சனி, 7 ஜூன், 2014

சாட்டர்டே ஜாலி கார்னர். கிரிக்கெட் அன்றும் இன்றும் என்றும். ஸ்ரீராம் பாலசுப்ரமண்யம்.


 வலையுலகம் வந்த சில நாட்களில் எங்கள் ப்லாகிலிருந்தும் ஸ்ரீராம் என்ற பெயரிலும் பின்னூட்டம் வரும்.டிசம்பர் 2009 இல் இருந்து இன்று வரை அநேகப் பதிவுகளுக்குப் பின்னூட்டமிட்டவர் ஸ்ரீராம். கிட்டத்தட்ட 230 பின்னூட்டங்கள். அடேங்கப்பா.. கிட்டத்தட்ட 5 வருடங்கள். ! இந்த மாதிரி அவர் இட்ட பின்னூட்டங்களில் என்னால் மறக்கமுடியாதது ஆற்றைக் கடப்போம் ஆற்றலோடு கடப்போம் இதுக்குப் போட்ட பின்னூட்டம்தான்.

///நாடகம் மனதில் எழுப்பிய தாக்கத்தை எழுத்துகளில் கொண்டு வந்து விட்டீர்கள். சமீபத்தில் நண்பர் ஒருவருடன் ஒரு சிறு பிணக்கு. காரணம் அவர் சொன்னார் 'ராமன் வாழ்வைப் பின்பற்ற வேண்டும், கண்ணன் சொன்னதைப் பின் பற்ற வேண்டும்' என்று. 'ராமன் வாழ்வைப் பின் பற்ற வேண்டுமென்றால் மனைவியைத் தீக் குளிக்கச் சொல்ல வேண்டும், வண்ணான் பேச்சைக் கேட்டு வெளியில் அனுப்ப வேண்டும்' என்றேன். அதில் ஆரம்பித்த வாக்கு வாதம் சிறு பிணக்கில்!

//இந்த பிம்பங்களுக்குள் எல்லாம் அடங்காதவளும் நான்தான். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட எல்லாமும் நான்தான். அது மட்டுமல்ல ராமனால் அவமானப்பட்ட தாடகையும் நான்தான். அவனது அம்புக்கு இரையான தவளையும் நான்தான். நான் நான் மட்டுமல்ல நான்தான் நீங்கள் என அவள் தான் யாரெனக் கூறும் கட்டத்தில் ஒரு விதிர்ப்பு ஏற்பட்டது.//


இந்த இடம் கீதையில் சொல்லப் படும் 'மன்னரும் நானே, மக்களும் நானே, மரம் செடி கொடிகளும் நானே, சொல்வதுவும், சொல்லப் படுவதுவும், செய்யப்படுவதுவும் நானே' யை நினைவு படுத்தவில்லை?!///

நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான் ஸ்ரீராம்.ஆனா அத நான் சவுண்டா சொல்ல முடியுமா தெரில. :)

ரெண்டாவது கமெண்டை 100 %  பகிரங்கமா ஆதரிக்கிறேன். :)

நாம்பாடு எழுதிக் கொண்டே போகிறோம் என்றால் அது  நம்மைப் பின்னூட்டமிட்டு ஊக்கமூட்டுபவர்கள் இருப்பதால்தான்.  ஊம் மேலே சொல்லு/செல்லு  என்று ஆதரிக்கிறது அது. சோ என்னோட உயர்வுல ஸ்ரீராமுடைய பெரும்பங்கும் இருக்கு. அதுக்கு நன்றிகள்.

அவர்கிட்ட நான் சிலபல கேள்விகள் வைக்கிறேன்னு சொல்லி ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன். அடுத்து எங்கள் ப்லாக் பத்தியும் கேக்கணும்.

///கிரிக்கெட் உங்க பார்வையில் அன்றும் இன்றும் என்றும்.. ///

ன்றைய கிரிக்கெட்டை இன்று நினைத்துப் பார்க்கையில் இன்றைய டெக்னாலஜி முன்னேற்றங்கள், ஆட்டத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் காரணமாக, இந்த ஆட்டத்தை அன்று எப்படிப் பொறுமையாகப் பார்த்தோம் என்று கூடத் தோன்றலாம். 

