எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 17 டிசம்பர், 2022

நடிப்பில் புதிய பாதை உருவாக்கிய பார்த்திபன்

 நடிப்பில் புதிய பாதை உருவாக்கிய பார்த்திபன்


கோடம்பாக்கம் மேம்பாலத்தின் அருகே ஹியூஸ் ஆஃப் ஹார்ட் என்னும் ஸ்டூடியோவை நடத்திவந்தார் என்னுடைய தோழியும் ஓவியருமான மீனாக்ஷி மதன். அவருடைய நிறுவனத்தின் ஆண்டு விழாவன்று போட்டிகளில் வெற்றி பெற்ற ஓவிய மாணாக்கியருக்குப் பரிசளிக்க நடிகர்கள் எஸ் வி சேகரும், பார்த்திபனும் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தார்கள். அனைவரும் எஸ் வி சேகருக்காகக் காத்திருந்தோம்.

ஓவியங்களின் ரசிகரா எனத் தெரியாது. ஆனால் ஒரு சேரில் அமர்ந்து சில கிறுக்கல்களை ஒரு பேப்பரில் வரைந்து கொண்டிருந்தார் முன்பே வந்துவிட்ட நடிகர் பார்த்திபன். குழந்தைகளோடு நின்று நாங்கள் அதை அவதானித்துக் கொண்டிருந்தபோது அவரின் கிறுக்கல்கள் கவிதைத் தொகுப்புத்தான் எனக்கு ஞாபகம் வந்தது.

சிறிது நேரத்தில் எஸ். வி சேகர் வந்துவிட இருவரும் குத்து விளக்கேற்றி நிகழ்வைத் துவங்கி வைத்தார்கள். மக்கள் குரல், குறள் டிவி என்று சுற்றிலும் மீடியா கவரேஜ். ஒரு ஓவிய வகுப்பில் இவ்வாறு நடைபெறுவது எனக்குப் புதிதாக இருந்தது. அதற்குப் பிரபலமான நடிகர்கள் பரிசளிக்க வந்ததும்தான்!

நட்புக்கு இலக்கணம் நண்பர் “ பார்த்திபன்” எனச் சொல்லலாம் . நேரில் பார்த்தால் எளிமையான தன்மையான மனிதர். ஆனால் படங்களில் ஏனோ வடிவேலுவுடன் குண்டக்க மண்டக்க என ரகளை செய்வார். துபாய் என்றாலே எனக்கு இப்போதெல்லாம் பார்த்திபன்தான் ஞாபகம் வருகிறார். படங்களில் துபாய் குறுக்குத்தெரு, துபாய் சந்து எனக் கலாய்ப்பதோடு சரி. நிஜமாகவே சீக்கிரம் விசா கொடுத்ததற்காக துபாய் ஆட்சியாளருக்கு நன்றி தெரிவித்துள்ளார் பார்த்திபன்.  

நவம்பர் 1957 இல் பிறந்தவர் ஆர் பார்த்திபன். அறிமுகமான காலத்திலிருந்து இன்று வரை அவர் வயதைக் கணிக்கவே முடிவதில்லை. சென்னையில் நாம் காணும் சராசரித் தமிழ்க் குடிமகன் தோற்றம். சிறிது கரடு முரடாகக் கூட இருக்கும். கொஞ்சம் தெனாவெட்டு, அஸால்டான பார்வை, எகனை மொகனைப் பேச்சு, சர்காஸ்டிக் புன்னகை இதுதான் பார்த்திபன். ஆனால் நடிப்பில் அசுரன். அசாத்தியத் திறமையாளர்.

