வியாழன், 24 மார்ச், 2016

திரு. லதானந்த் அவர்களின் மூன்று நூல்கள். ஒரு பார்வை.

விகடன் பிரசுரத்தில் வெளியான மூன்று நூல்கள் இவை. மூன்று வெவ்வேறுவித சப்ஜெக்டுகளில் தலைப்புகளும் பொருளடக்கமும் கொண்டவை. நினைவாற்றல் மேம்பட ஒன்றும் ,வன வாழ் உயிரியல் பற்றி ஒன்றும், ட்ராவலாக் என்று சொல்லப்படக்கூடிய ஆன்மீகப் பயண வழிகாட்டியான நூல் ஒன்றுமாக மூன்று நூல்களைப் பற்றிய என்னுடைய பார்வையை இங்கே பகிர்ந்து கொள்கின்றேன்.

இதில் நான் முதலில் படித்த ”மெமரி பூஸ்டர்” மிகச் சிறந்த நூல் என்பதனையும் அனைத்து வயதினருக்கும் ஞாபக சக்தியை அதிகப்படுத்தவும் ஞாபகப் பழுதை நீக்கவும் சிறந்த வழிகாட்டி நூல் என்பதையும் பதிவு செய்கிறேன்.
விழா வீடுகளில் அல்லது பொது இடங்களில் நம்மைப் பார்த்து யாரோ புன்னகைப்பார்கள். தெரிந்த மாதிரியே இருக்கும் ஆனால் பெயர் மறந்திருக்கும். இது வயதானவர்களுக்கு மட்டுமே வரும் அல்ஜீமர் போல் அல்ல. டெம்பரரி மெமரி லாஸ் போல அம்னீஷியாவின் பாதிப்பாக இருக்கவும் கூடும். என் கணவர் சில சமயம் எனக்கு சில விஷயங்கள் பூர்வ ஜென்மத்திலிருந்து ஞாபகங்கள் இருப்பதாகவும் சில சமயங்களில் செலக்டிவ் அம்னீஷியா என்றும் கிண்டலடிக்கும் அளவுக்குக் கூட  போய்விடும் இந்த ஞாபகப் பழுது.ஆசிரியரின் இந்நூலைப் படித்ததும் சிறுவயதில் ஓசையுடன் பாடங்களைப் படித்ததும் சிலபிள் பிரித்துப் படித்ததும். ஞாபகத்துக்காக கடினமான பெயர்களுடன் தொடர்புடையவற்றை நினைவில் வைத்துப் படித்ததும் ஞாபகம் வந்தது.

இக்காலத் தலைமுறைக்கு இது ஒரு தகுந்த வழிகாட்டி நூல். உணவுப் பழக்கங்கள், மனப் பயிற்சி, உடற்பயிற்சி , நடைப்பயிற்சி, ஜாகிங், ஏரோபிக்ஸ் , ஓய்வு, தேவையான அளவு உறக்கம், விளையாட்டின் பயன்கள் போன்றவற்றின் அத்யாவசியம் விளக்கப்பட்டுள்ளது. கம்பைன் ஸ்டடி, ஸ்ட்ரெஸ், ஸ்ட்ரெயின், போன்றவற்றைத் தவிர்ப்பது பற்றியும் வலியுறுத்துகிறார் ஆசிரியர். உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகளும் விட்டமின்களும் மினரல்களும் உள்ள உணவை ( பழ வகைகள், கீரை, பருப்பு வகைகள் ) உட்கொள்வது ஞாபகசக்திக்கு அத்யாவசியம் என்கிறார். தவிர்க்க வேண்டிய உணவு வகைகள்( சாயம் சேர்க்கப்பட்ட உணவுகள், பதப்படுத்தப்பட்டு டின்களில் அடைக்கப்பட்டவை, குளிர்பானங்கள் )  பற்றியும் கூறுகின்றார்.

