செவ்வாய், 29 ஜூன், 2010

பிடிவாதமும் பிடிமானமும்

சாயங்காலங்களில் சம்புடங்கள் திறந்து
அம்மா தரும் இனிப்பாய்..
தினம் உன் குரலை எதிர்பார்த்து..

பேதையை மயக்கும்
போதையாய் உன் குரல்..

திறந்திடு சீசேம் என
காட்டிவிட்டு மறைந்தாய்...
அற்புதக் குகையே என்னை
உள்வைத்து மூடிவிடு..
கடவுச்சொல் மறந்து கிடக்க..

பாகாய்க் கொதித்துப்
பக்கமெல்லாம் வழிந்து
உருக்கி விட்டாய்..
உருகிக் கிடக்கிறேன்..
வெள்ளைச் சதுரத்தில்..

பொங்கலாய் மனம் பொங்கிவர
அரிசியோடு கொஞ்சம்
அள்ளிப் போடு ஆசையையும்..
வெல்லத்தோடு உன் உள்ளத்தையும்..

பிடிமானம் ஏதுமில்லை.
பிடிவாதம் விட்டுவிடு..

நேரமற்ற நேரங்களில்
நினைவுகள் அறுந்தறுந்து
நினைப்பாகக் கிடக்கிறேனே..
நினைவிருக்கா உனக்கு என்னை..

ஞாயிறு, 27 ஜூன், 2010

நெட் போதை

விடிந்ததும் எழுந்ததும்
லாப்டாப்பின் சுவிட்சை
சொடுக்குவதுதான் சுப்ரபாதம்...
தூக்கம் கண்ணை கழட்டும் வரை..

பல்தேய்த்துக் கொண்டே
ஜிமெயில்., யாஹூ., வலைத்தளம்
மேய்ந்தது போக இப்போது
அதிபோதை உச்சமாக முகப்புத்தகம்...

காபியோடு ஒரு குட்மார்னிங் டாகிங்.,
டிபனோடு ஒரு வியூ நோட்.,
லஞ்சோடு ஒரு போட்டோ டாகிங்..,
டின்னரோடு ஒரு குட்நைட் டாகிங்..

யாராவது எதிலாவது
டாக் செய்யாவிட்டால்
இருக்கிறோமோ என்ற சந்தேகம்..

வாரம் ஒரு முறையேனும்
ப்ரொஃபைல் பிக்சர் மேனியாவில்
புகைப்படம் மாற்றி..,

பாத்ரூமில்தான் எடுப்பதில்லை..
காபி குடிப்பதும்., குழுவாய் சந்திப்பதும்.,
ஃபோட்டோ கமெண்ட்ஸ் போடுவதுவும்..,
பாட்டுக்கள் கேட்பதுவும்..,

நோட்டிஃபிகேஷன் வைரஸில்
பாராட்டித் தீர்ப்பதும்.,
ஹோமில் நுழைந்து
எல்லாவற்றையும் விரும்புவதும்...,

கமெண்ட் போடுவதும்.,
ஸ்மைலி போடுவதும்...,
போட்ட கமெண்ட்ஸை லைக்பண்ணுவதும்..,
டவுன்லோடு செய்வதுவும்.,

லிங்குகளை அடுக்குவதும்..,
மெயிலில் டாக் செய்து படுத்துவதும்..,
குருப்பிலோ., ஃபான் க்ளப்பிலோ
சேரச்சொல்லி அழைப்பதுவும்..,

யம்மா யம்மா யம்மம்மா.,
புசிப்பவை ருசிப்பவை
(கஞ்சா.,பீடி., சிகரெட்., சுருட்டு.,
பான்., ப்ரவுன் சுகர்., ஹஷீஷ்.,
ஹெரோயின்., பெத்தடின்.,
பாக்கெட் சாராயம்., மது., கள்ளு.,
சொண்டிச் சோறு., போதை ஊசி.,)
மட்டும் போதையில்லை..

அதிதீவிரமாகக் களைய...
திருத்த வேண்டிய போதை இது..
இதில் ஆழ்ந்து முயங்கி
நேரம் காலம் இல்லாமல்..,

உணவு உண்ணாமல்.,
ஒழுங்காக உறங்காமல்.,
கழுத்தெலும்பும் கண்ணும் பழுதாகி.,
மனிதன் தின்னும் வலையில்
வலை தின்னும் மனிதனாகி..,

வருங்கால நோவு இதுதான்..
வரையறுத்துக் கொள்ளுங்கள் நேரத்தை..
வெர்ச்சுவல் சாட்டிஸ்ஃபாக்‌ஷனில்
வீணாகி விடாமல்..

டிஸ்கி 1:- சர்வதேச போதை ஒழிப்பு தினக் கவிதையாக 26. 6 2010 யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது..

டிஸ்கி 2:- அன்பு நண்பர் அஜயன் பாலாவின் 115 தமிழ் அறிஞர்களின் வாழ்வியல் குறிப்பு கொண்ட நூல் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவந்திருக்கிறது.. வாழ்த்துக்கள் அஜயன்.. பகிர்வுக்கு நன்றி மணிவண்ணன்..

டிஸ்கி 3 :- செம்மொழி மாநாட்டுப் பட்டிமன்றத்தில்
பங்கேற்ற அன்பு நண்பர் S.Ve. சேகருக்கு
வாழ்த்துக்கள்.

வியாழன், 24 ஜூன், 2010

கண்ணதாசனும் பதிப்பகங்களும்

கண்ணதாசனின் வனவாசம் ஒரு மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதல்ல எப்படி வாழக்கூடாது என்பதற்கான வழிகாட்டி...

உண்மைகளை நிர்வாணமாகவும் துயரங்களைத் தாழ்வு கருதாமலும்., மேன்மைகள் என்று கருதியவற்றை பயத்துடனும்..செய்து வாழ்ந்த ஒரு மகா கவிஞனின் உள்ளீடு இது..

சமுதாயம் நம்மைத்தூக்கி எறிந்தாலும்.. மீண்டும் சமுதாயத்திற்குள் ஓடித்தான் இடம் பிடிக்க வேண்டும் என்பார் கண்ணதாசன்.. கடலில் நண்டு அலை வீசி எறிந்தாலும் திரும்பக் கடலுக்குள் ஓடுவது போல...

காலூன்றாத நண்டு போல் அலை மோதாமல் உயர்ந்த இடத்தில் காலூன்றி விடவேண்டும்,, என்பார்..

இப்படி மோதி மோதி முன்னேறிய ஒரு வாழ்க்கைச் சரிதம் அவருடையது.. சிறுகூடல் பட்டியில் முத்து சாத்தப்பன் செட்டியாரின் எட்டாவது குழந்தையாக பிறந்த அவர் கண்ணனைப் போல பல இடரிலும் விழுந்து எழுந்துதான் கவியரசரானார்.. கண்ணதாசனானார். அதற்கு முன் அவர் எடுத்த முயற்சிகள் எத்தனை எத்தனை .... திரும்பத்திரும்ப முயற்சி செய்ததில் வெற்றி அவர் பக்கம்தான்..

முதலில் ”திருமகள்” பத்ரிக்கைக்காக புதுக்கோட்டையை அடுத்த ராமச்சந்திரபுரத்தில் ஆரம்பித்தது ஒர் கவியரசருக்கான வாழ்க்கை..முதல் கவிதை வந்தது.. அடுத்து ”முல்லை” பதிப்பகம் 1945 இல் .. பின்னர் திராவிட நாடு இதழ்கள் .. குடியரசு வெளியீடுகள்.. கோனாபட்டு நண்பர்கள் பழக்கம்..