ஆனால் அவர்கள் போட்ட பாதைதான் இன்று இந்த அளவு போதை!
ஐந்து நாட்கள்.. இன்னும் சொல்லப்போனால் டெஸ்ட் மேட்ச்கள் 6 நாட்கள் நடக்கும். இடையில் ஒருநாள் ரெஸ்ட் டே வேறு!

ஒரு திருவிழா போல அந்நாட்களில் (சென்னையில் நடக்கும்) டெஸ்ட் மேட்ச்களுக்கு சாப்பாடு கட்டிக் கொண்டு வந்து அமர்ந்து மேட்ச் பார்ப்பார்கள் மக்கள்.

ஒருநாள் ஆட்டங்களாக மாறிய காலகட்டம் 1962 லேயே இங்கிலாந்து கவுண்டி மேட்ச்களில் ஆடப் பட்டாலும் 63 இல் மழை காரணமாக ஒரு டெஸ்ட் மேட்ச் 65 ஓவர் மேட்சாக சுருக்கப்பட்டதுதான் முதல் லிமிடட் ஓவர் மேட்ச்! 65 ஓவர்கள் அப்போதெல்லாம்.

அது 60 ஓவர்கள் ஆகி, 55 ஓவர்கள் ஆகி, இப்போது 50 ஓவர்கள்! டெஸ்ட் மேட்ச்கள் டிரா ஆகும் வாய்ப்பு அதிகம் இருக்கும்போது ஒரே நாளில் முடிவு தெரியும் இந்த வகை ஆட்டங்கள் அதிக வரவேற்பைப் பெற்றன.


அதே போல 2003 லேயே T20 ஆட்டங்கள் ஆடப் பட்டு வந்தாலும், 2007இல்தான் முதல் உலகக் கோப்பை நடந்தது. 

உலகமே ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்துக்கு மாறிவிட்ட நிலையில் ஐந்து நாட்கள் ஆடும் ஆட்டத்துக்கு இப்போது வரவேற்பு குறைவுதான். 5 நாள் மேட்ச் கூட கடைசி இரண்டு நாட்களில்தான் கூட்டம் வருகிறது. 

1959 இல் நடந்த டெஸ்ட் மேட்ச் ஒன்றில் இந்தியாவின் அபாஸ் அலி பெய்க் (என்றுதான் நினைக்கிறேன்) ஆளில்லாத காரணத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு ஃபீல்டிங் செய்து ஒரு கேட்ச் கூடப் பிடித்தார் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். 

1975 இல் ஒருநாள் போட்டி ஒன்றில் இங்கிலாந்து எடுத்த 334 க்கு இரண்டாவதாக பெட் செய்த இந்திய அணியின் கவாஸ்கர் ஆடிய ஆட்டம் ரொம்ப ஸ்பெஷல்! கவாஸ்கர் 174 பந்துகளில் 36 நாட் அவுட்! அதில் ஒரு நாலு மட்டும்! அதற்கான காரணங்கள் அலசப்பட்டபோது கிடைத்த பதில்கள் இன்னும் சுவாரஸ்யம்! என் நண்பன் சொல்வான், கவாஸ்கர் 'டிரா செய்ய ஆடினேன்' என்று சொன்னதாக! :))))

83 இல் உலகக் கோப்பை ஜெயித்தபோது ரேடியோவில் நேர்முக வர்ணனை கேட்டுக் கொண்டிருந்த நான் அந்த நள்ளிரவு நேரத்தில் தெருவுக்கு வந்து நடமாட்டமே இல்லாமல் நீண்டிருந்த சாலையில், சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு ஆளாவது கிடைக்காதா என்று தேடினேன்!

எங்கேயோ கண்ணுக்குத் தெரியாத தூரத்தில், விளையாடுவது குண்டப்பாவா, கவாஸ்கரா (இரண்டு பேருமே குள்ளம்) என்று தெரியாத நிலையில் இருந்த காலம் மெல்ல மாறியது. 

தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டபோது எங்கு, யார் வீட்டில் தொலைகாட்சி இருக்கும் என்று அலைந்து திரிந்து நண்பனுக்கு நண்பனுக்கு நண்பனுக்கு நண்பன் வீட்டில் எல்லாம் சென்று கிரிக்கெட் பார்த்திருக்கிறோம்.

