சென்னை இராயப்பேட்டையின் தெருக்கள் ஜனசந்தடி மிகுந்தவை. அதிலும் நாங்கள் குடி இருந்த பெருமாள் முதலி தெரு மவுண்ட் ரோடுக்கு நடந்து செல்லும் தூரத்தில் இருந்தாலும் இன்னும் நெருக்கடியானது. ஆனால் அது வெஸ்ட்காட் ரோட்டில் சேரும் இடத்தில் ஒரு அற்புதம் இருந்தது. அதுதான் வுட்லேண்ட்ஸ் தியேட்டர். அங்கேதான் பாஸிகர், தேஜாப், ஹம் ஆப்கே ஹைங் கௌன், இன்னும் ஹோம் அலோன், க்ரேஸி ஸஃபாரி, அலாதீன், 2010, E. T (extra terrestrial) பேட்மேன் & ராபின், ஜேம்ஸ்பாண்ட் படங்கள் என்று ஒரு மாபெரும் உலகத் திரைப்பட சாம்ராஜ்யமே காத்திருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக சமோசா, ஜலேபி ஃபலூடா, குல்ஃபி என்று நார்த் இந்தியன் ஐட்டங்களுக்கும் அயலகப் படங்களுக்கும் ரசிகர்களாக நாங்கள் மாறிக்கொண்டிருந்த நேரம் எங்களைத் தமிழ்ப் படங்களுக்குக் கட்டி இழுத்து வந்தவை அழகனும், டூயட்டும்.