சென்ற மாதம் (மே 16 ) அன்று கொரோனா பெருந்தொற்று நீங்க வேண்டிக் கூட்டுப் பிரார்த்தனை ஒன்று ஜூம் மீட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வை ஹேப்பி டூர்ஸ் என்ற வாட்ஸப் குழுமத்தின் அட்மினாக இருக்கும் பள்ளத்தூரைச் சேர்ந்த திரு விஸ்வநாதன் அவர்கள், குழுமத்தில் இருக்கும் அனைவரையும் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்திருந்தார். தேவகோட்டையைச் சேர்ந்த வீர சுப்பு அவர்கள் தன்னுடைய யூ ட்யூப் சேனலில் இதை லைவ் ஸ்ட்ரீமாகப் பதிவேற்றி இருந்தார். கிட்டத்தட்ட ஆறு மணி நேரத்துக்கும் மேலாக அனைவரும் இதில் நல்ல உற்சாகத்துடன் பங்கேற்றுப் பேசிச் சிறப்பித்தார்கள். செல்வன் அ. சொ. கி. முருகப்பன் இறைவணக்கம் பாட விழா இனிதே தொடங்கியது. திரு விஸ்வநாதன் அண்ணன் வரவேற்புரை நல்கினார்கள்.
திரு கண்ணப்பன் அழகன் முருகனுக்குக் குளிரக் குளிர அபிஷேக ஆராதனைகள் செய்து மனம் கனியக் கனியக் கந்தர் அலங்காரம் சொன்னார். இன்னும் கூடக் கேட்டுக் கொண்டிருக்கலாம் போலிருந்தது. பேச வேண்டியவர்கள் அதிகம் மற்றும் நேர மேலாண்மை காரணமாக அவர் சட்டென முடிக்க வேண்டியதாயிற்று. திரு வெங்கட் கணேசன், திருமதி கமலா பழனியப்பன் இன்னும் திரு. வீரப்பன்,திரு. பழனியப்பன், திரு மோகன் ஆகியோர் பாமாலைகள் பாடிச் சிறப்பித்தார்கள்.