எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 22 ஏப்ரல், 2024

ஒக்கூர் ஸ்ரீ சசிவர்ண விநாயகர் திருக்கோயில்

 ஒக்கூரில் இருக்கும் ஸ்ரீ சசிவர்ண விநாயகர் திருக்கோயிலிலேயே சிவன் பார்வதியும் இருப்பதால் ஊரின் நகரச்சிவன் கோவிலும் இதுதான். கிட்டத்தட்ட 328 ஆண்டுகளுக்கு முன்பு நகரத்தார்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட கோயில் இது. 

மூன்று நிலை இராஜகோபுரத்துடன் கிழக்குப் பார்த்து அமைந்த கோவில் இது. 

இவருடைய இக்கோயில் குடமுழுக்கு விழா மலரில் நானும் ஒரு கட்டுரையை எழுதி இருந்தேன். ஆகையால் இவரைப் பார்க்க விழைந்தேன். 

மார்ச் . 8 , 2023 கும்பாபிஷேகம். நாங்கள் டிசம்பரில் சென்று தரிசித்தோம். ஒரு ஞாயிறு அன்று அங்கே முற்றோதல் நடைபெற்றது. அந்த முற்றோதலில் கலந்து கொள்ளச் சென்றோம். ஆனால் சீக்கிரம் ஆரம்பித்துவிட்டதால் நான் சென்றபோது பதினொன்றரை மணிக்கே  சீக்கிரம் முடித்து  விட்டார்கள். 

திருப்பணிக்குழுவின் தலைவர் திரு சேக்கப்பச் செட்டியார். இன்னும் சில நகரத்தார்களும் ஆச்சிகளும் இருந்தார்கள்.  
விநாயகருக்கு முன்னே ஒரு கொடிமரம்.

சோபன மண்டபத்தில் விதானத்தில் ஓவிய யானைகளின் உலா. 
நான் பார்த்த விநாயகர் கோவில்களிலேயே மிகப் பெரிய கோயில் இதுதான். 

நாங்கள் சென்ற அன்று கருவறையில் சந்தனக் காப்பில் எழிலாக அருள் பாலித்தார். மாலை வாங்கிச் சென்று சூட்டினோம். 

வசந்த மண்டபம் என்னும் சுற்றுப் பிரகாரத்தில் பைரவர் திருக்காட்சி. 

சுற்றுப் பிரகாரத்தில் கெஜலெட்சுமி
அடுத்து சிவனும் அம்பாளும் அதன் பின் சுப்ரமணியர் வள்ளி தெய்வானை சந்நிதி. 
இக்கோயின் விசேஷம் அதில் உள்ள ஓவியங்கள்.

விதானத்தில் அன்னபட்சியும் பூக்களும். 

பக்கவாட்டுக்களில் கணநாதர் சரித்திரம்.
விநாயகரைப் பூஜிக்கும் பக்தர்களும் ஓவியமாகி இருக்கிறார்கள். 

எழிலுடன் காட்சி அளித்த நவக்ரஹ நாயகர்கள். 

சிவன் சந்நிதியின் எதிரே நந்தி.

அதன் பின் முற்றோதலுக்காக சிவபெருமான் , விசாலாக்ஷி, நால்வர் மற்றும் விளக்குகளால் ஆன சிவன் மற்றும் அர்ச்சனைப் பொருட்கள். 
முற்றோதல் முடிந்து சிவனுக்குத் தீபம் ஆச்சு. 
திருவாசக புத்தகங்கள். மலர் தூவி வழிபாடு. விளக்குகளால் ஆன சிவன். விடையேறு பாகனும் விசாலாக்ஷியும் ஒரு பொன்னூஞ்சலில்  விநாயகனும் இன்னொரு பொன்னூஞ்சலில். வேலன் படி அரிசியில் வேலாக வைக்கப்பட்டுள்ளான். திருப்பொன்னூஞ்சல் பாடும்போது ஆட்டிப் பாடுவது வழக்கம். 

சங்கு, உரல் உலக்கை , விபூதி, குங்குமம், பூஜைப் பொருட்கள் உள்ளன. 
வசந்த மண்டபத்தின் சுவர்களில் மூஷிக வாகனன், மோதக ஹஸ்தனின்  கண்கவர் தோற்றம். 
இதிகாச புராணங்கள் எல்லாம் ஓவியமாக அழகுற வரையப்பட்டுள்ளன. தந்தையும் தனயனும் கைலாயலும் கங்கையும். 
ஸ்ரீ சித்தி புத்தி விநாயகர். இருபக்கமும் சாமரம் வீசும் பெண்கள். 
தன் தம்பி முருகன் வள்ளியை மணம் முடிக்க யானையாகத் தோன்றிய விநாயகப் பெருமான். 

வேத வியாசர் கூறக் கொம்பை ஒடித்து மகாபாரதம் எழுதியது மேலே ஓவியமாக உள்ளது. 


சிவன் முற்றோதல் நடக்கும் இடத்துக்குப் பக்கமாக நால்வர் சந்நிதி. 
சுற்றுப் பிரகாரம். 
கஜலெக்ஷ்மிக்கு முன் கன்னிமூல விநாயகர். 
காசி விசுவநாதர் விசாலாக்ஷி சந்நிதி. முற்றோதல் முடிந்து தீபாராதனை. 

எழில்மிகு சசிவர்ணரின் கருவறைத் தரிசனம். 


திகம்பர கணநாதர்.


ஸ்ரீ விநாயகர் இராவணேசுவரனுடன். சிறுவன் விநாயகனிடம் இராவணன் சிவலிங்கத்தைத் தரையில் வைக்க வேண்டாம் என்று கூறிவிட்டு நீராடச் செல்ல இவரோ சிவனைத் தரையில் வைத்து விட சிவன் அங்கேயே பிரதிஷ்டை ஆகிவிடுகிறார்.இராவணன் அதன் பின் கோபம் கொண்டு அச்சிறுவனைத் துரத்த அவனோ மாயமாக மறைகிறான்.


ஸ்ரீ விநாயகர், அகஸ்தியர், காவிரி. 

அகஸ்தியர் தன் கமண்டலத்தில் காவிரியை அடக்கியபடி சென்றார் ஒருமுறை. உலக நலனுக்காகக் காவிரி பயன்பட வேண்டும் என்று அக்கமண்டலத்தைக் காக்கையாக்கித் தட்டினார் விநாயகர். உடனே காவிரி பெருக்கெடுத்து உலகம் உய்ய ஓட ஆரம்பித்தாள்.
நாரதர் அளித்த மாங்கனியை அம்மையப்பனைச் சுற்றி வந்து பெற்ற விநாயகர். 

செல்வவளம் நல்கும் ஸ்ரீ லெக்ஷ்மி கணபதி.

கோயிலின் உள்ளே ஜொலிக்கும் துவஜஸ்தம்பம். 
சந்திரன் சந்நிதி
சூரியன் சந்நிதி. 

சோபன மண்டபத்தின் விதானத்தில் சசிவர்ண விநாயகர். அங்கே புளிசாதமும் பிரசாதங்களும் கொடுத்தார்கள். மேலும் ஒக்கூர் நகரத்தார் பக்கத்தில் உள்ள உணவகத்தில் அருமையான மதியச் சாப்பாடு அளித்தார்கள். காரைக்குடியில் இருந்து வந்துள்ளோம் என்று தெரிந்ததும் காளாஞ்சி கொடுத்துக் கௌரவித்தார்கள். வாழ்க ஒக்கூர் நகரத்தார் ! வளர்க சசிவர்ண விநாயகரின் புகழ் !!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...