நாங்கள் முதலில் தொலைக் காட்சி வாங்கியபோது கூட கிரிக்கெட் சமயங்களில் எங்கள் வீட்டில் எங்களுடன் இதே போல நண்பர்களின் நண்பர்களின் நண்பர்கள் எல்லாம் ஆட்டம் பார்ப்பார்கள். அது ஒரு கிரிக்கெட் காலம்! இந்த வெறி எல்லாம் 90 களின் கிரிக்கெட் சூதாட்டச் செய்தியில் குறைந்துதான் போனது.
 

கருப்பு வெள்ளையில் மட்டுமே ஆடிக் கொண்டிருந்தவர்கள் கலர்த் துணிகளில் விளையாடியது ஒரு கவர்ச்சி. அவர்கள் சட்டைகளில் எண்கள் கொடுக்கப்பட்டு அதற்குக் காரணங்கள் கற்பிக்கப் பட்டபோது அதைப் படிப்பதில் கவர்ச்சி. 

இன்றைய மிக வேகமான 20-20 ஆட்டங்கள் பிரமிப்பைத் தருகின்றன. 50 ஓவர்களில் எடுக்கப்பட்ட 200 +கள் 20 ஓவர்களில் எடுக்கப்படும் வேகம் அந்த ஆட்டத்தை ரசிக்க வைக்கிறது.

அதோடு டெலிவிஷனில் ஒவொரு ஷாட்களையும் மிக அருகில் வெவ்வேறு கோணங்களில், துல்லியமாக, மீண்டும் மீண்டும் ரீப்ளே முதற்கொண்டு பார்க்க முடிவது மிகப்பெரிய வளர்ச்சி. ஆட்டக்காரர்கள் முகங்களையும், அவர்கள் ஆடும் ஆட்டங்களின் டெக்னிகல் எக்ஸலன்ஸ், பார்வையாளர்களையும் கூடப் பார்க்க முடிவது சுவாரஸ்யம்.

இனி வருங்காலத்தில் கிரிக்கெட் இன்னும் சுவாரஸ்யமாக எப்படி எப்படி மாறுமோ!

ஆனால் கிரிக்கெட் இப்போதெல்லாம் ஒரு வெற்றிகரமான பிசினஸ் ஆகிவிட்டது. ஆடு, மாடுகளை ஏலம் எடுப்பது போல ஆட்டக்காரர்களை ஏலம் எடுக்கிறார்கள். நம்ப முடியாத அளவு சம்பளம் தருகிறார்கள். (அதையும் மீறி சிலர் சூதாட்டங்களில் ஈடுபடுவது வெட்கக்கேடு) முன் காலத்தில் கிரிக்கெட் ஆட்டக் காரர்கள் இந்த அளவு பணம் பார்த்திருக்க மாட்டார்கள்.

என்னதான் சுயநல ஆட்டக்காரராக இருந்தாலும் கவாஸ்கரின் ஆட்டம் எனக்குப் பிடிக்கும். திலிப் வெங்க்சர்க்கார், ஸ்ரீக்காந்த், கபில் தேவ், போன்ற பழைய ஆட்டக்காரர்களும் சச்சின் (யாருக்குதான் பிடிக்காது?!!), கங்குலி, சேவாக், கோஹ்லி, யுவராஜ் போன்ற தற்கால ஆடக் காரர்களும் பிடிக்கும்.
இந்தியாவுக்கு சரியான பௌலர்கள் அமையாதது எப்போதுமே குறை. 

அயல்நாட்டு ஆட்டக்காரர்களில் ஜாவேத் மியான்தத், ஜாகிர் அப்பாஸ், இம்ரான்கான், வாசிம் அக்ரம், அப்துல் காதிர், அர்ஜுனா ரணதுங்க, முரளிதரன், ஜெயசூர்யா, அரவிந்த் டி சில்வா, மக்ராத், ஷேன் வார்னே, கில்க்ரிஸ்ட், ஸ்டீவ் வா, பார்டர், குர்ட்னி வால்ஷ், விவ ரிச்சர்ட்ஸ், ஜோயல் கார்னர், போன்றவர்களைப் பிடிக்கும்.

