எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 13 ஏப்ரல், 2022

அம்மா என்றால் அன்பு.. அம்மு..

 அம்மா என்றால் அன்பு.. அம்மு.


நான் பிறந்த வருடம் நடிக்க வந்தவர். 17 வயதில் இருந்து 32 வயதுவரை நடிப்புலகில் ஜொலித்தவர். மகத்துப் பெண் ஜகத்தை ஆள்வாள் என்ற சொலவடைப்படி 30 வருடங்கள் அரசியலில் ( ஐந்து முறை முதல்வராகி ) கோலோச்சியவர் ஜெ ஜெயலலிதா.. திருவளர்ச் செல்வியோ நான் தேடிய தலைவியோ என்று வாத்தியார் பாடி அழைத்த தலைவி.  பெண்களுக்குக் கோட் ஒரு எடுப்பான உடை என்று தோன்றவைத்த அந்த அழகுக்கு மறுபெயர் பெண்ணா !

ஆணையிடும் கண்கள், மாங்கனிக் கன்னங்கள், தீர்க்கமான நாசி,திருத்தமான வடிவம், ஆங்கிலப் புலமை உடையவர், ஆங்கில ட்ராமாக்களில் நடித்தவர், பொம்மை இதழில் காலம் எழுதினார். பரதம் கதக் மட்டுமல்ல, ஈஜிப்டியன் பெல்லி டான்ஸும் ஆடத் தெரிந்தவர். டான்ஸ், ட்ராமா, சினிமா, ஷார்ட் ஸ்டோரி எழுத்தாளர், நாவலிஸ்ட், மேகஸீன் காலம்னிஸ்ட் எனப் பல்துறைகளிலும் முத்திரை பதித்தவர்.

பதின் பருவங்களின் ஆரம்பங்களிலேயே நடிக்க வந்தவர். ட்ரெண்ட் செட்டர், போல்ட் அண்ட் பியூட்டிஃபுல். 1960 களிலேயே முழங்கால் வரை உள்ள ஸ்கர்ட், ஷார்ட் ஸ்லீவ், ஸ்லீவ்லெஸ், மார்டர்ன் ட்ரெஸ், கௌன்ஸ், ஏன் பிகினி கூட அணிந்து ’பாம் ஷெல் இன் பிகினி’ எனத் தன் அழகால் மிரட்டியவர்.

ஏற்கப்படாத அன்பின் வலி அவரது முதல் படமான வெண்ணிற ஆடையில் சித்தரிக்கப்பட்டிருக்கும். ”கண்ணன் என்னும் மன்னன் பேரைச் சொல்லச் சொல்ல” என்று விருப்பமில்லாத ஆணின் முன் அந்த அன்பின் அணங்கு தன் இதயத்தைத் திறந்து காட்டுவது நம்முள் சோகத்தை விளைவிக்கும்.

ஆனால் அடுத்தடுத்த படங்களில் ”தன்னைத் தேடும் காதலன் முன்னே திருநாளைத் தேடிடும் பெண்மை நாணுமோ”, ”கண்ணன் எந்தன் காதலன் கண்ணில் ஆடும் மாயவன் என்னைச் சேர்ந்தவன்” எனக் கரைகாணாக் காதலால் தன்னைத் தானே அழகாக நெய்து கொள்வார்.

ஆளமுடியாத அந்த அழகுப் பேரரசி, இரும்புப் பெண்மணி என்று அடையாளப்படுத்தப்பட்ட அந்த அழகுப் பெண்ணின் இதயம் அன்பின் பூக்களால் ஆனது. ”எங்கிருந்தோ ஆசைகள்” என்ற பாடலில் டீபாயில் சாய்ந்து முழங்கை வழியாக எம் ஜி ஆரை அவர் பார்க்கும் பார்வை எம்ஜியாருடன் நம்மையும் கொள்ளை கொள்ளும்.

பிடித்தமில்லாத திருமண உறவில் உழலும் ‘நான் என்றால் அது அவளும் நானும்’ என்ற பாடலில் டான்ஸிங் டால் போல் இருப்பார். அவருக்கு ”ஆடுவது உடலுக்கு விளையாட்டு பாடுவது மனதுக்கு விளையாட்டு.” ட்விஸ்ட், த்ரில், அழகிய அசைவுகள் கொண்ட பாடல் “ஓ மேரே தில்ரூபா.. ஹே மேரா தீவானா’.

தெவிட்டாத தேன் குரலுக்குச் சொந்தக்காரி. 14 படங்களில் சொந்தக் குரலில் பாடியுள்ளார், 6 ஆன்மீகப் பாடல்களும் பாடி இருக்கிறாராம். தனிப்பிறவியில் ஒரே முறைதான் பாட்டுக்குக் கோரியோகிராஃபி. பட்டிக்காடா பட்டணமா படத்தில் ”கேட்டுக்கோடி உருமி மேளம் “ என்ற பாடலுக்கு இசையமைக்கும்போது சஜஷன் கொடுத்திருக்கிறாராம்!.

