கல்யாணத்துக்கு?ன்னு உள்மனது
ஓலமிட்டது.


``காதல் கவிதை எழுதி ஊரையே பித்துபிடிக்க வைச்ச மனுஷன் நீங்க, பெத்தவங்க
பார்த்து நிச்சயம் பண்ண பொண்ணை கல்யாணம் பண்றீங்கன்னா அது அதிசயம் சார்``
என்றார் எங்கள் நிருபர்.


எங்கள் இருவருக்கும் பொதுவாக சிரித்த சிபியின் முகத்தில் லேசாக வெட்கம்.
எனக்கோ இனம் புரியாத ஏக்கம்.


`வர்றேங்க`` என்று  அவன் தலையாட்டி சென்ற நொடி பேரிழப்பை உணர்ந்தேன்.
அன்றிலிருந்து நான் காதல் கவிதைகளை படிப்பதில்லை. ஏன் என்று உங்களுக்கு
புரியுமென நினைக்கிறேன்.

கல்லூரி காலத்தில் தபூ சங்கர் என்றால் மிகவும் விருப்பம்.
பத்திரிக்கையில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அவரை  சந்தித்த நிக்ழ்வில் சில
விட்டமின்களும், மினரல்களும் சேர்த்திருக்கிறேன்.


 உங்கள் பொன்னான விமர்சனங்களை எதிர்நோக்கி!
அன்புடன் சுபிவண்யா


டிஸ்கி :- மல்லிகை சரம், ஆகாய நிற சுடிதார், கொலுசு சத்தம், லாவண்டர் மனம், இதெல்லாம் சரி. அதென்னடா கொத்து பரோட்டா. அதை எல்லாமா காதலிச்சீங்க. இதென்னபுதுக்கதை ? காதல் பசி ருசி அறியாதும்பாங்களே. :) 

அடடா எவ்ளோ கஷ்டமான ஜாப். ஹ்ம்ம். ///என் மனது காதலன், காதலி என்ற இரு கதாபாத்திரங்களையும் ஏற்று
நடிக்க வேண்டும். இடையிடையே கல்லூரி பாடங்களையும் கவனிக்க வேண்டும்./// 

இதுல ரெண்டு வில்லிக வேற பாவம் நீங்க லாவண்யா. 

சிபியும் சிபியின் கவிதை சார்ந்த இடமும் சொல்லாடல் அருமையோ அருமை :)

வேற சாதிக்காரராக இருந்தாலா.. ஹாஹா முன் ஜாக்கிரதைத்தோழிதான் காவ்யா. 

சே க்ளைமாக்ஸ்ல வில்லன் வந்து கெடுப்பான். இங்க கல்யாணம் வந்து கெடுத்துருச்சே. முதல் சந்திப்பிலேயே காதல் முற்றுப்புள்ளி வைச்சிருச்சே. நீங்க முன்னாடியே அட்ரஸ்கேட்டுப்போயிப் பார்த்திருக்கலாம் லாவண்யா :) 

ஹ்ம்ம் இதுக்கப்புறம் காதல் கவிதை எல்லாம் படிச்சா என்ன படிக்காட்டி என்ன. அதான் எல்லாம் சுபமா முடிஞ்சிருச்சே. அவர் கல்யாணமும் உங்க கல்யாணமும். :)

இருவரும் ( இரண்டு ஜோடிகளும் )   நூறாண்டு நலமாக வாழ வாழ்த்துகள். சாட்டர்டே போஸ்டை ரொம்ப சுவாரசியமா கொடுத்ததுக்கு ரொம்ப தாங்க்ஸ் லாவி. உண்மையை பட்டுன்னு போட்டு உடைச்சுச் சொல்ற உங்க தைரியத்துக்காகவே உங்களுக்கு நிறைய அன்பும் அணைப்பும் முத்தங்களும் லாவி. 

 நான் கேட்டுக்கிட்டதுக்காக லாவண்யா இன்னோரு போஸ்டும் அனுப்பி இருந்தாங்க. அது என்னை ரொம்ப நெகிழ வைச்சிருச்சு. அதுனால இன்னிக்கு இரண்டு ஆர்ட்டிகிள் ஒரே போஸ்ட்ல.