---- அஹா எனக்கு ஒரு காலத்துல கிரிக்கெட் பிடிச்சுது. சுமாரா நான் கல்லூரிப்பருவம் படிச்சபோது. அப்புறம் ஏனோ இண்ட்ரெஸ்ட் போச்சு. பெட்டிங், ப்ராடு கேம்னு அது மேல இருந்த மரியாதை போச்சு. இன்னிக்கு விவரமா உங்க பதிலைப் பார்த்துத்தான் தெரிஞ்சுகிட்டேன் ஸ்ரீராம்

 எனக்கு கபில்தேவ், ராகுல் ட்ராவிட்,  ஜாவேத் மியாந்தத், இம்ரான்கான், முரளிதரன்,  பிடிக்கும். வாசிம் அக்ரம் யானி ஸ்டைல்ல முடிபறக்க ஓடிவந்து பௌல் பண்ணுவார். .

 ஆமா இந்த ப்லாகர்ஸ் கிட்ட எல்லாம் கேட்டா பதிலை 5 நிமிஷத்துல அனுப்பிடுறாங்க. ஆனால் ப்ரொஃபைல் பிக்சர் கேட்டாதான் அனுப்பமாட்டேங்குறாங்க. எனக்காக தயவு பண்ணி உங்க ஜி+ ஃபோட்டோவை அனுப்பினதுக்கு ரொம்ம்ம்ம்ப ரொம்ம்ம்ப தாங்க்ஸ் ஸ்ரீராம். :) ஆமா தோள்ல ஸ்கூல்பேக் போட்டுட்டு லெஃப்ட் ஹாண்டால பௌல் பண்றீங்களா என்ன. ? :)

26 கருத்துகள் :

kg gouthaman சொன்னது…

பிரமாதமா இருக்கு. வயசுதான் நான் நினைத்ததைவிட கம்மியாக இருக்கும் போலிருக்கு! படத்தில் பார்த்துத்தான் சொல்கிறேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

ஹாஹாஹா உண்மைதான் வயசு உங்களவிடக் கம்மியா இருக்கும்னு நினைச்சேன் கேஜிஜி சார் நானும். இவ்ளோ கம்மியா எதிர்பார்க்கலை :)

ஸ்ரீராம். சொன்னது…

என்னுடைய பழைய பின்னூட்டத்தை அலசி எடுத்துப் போட்டிருப்பது சந்தோஷம் தருகிறது. நான் பவுண்டரி லைன் அருகே நின்று பந்து பொறுக்கிப் போடுபவன். அது எந்தக் கையாக இருந்தால் என்ன? நன்றி கேள்வி கேட்டதற்கு! பிரசுரம் செய்ததற்கு! 230 கமெண்ட்ஸ் போட்டிருக்கிறேனா? அட! உங்கள் ப்ளாக்கில் கமெண்ட் போட்டவர் யார்? எனக்கு எத்தனாவது இடம்? சும்மா ஒரு சுவாரஸ்யம்தான்! :))))))))

ஸ்ரீராம். சொன்னது…

ஹிஹி... நன்றி கே ஜி ஜி...

பால கணேஷ் சொன்னது…

கவாஸ்கரின் அநத் ‘முறியடிக்க முடியாத’ 34 ரன் சாதனை ஆட்டம் பற்றி பின்னாளில் அவர் சொன்னது : ‘வேகமாக ஆட வேண்டும் என்பது எங்களுக்கு போதிக்கப்படவில்லை’ என்பது. உண்மையில் தமிழரான வெங்கட்ராகவன் கேப்டனாக நியமிக்கப்பட்டது பிடிக்காமல அப்படி ஆடினார் என்பதுதான் பொதுவான கருத்து. எது எப்படியோ... இனி ஒருவர் கவாஸ்கரின் அந்த சாதனையை முறியடிக்க முடியாது. கிக்கிக்கி.... ஆனால் அவர் மோசமான பேட்ஸ்மேன் அல்ல என்பதை பல சமயங்களில் அணிக்காக ஆடி நிரூபித்திருக்கிறார். எனக்கு அவரின் பேட்டிங் ஸ்டைல் பிடிக்கும்.

