எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 10 ஜனவரி, 2021

சகோதரனுக்காய் உயிர்வரம் கேட்ட அண்ணன்

சகோதரனுக்காய் உயிர்வரம் கேட்ட அண்ணன்

ஒரு தாய்க்கு எத்தனை மகன்கள் இருந்தாலும் அத்தனை பேரும் சமம்தான். அதேபோல்தான் ஒரு அண்ணன் இருந்தான் அவனுக்குத் தன் தம்பியர் நால்வரும் உயிர்போன்றவர்கள். ஆனால் ஒரு சந்தர்ப்பத்தில் அவன் தன் மூன்றாவது சகோதரனை முக்கியமாகக் கருதி உயிர்வரம் கேட்டான். அது ஏன் எனப் பார்ப்போம் குழந்தைகளே.
பாண்டவர்கள் சார்பாக தருமன் திரௌபதி உட்பட தனது தேசம் முதலான பதினாறு வகையான செல்வங்களையும் சூதாட்டத்தில் பிணை வைத்துத் தோற்றான். அப்போது துரியோதனன் பாண்டவர்கள் பன்னிரெண்டு வருடம் வனவாசம் செய்து ஒரு வருடம் அஞ்ஞாதவாசமும் முடித்து வந்தால் அரசுக் கட்டிலை விட்டுத் தருவதாகக் கூறினான்.

இதை ஒப்புக்கொண்டு பாண்டவர்கள் திரௌபதியுடன் வனவாசம் ஏகினர். தம் வனவாசத்தில் முனி சிரேஷ்டர்களுக்குத் தொண்டு புரிந்து வந்தார்கள் பாண்டவர்கள். முனிவர்கள் யாகம் யக்ஞம் ஹோமம்  ஆகியன செய்யும்போது துஷ்ட விலங்குகளாலும் மனிதர்களாலும் அவர்களுக்குத் துன்பம் நேராமல் காத்தனர். மேலும் யாக சமித்துக்களையும் சேகரித்துக் கொடுத்தார்கள்
யாகத்துக்கு ஹோமம் வளர்க்க சமித்துக்களைக் குமித்து அரணிக்கட்டையால் உரசுவார்கள். அரணிக்கட்டையில் உண்டாகும் தீப்பொறியால் அவை தீப்பற்றிக் கொள்ளும். அந்த அரணிக்கட்டை ஒரு சமயம் அங்கே மேய வந்த மானின் கொம்பில் மாட்டி விட்டது. அது பயந்து போய் தலையை அசைத்துக் கொண்டே கானகத்துக்குள் ஓடி விட்டது.
அரணிக்கட்டை இல்லாவிட்டால் எப்படி தீயை உருவாக்குவது. அதனால் முனிவர்கள் அதை மீட்டுத் தரும்படி வேண்ட பாண்டவர்கள் ஐவரும் கானகத்துக்குள் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். அப்படியே மானைத் தேடியபடி பலகாத தூரம் வந்து விட்டார்கள். வெகு நாழிகை கடந்து மதிய நேரமும் ஆகிவிட்டது. அன்னம் தண்ணீர் இல்லாமல் அலைந்ததில் ஐவருக்கும் கடுமையான தாகம் ஏற்பட்டது.
நகுலன் ஒரு மரத்தின் மீது ஏறிப் பார்க்க தூரத்தே ஒரு நீர்நிலை தெரிந்தது. உடனே அவன் இறங்கி அங்கேயிருந்து தண்ணீர் கொண்டு வருவதாகச் சொல்லிப் புறப்பட்டான். போனவன் போனவன்தான். அரை நாழிகை ஆயிற்று ஆளையே காணவில்லை. அவனைத் தேடி அடுத்து சகாதேவன் சென்றான். அவனையும் காணவில்லை. அடுத்தடுத்து பீமனும், அர்ஜுனனும் சென்றார்கள். அனைவரும் போனவர்கள் போனவர்கள்தான். ஒருவரும் திரும்பிய பாடில்லை.
இன்னும் என்னதான் செய்கிறார்கள் அனைவரும். கானகம் விட்டு வெளியே போகவே அரை நாள் ஆகிவிடுமே என தர்மர் தானே புறப்பட்டு அந்தப் பொய்கையைத் தேடிச் சென்றார். ஐயகோ இதென்ன அவர் தம்பிகள் நால்வரும் அந்த நீர்நிலையின் கரையில் மயங்கிக் கிடக்கின்றார்களே. என்னாயிற்று.

