எனது பதிநான்கு நூல்கள்

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

கல்வி அமைச்சரிடம் சாதனை விருது வாங்கிய பார்வதி சிவகுமார்

 கல்வி அமைச்சரிடம் சாதனை விருது வாங்கிய பார்வதி சிவகுமார்

காரைக்குடியில் ஆவுடையான் செட்டியார் வீட்டில் பிறந்த பார்வதி தமிழ்த்துறை & தொல்லியல் துறை அமைச்சர் திருமிகு மாஃபா.க. பாண்டியராஜன் அவர்களிடம் தம் கல்விப்பணிக்காகச் சாதனைப் பெண் விருது வாங்கி இருக்கிறார். மழலையர்க்கான கல்விக் கூடத்தைத் தொடங்கிச் சிறப்பாக நடத்தி வருவதற்காக அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. மதிப்புமிகு அவ்விருதுக்குப் பொருத்தமானவர் அவர். இவ்வாறு சிறப்புப் பெற்றவரிடம் அவரது பள்ளி குறித்துக் கேட்டு அறிந்ததை இங்கே கொடுத்துள்ளேன்.

இவரது கணவர் பெயர் சிவகுமார் இவருக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.  மிரா கண்ணாத்தாள், ஐஸ்வர்யா.  இவரது மாமியார் வீடு நாட்டரசன்கோட்டை.

இவர் கல்லூரி படிப்பு முடிந்த பின் காரைக்குடியில் கம்பன் கற்பகம் பள்ளியில் வேலைக்கு சேர்ந்தார்.  அங்கு மழலையர்க்கு ஆசிரியராக இருந்தார்.  அது அவருக்கு மிகவும் பிடித்தது. அதுவே அவருக்குத் தானும்  ஒரு மழலையர் பள்ளி தொடங்க வேண்டும் என்ற ஆர்வத்தை தந்தது.

அதன் பின் திருமணமாகிச் சென்னை வந்தார். அங்கே குன்றத்தூரில் ஐந்து வருடமாக மழலையர் பள்ளி தொடங்கி நடத்தி வருகிறார்.  இவரது பள்ளியின் பெயர் அரவிந்தர் வித்யாலயா சாய் கிரியேட்டிவ் கிட்ஸ்.  பள்ளியில் மொத்தம் 40 மாணவர்கள் உள்ளனர். ப்ரீ கேஜி, எல்கேஜி, யுகேஜி ஆகிய வகுப்புகளில் மாணவர்கள் பயில்கின்றனர்.

இதை எப்படி செயல்படுத்தினீர்கள் எனக் கேட்டபோது “எனக்குப் பள்ளி தொடங்குவதற்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. என் குடும்பத்தினர் என் மாமியார், அம்மா, அப்பா, என் கணவர், என் குழந்தைகள் அனைவரும் எனக்கு ஊக்கம் அளித்து இந்தப் பள்ளியைத் தொடங்க முடியும், உன்னால் ஒரு பள்ளியை நிர்வகிக்க முடியும் என்ற ஊக்கத்தை கொடுத்தனர்.  இதுவே நான் பள்ளி தொடங்கக் காரணம்.  நான் மரியா மாண்டிசோரி  என்னும் டீச்சர் ட்ரைனிங் சென்றேன். அதுவே எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. நான் இதே துறையில்   சென்னையில் 7 வருடமாக வேலை செய்தேன். இந்தத் துறையில் மிகுந்த கவனமும் அதிக பொறுப்பும் தேவை. 

இத்துறையில் ஏற்ற இறக்கங்கள் என்னவென்றால் இப்போதுள்ள காலகட்டத்தில் வீட்டில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்கிறார்கள். அப்படிச் செல்லும் போது குழந்தைகளைப் பார்த்துக் கொள்வது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே குழந்தைகளை daycare இல் விட்டுச் செல்வதற்கான தேவை அதிகம் உள்ளது. இத்துறையில் நல்ல வருமான வாய்ப்பு உண்டு. ஆனால் முதல் வருடம் எங்கள் பள்ளியில் மூன்று குழந்தைகள் மட்டுமே இருந்தனர். அதன்பின் இரண்டாவது வருடம் 18 குழந்தைகள் சேர்ந்தனர். எனவே இதற்குப் பொறுமை மிக மிக அவசியம்.அடுத்துக் கொரோனா  காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கின முதலில் பெற்றோர் அதை ஏற்கவில்லை எனவே நாங்கள் ஒரு மாதம் இலவசமாக வகுப்புகள் கொடுத்தோம் அதன்பின்தான் பெற்றோர்கள் அதை ஏற்றுக் கொண்டனர். இப்படிச் சிற்சில இடையூறுகளை மதியூகம் கொண்டு கடந்தோம்.

குழந்தைகள் இரண்டரை வயதில் இருந்து வருகிறார்கள். அவர்கள் நம்முடன் பழகச் சில நாட்கள் ஆகும்.  முதல் நாள் வரும் குழந்தைகள் பயத்தில் அழுவதும் உண்டு. இது போன்ற குழந்தைகள் பள்ளியுடன் பழகுவதற்கு சில நாட்கள் ஆகும். எனவே முதலில் பாதி நேரம் மட்டுமே   வரவைத்துப் பழகியபின் முழுநேர நேரத்திற்குப் பழக்குவோம்  சில பெற்றோர்கள் குழந்தைகள் அழுவதைப் பார்த்து பயந்து குழந்தையைப் பள்ளியில் இருந்து ஒரு வாரத்திலேயே நிறுத்துவதும் உண்டு!