பால கணேஷ் சொன்னது…

எங்கப்பா உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில இருந்தபோதுகூட (கடைசிக் காலங்களில்) காதருகே ரேடியோவை வைததுக் கொண்டு கிரிக்கெட் கமெண்ட்ரி கேட்ட தீவிர அபிமானி. நானோ கல்லுரிக்காலம் வரை கபில், விவ் ரிச்சர்ட்ஸ் ஆகியோரின் ஆட்டங்களுக்கு தீவிர விசிறி... நம்ம ‘ஐயங்காரை’யும் பிடிக்கும். நண்பன் வீடு, ஒண்ணுவிட்ட நண்பன் வீடுன்னு ஓடி ஓடி டிவில ரிலே பார்த்த காலங்கள்...இப்ப நினைச்சாலும் இனிக்குது ஸ்ரீ... என்னிக்கு மிக அதிக அளவுல பணம் புழங்க ஆரம்பிச்சதோ அன்னிக்கே கிரிக்கெட் கெட்டுப் போச்சுன்றது என் கருத்து. இப்படி நிறைய விஷயங்கள்ல உங்களோட ஒத்துப் போறேன். (இப்பவும் இளமைப் படத்தைக் குடுத்தே முகத்தைக் காட்டாம சாமர்த்தியமா நழுவிட்டீங்களே... அவ்வ்வ்வ்) தேனக்கா... விடாதீங்க, இவரோட சமீபத்திய புகைப்படத்தை வாங்கிப் போடுங்கோ....

Geetha Sambasivam சொன்னது…

தேனம்மை லக்ஷ்மணன் கருத்துக்களைத் தனியாவும், ஶ்ரீராமின் கருத்துக்களைத் தனியாவும் ஹைலைட் செய்திருக்கலாம். என்னை மாதிரி ம.ம.க்களுக்குப் புரிய வசதியா இருந்திருக்கும். கீழே உள்ளது தேனம்மை லக்ஷ்மணனின் கருத்துனு தெரியாமப் படிச்சுட்டுக் குழம்பிட்டுப் பின்னர் தெளிந்தேன். :))))))

Geetha Sambasivam சொன்னது…

எனக்குப் பிடிச்ச கிரிக்கெட் ஆட்டக்காரர்களில் கபில்தேவும், ராகுல் திராவிடும் தான். பொதுவாக கிரிக்கெட் மாட்ச் தொலைக்காட்சியில் காட்டும்போது அதிகம் உட்கார்ந்து பார்த்தது இல்லை. ஆனால் எண்பதுகளில் எங்க பையரும், பெண்ணும் வலுக்கட்டாயமாக எனக்குக்கிரிக்கெட் ஆட்டத்தைப் பத்திப் பாடம் எடுத்தாங்க. அப்போப் பார்த்தப்போ எனக்குப் பிடிச்சது. யாரானும் அவுட் ஆனாலோ "டக்" எடுத்தாலோ டக் ஒண்ணு அழுதுட்டே போகும். அந்த விளையாட்டு ரொம்பப் பிடிச்சது. அப்புறமாக் குழந்தைங்க கிட்டே டக் வரச்சே கூப்பிடச் சொல்லிப் பார்ப்பேன். :)))

ஹிஹிஹி, கிரிக்கெட்டில் எனக்குப் பிடிச்சது இதான்! :)))))

Thenammai Lakshmanan சொன்னது…

ஸ்ரீராம் உங்க பேரை ஜி மெயிலில் போட்டா 230 வந்தது. அதான் கணக்கு. அது நீங்கதானே.. இல்ல வேறாருமா.. ? அவ்வ்வ்

Thenammai Lakshmanan சொன்னது…

காதுக்கருகில் வைச்சுக்கிட்டு ட்ரான்சிஸ்டர்ல கேப்பது அந்தக்காலத்துல ஸ்டைல். கொஞ்சம் கொசகொசன்னு புரியாம இருக்கும் அவங்க ஆங்கிலத்துல வர்ணனை செய்றது. ஆட்டக்காரங்க யார்னு சரியா தெரியாட்டா கொழப்பம்தான். கணேஷ். :)

டி வில பார்க்கும்போதே என் உறவினர்கள் ( பேரும் உறவு முறையும் வேண்டாமே ) க்ரேட், லாம்ப் போன்ற வீரர்களின் பேர் சொல்லும்போது அது கிரிக்கெட்டர்களின் பெயர்கள் என்று தெரியாமல் பிள்ளைகளிடம் க்ரேட்னா என்ன ( அது ஏதோ ஷாட் என்று நினைத்துக் ) என்று கேட்டு பல்ப் வாங்கி இருக்கிறார்கள். :)

