எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 8 ஏப்ரல், 2021

மக்களோடு துறவெய்திய மன்னன்

மக்களோடு துறவெய்திய மன்னன்


அளவற்ற பொன், பொருள், மண், மனை, பதவி, படை கொண்ட ஒரு மன்னன் துறவெய்தும் போது அவனுடைய குடும்பத்தினரும் துறவெய்தினார்கள். இன்பம் தரும் லோகாயதப் பொருட்களை விடுத்து அவர்கள் அனைவரும் தாபதர் பள்ளிகளில் அடைக்கலமானது ஏன் ?. அனைவருக்கும் ஒரே சமயம் இப்படித் துறவு மனப்பான்மை வரக் காரணமென்ன ? அப்படித் துறவுக்கு மக்களை இட்டுச் சென்ற மன்னன் யார் என்பதை எல்லாம் பார்ப்போம். வாருங்கள் குழந்தைகளே.

ஏமமாபுரம் மிக அழகான நாடு. அந்நாட்டு மன்னன் சச்சந்தன். மாவீரனான அவன் மனைவியின் பெயர் விசயை. சச்சந்தனின் அமைச்சர் கட்டியங்காரன் என்பான் ஒரு நம்பிக்கைத் துரோகி.. சூது வஞ்சனையால் மன்னன் சச்சந்தனைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றுகிறான். மன்னன் சச்சந்தன் ராணி விசயையும் அவள் வயிற்றில் வளரும் தன் குழந்தையும்  நம்பிக்கையான ஒற்றர் மூலம் மயிற்பொறியில் ஏறித் தப்பிக்க வழி சொல்லிவிட்டு இறக்கிறான்.

மன்னன் சச்சந்தன் உருவாக்கிய ஒரு மயிற்பொறியில் ( அந்தக்கால ஆகாய விமானம் ) கட்டியங்காரன் வரும் முன் ஏறி அதை எப்படியோ இயக்கித் தப்பிக்கிறாள் விசயை. ஆகாயமார்க்கமாகப் பறந்து செல்கிறது மயிற்பொறி. நள்ளிரவு நேரம். திக்குத்திசை தெரியாமல் தவிக்கும் அவளுக்கு பிரசவ வலி ஏற்படுகிறது.


கீழே வெளிச்சம் தெரிய அங்கே மயிற்பொறியை ஒருவாறாக இறக்குகிறாள். அதுவோ ஒரு இடுகாடு. என் செய்வது. இறங்கியதும் அவளுக்கு அழகான ஒரு ஆண்மகவு பிறக்கிறது. அக்குழந்தை பிறந்ததும் சிந்தாமணி என்று பெயர் இடுகிறாள். விசயை. அப்போது சீவ என்று அசரீரி கேட்கிறது. சீவகன் என்றும் அழைக்கப்படுகிறான் அவன். ஏதோ சத்தம் கேட்க ஒளிந்து பார்க்கிறாள் விசயை.

அந்நேரம் கந்துக்கடன் என்ற வாணிகன் தன் மனைவிக்குப் பிறந்து இறந்த குழந்தைக்கு ஈமகிரியை செய்ய வரும்போது சீவகனின் அழுகுரல் கேட்கிறான். சீவகனை மார்போடணைத்துத் தூக்குகிறான். நல்லவர் கையில் தன் குழந்தை செல்வதைப் பார்த்ததும் அவன் சீரும் சிறப்புமாக வளர்வான் என்றெண்ணி விசயை அவ்விடத்தை விட்டு அகல்கிறாள்.  

தன் இல்லத்துக்கு சீவகனை எடுத்துச் சென்று தன் மகனாக வளர்த்து வருகிறான் கந்துக்கடன். அவனது மனைவி சுநந்தையும் சீவகன் மேல் அன்பைப் பொழிகிறாள். சீவகன் வந்ததும் அவர்களுக்கு நந்தட்டன், நபுலன், விபுலன் ஆகிய மகன்களும் பிறக்கிறார்கள்.

அச்சணந்தி என்ற ஆசிரியரைக் கொண்டு கந்துக்கடன் சீவகனுக்குக் கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்கிறான். அச்சணந்தி மட்டுமே இவனது பிறப்பு இரகசியம் தெரிந்தவர். சீதத்தன், புத்திசேனன், பதுமுகன், தேவதத்தன் ஆகிய நல்ல நண்பர்களும் சீவகனுக்குக் கிடைக்கிறார்கள்.

அச்சணந்தி சீவகனுக்கு அனைத்து வித்தைகளையும் கற்பிக்கிறார். அந்நாட்டை ஆளும் உரிமை பெற்றவன் அவன் என்றும், கட்டியங்காரன் மன்னன் சச்சந்தனை நயவஞ்சகமாகக் கொன்றுவிட்டு ஆட்சியைப் பிடித்தது பற்றியும் கூறுகிறார். தக்க தருணம் வந்ததும் அவன் தன் நாட்டைத் திரும்பப் பெற உதவுவதாகவும் சொல்கிறார். சீவகனும் காலம் கனியக் காத்திருக்கிறான்.

