திரையிலும் கோலோச்சும் நகரத்தார் நட்சத்திரங்கள்
பல்கலைக் கழகங்கள், பதிப்பகங்கள்,
பத்திரிக்கைகள், பங்குவர்த்தகம், வங்கிகள், தனவணிகம் மட்டுமல்ல திரைப்படத்
துறையில் தயாரிப்பிலும் இயக்கத்திலும் ஏன் நடிப்பிலுமே கூட ஜொலிப்பவர்கள்தான் நம்
நகரத்தார் நட்சத்திரங்கள். சிலர் ஹீரோ ஹீரோயின் ரோலிலும் மற்றும் அநேகர்
குணச்சித்திர, துணைக் கதாபாத்திர மற்றும் எதிர்நாயகன் பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
கானாடுகாத்தான் ஆணழகன் சிதம்பரம் அவர்களின் மகன்
திரு அருண் சிதம்பரம் கனவு வாரியம் என்ற படத்தைத் தயாரித்து அதில் கதாநாயகனாக ஒரு
மாதிரி கிராமத்தைப் படைத்துள்ளார். படிக்காதவனாக இருந்தாலும் சாதனை படைக்க
முடியும் என்பதுதான் கரு. இரண்டு ரெமி விருதுகள், ஏழு உலகப்பட விருதுகள் பெற்ற
படம் அது.
காரைக்குடியைச் சேர்ந்த திரைப்பட நடிகர் திரு சிதம்பரம் அவர்களுக்கு 80 வயது. ரஜனியின் எஜமானில் ஆரம்பித்துக் கிட்டத்தட்ட 50 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தமிழின் அனைத்து ஹீரோக்களின் படங்களிலும் ஏதோ ஒரு பாத்திரத்தில் தோன்றி இருக்கிறார். வாங்க எஜமான் என்று ரஜனியை அழைக்கும் விவசாயிகள் சீனிலும் நாடகக் கொட்டாய் சீனிலும் எஜமானில் நடித்துள்ளார். சிவகாசியில் விஜய் வீட்டை வாங்க வரும் அப்பச்சியாகத் தோற்றம் தருவதும் இவரே. அவ்வை ஷண்முகியில் ஒரு இண்டர்வியூ காட்சியிலும் விஜய்காந்துடன் ஆறேழு படங்களிலும் நடித்துள்ளார். விஷாலுடன் பூஜை படத்திலும் விக்ரமுடன் சாமி படத்திலும் ஓரிரு சீன்களில் தோன்றியுள்ளார்.