அவருக்கும் தாகம் நாக்கை வரட்ட நீர் அருந்தப் பொய்கையில் இறங்கினார். அப்போது ஒரு குரல் கேட்டது. “ நான்தான் இந்தக் குளத்தைக் காவல் காக்கும் யக்ஷன்.  என் கேள்விகளுக்குப் பதில் சொல்லிவிட்டு நீர் அருந்து. அதைக் கேட்காமல் நீரருந்தினால் இந்நீர் விஷமாகிவிடும். நான் சொன்னதை லட்சியம் செய்யாமல் நீரருந்தி அதன் விஷம் தாக்கி உன் தம்பிகள் இங்கே இறந்து கிடக்கிறார்கள் “ என்று எச்சரித்தது அக்குரல்.
“நீர் அருந்தியதற்காகவா என் தம்பிகளை தண்டித்தாய். நீ யார் ? என் எதிரில் வா. அப்போதுதான் பதில் சொல்வேன் ” என்று சொல்ல பயங்கரமான தோற்றமுடைய அந்த யக்ஷன் அங்கே தோன்றினான்.  
அவனைக் கண்டதும் “சரி கேள்விகளை கேள் “ என்றார் தருமர்.
“மனிதனுக்கு எப்போதும் துணை இருப்பது எது ?”என்று கேட்டான் யட்சன்.
“தைரியமே மனிதனுக்கு எப்போதும் துணை “ என்றார் தருமர்.
”பூமியை விட தாங்கும் மனதுகொண்டது எது?” என்று கேட்டான் யட்சன்.
“ஒரு தாயின் மனது “ என்றார் தர்மர்.
”ஆகாயத்தை விட உயர்ந்தவர் யார் ?”என்று கேட்டான் யட்சன்.
”அவரவர்க்கும் அவரவரது தந்தையே ஆகாயத்தை விட உயர்ந்தவர் “என்றார் தர்மர்.

”ஒரு மனிதன் எதை அலட்சியம் செய்ய வேண்டும்” என்று கேட்டான் யட்சன்.
“தன் கவலையை அலட்சியம் செய்யவேண்டும் “என்றார் தர்மர்.
இதுபோல் இன்னும் பலப்பல கேள்விகள் கேட்டான் யட்சன். தர்மரும் அலுக்காமல் சலிக்காமல் பதில் சொன்னார். அவரது சமயோசிதமான பதில்களால் யட்சன் மிக மகிழ்ந்தான்.
“தர்மரே இனி நீங்கள் இக்குளத்தில் நீர் அருந்தலாம். என் கேள்விகளுக்கு நீர் பொறுமை காத்துப் பதில் சொன்னதால் இக்குளத்து நீரின் விஷம் உம்மை ஒன்றும் செய்யாது “ என்றான் . அதோடு “ தர்மரே நீங்கள் சொன்ன பதில்கள் எனக்கு திருப்திகரமாக இருந்தன. அதனால் உங்கள் ஒரு தம்பியை நான் உயிர்ப்பித்துத் தருகிறேன். யாரை உயிர்ப்பிக்க என்று சொல்லுங்கள் “ என்றான்.
தர்மர் உடனே ஏதும் யோசிக்காமல் “ நகுலனை உயிர்ப்பித்துத் தாருங்கள் “ என்றார். யக்ஷன் குழம்பிப் போய் “ வில்லாளி விஜயனையும், வெறுங்கையாலேயே எதிரியை அழிக்கும் பீமனையும் எதிர்காலம் கணித்துச் சொல்லும் சாஸ்திர அறிவுடைய சகாதேவனையும் கேட்காமல் அது ஏன் நகுலனை உயிர்ப்பிக்கச் சொன்னீர்கள் தர்மரே “ என்று கேட்டான்.
உடனே தர்மர் சொன்னார் “ எங்களுக்கு இரண்டு தாய்கள். குந்தித் தாய்க்கு நான், அர்ஜுனன், பீமன் ஆகியோர் பிள்ளைகள். மாத்ரித் தாய்க்கு நகுலன் , சகாதேவன் என்று இரு குழந்தைகள். என் தாய்க்கு மூத்த மகனான நான் உயிரோடு இருக்கிறேன். அதேபோல் மாத்ரி தாயின் மூத்த மகனான நகுலனை உயிர்ப்பிக்கக் கேட்கிறேன். அதுதானே நியாயமும் தர்மமும் கூட “
இதைக் கேட்டதும் யக்ஷனுக்குப் பேச்சே எழவில்லை. அவன் நால்வரையுமே உயிர்ப்பித்துக் கொடுத்தான். மேலும் தர்மத்தின் படி நடந்த தர்மரை விழுந்து வணங்கி தன் யட்ச ரூபத்தில் இருந்து சாபவிமோசனமும் பெற்றான்.
சகோதரனுக்காய் உயிர்வரம் கேட்ட அண்ணனான தர்மனின் தர்ம நியாய நியதிகள் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டியவைதானே குழந்தைகளே.  
டிஸ்கி:- இந்தக் கதை ஜனவரி 5 - 20, 2021 சொற்கோவில் மின்னிதழில் வெளியானது. நன்றி குமார் சார் & சேதுராமன் சாத்தப்பன்சார். 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...