எனது இருபது நூல்கள்

எனது இருபது நூல்கள்
எனது இருபது நூல்கள்

வியாழன், 24 மார்ச், 2022

யாகக் குதிரையால் விமோசனம் பெற்றவன்.

யாகக் குதிரையால் விமோசனம் பெற்றவன்

ல்வேறு பாவங்கள் செய்தவர்கள் பேய் பிசாசாகவோ ராட்சசனாகவோ மாறி அலைவார்கள். கதி மோட்சம் கிடைக்காமல் அப்படி ராட்சசனாக அலைந்த ஒருவனது கதையைப் பார்ப்போம் வாருங்கள் குழந்தைகளே.
கவுடதேசத்தில் அந்தணன் ஒருவன் வசித்து வந்தான். அவன் தபம் ஜபம் செய்து வாழ்ந்து வந்ததால் தேவதூதர்கள் வந்து அவனை சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்றனர். செல்லும் என்னதான் ஜபம் தபம் செய்திருந்தாலும் அவனும் உலக மாயைகளில் இருந்து விடுபடவில்லை. தேவதூதர்களுடன் சொர்க்கத்துச் செல்லும்போது வழியில் சில முனிவர்கள் தவம் செய்வதைப் பார்த்தான். அவர்கள் அருகில் அப்சரஸ் போன்ற தேவலோக கன்னிகைகள் பணிவிடைகள் செய்து நின்றார்கள்.

தான் பாடு சொர்க்கத்துக்குப் போகவேண்டியதுதானே. அந்த மனிதன் என்ன செய்தான், முனிவர்களுக்கு அப்சரஸுகள் பணிவிடைகள் செய்வது பார்த்துப் பொறாமைப்பட்டு அவர்களை ஏகடியம் செய்தான். அவ்வளவுதான் அவன் செய்த புண்ணியம் எல்லாம் பூஜ்யம் ஆயிற்று. கோபப்பட்ட முனிவர்கள் அவனை சபித்தார்கள்.
ஐயகோ அவன் ஒரு அசிங்கமான ராட்சச உருவத்தை அடைந்தான். உடனே அவனைப் பிடித்திருந்த தேவதூதர்கள் அங்கேயே அவனை விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். நா காக்காததால் அவனுக்கு சொர்க்கம் சித்திக்காது மட்டுமல்ல. ராட்சசனாகவும் நேர்ந்தது. பல்லாண்டு காலம் அவன் அங்கேயே விழுந்து கிடந்தான்.
ங்கே அயோத்தியில் ராமராஜ்ஜியம் நடந்து வந்தது. அதனால் அங்கே அசுவமேத யாகம் செய்யத் தீர்மானித்து அகத்தியரிடம் யோசனை கேட்டார் ராமர். அவர் சொன்னபடி யாகம் எல்லாம் நல்லபடியாகச் செய்துமுடித்தார் ராமர். அசுவமேத யாகக் குதிரை திக்விஜயம் கிளம்பியது. அப்படி ஐம்பத்தியாறு தேசங்களுக்கும் அது திக்விஜயம் செய்யும்போது அதை எந்த நாட்டு மன்னரும் பிடித்து வைக்கவில்லையானால் அவர்கள் ராமரைத் தங்கள் பேரரசராக ஏற்கிறார்கள் என்று அர்த்தம்.
அப்படி இல்லாமல் ஒரு மன்னரோ அல்லது தனி மனிதனோ அந்தப் புரவியைப் பிடித்து வைத்துக் கொண்டால் அவர் ராமரின் ஆட்சியை எதிர்க்கிறார் என்று அர்த்தம். உடனே படையுடன் சென்று அந்த மன்னரோடு போரிட்டு வென்று புரவியை மீட்டு திக்விஜயத்துக்கு அனுப்புவார்கள்.
அப்படி அந்தப் புரவி நாடுதோறும் புறப்பட்டுச் சென்றது. அதன் பின்னேயே பாதுகாவலாய் சத்ருக்னன், அனுமன் ஆகியோரும் சென்றார்கள். ஒவ்வொரு நாட்டையும் கடந்து அது ஹேமகூடம் என்ற இடத்தை அடைந்தது. அங்கே சவுனகர் என்ற முனிவரின் ஆசிரமம் இருந்தது. அந்த இடத்திற்குச் சென்றதும் அது அசையாமல் நின்றுவிட்டது.
கூடச் சென்ற சத்ருக்னன், அனுமன் ஆகியோருக்கு ஒன்றும் புரியவில்லை. படைவீரர்களோ அதை விரட்டிப் பார்க்கின்றனர். ஆனால அதுவோ அசையமாட்டேன் என்கிறது. என்ன செய்வதெனப் புரியாமல் அனைவரும் தவிக்க ஆரம்பித்தனர்.
புரவியின் காலில் அடிபட்டுவிட்டதோ அல்லது கல் அல்லது முள் குத்திவிட்டதோ எனப் பார்க்கலாம் என்றால் அது காலை அசைக்கவே இல்லை. பசை போட்டு ஒட்டவைத்த சிலைபோல்

