மணப் பொருத்தம் சேர்க்கும் முன்னே மனப்பொருத்தம் பாருங்க.
”நிறுத்துங்க .. எல்லாத்தையும் நிறுத்துங்க. “ ஒரு திருமணக்கூடத்தில் ஒலித்த குரல் இது. சினிமாவில் வர்ற மாதிரி வில்லன்கள் யாரும் வந்து அந்தத் திருமணத்தை நிறுத்தவில்லை. கரெக்டா தாலி கட்டும் சமயம் மணமேடையில் மணமகன் முன் சர்வாலங்கார பூஷிதையாக நின்றுகொண்டு இருந்த கல்யாணப் பெண்ணின் குரல்தான் அது.
அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப் போனார்கள் கல்யாணத்துக்கு வந்திருந்த உறவினர்கள். ”பையனைப் பிடிக்கலைன்னா முன்னாடியே சொல்லி நிறுத்தி இருக்கலாமே. மணவறைக்கு வந்துட்டு இதென்ன அக்கிரமம் ?” என்று கொந்தளித்தார்கள் மாப்பிள்ளை வீட்டார்.
அந்தப் பெண் மணமேடையை விட்டு இறங்கி வந்து “ எங்க அப்பா அம்மா கிட்ட இந்தத் திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை என்பதை சொல்லிட்டேன். ஆனால் அவங்க கட்டாயப்படுத்தியதால் ஒன்றும் செய்ய முடியாமல் இங்கே வந்து சொல்ல வேண்டியதாப் போச்சு “ என்றார்.
இரண்டு மாதங்களாக மணமகன் மணமகள் இருவருமே போனில் பேசிக்கொண்டுதான் இருந்திருக்கிறார்கள். அப்போதும் ஒருவருக்கொருவர் பிடிக்குது பிடிக்கலைன்னு சொல்லிக்கொள்ளவில்லையா என்று கேட்டால் சொல்ல சந்தர்ப்பம் வாய்க்கவில்லை என்கிறார் மணப்பெண்.