எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 29 மார்ச், 2024

குட்டித் தமிழகம் ஆகி வரும் கொலோன் நகரம்

குட்டித் தமிழகம் ஆகி வரும் கொலோன் நகரம் – அன்னபூரணி சபாரெத்தினம்


த கேப்பிடல் என்ற நூலை எழுதிய கார்ல் மார்க்ஸ் பிறந்த இடம் ஜெர்மனியின் ட்ரையர் நகரம் என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். மார்க்ஸியத் தத்துவங்கள் பிறந்த ஜெர்மனி நகரில் இன்று பார்த்தால் வலசை வந்து வசிக்கும் இந்திய மற்றும் ஈழத் தமிழர்களின் திருப்பணியால் ஹாம் காமாட்சி அம்மன் கோவில், முருகன் கோவில், கந்தசாமி கோவில், கதிர்வேலாயுதசாமி கோவில், ஜெகன்னாத் கோவில், சிம்மாசலம் நரசிம்மர் கோவில், சாய்பாபா கோவில், இஸ்கான் கோவில்கள் என இந்தியக் கோவில்கள் அணி வகுக்கின்றன.  

யூரோப்பா முழுவதையும் சுற்றி ஓடும் ரைன் நதியின் கரையில் அமைந்துள்ளது கொலோன் நகரம். அந்தக் காலத்தில் யூ டி கொலோன் என்ற வாசனைத் திரவியம் தயாராகி உலகம் முழுக்க வலம் வந்தது இந்த ஊரில் இருந்துதான். இங்கே ஓவியம், கண்ணாடி, யுத்த தளவாடங்கள் என 25 க்கும் மேற்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன.

நதிக்கரையோர நாகரீகம் தழைப்பதைப் போல் அந்த ரைன் நதியின் பெயரால் ரைன் தமிழ்ச் சங்கம் என்றொரு வாட்ஸப் குழுமம் இருக்கிறது. இதில் 70 க்கும் மேற்பட்ட தமிழ்க் குடும்பத்தினர் அங்கத்தினர்களாக இருக்கிறோம். எனக்குத் திருமணமாகி ஐந்து ஆண்டுகள் ஆகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இத்தமிழ்ச் சங்கத்தில் இணைந்துதான் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, தமிழ்ச்சங்க நிகழ்வுகள், பரதநாட்டியக் கலை நிகழ்ச்சிகள், புத்தக வெளியீடுகள் ஆகியவற்றைத் தமிழர்களாகிய நாங்கள் கொண்டாடி வருகிறோம்.

கொலோன் நகரத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கொலோன் பல்கலைக் கழகம் உள்ளது. இதில் இந்தியவியல் மற்றும் தமிழ்க் கல்வித்துறை செயல்படுகிறது. தமிழக அரசின் உதவியால் அமைக்கப்பட்ட தமிழ் இருக்கையும் உள்ளது. இந்தப் பல்கலைக் கழகத்தில் பலமொழி சார்ந்த தமிழ் ஆராய்ச்சி மாணவர்களும் பயின்று வருகிறார்கள் என்பதே நம் தமிழுக்குப் பெருமை.

ஏலையா, நமது இலக்கு, ஐபிசி தமிழ், வெற்றிமணி, அகரம், தமிழ் டைம்ஸ் போன்றவை ஜெர்மனியிலும் யூராப்பாவில் வெளிவந்த, இன்னும் வெளிவந்து கொண்டிருக்கும் தமிழ் சஞ்சிகைகள். குட்டீஸ்களும் வாசிக்கும் இம்ஷ்லிங் சிட்டி லைப்ரரி போல் ஒவ்வொரு நகரிலும் குழந்தைகளின் வாசிப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு நூலகங்களில் புத்தக அடுக்குகள், சோபாக்கள், பொம்மைகள் குழந்தைகளுக்கேற்ப உயரத்தில், உலகத் தரத்தில் அமைக்கப்படுகின்றன.  


ஜெர்மன் தமிழ்க் கல்விச் சேவை என்ற பெயரில் இந்தியத் தமிழர்களும் ஈழத்தமிழர்களும்  தமிழ் ஆலயங்கள் என்ற பெயரில் பள்ளிகளில் வகுப்புகள் நடத்தியும் ஆன்லைனில் வகுப்புகள் நடத்தியும் இளைய தலைமுறையினருக்குத் தமிழ் கற்பித்து வருகிறார்கள். தங்கள் பண்பாடு, பழக்க வழக்கம் ஆகியவற்றைத் தங்கள் குழந்தைகளுக்குக் கற்பித்து வந்தாலும் இங்கே அதிகம் ஜெர்மன் மக்களோடு கலப்பு மணங்கள் நடைபெறுவதையும் இயல்பாக எடுத்துக் கொள்கிறார்கள்.

