"மங்க அடி மங்க இஞ்ச.. எங்கன இருக்கே அடி இங்கிட்டு வா " என்று முகப்பிலிருந்து சத்தம் போட்டார்கள் வாடாமலை ஆச்சி.
"இருங்காச்சி சோத்த வடிசிட்டு வாரேன். ஒரு வேலையும் உருப்படியாச் செய்யவிடுறதுல்ல " என்று சலித்தபடி ரெண்டாங்கட்டில் இருந்து வந்தாள் மங்கை.
"அடி மகராசியா இருப்பே , அந்தப் போகணில தண்ணியைக்கொண்டா
கையக் கழுவோணும் " என கையை நீட்டிக் கொண்டிருந்தார்கள் வாடாமலை ஆச்சி.
'இதுக்குத்தானா இப்பிடி அவசரப்பட்டீக ' என்று கேட்க நினைத்து அசட்டையாக கப்பில் தண்ணீர் கொண்டுவந்தாள் மங்கை.
"நச்சுப்பிடிச்ச வேலைன்னுதான் செட்டிய வீட்டுக்கு ஒத்துக்குறதுல்ல"என்று முனகியவாறு கப்பைக் கழுவி ஊற்றிவிட்டு செல்போனை எடுத்துக் பார்த்தாள் மங்கை.
"வயசான ஆச்சி மட்டும்தான். அவுகளக் கவனிச்சிக்கினாப் போதும்",என்று சொல்லித்தான் சேர்த்துவிட்டு இருந்தார் பாண்டியக்கா.