நினைவுத் திறன் பற்றிய பல்வேறு நாட்டுப் பழமொழிகளுடன் ஒவ்வொரு அத்யாயமும் சுவாரசியமாக ஆரம்பிக்கிறது. நிமோனிக்ஸ், அக்ரோனிம் உத்தி, அக்ரோஸ்டிக், இன்னும் பல உத்திகள் ஆகியவற்றை உதாரணங்களோடு விளக்கி இருக்கின்றார். மிக எளிதான வார்த்தைகளில் இருந்து மிக மிகக் கடினமான வார்த்தைகள் வாக்கியங்கள் அறிவியல், சரித்திரப் பெயர்கள் வரை ஞாபகத்திலிருத்திக் கொள்ள இவை உதவுகின்றன.

மூளையின் தொடர் பயன்பாடு, சேமிப்புச் சக்தி, அதை எப்படி தேவையான விகிதத்தில் தேவையான சமயத்தில் உபயோகிக்கப் பழக்குவது என்பது பற்றியெல்லாம் மிகச் சிறந்த உத்திகளுடன் விளக்கப்பட்டிருக்கும் இந்நூல் எவ்வயதினருக்கும் பரிசளிக்க ஏற்றது. கல்கியில் வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து விகடன் பிரசுரம் நூலாக வெளியிட்டுள்ளது.

2013 ஃபிப்ரவரியில் முதல் பதிப்பு கண்ட நூல் 2013 ஆகஸ்டிலேயே ( அடுத்த ஆறுமாதங்களிலேயே ) மறுபதிப்புக் கண்டுள்ளது. இன்னும் பல பதிப்புகள் வந்திருக்கலாம். ஆசிரியப் பணியில் இருப்பவர்கள் எழுதவேண்டிய அருமையான இந்நூலைப் படைத்த ஆசிரியர் ஒரு வனத்துறை உயர் அதிகாரி என்பதுதான் பேராச்சர்யம்.

அனைத்து வயதினருக்கும் பரிசளிக்க ஏற்ற நூல் இது. விகடன் பிரசுரம். விலை ரூ . 70/-வன உயிரினங்கள் பற்றிக் குழந்தைகளுக்காகத் தமிழில் வெளிவந்த நூல்கள் மிகக் குறைவே. அக்குறையை வனங்களில் விநோதங்கள் என்ற இந்நூல் தீர்க்கிறது. வன வாழ் உயிரினங்கள் பற்றிய நூல் என்றதும் எல்லாமே விலங்குகளாக இருக்கும் என்ற எண்ணத்தில் புரட்டினேன். ஆனால் வன விலங்குகளோடு, வனத்தின் சிறப்பு,தேவை, வனநாள் , தமிழ்நாட்டின் பூ, மரம், விலங்கு , பறவை பற்றிய விபரங்கள், காட்டுத்தீ,மரங்கள், பறவைகள் , அபாயத்தில் மாட்டிக்கொண்ட வன விலங்குகள் மீட்பு, இயற்கையாகவோ செயற்கையாகவோ மரித்த விலங்குகளுக்கான ப்ரேதப் பரிசோதனை, உயிர்வாழும் வனவிலங்குக் கணக்கெடுப்பு எனப் பலதும் சொல்லப்பட்டுள்ளது.

விலங்குகளிலும் நாகம், யானை, ப்ளாட்டிபஸ், இருவாட்சி, வௌவால், கடல்கன்னி, முதலை, எறும்புத் தின்னி, முள்ளம் பன்றி, வலசைப்பறவைகள், சிங்கங்கள் என ஒவ்வொன்றும் ஒன்றிலிருந்து வேறுபட்டு முற்றிலும் வித்யாசமானவை பற்றி விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது.

மரங்களில் சந்தனம் மட்டுமல்ல மாங்ரோவ் காடுகள் பற்றியும், பூச்சிகளை உண்ணும் தாவரங்கள், மூங்கில் இலைக்காடுகள், காளான்கள் பற்றியும் சொல்லப்பட்டுள்ளது அருமை.