கடவுள் இருக்காரா, இல்லையா?

செப்டம்பர் 20  எனக்கு மறக்க முடியாத நாள். என்னுடைய ஒட்டு மொத்த
பொறுமையும் அடிவயிற்றில் நின்று என்னை ஆட்டிவைத்த நாள்.   என் வாழ்வில்
ஓர் அதிசயம் நடந்த நாள். இருக்காரா இல்லையா என தெரியாத கடவுள் மீது பற்று
ஏற்படுத்திய நாள்.  அன்றுதான் உடம்பு முழுக்க ரணமும், மனது முழுக்க
சந்தோஷமாய் காத்திருந்தேன் என்னில் உதித்த என் தேவதையை காண!


பிரசவத்திற்காக மருத்துவர் குறித்த நாள் தாண்டி ஒருவாரம் கடந்திருந்தது.
பெண் குழந்தை என ஸ்கேனில் ஏற்கனவே அறிந்துவிட்டதால், விதவிதமான ஆடைகளை
வாங்கிக் குவித்தாயிற்று. பிள்ளை பிறந்ததும், தூக்கிக்கொண்டு வீடு சென்று
சீராட்டவேண்டியதுதான் மீதி. ஆனால் அதற்கான எந்த அறிகுறியும் என் உடலில்
இல்லை.


வயிற்றுக்குள் துள்ளிவிளையாடும் மகளோ வெளிவர எந்த முயற்சியும்
எடுக்காததால், பிரசவ வலியே வரவில்லை.நாட்கள் கடந்தபடியால்  என் அதிசய
நாளுக்கு முதல்நாள் மருத்துவமனையில் சேர்ந்தாயிற்று. எதையேனும்
கொறித்தபடியே  படுக்கையில் இருந்தாலும், மனசு கடவுளை ஜெபித்தபடி
இருந்தது.


எங்கள் வீட்டிற்கு அருகிலிருக்கும் கோயிலில் வீற்றிருக்கும் `லக்‌ஷ்மி
நாராயணன் `தான் என் ஆதர்ச கடவுள்கள்.என்னதான் நாராயணன் காக்கும் கடவுளாக
இருந்தாலும், ஒரு ஆணுக்கு பிரசவ வேதனை தெரியாதுதானே(???). ஆக லக்‌ஷிமியை
பிரார்த்தனை செய்தேன். எதாவது ரூபத்தில் நீ வந்து எனக்கு பிரசவம் பாரு
தெய்வமேன்னு மனமுருகி வேண்டினேன்


குழந்தை வெளிவர முயற்சித்து எட்டி உதைக்கும் போதுதான், பனிக்குடம்
உடையும், எங்கே, நம்மாளுதான், வயிற்றுக்குள்  சுகமாக தூங்கிக்கிட்டு
இருந்தாங்களே!, ஆக பனிக்குடம் உடைய முதலில் ஜெல்லை அடிவயிற்றில்
செலுத்திவிட்டு, டாக்டரும் நர்சும் தேமேன்னு காத்திருந்ததுதான் மிச்சம்.


எங்கவாலு ஒரு இஞ்ச் கூட நகரல. அடுத்து பவர்புல்லான ஜெல் வைச்சாங்க. மகளோ,
உனக்கும் பெப்பே, உங்க பாட்டனுக்கும் பெப்பெ ரேஞ்சுக்கு ஜெல்லை மதிக்கவே
இல்லை. இந்த முயற்சியில் 12 மணி நேரம் கடந்திருக்க, கடைசி டாக்டர் என்
கர்ப்ப வாய்க்குள் கையை விட்டு பனிக்குடம் உடைச்சாங்க. ஒருவரியில்
சொல்லும் இந்த சம்பவம் சுமார் ஐந்து நிமிடம் வரை நடந்தது. அப்ப நான்
கத்திய கதறல் பாதாளம் வரை கேட்டிருக்கும். அப்பாடி, மரணத்தை விட
கொடுமையான வலி.


