அவந்தி நகரத்தில் சாந்தீபனி முனிவரின் ஆசிரமத்தில் இரு நண்பர்கள் இணை பிரியாதவர்களாய் இருந்தார்கள். அவர்கள்தான் சுதாமனும் கிருஷ்ணனும். அந்த குருகுலக் கல்வி முறையில் அரசனும் ஒண்ணுதான் ஆண்டியும் ஒண்ணுதான். அனைவரும் குருவின் கட்டளை ஏற்றி செயலாற்றி வரவேண்டும். அவர் அனைவருக்கும் சமமாகவே கற்பிப்பார். அனைவரையும் சமமாகவே நடத்துவார். அனைவருக்கும் சமமாகவே வேலைகள் கொடுப்பார்.
ஒருமுறை அவரது வயலில் மடையை அடைக்கும் பொறுப்பை கிருஷ்ணரிடம் ஒப்படைத்தார் குரு. ஆனால் கிருஷ்ணருக்கோ உடல் நலமில்லாமல் இருந்தது. அவருக்குப் பதிலாக சுதாமா தான் அந்த வேலையை நிறைவேற்றுவதாகக் கூறிக் காலையில் சென்றார். மதியம் ஆயிற்று, மாலை ஆயிற்று, இரவும் ஆயிற்று. காற்றும் குளிரும் மழையும் சுற்றி அடிக்க சுதாமாவைக்காணவில்லை. மறுநாள் அதிகாலை கிருஷ்ணர் குருவிடம் இது விபரம் தெரிவித்து வயலில் சென்று பார்த்தால், வெள்ளமாய்ப் பொங்கி வரும் மடையை அடைக்க இயலாமல் அந்த மடை வரப்பில் தன் உடலை வைத்து அடைத்துப் படுத்துக் கிடந்தார் சுதாமா. மடையை அடைக்கா விட்டால் பயிர்கள் அழிந்து மூழ்கிவிடுமே.
இதைப்பார்த்ததும் கிருஷ்ணரின் கண்களில் நீர் துளிர் விட்டது. எப்பேர்ப்பட்ட தியாகம். தனக்காக தன் உடலையே வைத்து அடைத்த அந்த நண்பன் சுதாமா கிருஷ்ணரின் அத்யந்த நண்பனாக ஆகிப்போனான்.