முதல் முதலில் கோகலே மண்டபத்தில் அண்ணாவின் பேச்சு கேட்க அதிலிருந்து ஒரு புதிய பயணம் ஆரம்பம்..

அடுத்து ”அருணோதயம்” பதிப்பகம்., அரு்ணாசலமும் குயிலனும் கூட்டாக ”தென்றல்” பத்ரிக்கை நடத்த கவியரசரின் பீலிவளை என்ற சோழன் நெடுமுடிக்கள்ளி பற்றிய சொற்சித்திரம் வந்தது..

புதுக்கோட்டையில் ”தாய்நாடு” நாராயணனுக்கும் ”அணிகலம்” என்ற பத்ரிக்கைக்கும் எழுதினார்.. பின் ”மேதாவி”யின் உதவி ஆசிரியர்..அடுத்து தாய்நாடுவில் பணிபுரியும் போது இரண்டாவது எழுத்தாளர் மாநாடு ..

”பொன்னி”யில் முருகு.சுப்பிரமணியன் நடத்திய பத்ரிக்கையில் பணி.. அதற்கு பெரியண்ணன் கேட்டதால் இரண்டு கதை எழுதினார்..

“வணங்காமுடி” என்ற பெயரில் “குமரன்” பத்ரிக்கையில் “ஜெய்ஹிந்த்” என்ற கதை வந்தது.. பின் மேதாவியில் இருந்து “திரை ஒலி” பாப்பா நடத்திய இரா.தியாகராசன் திரை ஒலிக்கு ஆசிரியராக வந்தார்.

அடுத்து “சக்தி காரியாலயம்” .. திரு வை. கோவிந்தன் நடத்தியது . ஆசிரியர் திரு தி. ஜ. ர... அங்கு ரா. கி. ர ( குமுதம் துணையாசிரியர்.) , கல்கண்டு ஆசிரியராக இருந்த தோழர் தமிழ்வாணன்., ஆகியோர் நெருக்கமானார்கள்..

பின்னர் ”சாயிபாபா புத்தகாலயம்” அதிபர் சண்முகமிடம்., சேலம் மார்டர்ன் தியேட்டருக்காக சண்ட மாருதம்., பின் ”கஜலெட்சுமி” அச்சகம்..

தென்றல் என்ற சொந்த பத்ரிக்கை உதயம்.. முதல் தென்றல் இதழில் இறந்துபோன காதலர்கள் ஒன்று சேர்ந்து பேசுவது போல ஒரு படைப்பு.

தமிழர் திருமணத்தில் தாலி பற்றி மபொசியின் கருத்துகளுக்கு எதிர்க்கருத்துக் கொண்டிருந்தது .. திருடித்தான் புகழ் பெற்றான் ஷேக்ஸ்பியர் என இவர் சர்ச்சைக்குரியது பற்றியும் பத்ரிக்கைகளில் துணிந்து கருத்து வெளியிட்டவர்..

கிட்டத்தட்ட 1942 இல் இருந்து 1961 வரையான கால கட்டத்தில் சுமார் ஒரு 20 பத்ரிக்கைகளில் பணியாற்றியும் .. சொந்தமாக பதிப்பகம் நடத்தியும் சேர்த்த அனுபவம் அளவிலடங்கா.. அதன் பின் அரசியலிலும் திரைத்துறையிலும் புகுந்து பின் கவியரசராக வென்ற சரித்திரம் அறிவோம்..

ஆனால் அந்தக் கவிஞரைப் புடம் போட்டு பாதை அமைத்துத் தந்தது இந்தப் பத்ரிக்கைகைப் பணியும் பதிப்பகங்களும்தான்.. ஆரம்ப கால கட்டங்களில் மிகச் சொற்ப பணத்துக்காக கூட எழுதியுள்ளார்.. எனவே ஒரு கவியரசருக்கே இவ்வளவு கஷ்டமும் முயற்சியும் வேண்டியிருக்கையில்... வலைப்பதிவராகிய நாமெல்லாம் இன்னும் சீரிய முயற்சி எடுத்து மென்மேலும் சிறப்பானதைக் கொடுக்க முயல்வோம்.. நாம் இல்லாவிட்டாலும் நம் படைப்புகள் பேசப்படும்.. நூறாண்டுக் கவிஞராயில்லா விட்டாலும் நல்ல படைப்புகளுக்குச் சொந்தக்காரராவோம்.. நன்றி கவியரசரே.. முயற்சி உடையோம் .. இகழ்ச்சி அடையோம்.. உங்கள் பிறந்த நாளில் உங்கள் ஆசீர்வாதத்தோடு..

டிஸ்கி:- ஏசு காவியம் உட்பட மன வாசம் மன வாசம் என பல எழுதி இருந்தாலும் நான் அவரின் ஆரம்ப காலக்கட்ட முயற்சிகளையே... அவரின் எல்லாவற்றிற்குமான .. அடிப்படையான... அவரை செதுக்கிய கருவியாகக் கருதுகிறேன்

செம்மொழி .. எம்மொழி..

செம்மொழியாம் எம்மொழி
அம்மையப்பன் தந்த மொழி
இம்மையிலும் மறுமையிலும்
எம்மோடு வாழும் மொழி..

ஐயன் வள்ளுவன் வாய்மொழி.,
ஐவகை நிலத்தின் சேய் மொழி..
ஐம்பெருங்காப்பியம் ஈந்த மொழி..
தொல்காப்பியத் தொன்மை மொழி..

மதுரைத் தமிழ் மண்ணின் தமிழ்
நெல்லைத்தமிழ் நல்ல தமிழ்..
கொங்கு தமிழ் கொஞ்சு தமிழ்
சென்னைத்தமிழ் ..செல்லத்தமிழ்

ஆதிமொழி.. அன்னை மொழி..
யாக்கும் மொழி .,கோர்க்கும் மொழி.,
யவனர்.உரோமர்., அராபியர்.,ஆங்கில
வணிகக் கலப்பில் வனைந்த மொழி..

அகமும் புறமும் கலந்த மொழி..
அன்னியக் கலப்பும் ஏற்ற மொழி
ஆலமாய் வேறூன்றி அகலமாய்க் கிளைத்து
ஆவியோடு சேர்ந்த மொழி..

யாதும் ஊராகி செழித்த மொழி
யாவரும் உறவாகி ஜெயித்த மொழி.,
நன்றும் தீதும் விளக்கிய மொழி.,
எண்ணம் போல் வாழ்வித்த மொழி..

வந்ததெல்லாம் ஏற்ற மொழி
வந்தாரை எல்லாம் வாழ வைத்த மொழி.,
வலைத்தளத்திலும் வாழும் மொழி..
வலைப்பதிவரை வாழ்விக்கும் மொழி

கொங்கில் எம்மொழி விழா சிறக்க...
ஒளி விளக்காய்.. பேரொளியாய்..பெருகி
தீமை ஒழிந்து ஈழத்தமிழரும் அடுத்த ஆண்டில்
மன நிம்மதியோடு மகிழ்வோடு பங்கேற்க,,

உலகத் தமிழர் வாழ்க..உவகைத் தமிழ் வாழ்க..
தாய்த்திரு நாடு வாழ்க.. தகவுற்றது வெல்க..
வலைப் பதிவர் வாழ்க.. வலைத்தமிழ் வாழ்க..
வண்ணமும் எண்ணமுமாய் வளம் பெறுக...