அதன் பின் ரத்த அழுத்தம் பார்க்க கையில் சின்ன ஒரு பெல்டும், குழந்தையின்
இதய துடிப்பு அறிய வயிற்றில் கலர் கலராய் டியூபும் கட்டி, மானிட்டர்
பார்க்க ஒரு நர்ஸ் உட்கார்ந்திருந்தார். பொதுவாகவே ஒரு பெண்ணிற்கு
பிரசவம் வலிதரும் விசயம். அதுவும் வெளிநாட்டில் யார் துணையுமின்றி,
விட்டத்தை வெறித்தபடி வலியில் கத்துவதெல்லாம் நரக வேதனை.


இந்த நிமிடம்தான் , நம்மை பெத்த தாயின் நியாபகம் வரும். நம்ம முகம்
வாடினாலே, தவிச்சுப் போகும் அம்மா, இத்தனை வலியில் துடிக்கும் போது கூட
சேர்ந்து ரத்தக் கண்ணீர் வடிப்பாங்களே?  ஆயிரம் பேர் சொல்லும் ஆறுதலைவிட,
அம்மாவின் ஒற்றை தலை கோதல் மேலானதே!,


பிரசவம் என்பது அடிவயிற்றில் வரும் வலிமட்டுமல்ல, உச்சந்தலையில் பாரம்
ஏறியது போல கணக்கும்.கால்கள் வீக்கம் கண்டு கூடுதல் பாரமேற்றும். முதுகு
படுக்கச் சொல்லும். வயிறு சுழற்றியடிக்கும். இத்தனை வேதனைகளையும்
தாங்கினால்தான் `அம்மா``என்னும் அமிர்த சொல்லை கேக்க முடியும்.


செப்டம்பர் 20 விடிகாலை பிரசவ வலிக்கான ஊசி போட்ட கொஞ்ச நேரத்தில்,
வயிற்றிலில் சுள்ளென வலி மெலிதாக கிளம்பி, அப்படியே வீரியம் காட்டுகிறது.
என்னைச் சுற்றியிருந்த டாக்டரும் நர்சும், வேற்று நாட்டினர். என்னதான்
ஆங்கிலத்தில் சரளமாக பேசினாலும், வலியில் `ஐய்யோ, அம்மா, முடியலையே``
என்று தமிழில்தான் கத்த முடியும்.


ஒருபுறம் வலியை தாங்கியபடி, மறுபுறமும், `லக்‌ஷுமி`யை துணைக்கு
அழைத்தபடி, கூடவே அம்மாவின் அரவணைப்புக்கு ஏங்குகிறது மனது. ``கடவுளே,
யாருமில்லாம அனாதையா இந்த தேசத்தில இருக்கேன், நீ இருப்பது உண்மைன்னா
எனக்கு இரக்கம் காட்டு`` வாய்விட்டு அழுகிறேன். கண்ணீரோடு கதறுகிறேன்.


இங்கிலாந்து மருத்துவ விதிமுறைகளின்படி, தேவை ஏற்படின் மட்டுமே
பிரசவத்தில் அறுவைசிகிச்சை செய்வார்கள். அல்லது ஐந்தாவது மாதத்திலேயே
`நமது விருப்பம் சுகபிரசவமா அல்லது அறுவைசிகிச்சையா `` என
எழுத்துப்பூர்வமாக கையொப்பமிட்டு தர வேண்டும்.


நான் சுகபிரவச முறையை தேர்வு செய்தபடியால், மருத்துவர்கள் அவ்வழியில்
சிகிச்சையை தொடர்கிறார்கள். வலியை அதிகரிக்கச் செய்து, குழந்தையை வரவைக்க
முதுகு தண்டில் ஊசி குத்தினார்கள். வெளியில் என்ன கலவரம் நடந்தாலும், அதை
சட்டைசெய்யாமல் சமர்த்தாய் உள்ளிருந்தாள் என் மகள்.


இன்னும் இன்னும் பிரார்த்தனை செய்கிறேன், கோபத்தில் திட்டுகிறேன்,


வலியோடு மன அழுத்தமும் அதிகமாகிறது. அருகில் கணவர் இருந்தாலும், இந்த
வேதனை அறிந்த ஒரு பெண்ணின் அருகாமையை மனது தேடுகிறது. இதற்கு இடையில் என்
உடம்பில் நீர் வற்றி, குளுகோஸ் ஏற்றுகிறார்கள். சினிமாவில் பார்த்த
சொர்க்கலோக காட்சிகளும், நரக கொடுமைகளும், அந்தநேரம் பார்த்து
நியாபகத்துக்கு வந்து தொலைக்கிறது. ``எனக்கு எதாவது ஆகிவிட்டால்,
குழந்தையை, இந்தியாவில் இருக்கும் என் அம்மாவிடம் அனுப்பிடுங்க`` என
டாக்டரின் கை பிடித்து உளறுகிறேன்.