ஜூன் 2007 இல் முதல் பதிப்பும் செப். 2008 இல் இரண்டாம் பதிப்பும் கண்டுள்ளது இந்நூல். சுட்டி விகடனில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு . விடுமுறைக் குழந்தைகளுக்குப் பரிசளிக்க ஏற்ற நூல் இது. விகடன் பிரசுரம். விலை ரூ. 70. பயணக் கட்டுரைகள் இருவிதமாக எழுதப்படுகின்றன. வெறும் ஆன்மீகப் பயணங்களை கோயில்களின் விபரத்துடன் மட்டும் விவரிப்பது. இன்னொன்று தாம் பயணம் செய்த வழியில் கண்டு கேட்டுக் கடந்த விஷயங்களையும் பயணம் செய்ய ஏற்ற காலம், தங்குமிடம், உணவுக்காக ஏற்பாடு செய்துகொள்ளுதல் , ட்ராவல் ப்ளானர், எளிதாகச் சென்றுவரும் விபரங்கள், ட்ரெயின் பஸ் ( ஃப்ளைட் ) விபரங்கள்.,கொண்டு செல்ல வேண்டிய பொருட்களின் விபரங்கள் மற்றும் தவிர்க்க வேண்டிய விஷயங்கள், ஆகியனவற்றோடு வரும் படைப்புகள் ட்ராவ்லாக் என்று அழைக்கப்படுகின்றன.

இவை ஆழ்வார்களால் பாடப்பட்ட  ( மொத்தம் 108 திவ்ய தேசங்கள். அதில்  பூலோகத்தில் உள்ளது 106 ) 106 வைணவ திவ்ய தேசங்களுக்குச் சென்று தரிசித்து வந்தது பற்றிய நூல் இது. திருத்தலங்களின் பேரால் பண்டிட்டுகள் செய்யும் தில்லுமுல்லுகள் பற்றியும் எச்சரிக்கின்றார் ஆசிரியர். அதே போல ஒவ்வொரிடத்தும் நாம் தேடிச்சென்ற பூர்வ, புராண, பாடல் பெற்ற கோயில்கள் தவிர மிச்சக் கோயில்கள் அநேகம் இருந்து நம்மைக் குழப்பக் கூடும் என்றும் அதையும் இனம் கண்டுபிடித்துத் தரிசிக்கும் வழிமுறைகள் பற்றியும் கூறுகின்றார்.

ஒரே சமயத்தில் பார்க்க முடியாது என்பதால் அருகருகே இருக்கும் கோயில்களை ப்ளான் செய்து நான்கைந்து முறைகளாகத் தங்கள் பயணத் திட்டத்தை வகுத்து மனைவியுடன் எளிதாகச் சென்று வந்ததாக நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.  ஒவ்வொரு இடத்தைப் பற்றியும் அருமையான வர்ணனைகளோடு ஆழ்வார்களின் பாடல்களும் தக்க இடத்தில் மனதை வருடும்படித்  தரப்பட்டிருக்கின்றன. கண்ணன் பிறந்த பிருந்தாவனத்தில் இருந்து ஆரம்பித்து மதுரா, கோவர்த்தனம், கோகுலம்,பஞ்ச துவாரகை, கோபி தலாவ், பேட் துவாரகை, நாத்லாரா, கங்க்ரோலி, நைமிசாரண்யம், அயோத்தி, ரிஷிகேஷ், கேதார் நாத், ஜோஷிமட், பத்ரிநாத் ,பஞ்ச பிரயாகைகள், தேவபிரயாகை, கங்கா ஆரத்தி, முக்தி நாத்வரை  தகுந்த புகைப்படங்களோடு இருக்கும் இந்நூல் நம்மைப் பிரயாணம் செய்யத் தூண்டுவதோடு முழுமையாகப் பார்க்க உதவும் வழிகாட்டியாகவும் இருக்கின்றது.

சக்தி விகடனில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. ஆன்மீக அன்பர்களுக்குப் பரிசளிக்க  ஏற்றது. விகடன் பிரசுரத்தில் டிசம்பர் 2013 இல் வெளியான இந்நூலின் விலை. ரூ. 90.

6 கருத்துகள் :

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

அருமையான நூல்கள் பற்றி இனிமையான அறிமுகங்கள். பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.

லதானந்த் சொன்னது…

நன்றி

Anuradha Prem சொன்னது…

நல்ல பகிர்வு ...

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி விஜிகே சார்

நன்றி லதானந்த் சார்

நன்றி அனு

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நூல்கள் மிக அருமையாக உள்ளதே!!! தங்கள் விமர்சனம் வாசிக்கத் தூண்டுகிறது. ம்ம்ம் பரிசாகவும் அளிக்க உதவும்..நல்ல பகிர்வு..சகோ

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...