Thenammai Lakshmanan சொன்னது…

கீதா மேம் ஹைலைட் பண்ணிட்டேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

அப்போப் பார்த்தப்போ எனக்குப் பிடிச்சது. யாரானும் அவுட் ஆனாலோ "டக்" எடுத்தாலோ டக் ஒண்ணு அழுதுட்டே போகும். அந்த விளையாட்டு ரொம்பப் பிடிச்சது. அப்புறமாக் குழந்தைங்க கிட்டே டக் வரச்சே கூப்பிடச் சொல்லிப் பார்ப்பேன். :)///// மீ டூ மீ டூ .. ஹாஹா சேம் கேட்டகிரி . :) கீதா மேம். :)

‘தளிர்’ சுரேஷ் சொன்னது…

சுவாரஸ்யமான பதிவு! அன்றைய கிரிக்கெட்டையும் இன்றைய கிரிக்கெட்டையும் அலசிய ஸ்ரீராம் சாரின் பின்னூட்டம் அருமை!

Geetha Sambasivam சொன்னது…

ரொம்ப நன்றி தேனம்மை லக்ஷ்மணன். இப்போ மறுபடி படித்துத் தெளிந்தேன். :)

இராஜராஜேஸ்வரி சொன்னது…

ஸ்ரீராம். :) ஆமா தோள்ல ஸ்கூல்பேக் போட்டுட்டு லெஃப்ட் ஹாண்டால பௌல் பண்றீங்களா என்ன. ? :) அழகுதான்...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று சொன்னது…

கிரிக்கெட் செய்திகள் அருமை. அற்புத ஆட்டக்கராறான் கவாஸ்கர். தட்டுத் தடுமாறி ஒரு நாள் போட்டியில் ஒரு செடுரி மட்டுமே எடுக்க முடிந்தது ஒரு ஆச்சர்யம்.
க்ரிக்கீட்டில் இன்னும் பல மாற்றங்கள் வரும்

வல்லிசிம்ஹன் சொன்னது…

ஸ்ரீராம் . நல்ல மனிதர் முதலில். குடும்பம் முழுவதும் அறிவு ஜீவிகள்.சங்கிதப் பிரியர்கள்.எங்கள் ப்ளாக் ஒரு புதிய அறிமுகமாக எல்லோரையும் கவர்ந்தது, கூட்டு முயற்சியில். ஈன்னும் எபி மூலமாகத்தான் பல நடப்புகளை அறிய முடிகிறது.கிரிக்கெட் பதிவு பிரம்மாதம்.எல்லா மிடில் க்ளாஸ் குடும்பங்களிலும் நடக்கும் டிவி வாங்கும், அருகில் வீடுகளில் போய்ப் பார்க்கும் அனுபவம், கவாஸ்கரின் நிதானம்,ஸ்ரீகாந்த்தின் வேகம் எல்லாம் நினைவுக்கு வருகிறது.மார்ஷல்,ரிச்சர்ட்ஸ் காலத்திற்குப் போய் விட்டேன். நன்றி தேன்.வாழ்த்துகள் ஸ்ரீராம்.

ராமலக்ஷ்மி சொன்னது…

சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார். எழுபதுகளின் இறுதியில் ரேடியோவில் கமெண்ட்ரி கேட்டு பள்ளிக்கூடத்தில் வந்து விவாதிப்பார்கள். நானெல்லாம் எண்பதுகளில் டிவியில் காண்பிக்கப்பட்டபோதுதான் பார்க்க ஆரம்பித்தேன். கபில் தேவ் ஆட்டம் பிடிக்கும். இந்தியா ஜெயிக்க நாங்கள் பிள்ளையாருக்கு தேங்காய் நேர்ந்த அனுபவம் எல்லாம் உண்டு:)!

/83 இல் உலகக் கோப்பை ஜெயித்தபோது ரேடியோவில் நேர்முக வர்ணனை கேட்டுக் கொண்டிருந்த நான் அந்த நள்ளிரவு நேரத்தில் தெருவுக்கு வந்து நடமாட்டமே இல்லாமல் நீண்டிருந்த சாலையில், சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு ஆளாவது கிடைக்காதா என்று தேடினேன்!/

அடடா. இப்போதெல்லாம் நாம பார்க்காவிட்டால் கூட போட்டி முடிந்ததும் தெருவெல்லாம் வெடியில் அதிருவதிலேயே தெரிந்து கொள்ளலாம் முடிவை.

--

ஆம். அக்கறையுடன் தவறாமல் பின்னூட்டங்கள் வழங்குபவர் ஸ்ரீராம். எனது சிறுகதைகள் மற்றும் சில கவிதைகளுக்கு அவர் வழங்கிய கருத்துகள் என் மதிப்பிற்குரியவை.