டிஸ்கி..1..:- செம்மொழி மாநாட்டில் தமிழ்த்தந்தை
கலைஞர் அவர்களின் உரையை இங்கு ம் மேலும்
நண்பர் மணிவண்ணனின் நேரடி வர்ணனையைக்
கோவையிலிருந்து இதிலும் காண்க....

டிஸ்கி..2..:- செம்மொழி மாநாட்டில் பங்கேற்கும்
அன்பு நண்பர்கள் ஓசை செல்லா., ஈரோடு கதிர்
மற்றும் திலகபாமாவுக்கு வலைப்பதிவர்
குடும்பத்தின் சார்பாக மகிழ்வான வாழ்த்துக்கள்..

புதன், 23 ஜூன், 2010

பழைய மரத்தின் கிளைகள்

கெடிகாரத்தின் கரங்கள்
முடங்கிப் போய் அல்லது
நுடங்கிப் போய்..

அலுவலுக்கும் பள்ளிக்கும்
சென்ற பின்னர்
கடமைகளில் கனத்துக்
கிடந்த கரங்களில்
பூஞ்சிறகு முளைக்கிறது..

கண்ணுக்குத் தெரியா உலகு சென்று
எல்லோரையும் உறவாய் உணர்ந்து.,
கதைத்துக் கலாய்த்துக் கவிதை எழுதி.,

கண்கள் சோர்வுறும் வரை...
அலைந்து அனைவரும்
திரும்பும் வரை இது நீடித்து......

கேட்பதற்கென்று காதுகள் இருந்தன..
சில சமயம் முன்பு வரை..
சொல்லவும் அவர்க்கு கதைகள் இருந்தன..

எல்லாம் பழகியும் புரிந்தும்
இருக்கும் நாட்களில்..
வாய் கூட உணவு அருந்த மட்டுமே..

பேசவும் கேட்கவும் பகிரவும்
அவரவர்க்குத் தோழமைகள்..
வீடு என்பது கூடி வாழும் இடமாய்..

இருந்தாலும் பறவைகளுக்கு
இளைப்பாற.. பழைய மரத்தின்
கிளைகள்தான் சொர்க்கமாய்..

ஞாயிறு, 20 ஜூன், 2010

உங்களுக்கு ஒன்றுமில்லை அப்பா... நீங்கள் நலம்

இன்னும் சில வருடங்களில்
திருமணமாகும் பேரனுக்கு..
ஆனாலும் அப்பா தாத்தாவல்ல..
சம வயதுத் தோழர்..

எண்ணெய் தடவிக் குளியாட்டுதலும்
கல்லூரி கவுன்சிலிங்குக்கு
ஊர் ஊராய் அலைவதும்..
பிடித்தமோ இல்லையோ
பேரனோடு ஆங்கிலப்படம்
பார்த்து ரசிப்பதும்..

பிறந்த சமயம் பேரன்கால்
நெஞ்சில் பட படுத்திருப்பார்..
உவகையுடன்.. அவன் எது
செய்தாலும் ஓவியமாய் எண்ணி..

நானும் இவ்வாறு சிலசமயம்
அறியாமல் வருத்தி இருக்கக் கூடும்..
உள்ளுக்குள் அடக்கிய கோபத்துடன்..

எல்லா நல்லதும்
கிடைத்தால் உன் அதிர்ஷ்டம்..
கிடைக்காவிட்டால் என் துரதிர்ஷ்டம் என
தன் பக்கம் திருப்பிக் கொள்வார்..

முன்பெல்லாம் மடிக்கும்போது
அவர் சட்டை பிரம்மாண்டமானதாய்
இருக்கும்.. அவர் மனம் போல்..

மருத்துவப் பரிசோதனைக்குப்
பிறகான மாதங்களில்
இது இருக்கே., இது வருமோ என
அவர் முகம் போலச் சுருங்கி
விட்டது சட்டையும்..

உங்களுக்கு ஒன்றுமில்லை அப்பா..என
சுருக்கங்களை நீவிப் பார்க்கிறேன்..
நீவ முடியாக் குழப்பக் கண்களோடு
அம்மாவும் அப்பாவும்..

வெந்ததைத் தின்று விதி
வந்தால் சாவோம் என
அம்மாவும் புலம்ப
நொந்து போகிறது மனசு..

பரிசோதனைகளும்.,
மருத்துவர்களும் பார்த்துக் கலங்கி.,
மருந்தும் குறிப்புகளும் கொண்டு
மாநகரத்தை விட்டு..

சொந்த ஊர் சென்ற காலை
அப்பா ஃபோனில் உற்சாகமாய்ப் பேசினார்
விடுதலையான சுவாசத்தோடு.. நிம்மதியாய்..

உங்களுக்கு ஒன்றுமில்லை அப்பா..
நீங்கள் என்றென்றும் நலம்..
நூறாண்டு வாழ்வீர்கள்..

டிஸ்கி:- தந்தையர் தின வாழ்த்துக்கள் அப்பா..
டிஸ்கி : - நேற்று என் வலைத்தளத்தில் வெளியிடப்
பட்ட இந்தக் கவிதை இன்றைய இளமை விகடனில்
21. 6. 2010 வெளிவந்து இருக்கு

வெள்ளி, 18 ஜூன், 2010

காய்ச்சல்

உனக்குக் காய்ச்சல்..
கொதித்துக் கிடக்கிறது மனசு..
பாபர் ஹுமாயூனின்
நோவை வாங்கியதாய்...
உன்னிடமிருந்து இடம்பெயர்ந்து
எனக்கு வரட்டும்..

அணைத்து ஆரத்தழுவி.,
சூடெல்லாம் உருவிப்போட
நினைக்கிறேன்..
சூ மந்திரக் காளியென..

நீ பிதற்றும் போதெல்லாம்
பதைக்கிறது மனசு..
சூப்பும் பார்லிக் கஞ்சியும்
ரொட்டியும் ஹார்லிக்ஸும்
ஆறிக் காய்ந்து போய்..

உணர்வற்று ஒரு நேரம் கூட
கண் சொருக முடியாமல்..
உற்று உன்னைப் பார்த்துக் கொண்டே...
பக்கம் அமர்ந்து நெற்றி
தடவிக் கொண்டே....

கண்விழித்து மருந்து உண்ணவாவது
ஒரு வாய் சாப்பிடு..
கசந்து கிடக்கிறது உனக்கு நாவு..
எனக்கு எல்லாம்..

உன் நோவிலெல்லாம்
உன்னைப் பார்த்துப் பார்த்தே
சுமந்துகொண்டே கவலையால்
குலைந்து இருக்கிறேன் நானும்..

இரவும் நிலவும் குளிர்ந்து
இறக்கையைக் கிழிக்க..
வழியும் உஷ்ணத்தை
விரல்வழி வடித்து நான்..
வடிக்க முடியா பாரத்தோடு..

விடியலில் சூரியன் விரியப் பூத்த
ஒரு உயிர்ப்பான நாளில்
இயல்பான கதகதப்புடன்
பல்துலக்கி காபி அருந்துகிறாய்,,
பார்த்துப் பரவசத்தில் நான்..