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளர் எனப் பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர் பார்த்திபன். தன் முதல்பட ஹீரோயினான சீதாவையே காதலித்து மணந்து கொண்டார். இரண்டு பெண் குழந்தைகள். ராக்கி என்ற பையனைத் தத்து எடுத்து வளர்த்து வருகிறார். சொல்லபோனால் பார்த்திபன் என் பார்வையில் தாயுமானவர். சீதாவுடனான பிரிவுக்குப் பின் மூன்று குழந்தைகளையும் அவரே வளர்த்து இரு மகள்களுக்கும் உரிய பருவத்தில் திருமணம் செய்து வைத்திருக்கிறார்.

1984 இல் பாக்கியராஜிடம் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். 15 படங்கள் இயக்கி இருக்கிறார். 13 படங்கள் தயாரித்திருக்கிறார். 70 படங்களுக்குமேல் நடித்திருக்கிறார். தாவணிக் கனவுகளின் தபால்காரராக நடித்திருப்பார். 1989 இல் புதிய பாதை, 1999 இல் ஹவுஸ் ஃபுல், பாரதி கண்ணம்மா, வெற்றிக் கொடி கட்டு, ஆயிரத்தில் ஒருவன், இரவின் நிழல், புள்ளகுட்டிக்காரன், தையல்காரன், சரிகமபதனி, டாடா பிர்லா, ஆயிரத்தில் ஒருவன், குடைக்குள் மழை, தமிழ், மாசு என்ற மாசிலாமணி, நானும் ரவுடிதான், மாவீரன் கிட்டு, கோடிட்ட இடங்களை நிரப்புக, சுகமான சுமைகள், பச்சைக் குதிரை, வித்தகன், பொன்மகள் வந்தாள், துக்ளக் தர்பார், ராணுவ வீரன், வேடிக்கை மனிதர்கள், வாய்மையே வெல்லும், அரவிந்தன், அபிமன்யு, சுயம்வரம், காக்கைச் சிறகினிலே, ஜேம்ஸ் பாண்டு, கண்ணாடிப் பூக்கள்,  இவன், புதுமைப் பித்தன், பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் நடிப்பில் எனக்குப் பிடித்த படங்கள் அழகி, நீ வருவாய் என, அந்தப்புரம் இம்மூன்றும் அட என ஆச்சர்யப்பட வைத்தன. அதிலும் அந்தப்புரத்தில் முடிவு யாரும் எதிர்பாராத ட்விஸ்ட், அதில் வில்லனாக முத்திரை பதித்திருக்கிறார். விருமாண்டியில் பசுபதியின் நடிப்பைப் பார்த்து வெலவெலத்தது போலவே அந்தப்புரத்திலும் பார்த்திபனின் நடிப்பைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். அவரை வில்லன் என்று நம்புவதற்குள் படமே முடிந்துவிட்டது. 

அறிமுகப் படமே வில்லனாகத் தோன்றி ஹீரோவாக ஆகும் புதிய பாதை. கதை எளியதுதான். பெண்களின் கோபத்தைத் தூண்டக்கூடியதும் கூட. ஆனால் சொன்ன விதமும், முடிவும் வித்யாசமானவை. பொண்டாட்டி தேவையில் கருத்தரிக்க இயலாப் பெண்ணைக் காதலித்துப் போராடி மணக்கும் கதை.