தற்போது சர்ச்சையில் இருக்கிறது இவரைப் பற்றி எடுக்கப்படும் சினிமாவும் வெப்சீரிஸும். ஆனால் தலைவி, தி குயீன் என்பதற்குப் பொருத்தமாக சித்திரை மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன். என்ற பாடலில் மிஸ் மெட்ராஸ் பட்டம் வென்ற அழகு ராணியாகத் தோன்றுவார்.

’பொட்டு வைத்த முகமோ.’. சிவாஜியுடன். சுமதி என் சுந்தரி தரை மீது வானம் விளையாடும் கோலம் இடையோடு பார்த்தேன் விலையாகக் கேட்டேன். என்ற இடத்தில் அவர் நெளிந்தாடும்போது சிம்ரன் இடை எல்லாம் தோற்றுவிடும் வண்ணம் என்ன ஒரு வடிவழகான இடை அசைவு. நளினமிக்க வளைவுகள்.

நளினமும் நாணமும் போட்டி போடும் சின்னவளை முகம் சிவந்தவளை என்ற பாடலில் கண்ணதாசன் வரிகள் நம்மை வளைக்க கூடுதலாக என்னவளை காதல் சொன்னவளை நான் ஏற்றுக் கொள்வேன் வளையிட்டு, தூயவளை நெஞ்சைத் தொடர்ந்தவளை எனப் புரட்சித் தலைவரும் எனப் புரட்சித் தலைவியுமே நம்மை புதிய பூமியில் தாலாட்டுவார்கள்.

’ஊரெல்லாம் தூங்கையிலே விழித்திருக்கும் அந்த நிலவு’ என  மணிமாறன் பாட வருத்தம் தோய்ந்த நிலவாகக் காட்சி அளிக்கும் பூங்கொடி. அதேசமயம் ”மாணிக்கத் தேரில் மரகதக் கலசம் மின்னுவதென்ன” மிரட்சி அளிக்கக் கூடிய கம்பீர அழகோடு மின்னியவர். ”சிரித்தாள் தங்கப்பதுமை அடடா அடடா என்ன புதுமை. கொடுத்தேன் எந்தன் மனதை” என ரசிகர்களின் மனதை ஒட்டுமொத்தமாகக் கொள்ளை அடித்தவர்.

’என்னங்க சொல்லுங்க’ என்ற பாடலில் சிவாஜியின் விழிகளும் ஜெயாம்மாவின் விழிகளும் குறும்புத்தனமாகப் பேசும் காட்சியும் புன்னகையும் செம்ம. ’பூவைத்த பூவைக்குப் பூக்கள் சொந்தமா பூவுக்கும் தேனுக்கும் பூ சிந்தும் போதைக்கும் ஈக்கள் சொந்தமா.. ஐ லவ் யூ ஐ லவ் யூ’ என்று முதன் முதலாகக் காதலைச் சொன்ன பாட்டு வெகு அழகு. லாவண்டர் கலர் புடவையில் ஜப்லா ரவிக்கையில் இதமான கவர்ச்சி.


முத்துராமன். ஜெய்சங்க,ர் ரவிச்சந்திரன், சோபன்பாபு இவர்களுடன் பல ஹிட் படங்கள் கொடுத்திருந்தாலும் எம்ஜியார் & சிவாஜி இல்லாமல் ஜெயாம்மாவின் திரையுலக சரித்திரத்தை எழுத முடியாது.  அதுபோல் எம்ஜியாரின் அரசியல் சரித்திரத்தையும் வாங்கையா வாத்தியாரய்யா என்று அவர் பாடிய பாடல்களின் பின்னே தமிழகமே அவரை வாத்தியாரைய்யாவாக விளித்தது. வாத்தியார் வந்துட்டாரு என்று சந்தோஷப்பட்டது.

எனக்குப் பிடித்த படம் எங்க மாமா. அதில் சிவாஜி இவரை மாடர்ன் லேடி ஆக்கி அவரின் உறவுக்காரர் பாலாஜியுடன் திருமணம் நடக்க விருக்கும் சமயம் ’எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்’ எனப் பியானோ வாசித்துப் பாட நாமும் இவருடன் கண்களில் நீர் நிறைந்து உணர்ச்சிக் குவியல் ஆகிவிடுவோம்.