வியாழன், 17 ஜூன், 2010

அன்பின் நியோ. ....இது எதிர் பதிவு அல்ல.. தன்னிலை விளக்கம்..

அன்பின் நியோ..

முதல் முதல் என் தளத்தில் பின்னூட்டமிட்டு இருந்தீர்கள்,. மகிழ்வாய் இருந்தது.. நான் இதுவரை 200 இடுகைகளுக்கு மேல் எழுதி இருக்கிறேன்..
எதிர் கருத்துக்கள் எதுவும் இதுவரை இல்லை.. எனவே நானும் எதிர் இடுகைகளோ., எதிர் கவுஜைகளோ எழுதியது இல்லை. சந்தர்ப்பம் வாய்த்ததுமில்லை.. இதுவும் எதிர் இடுகையோ .. மறு வினையோ அல்ல. ஒரு தன்னிலை விளக்கம்தான்..

எந்தக் காலதிலும் வலைப்பதிவர் ஒற்றுமை எந்தக் காரணத்தாலும் குலையாமலிருக்க வேண்டும் என எண்ணுபவருள் நானும் ஒருவள்..
குடும்பம் ., குழந்தை., விருந்தினர் ., விடுமுறை., சுற்றுலா.. என்ற பல விஷயங்களுக்கு நடுவிலும் தான் நினைத்தவற்றைப் பகிர பெண்கள் வலைத்தளத்தில் எழுதி வருகிறோம்.. கவிதையோ., கட்டுரைகளோ., சமையல் குறிப்போ., தையலோ.. எல்லாம்.. முடிந்தவரை அனைவரும் சிறப்பாகவே கொடுக்கிறார்கள்..

ஆனால் போபால் விஷவாயு சம்பவத்தின் மேல் அனைவருக்கும் இரக்கம் உண்டு .. அதனை சரியான முறையில் வெளிப்படுத்த சமயம் வாய்க்கவில்லை என்றே கருதுகிறேன்... நீங்கள் சொன்ன 30 பதிவர்களில் சிலர் பெயரைத்தான் நான் அறிந்திருக்கிறேன்.. படிக்க இயலாதது நேரக் குறைவே தவிர.. வேண்டாம் என்பதல்ல.. சில நாட்கள் முன்பு நடந்த சில மனஸ்தாபங்கள் கூட எனக்கு சரிவரத் தெரியாது.. எல்லாம் சரி ஆகிவிடும் என நினைக்கிறேன்..

என்னுடைய பதிவில் இடுகை இடுவது., மற்றையோருக்கு பின்னூட்டமிடுவது., மேலும் மற்றதோழமைகள் (முகப்புத்தகத்தில்) நம்மை டாக் செய்யும் இடுகைகளுக்கு பின்னூட்டம் இடுவது என நேரம் போதவில்லை.. எந்நேரமும் அமர முடிவதில்லை.. ஒரு மணி நேரத்தில் 10 வலைத்தளங்கள்தான் வாசித்துப் பின்னூட்டமிட முடியும்.. அதுவும் வீட்டிலுள்ளோர் என்ன எந்நேரமும் இதில் என கோபித்துக் கொள்ளாமலிருந்தால்., நெட்டோ ., கரண்டோ பிரச்சனை இல்லாமலிருந்தால்.., குழந்தைகள் தொந்தரவு செய்யாமலிருந்தால்.. .... இத்தனையும் உங்களுக்கு இருக்காது என எண்ணுகிறேன்..

நடுவில் ஒரு பத்ரிக்கைக்காகவும் செயல் படுவதால்.. பல் முனைப்போடு செயல் பட வேண்டியுள்ளது..

நான் கல்லூரி முடித்த சமயம் .. அதைக்கேட்டு எவ்வளவு கோபம் வந்தது எவ்வளவு துடித்தேன் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரியாது.... அப்போது எல்லாம் பெரும்பாலும் பத்ரிக்கைகள் மூலம்தான் தெரியும். தொலைக்காட்சி அரிது.. அப்போது புதுமைப் பெண்கள் போல இருந்த கோபம் இல்லை எனினும் கழிவிரக்கம் ஏற்படுகிறது இப்போதும்... சிலவற்றை நினைத்து வருந்த முடிகிறதே தவிர .. பகிர முடிவதில்லை... என் செய்ய..

இதில் நிச்சயம் எங்களுக்கு போதிய விவரங்கள் கிடைக்கவில்லை ., சேகரித்து இடுகை இட நேரம் கிடைக்கவில்லை என்பதே உண்மை.. நிச்சயம் ஒரு பெண் சம்பந்தப் பட்டிருந்தால் உங்களுக்கு அறிவு பூர்வமான இடுகைகளை விட உணர்வு பூர்வமான இடுகைகள்தான் அதிகம் வந்து இருக்கும்.. எதையும் காக்கும் சக்தியும் நாங்கள்தான் எதையும் மனதளவில் தாங்க இயலாத சக்தியும் நாங்கள்தான்..

ஒரு பொது நிகழ்வில் .. எல்லோருடைய பங்களிப்பும் இருக்க வேண்டும் அதிலும் பெண்களும் ஈடு பாடு காட்ட வேண்டும் என்ற உங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது.. நாங்களும் முயல்கிறோம்.. முடிந்தவரை எதனைப் பற்றியும் நன்கு தெரிந்தே கருத்துச் சொல்ல வேண்டும் என நினைக்கிறேன்.. நண்பா..

எழுதி வைத்த இடுகைகள் சில கூட தாமதமாகத்தான் வெளியிட நேரிடுகிறது.. எதற்கு நேரம் வேண்டும் முதலில் ..

எனவே நேரக் குறைவு.. என்பதுதானே தவிர அக்கறை இல்லை ஈடுபாடு இல்லை., கவலை இல்லை என்பதல்ல.. புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.. எங்களை.. என்றும் நட்புடன் அன்பு அக்கா தேன்..

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் ..!!

டிஸ்கி..:- எல்லாரும் எனக்கும் நியோவுக்கும் ஏதோ மிஸண்டர்ஸ்டாண்டிங் என நினைக்கிறார்கள்.. அப்படி எதுவுமே இல்லை... எனவே அவரின் இந்த இ்டுகை இணைப்பை இங்கே கொடுக்கிறேன்..
போபால் விபத்தில் எந்த ஒரு பெண்ணும் உயிர் இழக்கவில்லை..

புதன், 16 ஜூன், 2010

லேடீஸ் ஸ்பெஷல்..-- பாதுகாப்பான முதலீடு .. சில ஆலோசனைகள்...

பெண்கள் சுய உதவிக் குழுக்கள் வந்த பிறகு.. எளிய பெண்களின் வாழ்க்கைத்தரம் மேம்பட்டிருக்கிறது எனலாம்.. சிக்கனம் சிறந்த சேமிப்பு.. பெண்கள் அதில் சிறந்தவர்கள்..கையில் இருக்கும் சிறிதளவு பணத்தையும் சீட்டுப் பிடிப்பது.. சிட் ஃபண்ட்களில் போடுவது முதல்.. பங்கு சந்தையில் முதலீடு செய்வது வரை பெண்கள் ஏதோ ஒரு வழியில் சேமித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்..