தங்கர்பச்சான் இயக்கத்தில் நந்திதாதாஸ், தேவயானியுடன் நடித்த அழகி மிகச் சிறந்த படம் . ஒளியிலே தெரிவது தேவதையா பாடல், நெற்குதிருக்குள் தோன்றும் காதல் மின்னல்.  கிராமத்து ஷண்முகம் நன்கு படித்து பெரிய வேலையில் அமர்ந்து டாக்டர் தேவயானியை மணந்து நகரத்துப் பணக்காரனாகிவிட அவன் பள்ளிப்பருவத் தோழியும் ப்ளேட்டானிக் காதலியுமான பணக்கார தனலெக்ஷ்மி கிராமத்து விவசாயிக்கு வாழ்க்கைப்பட்டு ஏழ்மைக்குத் தள்ளப்படுகிறாள். அவள் கணவன் இறந்ததும் சென்னையில் மகனுடன் ப்ளாட்ஃபார்மில் வசிக்கிறாள். எதிர்பாராமல் அவளை அந்நிலையில் சந்திக்கும் ஷண்முகம் தன் வீட்டிற்கு அழைத்து வந்து மனைவிக்கு உதவியாக நியமிக்கிறான். அதன் பின் சில பல குழப்படிகளுக்குப் பிறகு அவள் வீட்டை விட்டுச் சென்றுவிட அவள் மகனைத் தன் பிள்ளைகளோடு வளர்க்கத் தொடங்குகிறான். இதில் ஒளியிலே தெரிவது தேவதையா பாடலிலும், ( இளம் ஷண்முகம்) , காதலியை ப்ளாட்ஃபார்மில் மழையில் சந்திக்கும் நிலையிலும் பார்த்திபனின் நடிப்பு வெகு சிறப்பு.

ராஜகுமாரனின் இயக்கத்தில் தேவயானியுடன் நடித்த நீ வருவாய் என மிகச் சிறந்த திரைப்படம்.  இதில் இன்னொரு ஹீரோவாக அஜித். தேவயானிக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகன் ஒரு விபத்தில் சிக்கிவிட இறக்குமுன் அவரது கண் தானம் அளிக்கப்படுகிறது. அப்படித் தன் காதலனின் கண்களைத் தானம் பெற்ற பார்த்திபனின் கண்களைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் எண்ணத்தோடு நந்தினியாகிய தேவயானி அவரையே சுற்ற அவரோ தேவயானி தன்னை விரும்புவதாக எண்ணுகிறார். இதில் பாடல்கள் அற்புதம். ”பார்த்துப் பார்த்துக் கண்கள் பூத்திருப்பேன் நீ வருவாய் என, ஒரு தேவதை வந்துவிட்டாள் உனைத் தேடியே, பூங்குயில் பாட்டுப் பிடிச்சிருக்கா” என எல்லாமே மனதை வருடும் மயிலிறகுகள். 

ஹே கலா கலா, டேய் வாசு, ஆகிய பாடல்களைப் பாடி இருக்கிறார். அடியே கிளியே, வித்தகன் படப் பாடல்கள், கிலு கிலு பாயை, மனைவி காதல் , பேஜாரா, கண்ணெதிரே ஆகிய பாடல்களை எழுதி இருக்கிறார். அடவி, மாஸ்கோவின் காவிரி, அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது போல் ஒரு சில படங்களில் கதை சொல்பவராகப் பின்னணியில் இவரின் குரல் கேட்கும். டப்பிங் பேசுவதிலும் சிறப்பாகச் செய்துள்ளார். நடிகர் விஜய் நடிக்க வந்த புதிதில் அது அவர் குரலா பார்த்திபன் குரலா எனக் குழப்பம் ஏற்பட்டதுண்டு.

தாதா இஸ் பேக் என்ற கன்னடப் படத்தில் கூட நடித்திருக்கிறாராம். பொதுவாக எம் மனசு தங்கம் மலையாளம் தமிழ் ஆகிய இரு மொழிகளில் வெளியானது. ராஜா சூர்யநாராயணா என்ற தெலுங்குப் படத்திலும் நடித்திருக்கிறார். ஒத்த செருப்பு மோனோஆக்டிங் திரில்லர் படம். இவரது இரவின் நிழல் ஒரே ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட சிங்கிள் ஷாட் நான் லீனியர் திரைப்படம். ஒத்த செருப்புவின்  ஹிந்தி ரீமேக்கிலும் பிரவேசிக்கிறார். இது இந்தோனேஷிய மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டதாக அறிவிப்பு வந்தது.