இரவு பத்து மணியாச்சு. குழந்தை வெளியில்வரும் அறிகுறியே இல்லை, நான்
படும் வேதனை தாங்காமல் அந்த ஆப்பிரிக்க நர்ஸ் ``stop` தேர்வு குறித்து
என்னிடம் விளக்குகிறார். சுகபிரசவ முறையில் குழந்தையை எடுக்க மருத்துவர்
குழு முயற்சிக்கிறார்கள். ஆனால் அதற்கு என் மகள் ஒத்துழைக்கவில்லை.


மருத்துவர்களின் சிகிச்சை முறை எனக்கு திருப்தியில்லாத பட்சத்தில்,
`stop' என்று நான் சொல்லுவது ஒருவகையில் அவர்களை அலட்சியப்படுத்தி, உன்
வேலை சரியில்லை என்று சொல்லுவது. பின் என் விருப்பத் தேர்வாக
அறுவைசிகிச்சைக்கு செல்வது.


``இதை நான் சொன்னது போல் காட்டிக் கொள்ளாமல், உனக்கு தெரிந்தது போல்
சொல்`` என்றவள், `கென்யா-ல எங்க வீட்டுக்கு பக்கத்தில் ஒரு டெல்லிக்காரர்
குடியிருந்தார். அவரை ரொம்ப லவ்வினேன்.எங்கப்பா ஒத்துக்கல, நீயும்
இந்தியனா அந்த பாசம்தான்``ன்னு சொன்னார் நர்ஸ் பாட்டி. இதே வேறோரு சமயமாக
இருந்தால் ``நச்` கமெண்ட் அடித்திருப்பேன்.


நான் ஸ்டாப் சொல்லிவிட்டால், அதற்கு மறுத்து பேசவோ, விளக்கம் தரவோ,
மருத்துவர்களுக்கு அதிகாரம் இல்லை. இங்கிலாந்து மருத்துவ விதிகள் ஒரு
நோயாளிக்கு தரும் உரிமை அது.


அடுத்து என்னை தியேட்டருக்கு எடுத்துச் செல்வதற்கான ஆயத்தம் நடக்கிறது.
இதுவரை இருந்த வேதனையோடு, அறுவை சிகிச்சை பயமும் சேர்ந்து கொள்ள, எல்லா
பெண் தெய்வங்களையும் முறைவைத்து அழைக்கிறேன். தூங்காமல் தவிக்கும் என்
அம்மாவுக்கு போன் பண்ணி, வெடித்து அழுகிறேன்.


தியெட்டருக்குள் சென்றதும், மயக்க ஊசி நிபுனர், மகப்பேரு மருத்துவர்
இருவர் என வரிசையாய் உள்ளே வந்தார்கள். சிறுபிள்ளை போல `, `அம்மா`க்கிட்ட
போகணும்னு` தேம்பி தேம்பி அழும் என்னிடம், `அழாதே, பெண் ஜென்மம்-ன்னாலே
இந்த வலியை அனுபவிச்சுத்தான் ஆகனும்`` என்று தமிழில் சொன்னார் அந்த பெண்
மருத்துவர்.


``என்ன குழந்தை, டிரெஸ் வாங்கியாச்சான்னு`` இன்னோரு குரல் தமிழில். (இது
நர்சு) அந்த சூழ்நிலையில் தாய் மொழியில் அவர்கள் பேசியதும் லேசான புன்னகை
அரும்பியது எனக்கு. பழகிய நண்பர்களைப் போல அந்த இருவரும் சகஜமாக பேச,
அறுவைசிகிச்சை ஆரம்பமானது.