என் அம்மாவுக்கு 65 வயதாகிறது .. அவர் சி என் பி சி டிவியிலும் என் டி டிவியிலும் வரும் பங்குச் சந்தை விலை விபரங்களைப் பார்த்து (share prize movements).. ஃபோன் மூலமாக .. பங்குகளை வாங்கி விற்று லாபம் பார்த்து வருகிறார்..

நம் கையில் இருக்கும் குறைந்த அளவு பணத்தையும் எவ்வாறு பாதுகாப்பான வழிகளில் முதலீடு செய்வது என பங்குச் சந்தை முண்ணனி நிறுவனமான ஓரியண்டல் ஸ்டாக்ஸின் திரு சித்ரா நாகப்பனின்
ஆலோசனைக்காக நம் லேடீஸ் ஸ்பெஷல் பத்ரிக்கைகாக அணுகினோம்..

இவர் மியூச்சுவல் ஃப்ண்ட் தொடர்பான விவரங்களை.. ஜெயா., பொதிகை., மக்கள் ., சன் தொலைக்காட்சிகளில் வழங்கியவர்.. எகனாமிக் டைம்ஸ்.. பிஸினஸ் லைனில் இவரின் முதலீடு தொடர்பான கட்டுரைகள் வந்துள்ளன...

டீ மேட் அக்கவுண்ட்., ஈக்விட்டி ஷேர்ஸ்., டிபெஞ்சர்ஸ்., டிரைவேடிவ்ஸ்., கமாடிட்டீஸ்., கோல்ட். சில்வர்.. மார்க்கெட்.., ம்யூச்சுவல் ஃப்ண்ட்ஸ்., இன்ஷுயூரன்ஸ்., ஃப்யூச்சர்ஸ் ., ஆப்ஷன்ஸ்., அஞ்சலக முதலீடு., மற்ற காப்பீடுகள்.. சிட் ஃப்ண்ட்ஸ்...இன்டெக்ஸ்., ட்ரேடிங் தொடர்பான.. உங்கள் சந்தேகங்களை என்னுடைய ஈ மெயில் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்..

இந்த ஜூலை மாத லேடீஸ் ஸ்பெஷலில் உங்க கேள்விகளுக்கு பதில் கிடைக்கும்.. 18 . 6. 2010 க்குள் உங்கள் கேள்விகளை அனுப்பி வையுங்கள்..
என் ஈ மெயில் முகவரி ..thenulakshman@gmail.com..

என்றும் உங்க முதலீடு பாதுகாப்பானதா இருக்க வேண்டும் என நினைக்கிறோம்.. எனவே சரியான முறையில் சேமியுங்க..
சிறுகச் சேர்த்து பெருக வாழுங்கள் மக்களே..!!!

திங்கள், 14 ஜூன், 2010

ரவிகுல திலகன்..-ஒரு பார்வை..

வானதி பதிப்பகத்தின் வரலாற்று நூல்... அணிந்துரை சுந்தா..

சரித்திரப் புதினங்களில் சாண்டில்யன் ராஜா என்றால் கோவி மந்திரி எனலாம். ஆனால் சக்கரவர்த்தி என்றால் அது கல்கிதான்.. அல்லியும் ஆம்பலும் கொட்டிக்கிடக்கும் வாவிகளைப் பார்க்கும் போதெல்லாம் எனக்கு வலிமையான மாமல்லரும்.. நளினமான சிவகாமியும்தான் நினைவில் மலருவார்கள்..அவரின் இளவல் கல்கி கி. ராஜேந்திரன் (இவரை தளபதி எனலாம்) எழுதிய சரித்திரப் புதினம் ரவிகுல திலகன்..சிங்கக் குட்டியல்லவா பதினாறு அடி பாயாவிட்டாலும்..சிங்கம் பாய்ந்த தூரத்தைத் தொட முயன்றிருக்கிறது..

ஆறாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கருங்கோளரும் பாண்டியனும் சிம்ம விஷ்ணு பல்லவருக்கு திரை கட்டி வாழ்ந்தனர்..

நலங்கிள்ளி ., நெடுங்கிள்ளி., கிள்ளிவளவன்., போன்ற சோழமன்னர்கள் 700 ஆண்டுகள் (நந்திவர்ம) பல்லவர்க்குத் திரைகட்டியபின் ரவிகுலத்தோன்றலாய் ஆதித்தன் விஜயாலயன் உதயம்.. தன் முன்னோர்கள் போலில்லாமல் சுதந்திர நாட்டை ஆளவிரும்பும் சோழன்..இவன் வீரர் தலைமணி., கொடையில் கர்ணன்., நேர்மையான ஒழுக்கமுடையவன்..பம்பைப் படை வீட்டில் பிடித்த நெருப்பில் பாய்ந்து குடிகளைக் காப்பாற்றி முகம் கரிந்து வீரத்தழும்பு பெற்றவன்.. முத்தரையர் குலமகள் உத்தமசீலி இவன் மனதை கொள்ளை கொண்டவள்..

இவளை அடையவும்., சுதந்திரத் திருநாட்டை அடையவும்., குவளை (குறிஞ்சி மகள்)., சீனன்., (மஞ்சள் பூதம் எனக் குறிப்பிடப் படும் பீம்பாய் போன்ற நல்லவன்.. ஊமையன்..)மற்றும் ஜெய்சிங்கன் ( நண்பன்.. வியாபாரி).. இவர்கள் துணையுடன் போராடுவதுதான் கதை.. வெற்றி கிட்டுகிறது வீரத் திருமகனுக்கு.. சில படிப்பினைகளும்..

ஆகவமல்லன் (ஒற்றர் படைத்தலைவன்)., பராசிராயன் ( பல்லவ சக்கரவர்த்தியின் மாதண்ட நாயகர் .), போன்றவர்களின் கண்காணிப்பிலும் சூழ்ச்சியிலும் தப்பி வெல்கிறான் நாட்டை.. கடைசியில் வாரிசும் பெறுகிறான்.. மனம் கவர்ந்த உத்தம சீலியின் (மதுரை அரசன் பர சக்ர கோலாகன்.. ஸ்ரீ மாறன்.. ஸ்ரீ வல்லபன் மகள்) மூலம்....

மொழி நடைக்காகப் படிக்கப் பட வேண்டிய நூல் இது.. செம்பியன் என்ற புனை பெயரிலும் கல்கி கி.ராஜேந்திரன் எழுதி இருக்கிறார்..

குதிரைகளும் குளம்படிச்சத்தங்களும்., வேல் .,ஈட்டி .,வில் .,வாளின் உராய்வுகளும்., சதியாலோசனைகளும்.., பிரதிபலன் பார்க்காத ராஜ விசுவாசமும்., காதலும் , வீரமும் கொட்டிக் கிடக்கும் நாவல் இது...

ஒரு ராஜாவானவர்.. தன் நலம் விரும்பும் குவளை போன்ற மலை மகளிடம் இருந்து கூட அரசியல் நீதியைக் கற்பதும்., காதல் வயப்படுவதும் அழகு.. பலதார மணம் அனுமதிக்கப்பட்ட அரசகுலத்தில்..

ஆதூர சாலை., நாட்டிய அரங்கம்., பச்சிலை மூலிகை பயன்படுத்தும் மருத்துவத்திறன்., உணர்ச்சிமிக்க சுதந்திர உணர்வைத்தட்டி எழுப்பக்கூடிய நாட்டிய நாடகங்களை நடத்தும் கலை ஆற்றல்..மந்திர மாயம் போல காட்டு மிருகங்களைப் பழக்கும் அதிசயம்..எல்லாம் குவளையின் வழி கிட்டுகிறது..