சீவகன் அறிவும் ஆற்றலும் ஒருங்கே பெற்றவன். வண்ணச் சுண்ணப் பொடிகள் கொண்டு வரைதல் , பூமாலை கட்டுதல், பாடல் பாடுதல் இன்னும் பல்வேறு கலைகளில் வல்லவன். வலிமையான வாலிபன்.

அவன் ஆசிரியர் அச்சணந்தியின் வழிகாட்டுதலின் படி தன் நாட்டை அபகரித்த கந்துக்கடனை எதிர்க்க நட்பு ரீதியில் துணை கோர அண்டை நாடுகளுக்குப் பயணிக்கிறான். இயக்கர் நாடுகளில் பல இன்னல்கள் அடைகிறான். கேமமாபுரத்தில் அவனது நண்பர்களும் அவனுக்குத் துணை புரிகிறார்கள். கந்துக்கடனின் புதல்வன், சீவகனின் சகோதரன் நந்தட்டனும் சீவகனின் அனைத்து முயற்சிகளுக்கும் கை கொடுக்கிறான்.

பயணத்தின் நடுவில் தன் தாய் எனத் தெரியாமல் விசயையை ஒரு தாபதர் பள்ளியில் சந்திக்கிறான். சீவகனைப் பார்த்ததும் அவன் தன் மகன் தான் என்று அடையாளம் புரிந்துகொள்ளும் அவள் இராசமாபுரத்தில் தன் தமையன் கோவிந்தனைப் பற்றி கூறி அவர் துணையைப் பெறுமாறு கூறுகிறாள்.

சீவகன் தன் வாழ்வின் போக்கில் சந்திக்கும் எட்டுப் பெண்களை அன்பு கொண்டும் அதே சமயம் படைபலத்துக்காகவும் பணபலத்துக்காகவும் மணந்து கொள்கிறான். அவர்கள் காந்தருவ தத்தை, குணமாலை, பதுமை, கேமசரி, கனகமாலை, விமலை, சுரமஞ்சரி, இலக்கணை ஆகியோர். அவர்கள் அனைவருக்கும் சீவகன் சம உரிமை அளிக்கிறான். சமமாக நடத்துகிறான்.


அவன் தாய் விசயையின் தனயன் கோவிந்தனின் மகளும் அவர்களுள் ஒருவர். தன் தாயின் அறிவுரையோடு மனைவியர் எண்மரின் தந்தையரின் படைபலமும் கொண்டு ஏமாங்கத நாட்டை வென்று கட்டியங்காரனைத் துரத்தித் தன் அழகான நாட்டைத் திரும்பப் பெறுகிறான். முடிவில் அறம் வென்றது.

கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் நீதிநெறி தவறாது ஆண்டுவந்தான் அவன். அவன் மனைவியர் அனைவருக்கும் நன்மக்கள் பிறந்தவுடன் அவர்களிடம் ஆட்சிப்பொறுப்பை ஒப்படைத்துவிட்டுத் தன் தாய் அடைக்கலமான தாபதர் பள்ளிக்குச் செல்கிறான்.

வாழ்க்கை இன்பங்களை அனுபவித்து ஆட்சிப் பொறுப்பையும் செவ்வனே சுமந்து நிறைவான வாழ்வு வாழ்ந்த அவனுக்குத் துறவின் மேல் பற்று ஏற்படுகிறது. எப்போதும் ஆழ்மன விழிப்புணர்வோடு வாழ்ந்து வரும் அவன் துறவின் பெருமை உணர்ந்து அவன் தாயைப் போல அவனும் துறவறம் பூணுகிறான்.

அவன் பிரிவைத் தாளாத குடும்பத்தினரும் நாட்டுமக்களும் அவனைப் பின் தொடர்கின்றனர். அவர்களும் மன்னன் பின்னேயே மறுபேச்சில்லாமல் தாங்களும் துறவறம் பூண்டு அவனோடு தாபதர் பள்ளிகளில் வாழ்கின்றனர். முடிவில் சீவகன் பிறவாப் பெருநிலை எய்துகிறான்.

மன்னன் துறவு மேற்கொள்வது மட்டுமல்ல அவன் மேல் வைத்த பாசத்தால் அவன் குடும்பத்தினரும் நாட்டு மக்களும் கூடத் துறவு கொண்டது வியக்கத்தக்க செயல்தானே குழந்தைகளே.

3 கருத்துகள்:

 1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

  பதிலளிநீக்கு
 2. How are you Sister do you remember me? do you have any contacts of our old bloggers
  recently I knew about Rajaram's passed away.
  do you have any contacts please share with me.
  My no is 9207917239

  Santhana sankar

  (Moontrampirai)

  பதிலளிநீக்கு
 3. நன்றி சகோ. உங்களை நான் மறக்கவில்லை.

  ஆம். பாரா மறைந்துவிட்டார். என்ன செய்வது. திகைப்பாகத்தான் இருக்கு. இருக்கும்வரை பாஸிட்டிவாக ஏதேனும் ப்லாகில் எழுதிக் கொண்டிருப்போம்.

  பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...