நம்மூரு போல் திங்கட்கிழமை, வியாழக்கிழமை மார்க்கெட்டுகள் உண்டு. இதற்கு டீன்ஸ்டாக், டோனர்ஸ்டாக் மார்க்கெட் என்று பெயர். நமது தமிழ்க் கடைகள், உணவகங்கள், நகைக்கடைகள், ஆடையகங்கள் டோர்ட்மெண்ட் என்னும் நகரில் உள்ளது. தமிழ்நாட்டில் கிடைக்கும் எல்லாக் காய்கறிகளும் கிடைக்கும். விலைதான் ஏழு யூரோ, ஒன்பது யூரோ என்று சற்று அதிகமாக இருக்கும். டோர்ட்முண்டில்தான் இந்தியாவிலிருந்து அழைக்கப்படும் தமிழ்ப் பிரபலங்களின் கலைநிகழ்ச்சிகள் வெஸ்ட்ஃபாலன்ஸ்டேடியன் என்ற மாபெரும் அரங்கில் நடக்கும்.

ஜெர்மனி வருவதற்காக எடுக்கப்படும் ஷென் ஜென் விசா மூலம் ஐரோப்பாவின் பல நாடுகளையும் பார்த்து வரலாம். ஜெர்மனி மொழியிலும் தேர்ச்சி பெற்றிருந்தால் மென்பொறியியலாளர்களுக்குச் ஜெர்மனியில் சிவப்புக் கம்பள வரவேற்பு உண்டு. ஆங்கிலம் தெரிந்தாலும் ஜெர்மானியர்கள் ஜெர்மன் மொழியில் உரையாடினால் மிகுந்த மகிழ்ச்சியுடன் நட்பாகிவிடுவார்கள். இந்தியாவிலிருந்து கடந்த பத்தாண்டுகளில் சிவில் இன்ஜினியரிங் முடித்துவிட்டு இங்கே வேலைக்கு வந்தோர் ஏராளம்.  

பன்னிரெண்டாம் நூற்றாண்டில் கோதிக் கட்டிடக்கலைப்பாணியைப் பின்பற்றிக் கட்டப்பட்ட கொலோன் கதீட்ரல், நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே இரும்பால் அமைக்கப்பட்ட உலகிலேயே மிக உயரமான மாங்க்ஸ்டன் ரயில்வே பாலம், சாக்லேட் கப்பலைப் போன்று அமைக்கப்பட்ட சாக்லேடன் மியூசியம், (வால்நெட் கேரமல், ஃபெராரோ ரோச்சர், லிண்ட் எனப்படும் உலகத்தர பிராண்ட் சாக்லேட்களோடு உப்பு ருசியிலும் சாக்லேட் கிடைக்கும்). சுற்றிச் சுற்றிச் செல்லும் டைகர் டர்ட்டில் மாஜிக் மவுண்டன், ரைன் ரிவர், ரைண்டெர்ம் எனப்படும் டவர், ஷ்லாஸ்பர்க் கோட்டை, அதன் கத்திகள் கொண்ட மியூசியம், ட்ராகன் பர்க் எனப்படும் கோட்டை, தரையிலிருந்து நூறு மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகிலேயே உயரமான தொங்குபாலம் ஆகியன பார்க்கத் தக்கன.

வூபர் நதியின் மேல் சஸ்பென்ஷன் மோனோ ரயில் எனப்படும் தொங்கு ரயில் சவாரி, அதன் மேலேயே மெட்ரோ ரயில், பக்கவாட்டு ரோட்டில் ட்ராம், பஸ் சவாரி மட்டுமல்ல, உந்திச் செல்லும் சைக்கிள், டையர் ஈ பைக், இதோடு சாதாரண சைக்கிள் சவாரியும் செல்வார்கள் எல்லா வயதினரும்!.

இங்கே ரோடு துடைக்கும் செயலைச் செய்வது ட்ரக்ஸ் எனப்படும் வண்டிகள். இங்கே ஊர் சுத்தம் மட்டுமல்ல வீட்டின் பராமரிப்பும் முக்கியம். வாராவாரம் புல் வெட்டிக் கழிவறை, குளியலறை மற்றும் வீட்டைச் சுத்தம் செய்யவே அரை நாள் ஆகிவிடும். எல்லோருமே வீட்டைத் துடைத்துப் புதுவீடுபோல் வைத்திருப்பார்கள். நம்மூரு மிக்ஸி, கிரைண்டர் எல்லாம் கொண்டு வந்தாலும் காலையில் அநேகமாய் அனைவரும் ப்ரெட்தான் உண்பார்கள்.

தூசி தும்பட்டை என்பதே கிடையாது. மாசற்ற, தூய்மையான காற்று. ஹெல்த் கான்சியஸோடு பூங்காக்களில் ஓடும் ஓங்கி உயர்ந்த ஜெர்மானியர்கள், மேலும் தென்னாப்பிரிக்கர்கள், எகிப்தியர்கள், துருக்கியர்கள், ஈழத்தமிழர்கள், இந்தியர்கள், தமிழர்கள் என எல்லா இன மக்களோடும் புன்னகையோடு பழகும் அவர்களின் இயல்பு, இயற்கைச் சூழல் எல்லாம் ஜெர்மனியை நாம் இன்னும் இன்னும் நேசிக்க வைக்கும் சங்கதிகள். வருடத்தில் எட்டுமாதம் குளிர், நான்கு மாதம்தான் வெய்யில், இந்தியாவிலிருந்து ஏறத்தாழ எட்டாயிரம் கிலோமீட்டர் தூரத்தில் வசிக்கிறோம் என்கின்ற சில ஏக்கங்கள் தவிர தமிழர்கள் சூழ வாழ்கிறோம் என்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...