பணியாளர்களைத் தக்கவைத்துக் கொள்வது மிகவும் சிரமம். ஏனென்றால் குழந்தைகளுடன் பழகி குழந்தைகளாகவே மாறி அன்புடன்  நடந்து கொள்ளும் பணியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனம் தேவைப்படுகிறது. அதுபோல ஆசிரியர்களும் மிகுந்த பொறுமையுடன் இருப்பது அவசியமாக உள்ளது. அதுபோன்ற நபர்களையே தேர்ந்தெடுக்க வேண்டியதாக உள்ளது.

இத்துறையில் என் ஸ்பெஷாலிட்டி குழந்தைகளின் மனதைச் சுலபமாகப் புரிந்து கொள்வது.   அடம்பிடிக்கும்  குழந்தைகளை எவ்வாறு எளிதில் மாற்றுவது போன்றவை எங்களது ஸ்பெஷாலிட்டி. அதன் பின் விளையாட்டு மூலம் கல்வி என்னும் பழக்கத்தைக் கற்றுக் கொடுத்துக் குழந்தைகளைப் பள்ளிக்கு ஆர்வமாக வரவைப்பது.

புதிதாக இத்துறைக்கு வருபவர்கள் முதலில் சிறிய அளவில் முதலீடு செய்து  பள்ளியைத் தொடங்குங்கள். ஒரு இரண்டரை வயதிற்குட்பட்ட குழந்தைகளை மட்டும் வைத்து ஆரம்பியுங்கள்.  நாம் தொடங்கும் போதே அதன் ஏற்ற இறக்கங்கள்  நமக்குத் தெரிய ஆரம்பிக்கும். இத்துறையில் சாதிக்கப் பொறுமை மிக மிக அவசியம். பொறுமையுடன் இதைத் தொடர்ந்து நடத்தி வந்தால் இதன் முன்னேற்றம் பலமடங்கு உயரும்.

நான் ஐந்து வருடமாக இப்பள்ளியை நடத்தி வருகிறேன். ஒரு பள்ளியைத் தொடங்குவது எளிதல்ல.  ஆனால் அது நம்முடைய ஆர்வத்தை பொறுத்தே சிறப்பாக அமையும்.  குழந்தைகளுக்கு ஆறு வயதிற்குள் அவர்களுடைய கற்பனைத்திறன் அதிகமாக வளர்கிறது.  எனவே அந்த வயதில் நாம் கொடுக்கும் அனைத்து நல்ல பழக்கவழக்கங்களும் அவர்கள் ஆழ்மனதில் பதியும்.  எனவே நாம் மிகுந்த பொறுப்புடன் அந்தப் பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுப்பது மிகவும் முக்கியமாக உள்ளது.

பள்ளி நடத்துவதில் ஏற்படும் லாப நஷ்டங்கள் என்பது குழந்தைகள் சேர்வதைப் பொறுத்தே அமையும். நாம் திறமையாக உழைத்தால் பள்ளியின் பெயர் நிலைத்திருக்கும்.  அதன்பின் நம்மைத் தேடிக் குழந்தைகளைச் சேர்ப்பார்கள்.  10 குழந்தைகள் இருந்தால் கூட அதிக அளவு நஷ்டம் ஏற்படாது.  முதலீடு அதிக அளவு உண்டு.  ஆனால் அதைத் திறம்பட உழைத்தால் சுலபமாகச் சம்பாதிக்கலாம.  இத்துறையில் அதிகமான பணி வாய்ப்பு உள்ளது.  ஏனென்றால் பெரிய வகுப்புகளுக்குக் கற்பிப்பதைவிட மழலையருக்குக் கற்பிப்பது எளிது. எனவே பணி வாய்ப்பு அதிகமாகவே உள்ளது.

உண்மையிலேயே ஆசிரியப் பணி அரும்பணி. நீங்கள் பெற்ற விருது பற்றிய விபரங்களைக் கூறுங்கள் என்றதற்கு “ நான் 2020 மார்ச் 7 இல் கல்வி அமைச்சர் மா.பா. க பாண்டியராஜன் அவர்களிடம் கல்வி நிறுவனத்திற்கான விருதை வாங்கினேன். மேலும் எங்கள் பள்ளியில் மாலை நேர வகுப்புகள், ஓவியம், அபேக்கஸ், மியூசிக் போன்ற வகுப்புகள் நடக்கின்றன. அதற்கும் விருதுகள் கிடைத்தன.  இதுபோன்று பல பள்ளிக் கிளைகள் தொடங்கி, கல்விச் சேவை செய்து நிறைய விருதுகள் வாங்க வேண்டும் என்பது என்னுடைய கனவு.

பாலர் பள்ளிதானே என்று நினைக்கிறோம். அதில் இவ்வளவு நுணுக்கமாய் செயல்பட வேண்டி இருக்கிறதே. வியந்து அவரது ஆசிரியப் பணி சிறக்கவும் இன்னும் அறிவார்ந்த மாணாக்கரை உருவாக்கவும், அரிய பல விருதுகள் பெறவும் நமது செட்டிநாடு இதழ் சார்பாக வாழ்த்தி வந்தோம்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...