நின்றுகொண்டே இருக்கிறது. சத்ருக்னனும் அதை விரட்டிப் பார்க்கிறார். ஆஞ்சநேயரோ ஒருபடி மேலேபோய் தன் வாலால் அதன் உடம்பைச் சுற்றி இழுத்துப் பார்க்கிறார். இம்மி கூட அசைவில்லாமல் நிற்கிறது அந்தக் குதிரை.
பரிதவித்த அனைவரும் சவுனக முனிவரிடம் என்ன செய்யலாமெனக் கேட்கிறார்கள். அவரோ “ அனைவரும் குதிரையின் காதுகளில் விழும்படி மன்னர் ராமரின் பெயரைச் சொல்லுங்கள். அப்போது அது நகரலாம் என்கிறார் ”. அனைவரும் அந்த யாகக் குதிரையைச் சுற்றி நின்று ராமரின் நாமத்தை ஒருமித்த குரலில் கோஷமாகக் கூறுகிறார்கள்.
என்னே அதிசயம்.. அந்த இடத்தில் படாரென சத்தத்தோடு பூமி விலக, யாக குதிரை விடுபட்டதுபோல் நகர்ந்து ஓடுகிறது. அந்த இடத்திலிருந்து பிரம்ம ராட்சசன் ஒருவன் மேலே கிளம்பி வருகிறான். பார்க்கும் அனைவருக்கும் பயம் ஏற்பட்டாலும் “ராம.. ராம..” என்று ராமரின் நாமத்தை விடாமல் உரக்கக் கூறுகிறார்கள். அது கோஷம் போல் ஒலிக்கிறது.

மேலே மிதந்த அவன் கீழிறங்கும் போது அந்தணனாக உருமாற்றம் அடைந்து இறங்குகிறான். அவன்தான் நாம் மேலே சொன்ன ராட்சசன். அவன் சவுனக முனிவர், அனுமன், சத்ருக்னன் ஆகியோரை வணங்குகிறான்.
“ஐயன்மீர், நான் சொர்க்கம் ஏகும்போது முனிபுங்கவர்களைக் கேலி செய்தேன். அதனால் பிரம்ம ராட்சசனாகும்படி சாபம் ஏற்பட்டது. அது எப்போது நீங்கும் எனக் கேட்டபோது ராமநாமத்தைக் கேட்கும்போது உன் சாபமும் நீங்கும் என்று சொன்னார்கள்.
அதனால் பல்லாண்டுகாலம் நான் இங்கேயே வீழ்ந்து கிடந்தேன். இங்கே இந்த யாகக் குதிரை வரும்போது அது ராமரின் அசுவமேத யாகக் குதிரை என்பதை உணர்ந்தேன். அதைப் பிடித்துக் கொண்டால் நீங்கள் அவர் பெயரை உச்சரிப்பீர்கள். நான் சாபவிமோசனம் அடையலாம் என்று நினைத்துப் பிடித்துக் கொண்டேன். இப்போது நீங்கள் அனைவரும் ஒருசேர ராம நாமம் ஜெபித்து என்னை மனிதனாக மாற்றியதற்கு நன்றி என்று சொல்லி மீண்டும் வணங்கி எழுந்தான். அனைவரும் ராம நாமம் கூறியதோடு அவனையும்
அந்த யாகக் குதிரையோ தன்னைப் பிடித்ததனால் விமோசனம் அடைந்த மனிதனைப் பார்த்துவிட்டு அடுத்ததேசம் நோக்கிச் செல்லத் தொடங்குகிறது.
இப்படி யாகக் குதிரையைப் பிடித்து விமோசனம் அடைந்தவனது கதை “யா காவாராயினும் நா காக்க “ என்ற குறளை நமக்குப் போதிக்கிறதுதானே குழந்தைகளே.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...