எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 25 மே, 2023

காதல் வனம் முன்னுரை

 காதல் வனம் முன்னுரை

இது எனது ஒன்பதாவது நூல். ஒன்பதாவது மேகத்தில் உலாவுகிறாயா ( CLOUD NINE )  என்பார்கள் காதல் மேகத்தில் மிதந்து பூமியில் கால்பாவாமல் நடப்பவர்களை. இக்காதலர் தினத்தில் ஒரு காதல் புதினத்தோடு உங்களை சந்திப்பதில் மகிழ்வெய்துகிறேன்.

காதல் எல்லா உயிர்களுக்கும் எல்லாப் பருவங்களிலும் ஏற்படும் இயற்கையான உணர்வு. இனக்கவர்ச்சி, காதல், பாசம், நேசம், ப்ரியம், ஈர்ப்பு, பரஸ்பர தேடல், இரு உயிர்களுக்கிடையில் ஏற்படும் பிரிக்கவியலா பிணைப்பு காதல். தெள்ளிய நீரோடை போன்ற வாழ்வில் அருவியின் எதிர்பாரா வீழ்ச்சியும் சிதறல்களான எழுச்சியும் போன்றது காதல். இதயங்களைச் சில்லிடச் செய்வதும், கதகதப்பூட்டுவதும், பொங்கி எழச்செய்வதும், வெறுப்பேற்றுவதும், நெருப்பேற்றுவதும் காதலுக்கே சாத்தியம்.

இயல்வாழ்வில் சங்கடங்களைத் தோற்றுவிப்பதும், பிடித்தவர்களைப் பிடிக்குள் வைக்கத் தூண்டுவதும், தன் உலகத்துக்குள் அடக்கிவிடத் தோன்றுவதும் காதல். அடர் தருக்கள் அடங்கிய, பல்லுயிர் ஓம்பும் வனம் போல் சாகசங்களும் சுவாரசியங்களும் நிரம்பியதுதானே காதல்.

அந்தந்தத் தருணங்களில் வாழ்பவனான சுவாமிநாதன் என்ற மனிதனுக்கு முத்தழகி, மஹாராணி, தேவயானி ஆகியோரின் மேல் ஏற்பட்ட காதலே இக்கதை. மூவரிடமும் இருக்கும் அழகால், அறிவால், தன்மையான இயல்பால் ஈர்க்கப்படுகிறான் இக்கதை நாயகன்.

மனிதனின் மென்மையையும் தன்மையையும் காதல் ஒன்றே புதுப்பிக்க முடியும். இக்கதை நாயகனையும் இக்காதல்கள் புதுப்பிக்கின்றன. சுவாமிநாதன் மனதில் பெருகும் காதலோடு உலாவும் ஒரு சராசரி மனிதன். காதல் வனத்தில் திகைத்துச் சுற்றும் அவனை அவனின் சராசரித்தனங்களோடு ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். பொங்கிப் பெருகி மூழ்கடிக்கும் காதலோடு அவனை ஈர்த்த அம்மூன்று பெண்களின் சராசரி இயல்பையும் கூட.

அன்புடன்

தேனம்மைலெக்ஷ்மணன்.


நன்றிகள். :- என் எல்லா முயற்சிகளுக்கும் துணை நிற்கும் என் அன்புக் கணவருக்கும் குழந்தைகளுக்கும் நன்றிகள். எனது நூல்களை வெளியிட்ட திரு. தாமோதர் சந்துரு அண்ணன், அகநாழிகை திரு. பொன் வாசுதேவன், புதிய தரிசனம் திரு. ஜெபக்குமார், டிஸ்கவரி புக் பேலஸ் திரு. வேடியப்பன், அநுராகம் பதிப்பகம் திரு. நந்தன், தானம் அறக்கட்டளை & நமது மண்வாசம் ஆசிரியர் திரு. ப. திருமலை ஆகியோருக்கும் மனமார்ந்த நன்றிகள்.

 

இந்நூலை வெளியிடும் டிஸ்கவரி புத்தக நிலைய உரிமையாளர் திரு. வேடியப்பன், வடிவமைத்த திரு. சந்தோஷ் மற்றும் அழகான அட்டைப்படம் அமைத்துத் தந்த திரு. செந்தில் மற்றும் இந்நூலைப் படித்து சில திருத்தங்கள் கூறி செம்மைப்படுத்தி மில்ஸ் & பூன் நாவல்கள்போல் இனிமையாக உள்ளது என்று கூறிய ஆசான் திரு. ராஜசுந்தர்ராஜன் ஆகியோருக்கு அன்பும் நன்றியும்.

 

தேனம்மைலெக்ஷ்மணன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...