வேளைக்காரப் படை வீரர்கள் கடமையை நிறைவேற்ற முடியாவிட்டால்.. சிரத்தையே கொடுத்தல் எனும் ராஜவிசுவாசம்.. மேலும் மல்யுத்தத்தின் யுக்திகள்.. அரசாங்கக் கருவூலம் என்பது ஆயத்தீர்வை மேலும் வேறு பல இறைகள் சேர்ந்த செல்வம்.. என நிறைய அறியத்தருகிறார்.. இளவல்

”நிலவருவாய்க் கணக்குகள் பற்றி திணைக்கள நாயகத்திடம் பேசிவிட்டு., அங்காடிப் பாட்டமாகவும்., மனை இறையாகவும்..தனி இறையாகவும்.. முத்துக் குளிப்பதில் கிட்டிய சலாபத் தேவையாகவும் இதர சிற்றாயங்களாகவும் பெறப்பட்ட வரிகள் கணக்கில் வைக்கப் பட்டன.. நகருக்கு வந்த புதிய வணிகர்களிடம் பெறப்பட்ட சுங்கங்களைத் திருவாசல் முதலி.,கருவூலத்தில் ஒப்படைப்பார்.. சில பொற்கழஞ்சுகளை நிலுவையாகத் திருப்பித்தர வேண்டும்..” இவ்வாறான பகிர்வுகள் எனக்கு இதில் பிடித்தது..

மேலும்..பரிகள் பராமரிப்புப் பற்றி..” லாயங்களை நிர்வாகிக்கிற கீழ் வாயில் காப்போரிடம் நாம் காலணி தரிப்பது போல் குதிரைக் குளம்புகளுக்கு இரும்பிலேயே செய்த லாடம் அணிவிக்க வேண்டும்..அதனை எந்த வடிவில்., எப்படித்தயாரிப்பது., எப்படிப் பொருத்துவது., என்று கற்றுத்தந்தாள் குவளை..
பிடறியிலும் உடலிலும் உரோமம் ஒரு அளவுக்கு மேல் வளரும் போது வெட்டி விடுதல்.. குதிரையை குளிப்பாட்டி தினம் ஒரு முறை வைக்கோலால் உடலை உருவி விடுவது போல் தேய்த்து விடுதல்..எந்த வகை உணவு எந்த அளவுக்குத் தரவேண்டும்.. எவ்விதம் தேகப்பயிற்சி அளிக்க வேண்டும்..என்று ஒவ்வொரு விஷயத்தையும் முறையாகத்தெரிந்து பகிர்கிறார்.. இது தனிச்சிறப்பு ..

கோட்டை கொத்தளங்கள்., மாட மாளிகைகைகள்., கூட கோபுரங்கள்., உப்பரிகைகள் .. அந்தப்புரங்களின் பின்னே உள்ள வீரம் மட்டுமல்ல.. இதயங்களையும் பற்றிப் பேசும் நாவல் இது,.. வாசித்துப் பாருங்கள்... சொல்வீர்கள் கல்கியின் இளவலும் அற்புதமென்று..

டிஸ்கி:..1...- ”முதலிரவன்று மணமகளைச் சட்டபூர்வமான உரிமையுடன் மணமகன் கட்டிப் பிடிப்பது போல் தஞ்சை மாநகரத்தை தன் மகிழ்ச்சிக்காகக் கைப்பற்றினான் விஜயாலயன்” என்று திருவாலங்காட்டுச் செப்பேடு கூறுவதில் வினோத அழகு தென்படுவதாக எழுதுகிறார் சரித்திரப் பேராசிரியர் K.A. நீலகண்ட சாஸ்த்ரிகள்..(சோழர்கள்)

டிஸ்கி:...2...:- இரண்டு மூன்று நண்பர்களின் புத்தகங்கள் படித்துக் கொண்டிருக்கிறேன் .. விரைவில் விமர்சனம் வரும்..:)) இது கம்பர் விழாவுக்குப் போன போது படித்தது.. இப்போதுதான் வெளியிட நேரம் கிடைத்தது.. எனவே மக்காஸ்.. கூடிய சீக்கிரம் எழுதிவிடுவேன்.. கோபிக்காதீங்க..:))

டிஸ்கி..3 ..:- நேற்றிலிருந்து டிஸ்கவரி புக் பேலஸில் கிழக்கு பதிப்பகம் மற்றும் ஆழி பதிப்பகத்தின் புத்தகக் கண்காட்சி நடைபெறுகிறது.. ஒரு மாதம் வரை.. பயன்படுத்திக் கொள்ளுங்கள் மக்காஸ்..:))

சனி, 12 ஜூன், 2010

விளையாட்டு பொம்மை.....

கடைக்கு வந்தாய்..
எல்லா பொம்மைகளிலும்
சொல்பேச்சு கேட்பது போலிருந்த
என்னைத்தான் விரும்பினாய்..

பேசுவதற்கு என்று
எனக்கு அதிக பலமிருப்பது
உனக்குத் தெரிந்திருக்கவில்லை..

வீடு வந்தவுடன் நான்
உன்னை விளையாடிக்
கொண்டிருக்கிறேன்..

கனவிலாவது விட்டு
விடுதலையாகும் எண்ணத்தோடு
குப்புறப் படுத்துத்
தூங்கிக் கொண்டிருக்கிறாய்..

தூங்கப் படைக்கப்படாத நான்
உன் விழிப்புக்காய்க்
காத்திருக்கிறேன்..
நீ எழுந்தவுடன்
திரும்ப விளையாட.......

வெள்ளி, 11 ஜூன், 2010

துர்கா லெக்ஷ்மி சரஸ்வதிப்யோ நமஹ:

புன்னகை நிலவு பெற்ற
இரு பால் நிலவுகள்....
ஒன்று செல்லக் குட்டி.,
ஒன்று வெல்லக் கட்டி..

சிங்கக் குட்டிகளின்
சர்க்கரை தோய்ந்த சிரிப்பில்.,
சந்தோஷமாய்ச் சிதறுகிறது மனசு..

பிள்ளை நிலாக்கள்., பிஞ்சு நிலாக்கள்..
பிறைச்சந்திரனை ஒட்டி வைத்ததாய்..
நம்மையும் தொற்றும் புன்னகை..

மென்மை., மேன்மை., மெய்மை..,
கன்னக் குழிகளில் விழுந்து.
கனிந்து., களித்து., கொஞ்சி.,

பஞ்சு பொம்மிகள்.,
பாசப் பந்துகள்..
பார்க்கர்பேனா பரிசளித்து
ஒரு பளீர்ச்சிரிப்பு..

ஒரு தீபம் போல ஒளிவிடும் புன்னகையில்
நிறைய தீபங்கள் ஒளிவிட..
நிறைவாக வாழுங்கள் கண்மணி..!!!

அன்பின் துர்க்கை பெற்ற
அழகு லெக்ஷ்மி., அறிவின் சரஸ்வதி.,
சாதிக்கப் பிறந்தீர்கள்..!!!
சந்தோஷமாக வாழ்க என்றும்..!!!

