வியாழன், 2 பிப்ரவரி, 2012

பொங்கல் டிட் பிட்ஸ்.. இவள் புதியவளில்.

வீரர்களின் திருநாள்;-
**************************

பனங்கிழங்கு சர்க்கரை வள்ளிக்கிழங்கு மிக அதிகமாக கிடைக்கும். இவற்றை அவித்தும் சுட்டும் உண்பார்கள். நிறைய நாட்டுக் காய்கறிகள் கிடைக்கும் காலம் இது. சேலம் பக்கம் முழு தேங்காய்க்குள் ஓட்டையிட்டு பாசிப்பருப்பு வெல்லம் போட்டு முழுதாய் சுட்டு உடைத்து தின்பார்கள்.
கிராமங்களிலிலும் வயல் சார்ந்த இடங்களிலும் மாட்டுப் பொங்கல்தான் சிறப்பு. அலங்கானல்லூர், பாகனேரி போன்ற இடங்களில் மஞ்சு விரட்டு பிரசித்தம்.இது வீரர்களின் திருநாளாக கொண்டாடப்படுகிறது. மாட்டின் கொம்புகளில் வர்ணமிட்டு மணிகளும் மாலைகளும் பரிசுப் பொருட்களும் கழுத்தில் கட்டப்பட்டிருக்கும். அதை அடக்குபவர் அதன் கழுத்தில் இருக்கும் பரிசுப்பொருளுக்கு சொந்தக்காரராவார்.

ஸ்பெயினிலும் இது போல மாட்டை அடக்கும் நிகழ்ச்சி உண்டு. இது ராஜஸ்தான் மாநிலத்தில் கால்நடை கண்காட்சியாகவும் ஜனவரி 22 - 25 நடைபெறுகிறது.

இந்த ஜனவரி மாதத்தில் பட்டம் விடு நிகழ்ச்சி அஹமதாபாத்திலும், 14- 28 வரை கும்ப மேளா ஹரித்துவாரிலும், ஜெய்ப்பூரில் கல்வியறிவுத் திருவிழாவாகவும், ராஜஸ்தானில் பாலைவனத்திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த தங்க நகரத்தில் அலங்கரிக்கப்பட்ட எருதுகள், ஒட்டங்கள், யானைகள் அணிவகுத்து வரும். போலோ போட்டிகள், ஒட்டக ஓட்டப்பந்தயம், டக் அப் வார் போட்டி, டர்பன் கட்டும் போட்டி, பப்பட் ஷோ, அக்ரோபேட் போட்டிகள் நடைபெறும்.


இந்தியாவிலும் தமிழ் நாட்டிலும் பொங்கல். :-
***************************************************
பொங்கல் ,” போகி, உழவர் திருநாள், தமிழர் திருநாள்” அறுவடைத் திருநாள், தைப்பொங்கல் தினம் . மகர சங்கராந்தி, திருவள்ளுவர் தினம், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என அழைக்கப்படுகிறது. அதே சமயம் ஜனவரி 13 பஞ்சாபிகளின் லோஹிரி என்னும் திருவிழாவாகவும்கொண்டாடப்படுகி
றது. இது இந்தியர்களின் திருநாளும்கூட.

போகியன்று வீட்டிலிருக்கும் பழைய பொருட்களை ஒன்று சேர்த்து எரிப்பார்கள். இது பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதைக் குறிக்கிறது.

பஞ்சாபியரும் நெருப்பு மூட்டி அதைச் சுற்றி அமர்ந்தும் நடனமாடியும் இனிப்புகள் , பொரி வழங்கி கொண்டாடுவார்கள்.

கத்தோலிக்க கிறிஸ்துவ மக்களும் பொங்கலை கொண்டாடுவதால் இது சமய சார்புகளற்ற திருவிழா.


பயிர் பச்சைகள் செழித்து வளர உதவும் சூரியனுக்கும், வயலுக்கும் நமக்கு உழைக்கும் உழவு மாடுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் பொருட்டு சூரியனுக்கு புது நெல்லை அறுவடை செய்து புதுப் பானையில் பச்சரிசி வெல்லமிட்டு பொங்கலிட்டு கரும்பு, வாழைத்தார் , வெற்றிலை, பாக்கு , தேங்காய், பூக்கள், மஞ்சள்கொத்து , இஞ்சிக் கொத்து கட்டி ,படையலிட்டு வணங்குகிறார்கள்.

மாடுகளுக்கு வெல்லமிட்ட பொங்கல் உண்ணத்தருகிறார்கள்.

காரைக்குடிப் பக்கம் கோயில்களிலும் சாமிவீட்டிலும் பொங்கலிட்டபின் வீட்டில் பொங்கல் வைக்கிறார்கள். கோயில்களில் கல் அடுப்பில் மண் பானையில் பொங்கலிடும்போது பொங்கல் பொங்கினால் குலவை இடுவார்கள்.