அழகி சண்முகம், நீ வருவாய் என கணேஷ் ஆகியோர் தன்மையான மனிதர்கள். அந்தப்புரம் துபாய் பாண்டியனைப் போல் சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத மனிதர்களைப் பிரதிபலிப்பதுதான் அவரின் பெரும்பான்மையான படத்தின் கதாபாத்திரங்கள். இப்படியான மனித குணங்களும் இயல்வாழ்வில் உண்டு என்பதைப் பகிரங்கமாக்கின. தான் சொல்ல வந்ததை எத்தனை பேர் எதிர்ப்பைச் சம்பாதித்தாலும் சொல்லியே தீருவார் பார்த்திபன். அது சைக்கலாஜிக்கலாகவும் உலகியல்படியும் உண்மையாகவும் ஆனால் பொதுஜனத்தால் அந்த உண்மை ஒப்புக் கொள்ள இயலாதபடிக்கும் இருக்கும்.

இவரின் இயக்கத்தில் பல படங்கள் பொது ஜனங்களின் விமர்சனத்தைச் சந்தித்திருந்தாலும் உள்ளே வெளியே அதிகபட்ச எதிர்மறைக் கருத்தைச் சம்பாதித்தது.  வித்யாசமான முயற்சிகள் செய்வதை அவர் என்றுமே கைவிட்டதில்லை. தனது 18 வருடக் கனவான ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை ஒற்றைக் கதாபாத்திரமாக அவர் மட்டுமே மோனோ ஆக்டிங்காக நடித்து நகர்த்திச் சென்றிருப்பார்.

எதையும் வித்யாசமாகச் செய்பவர் பார்த்திபன். பரிசளிப்புகள் கூட அதிரடிதான். நடிகர் நெப்போலியன் அவர்களின் அலுவலகத்தில் நடிகர் பார்த்திபன் பரிசளித்த சிந்தனையைத் தூண்டும் ஒரு சிற்பத்தைக் கண்டேன். 2009 ஆம் வருடம் செப்டம்பர்  ஐந்தாம் தேதி பரிசளிக்கப்பட்ட அது சொல்லும் சேதி - சேவை & பொதுநலம்.” மத்திய இணை அமைச்சர் மாண்புமிகு நெப்போலியன் அவர்கள். இந்த மனிதர் லஞ்சம் பெறுவதில் மாவீரன்!. நன்றி அன்றி ஒன்றையும் தர இயலாதவர்களிடம் இருப்பதைப் பெற்றுக் கொண்டு உதவுவதில் இணையற்ற அமைச்சர்!” என்று எழுதப்பட்டிருந்தது.

தமிழில் சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது பெற்றுள்ளார். மேலும் அவரின் ஒத்த செருப்பு - சைஸ் 7 படம் 2019 இல் சிறப்பு ஜூரி விருது பெற்றுள்ளது. அவர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் ஃபிலிம்ஃபேர் விருது பெற்றுள்ளது.  டொரண்டோ திரைப்பட விழாவிலும் சிறந்த இயக்குநர், சிறந்த திரைப்படம், சிறந்த நடிப்புக்காக மூன்று விருதுகள் பெற்றுள்ளார். ஆர். பார்த்திபன் மனித நேய மன்றம் என்ற தொண்டு அறக்கட்டளையை நடத்தி வருகிறார். அவரது வித்யாச பரிசோதனை முயற்சிகள் தொடரவும் இன்னும் விருதுகள் பெற்று சாதனை படைக்கவும் வாழ்த்துக்கள்.டிஸ்கி:-  மனத்திரையில் மின்னல் என்ற தலைப்பில் சிநேகா பிரச்சன்னா பற்றிய கட்டுரை மிக நன்றாக இருந்ததாக மணிமடல்களில் குறிப்பிட்ட குருவிக்கொண்டான் பட்டி வாசகர் திரு எம் பி எம் முத்தையா அவர்களுக்கு நன்றி ! இக்கடிதத்தை வெளியிட்ட தனவணிகன் இதழுக்கும் நன்றி. 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...