டிஸ்கி:- என் அன்புத் தங்கை அபியின்
ஆருயிர்ச் செல்லங்கள் ., என் உள்ளம் கவர்
தங்கங்கள்., ஹரிணி ராகவி., ஷாஷிணி
ராகவிக்காக எழுதியது..:))

வியாழன், 10 ஜூன், 2010

யங் லேடீஸ்.. கவிதைப் போட்டி..

அன்பின் சகோதரிகளே..
உங்க மற்றும் உங்க டீனேஜ் மகளின் குட்டிக் கவிதைகளை SMS அல்லது email மூலம் எங்களுக்கு அனுப்பி வையுங்கள்..தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புகள் இனிவரும் நம் லேடீஸ் ஸ்பெஷல் இதழில்... உங்களுக்காக..

முகவரி..:- thenulakshman@gmail.com

SMS NO..:- 78459 70162
சீக்கிரம் சகோதரிகளே.. உங்க திறமையைக் காண்பிங்க..
****************************
என் இன்றைய கவிதை...
விண்ணப்பப் பெட்டி.:-
*****************************
பழைய துக்கங்களையும்
ஏலாத கனவுகளையும் கையளித்து
விண்ணப்பப் பெட்டியில் இடுகிறேன்..
அவை அத்துள்ளே...
அடங்கி விடட்டுமென..

என்னை எதிலும் ஏலாது அடிக்கும்
உன் புன்னகை செறிந்த முகத்தையும்
போட்டு விடவா அதனுள்......................

டிஸ்கி..:-.. செல்லத் தங்கைகள் அனைவரிடமிருந்தும்
கடைசித் தேதி என்ன என்று மெயில்கள்...
ஜூன் 20 ஆம் தேதிக்குள் அனுப்புங்கள்மா...

புதன், 9 ஜூன், 2010

கிராமத் திருவிழா..

கட்டை வண்டி
சக்கர இதழ்களினால்
ரோட்டுக் காதலனை
முத்தமிடும்..

புழுதி
உல்லாசமாய்...
விசிலடித்துப் பறக்கும்..

மந்தைகள்
மஞ்சள் பூசிக்குளித்துக்
குங்குமமிட்டு
மங்கலப் பெண்களாக வரும்..

பூசாரி .,சாமிக்கு
நெற்றியில் குங்குமம் அப்பி
அனைவரையும் பயமுறுத்துவான்..

கிளிகள்
நெல்மணிக்காகக்
காகிதம் பொறுக்கும்..

ராட்டினங்கள்
பூமிக்குத் தலையைச்
சுற்றவைக்கும்..

ராக்காயி
ஈக்களுக்கு
இலவசமாய்
இனிப்புத் தருவாள்...

முனியப்பன்
எச்சிதொட்டுப்
பிள்ளைகளுக்கு
கடிகாரம்., செயின்
(ஜவ்வு மிட்டாயில்)
பண்ணிப்போடுவான்..

வருங்கால நம்பிக்கை
நாயகர்கள்..
அப்பன்களின் தோளிலேறி
சாமி பார்ப்பார்கள்..

மங்கிப் போன
தீவட்டியின் முன்
கரகக்காரிகள்
உடலை நெளிப்பார்கள்..

பிள்ளைகளையும்
பொருட்களையும்
மனிதர்கள்
காணாமல் அடிப்பார்கள்..

பூசாரி
அரிவாளையும்
பலிக்கல்லையும்
இரத்தத்தால்
குளிப்பாட்டுவான்..

மனிதர்கள்
மாமிசம் உண்ண
வேண்டியே
கிடா வளர்த்துத்
திருவிழாவை வரவேற்பார்கள்..

டிஸ்கி:1:- இது எனது 200 வது இடுகை......10.2. 1985
கல்கியில் மாணவர் பக்கத்தில் வெளிவந்தது..
டிஸ்கி:2:- சகோ பலாபட்டறை ஷங்கர் புதுமனையில்
சகல சௌபாக்கியங்களுடனும் வாழ எனது மனம்
நிறைந்த வாழ்த்துக்கள்..
டிஸ்கி:- சகோ மயில் இராவணனின் மைந்தன்
சஞ்சயனின் பிறந்த நாளில் குழந்தை நூறாண்டு
பேரோடும் புகழோடும் வாழ எனது மனம்
கனிந்த வாழ்த்துகள்...

திங்கள், 7 ஜூன், 2010

புறக்கணிப்பு...............

வைத்துக்கொள் அல்லது
தூக்கிப் போடு..
இன்னும் பலம் சேர்த்து
நீந்தி வருவேன்..

இன்னமும் படிக்கப்பட்டாத
பக்கங்களோடு
புதிதான வாசனையுடன்...

இருப்பை அலட்சியப்படுத்துகிறாய்
என்பதால் நான்
இல்லாமல் போவதில்லை...

யாருமற்ற காடுகளில்
பூக்கள் சொரிவது
நிற்பதுமில்லை...
மழையோ., மிருகங்களோ
நனைந்திருக்கலாம்..

சிதைவுற்றுக் கொண்டிருக்கிறேன்
என்றாலும்
சிதைத்ததில்லை எதையும்..

அததையும் அதிகப்படியான
பிரியத்தில்
அன்புவெள்ளத்தில்
கொல்வது தவிர..

விட்டுவிட்டோ., வெட்டிவிட்டோ
போக இயல்வதில்லை...
இருக்கட்டும் அதுபாடு
அது விரும்பும் வரை....

டிஸ்கி:- இந்தக் கவிதை 4. 6. 10 இளமை விகடனில்
வெளிவந்து உள்ளது

சனி, 5 ஜூன், 2010

லேடீஸ் ஸ்பெஷல் கிரிஜாம்மா., வித்யா நான்..

லேடீஸ் ஸ்பெஷல் ஜூன் மாத இதழில் என்னுடைய ”நீரெழுத்து கவிதை” (ஏழாம் பக்கத்திலும் ) மற்றும் வித்யா(விதூஷ்) உடைய ”இன்னிக்கு என்னாச்சு தெரியுமா” கதை ., 24 ., 25 ஆம் பக்கத்திலும் ) வெளிவந்து இருக்கு..
ஐந்தாம்., ஆறாம் பக்கத்தில் முன்னுரையில் என்னையும் குறிப்பிட்டு இருக்காங்க..
எங்கள் எழுத்துக்கு முதல் அங்கீகாரம் அளித்து தன் பத்ரிக்கையில் வெளியிட்ட கலைவாணியை அவர் அலுவலகத்தில் வித்யாவுடன்(இவரும் சரஸ்வதி) சந்தித்து ... என்னையும் கடைக்கண் நோக்கி எழுத வைத்த அற்புத சக்தி .. கல்விக் கடவுள் சரஸ்வதியின் முன் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்..
மிகுந்த சந்தோஷமான நிகழ்வாக இது இருந்தது,,, நம்ப முடியவில்லை.. விஜய்., நேசன்., பாரா., மேனகா., சசி., அக்பர்., ஸ்டார்ஜன்., சரவணாவின் நினைப்பு வந்தது.. என்னை ஊக்குவித்த செல்வா,. நாகு மாமா., என் வலை உலக சகோதர., சகோதரிகள்..அனைவருக்கும் இந்த சந்தோஷம் சமர்ப்பணம்..
பேசிக்கொண்டே இருந்தோம்.. அடுத்து என்னென்ன புதுமைகள் செய்யலாம் என எங்களை கனிவுடன் கேட்டு அவர் அங்கீகரித்தது இனித்துக் கொண்டேஇருக்கிறது மக்கா.. வாழ்வதற்கும் அர்த்தம் இருக்கத்தான் செய்கிறது.. எங்கள் எழுத்தையும் அச்சில் பார்த்துவிட்டோம் நேசன்.. இரத்தம் சுண்டுவதற்குள்..
உங்கள் அன்பும் ஆசியும் ஆதரவும் வேண்டி.. தேனுவும்., வித்யாவும்..