நகரத்தார் பொங்கலில் மூன்று குழம்பு நாலு பொரியல் கூட்டு என பொங்கல் மிக விமரிசையாக இருக்கும். பால் பொங்கும்போது பொங்கலோ பொங்கல் என பிள்ளைகள் எல்லாரும் உரக்க சொல்வார்கள். சிறப்பு நிகழ்ச்சிகளின்போது எல்லாம் நகரத்தார் இல்லங்களில் சங்கு ஊதுவார்கள். பொங்கல் பொங்கும்போதும் சங்கு ஊதுவார்கள்.

பொங்கலன்று மாலை தங்கள் உறவினரிடம் ஒருவருக்கொருவர் பால் பொங்கிற்றா என விசாரிப்பார்கள். பால் பொங்குவது போல இன்பம் மகிழ்ச்சி எல்லாம் இல்லத்தில் பொங்கிப் பெருகவே பொங்கலிடுகிறோம்.

வாசலை நிறைத்து கலர் கோலப்பொடிகளால் பெரிய கோலங்களிட்டு அதன் நடுவில் பூசணிப்பூ, பரங்கிப்பூ வைப்பார்கள்.

ருசியான பொங்கலுக்கு:-
********************************

பொங்கல் செய்ய புதுப் பச்சரிசி எனக் கேட்டு வாங்க வேண்டும். பழைய பச்சரிசி வேக நேரமாகும்.

புதுப்பச்சரிசி ருசியை அதிகப்படுத்தும்.

வெண்ணை வாங்கி வீட்டில் கருவேப்பிலை, உப்பு மிளகாய், முருங்கைக்கீரை போட்டுக் காய்ச்சி பொங்கலுக்கு உபயோகப்படுத்தினால் ருசியாய் இருக்கும்.

அச்சு வெல்லம்தான் ருசி. மண்டை வெல்லம் வாங்கினால் வெளிர் நிறமாய் இருக்கக் கூடாது. இது சிறிது புளிப்பாய் உப்புச் சத்துடன் இருக்கும்.

தென்னக ஊர்களில் மிக அருமையான ருசியான வெல்லம் கருப்பட்டி கிடைக்கும். ஊர் செல்பவர்கள் இதை வாங்கி வந்து பொங்கலிட்டால் சூப்பர் இனிப்பு பொங்கல்தான்.

பொங்கலில் இருக்கும் வெல்லம் உடம்பில் இரும்புச் சத்தை வழங்குகிறது. நெய்யும் முந்திரியும் நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.

பாசிப்பருப்பு கட்டாயம் வெண் பொங்கலில் சேர்க்க வேண்டும். இஞ்சி மிளகாய் சேர்த்தால் ஜீரணத்துக்கு நல்லது.

மண்டை வெல்லத்தை கத்தியில் சீவலாம். காய் சீவியிலும் சீவலாம்.

பொங்கல் எப்படி வந்தாலும் நன்கு மசித்து தேவையான் நெய்யை ஊற்றினால் அருமையாக இருக்கும்.

காஸ் அடுப்பில் குக்கரில் பொங்கல் வைக்கும்போது பொங்கி வழித்தால் ஒர் விசிலில் அடுப்பை அணைத்து விட்டு பின் சிறிது நேரம் கழித்து ஒரு விசில் வைக்கவேண்டும்.

முந்திரியும் திராக்ஷையும் எவ்வளவு போட்டாலும் ருசிதான். ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம் சிறிது போட்டால் ருசி அதிகரிக்கும்.

மில்க் மெயிடை கடைசியில்தான் பொங்கலில் ஊற்ற வேண்டும். பால் ஊற்றினால் குக்கரில் வேகும்போதே ஊற்றலாம்.

தேங்காய்ப்பால் ஊற்றும் பொங்கல் சீக்கிரம் கெட்டுவிடும். எனவே சீக்கிரம் உபயோகப்படுத்த வேண்டும்.

பழங்கள் போட்டு இனிப்புப் பொங்கலும் காய்கறி போட்டு உப்புப் பொங்கலும் செய்யலாம்.

5 கருத்துகள் :

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பொங்கிவந்த பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..

கணேஷ் சொன்னது…

பொங்கல் பற்றிய பகிர்வு அருமை. தேங்காய்ப் பால் பொங்கல் இதுவரை கேளவிப்படாதது. நன்று.

Jaleela Kamal சொன்னது…

வாழ்த்துக்கள் தேனக்கா

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

நன்றி ராஜி

நன்றி கணேஷ்

தேனம்மை லெக்ஷ்மணன் சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...