வில்லுக்கு விஜயன் என்ற பெயர் வந்தது எப்படி?
பரசு என்ற ஆயுதத்தைப் பற்றிக் கேள்விப்பட்டால் நமக்குப் பரசுராமர் நினைவில் வருவார். வேலைப் பார்த்தால் நமக்கு வேலாயுதனான அழகன் முருகன் ஞாபகம் வருவார். அதேபோல் எத்தனையோ ராஜாதி ராஜாக்கள் வீராதி வீரர்கள் சூரர்கள் வில் சுமந்து நிற்பதைப் பார்த்திருந்தாலும் நமக்கு அர்ஜுனன் மட்டுமே நினைவில் நிற்பது ஏன்? அதிலும் வில்லுக்கு விஜயன் என்ற பெயர் அவனுக்கு வந்தது எப்படி என்பதைப் பார்ப்போம் குழந்தைகளே.
அஸ்தினாபுர அரண்மனையில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் கிருபாசாரியாரும் துரோணாசாரியாரும் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது மன்னர் திருதராஷ்டிரன் முன்னிலையில் இளவரசர்களுக்கான போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அப்படிப் போட்டிகள் நடைபெறும்போதெல்லாம் மல்யுத்தத்தில் பீமனும் வில் யுத்தத்தில் விஜயனும் ஜெயிக்க முடியாதவர்களாக இருந்தார்கள். இதைக்கண்டு கௌரவர்களுக்கு மட்டுமல்ல அவர்களின் தந்தையான மன்னன் திருதராஷ்டிரனுக்குமே பொறாமை கொழுந்துவிட்டு எரிந்தது.
ஒருமுறை இவ்வாறு விஜயன் விற்போட்டிகளில் ஜெயித்தபோது திருதராஷ்டிரன் துரோணரைத் தனியே அழைத்துக் கேட்டே விட்டார். “ அனைத்து இளவரசர்களுக்கும் ஒன்றாகத்தானே அஸ்திர சஸ்திர பயிற்சி அளிக்கிறீர்கள். ஆனால் விஜயன் மட்டுமே வில் வித்தையில் சிறந்து விளங்குவது எப்படி?