வெள்ளி, 4 ஜூன், 2010

மீள் குடியேற்றம்

மீனெடுத்துத் தேனெடுத்துக்
காடுவெட்டிக் கழனிசெய்து.,
தோளணைத்து., தோள்கொடுத்து.,
வாகை சூடி., விளையாடி.,
வாழ்ந்து வந்தோம் யாம்
பிறந்ததென்று நம்பிய மண்ணில் ..

உயிரோடும் கொல்கின்றீர்..
உயிரற்றும் கொல்கின்றீர்..
கொள்ளிவாய்ப் பிசாசுகள்
முள்ளிவாய்க்காலிலும் தொடர..
கௌரவமாய்ச் சாவதற்கும்
கொடுப்பினையில்லை எமக்கு..

தூணுடைப்பு ., வீடிடிப்பு
துயிலும் இடமும் இடிப்பு..
கண்ணிவெடி காலில் பட்டு
உடல் தெறிப்பு..
கைம்பெண்கள் கண்ணீரால்
சூழப்பட்டது எம் தேசம்..

பாலுக்கும் கூழுக்கும்
படைக்காரர் அனுமதிப்பு..
பாலியல் தொழிலுக்கு
பகடைக்காயாய்............
மிக இழப்பு..............

பன்னாட்டு வலைவிரிப்பு..
படை நிறுத்த.. குடி கெடுக்க..
படைத்தவனே நினைத்தாலும்
பாழ் பாழ்தான்...........
பரிதவிப்பு...............

புத்தன் நிறைந்த தேசம்..
பூக்காடாய் மலர்ந்த தேசம்..
சைத்தியங்கள் உட்புகுந்து
சாக்காடாய் ஆனதம்மா...

நீங்கள் இருந்த இடம்
உம் உரிமை மண்டோதரி..
நாங்கள் இருந்த இடம்
சீதையின் அசோகவனம்..

எதெதையும் நீங்கள்
உடைக்கவில்லை
பரப்புகின்றீர்..

எம்மேல் மீள்குடியேறி
எமையேதான் கண்டடைவீர்..
உருமாற்றமாய்..

வேரோடிக் கிடக்கின்றோம்..
வேர்பிடித்து வெளிவருவோம்..

மாவீரர்கள் சேர்ந்து
அறவழியில் போராடி
ஒருநூறு நாயகன்கள்
ஒன்றாகக் கிளர்ந்தெழுவர்..
மீள்குடியேறீகளே..
மீண்டும் எம்மை தரிசிப்பீர்..

டிஸ்கி:_ மே 17 மாவீரர் தினத்துக்காக எழுதப்
பட்டது .. அந்த சமயம் இரு நாட்கள் மின் தடை..
எனவே மிக மிகத் தாமதமாய் வெளியிட்டுள்ளேன்

வியாழன், 3 ஜூன், 2010

பேரன்பின் தந்தைக்கு பிரிய மகளின் வாழ்த்து

முத்தமிழும் முக்கனியும் மூவேந்தர் காத்த நாட்டில்
தித்திக்கும் செம்மொழியை சீர்கொடுத்து சிறப்பாக்கி
எத்திக்கும் ஏற்றும்படி எழிலான உருக்கொடுத்து
சித்திக்கும் செந்தமிழே..! சிறப்பாக வாழியவே.. !!

ஐந்துமுறை அமர்ந்தாய் ஆட்சிக் கட்டிலிலே..
அரவணைப்பாய் அனைவரையும் அன்பினிலே பண்பினிலே
அழகான பாலங்கள் ., அனைத்து நலத் திட்டங்கள்.,
அருமைச் செந்தமிழே ..! ஆருயிரே வாழியவே..!!

உடன்பிறப்பாய்க் கொண்டாயே உடன்வந்த யாவரையும்
உன்கடிதம் இல்லாமல் ஒருநாளும் விடிந்ததில்லை..
உனையறிந் தேன்எம் அருணாசல ஐயா மூலம்..
உவப்பான செந்தமிழே..! ஒருநூறு வாழியவே..!!

நல்லோர்கள் சூழ்ந்திருக்க.. நலமுடனே பேச்சிருக்க..
தொல்காப்பியத் தொன்மை எல்லாம் விளக்கிவைத்து
அழகிருக்க., கனியிருக்க., அரசிருக்க., முத்திருக்க
எழிலான செந்தமிழே..! ஏற்றமுடன் வாழியவே..!!

பொன்னரும், சங்கரும்., முரசொலியும் மறக்காவே..
அஞ்சுகம் வேலப்பர் அருந்தவத்தில் வந்தமகவே..!
மாறாத மாறன்தான் உம்மோடு அன்பழகர்போலே
மகிழ்வான செந்தமிழே..! மலர்ச்சியாய் வாழியவே..!!

உடல்நலத்தைப் பேணிடுக.. ஓய்வும் எடுத்திடுக..(அவ்வப்போது)
உதயநிதியாம் ஸ்டாலின்தான் உம்பின்னே துணைநிற்பார்..
உவப்பான உன் புன்னகைக்கு ஈடேது..! ஈடேது..!!
ஒய்யாரச் செந்தமிழே..! ஒரு நூறு வாழியவே..!!
****************************

தமிழன்னையின் பெருமிதமே..!
தமிழர்களின் மூத்தகுடியே..!!
தழைத்தோங்கி வாழிய நீ..!!
தமிழாய் தமிழ்க்காய்..!!

***********************

புதன், 2 ஜூன், 2010

கிருஷ்ணப் ப்ரேமி

பசுக்கள் சூழ புல்லாங்குழல் இசை கண்ணா
என்னுள் இருக்கும் ராதை நடனமாட..
ஆனந்தமாய் சுயமிழந்து...

நினைவலைகளில் நித்தமும் பெருகிப் பெருகி
என்ன வெள்ளமிது கண்ணா ? எங்கே நான்..?

இசைக்கிறாயா..? இசைகி்றேனா..?
உயிரும் மெய்யுமாய் பிணைந்து நனைந்து...

ஆலிலையில் நீ ..ஆலிலையாய் நான்..
ஆரோகணமும் அவரோகணமுமாய் சேர்ந்தாடி

குருக்ஷேத்திரத்தில் பாஞ்சசன்யமாய்,,
பூதகியோ., காளிங்கனோ., கம்சனோ., கர்ணனோ..

நாடி நரம்புகளில் தொடுக்கிறாய்..
தோட்டப் பூவாய் தொடுக்கத்தொடுக்கப்
பூத்துக்கொண்டே.. தொடர்ந்து உன்னை..

எல்லாவற்றிலும் நீ ...இயைந்த இசையாய்
எல்லாவற்றிலும் உன்னைத் துய்த்து நான்..

எனக்குள் நீயா.. உனக்குள் நானா..?
ஜென்ம ஜென்மமாய்த்தேடும் கிருஷ்ணப் ப்ரேமி...