”வெள்ளிக்கிழமை விடியும் வேளை வாசலில் கோலமிட்டேன் வள்ளி கணவன் பேரைச் சொல்லிக்கூந்தலில் பூ முடித்தேன்” என்ற பாடலிலும், ”ஒரு ஆலயம் ஆகும் மங்கை மனது” என்ற பாடலில் ’தேவனின் சந்நிதி தேவியின் நிம்மதி’. ”உன்னை நான் சந்தித்தேன் நீ ஆயிரத்தில் ஒருவன் என்னை நான் கொடுத்தேன்” என் ஆலயத்தில் இறைவன் எனவும் பாடி குடும்பப் பெண்மணிக்கான ஐகான் ஆகத் திகழ்ந்து அத்தனை இதயத்தையும் உருக வைத்தவர்.

அதே சமயம் சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு எனப் பறந்த ’இரும்புப் பட்டாம்பூச்சி’. அதிலும் ”பார்க்கும் கண்கள் பணிய வேண்டும். பாவை உலகம் மதிக்க வேண்டும்” எனக் கம்பீரமாக முழங்கியவர். அதேபோல் பாவையரின் அபரிமிதமான மதிப்பையும் பெற்றவர்.

எங்கிருந்தோ வந்தாளில் “நான் உன்னை அழைக்கவில்லை என் உயிரை அழைக்கிறேன்” என்ற இடத்தில் அருவியாய்ப்பொழியும் சிவாஜி ஜெயா இருவரின்கண்களும். ”எங்கே அவள் என்றே மனம் தேடுதே ஆவலாய் ஓடிவா”, என்றும் ”நல்ல இடம் நீ வந்த இடம் வரவேண்டும் காதல் மகராணி” எனச் சினிமாவில் பாடல்களிலும் அதிகம் கொண்டாடப்பட்டவர் ஜெயாவாகத்தான் இருப்பார்.

பாக்தாத் பேரழகி, வைரம் என்று படப் பெயர்கள். கன்னித்தாய், குமரிப்பெண், ஆதி பராசக்தி, அன்னை வேளாங்கண்ணி, ஒளி விளக்கு, நீரும் நெருப்பும் , பட்டிக்காடா பட்டணமா எனக் காண்ட்ராஸ்ட் தலைப்புகள் என்றாலும் அவர் ஒரு தனிப்பிறவி. முகராசி கொண்ட மகராசி அவள். வந்தாளே மகராசி என மக்களால் விரும்பப்பட்டவர்.

65 முதல் 73 வரை எட்டே ஆண்டுகளில் 28 படம் எம்ஜியாருடன் அதில் 19 பிளாட்டினம் ஜூபிலி, 8 கோல்டன் ஜூபிலி, அன்னமிட்ட கை சில்வர் ஜூபிலி. சிவாஜியுடன் 17 படம் அதில் கலாட்டாக் கல்யாணம் கோல்டன் ஜூபிலி. 1964 இல் வெண்ணிற ஆடை, கன்னித்தாய், ஆயிரத்தில் ஒருவன் என் அறிமுகப் படங்கள் அனைத்தும் ஒரே சமயத்தில் ஹிட், 72, 73 ஆம் ஆண்டுகளில் இரண்டு ஃபிலிம்ஃபேர் விருது.

மாட்டுக்கார வேலன், தேடி வந்த மாப்பிள்ளை, கண்ணன் என் காதலன், அவன் தான் மனிதன், பாட்டும் பரதமும், ராஜா என்று வந்த படங்களில் நடித்தும் ஹீரோக்களுக்கான உலகில் ஜெயித்து வந்த அற்புத ஹீரோயின். புரட்சித்தலைவி, தமிழக முதல் எதிர்க்கட்சிப் பெண் தலைவி, ஐந்து முறை நம்மை ஆண்ட தன்னிகரில்லாத் தலைவி.

தன் குழந்தைகளின் திருமணம் போல் எளியோருக்கும் உதவி வழங்கி மாஸ் திருமணங்கள் செய்வித்து மகிழ்ந்தவர். கிராமங்கள்தோறும் மூவிங்க் மருத்துவ உதவி கொண்டு வந்தவர் . பெண்குழந்தையைக் ”கட்டழகுத் தங்கமகள் திருநாளோ அவள் கிட்ட வந்து கட்டி முத்தம் தருவாளோ’ எனவும் அன்னமிட்ட கையில் ’16 வயதினிலே 17 பிள்ளையம்மா’ எனவும் பாடிக் கொஞ்சியவர் மட்டுமல்ல..தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் மூலம் பல பெண் சிசுக்களுக்கு வாழ்வளித்தவர், அம்மா உணவகத்தின் மூலம் எளியோர் பலருக்கும் உணவளித்தவர் அம்மா. அதனால் அம்மா என்றால் அன்பு என்பது உண்மைதானே!


டிஸ்கி:- என்னுடைய கட்டுரைகளைப் பாராட்டியுள்ள திருச்சி வாசகி திருமதி கலைச்செல்வி ராமனாதன் அவர்களுக்கு நன்றி !!! இதை வெளியிட்டுச் சிறப்பித்த தனவணிகன் இதழுக்கும் நன்றி !!!

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...