குழந்தை பிறக்கும் போது, தலையில் பிரசர் கூடும்`` என்றபடி, இதமாக
நெற்றியில் அந்த தமிழ் மருத்துவர் மசாஜ் செய்தார். அறுவைசிகிச்சைக்கு
தேவையான பொருட்களை எடுத்து தருவதோடு, என் கையை பிடித்து ஆறுதலாய் பேசிக்
கொண்டிருந்தார் நர்சு. ஒரு குழந்தைபோல இருவரும் என்னை கையாண்டு அன்பு
செலுத்தினார்கள்.


என் கணவரோ, கொள்ளக்காரன் மாதிரி, ஆஸ்பத்திரி டிரெஸ்-ல முகமூடி
போட்டுக்கிட்டு, எல்லாத்தையும் வேடிக்கை பார்த்துக்கிட்டிருந்தார் (???).
பிள்ளையின் பேருக்கு பின்னாடி சர் நேம் போடும் அப்பாக்களும் இந்த வலியை
அனுபவிக்க ஒரு சட்டம் போடணும்ன்னு தீவிர பெண்ணியவாதியாய் ஒரு யோசனை
வந்தது. (இந்த மனசு ஒரு குரங்கு, இப்படித்தான் அலைபாயும்)


இப்படியாக அந்த இரு தமிழ் பெண்களும் எனக்கு ஆபத்பாவானாய் நிற்க,கொஞ்சம்
தைரியம் கிடைத்தது. என் வாழ்வின் அதிகபட்ச வேதனையை தந்த செப்டம்பர் 20
முடிந்து 21-ம் தேதி தொடங்கிய அரை மணி நேரத்தில் என் மகள் இந்த பூமிக்கு
வந்தாள்.


இனி அவள் எனக்குள் இல்லை. தனி மனுஷியாய் என் அருகில் இருப்பாள். ``பொண்ணு
பொறந்திருக்கா, இன்னிலிருந்து சேமிக்க ஆரம்பிங்க, அப்பத்தான் வரதட்சனை
கொடுக்க முடியும்`ன்னு அங்கிருந்தவர்கள் என்னை கிண்டலடிக்க,
வேதனையெல்லாம் பறந்ததாய் உணர்ந்தவள், ``டாக்டர் உங்க பேர் என்ன? என்றேன்.


``ஆண்டாள் ``ன்னு அவர் சொன்னதும் மேனி சிலிர்ந்தது எனக்கு. ``டாக்டர்,
நான் லக்‌ஷிமி நராயணனைத்தான் கும்பிடுவேன். என் பிரசவத்திற்கு கூட
இருக்கணும்ன்னு அவங்கிட்ட ரொம்பவும் வேண்டினேன். நான் ஒன்னும் பெரிய
பக்தை கிடையாது. சாதாரணமாத்தான் சாமி கும்பிடுவேன். ஆனா கடவுள் மனுஷன்
ரூபத்தில் வந்து உதவுவார்ன்னு உங்க பேரை கேட்டதும் புரியுது`` என்றபோது
அவரும் உணர்ச்சிவசப்பட்டார்.


அடுத்து நர்சிடம் ``உங்க பேர் என்ன? என்றதற்கு `பிரேமா` என்றார்.


என்னையும் அறியாமல் `அம்மா` என வெடித்து கதறினேன்.


ஏன்னா, என் அம்மா பெயர் பிரேமா!



டிஸ்கி :- படிச்சதும் பேசமுடியல. அன்பில் மனம் நெகிழ்ந்திருச்சு லாவண்யா. அன்பும் அணைப்பும் முத்தங்களும்டா.


<3 span="">

6 கருத்துகள்:

  1. கூடவே இருந்து பேசின மாதிரி இருந்தது!

    பதிலளிநீக்கு
  2. பெண்களின் பிரசவ வேதனை மனதை பாதிக்கிறது என் இரண்டாவது மகனின் பிரசவம் போது லேபர் வார்டில் என்மனைவியைக் காண சந்தர்ப்பம்கிடைத்தது அவளது வேதனை காணப் பொறுக்காமல் அதுவே அவளுக்கு கடைசி பிரசவம் என முடிவெடுத்தேன்

    பதிலளிநீக்கு
  3. நன்றி ஜம்பு சார்

    நன்றி மாதவி

    நன்றி ஜெயக்குமார் சகோ

    நன்றி குமார் சகோ

    உண்மைதான்.. நன்றி பாலா சார்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...