---

நல்ல பேட்டி தேனம்மை. நன்றி:)!

கீத மஞ்சரி சொன்னது…

கிரிக்கெட்டோடவே வளர்ந்திருக்கிறீங்க என்று புரிகிறது ஸ்ரீராம். உங்களிடம் சரியான கேள்விதான் கேட்கப்பட்டிருக்கிறது. தேனம்மைக்கு நன்றி.

விக்கெட் என்றால் என்ன என்று என் தம்பியைக் கேட்டு அவன் எனக்குப் புரியவைப்பதற்குள் படாதபாடு பட்டதை இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. ஒன்பது, பத்தாவது படிக்கும்போது பள்ளிக்கருகில் வீடு என்பதால் நான் மட்டுமே உணவு இடைவேளையில் வீட்டுக்குப் போவேன். என் தோழிகள் கிரிக்கெட் ஸ்கோர் தெரிந்துவா என்பார்கள். எதை வருத்தமாய் சொல்லவேண்டும் எதை சந்தோஷமாய் சொல்லவேண்டும் என்று தெரியாமல் சொல்லி திட்டு வாங்கியிருக்கிறேன். நீங்கள் சொல்வது போல் சூதாட்டம் களமிறங்கிய பின் கிரிக்கெட் மீதான மதிப்பு சற்று குறைந்துதான் போய்விட்டது.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

தகவல்கள் சுவாரஸ்யம்...

கிரிக்கெட் ஆர்வம் என்றோ போய் விட்டது...

ஸ்ரீராம். சொன்னது…

நன்றி பால கணேஷ்!

நன்றி கீதா மேடம்.

தேனம்மை... அது நானாகத்தான் இருக்கும்! வலையுலகில் ஸ்ரீராம்! முக நூலில் ஸ்ரீராம் பாலசுப்ரமணியம். ப்ளஸ்ஸில் பாலு ஸ்ரீராம்! அந்தக் குட்டி டிரான்சிஸ்டருக்கு 'கிரிக்கெட் ரேடியோ; என்றே பெயர்!

நன்றி 'தளிர்' சுரேஷ்.

நன்றி முரளி...

நன்றி வல்லிம்மா...

நன்றி ராமலக்ஷ்மி.

நன்றி கீதமஞ்சரி..... அப்படி கிரிக்கெட் பைத்தியமேல்லாம் கிடையாது. (பின்னே இதென்ன என்கிறீர்களா!)

நன்றி DD

வெங்கட் நாகராஜ் சொன்னது…

அப்பாவின் வால்வு ரேடியோவில் கிரிக்கெட் வர்ணனை கேட்டு, பின் டி.வி. வந்தபோது நண்பர்களின் வீட்டுக்குச் சென்று பார்த்து, நாங்களாகவே ஒரு டிவி வாங்கி அதிலும் கிரிக்கெட் பார்த்து தில்லி வந்த பிறகு மொத்தமாக கிரிக்கெட் பார்ப்பதே இல்லை என்றாகி விட்டது. சில வருடங்களுக்குப் பிறகு தான் கிரிக்கெட் மீண்டும் பார்க்க ஆரம்பித்தேன். இப்போதெல்லாம் அத்தனை ஆர்வம் இல்லை.

ஸ்ரீராம் அவர்களின் கிரிக்கெட் நினைவுகள் சுவாரஸ்யம்......

Thenammai Lakshmanan சொன்னது…

நன்றி தளிர் சுரேஷ் சார்.

நன்றி கீதா மேம்

நன்றி ராஜி


நன்றி முரளிதரன் சார்

நன்றி வல்லிம்மா

நன்றி ராமலெக்ஷ்மி.

ஆ கீதா எதிர்பாக்கலை.. ஆஸ்த்ரேலியால இருக்கீங்க..ஆனா ஆதில உங்களுக்கு கிரிக்கெட் பத்தித் தெரியாதா.. நம்ம நாட்டுலேயே தெருவுக்குத் தெரு அதானே வெளாடிட்டு இருப்பாங்க.. :)


நன்றி தனபாலன் சகோ.

நன்றி வெங்கட் :)

மறுமொழிகளுக்கு நன்றி ஸ்ரீராம். :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

ஸ்ரீராம். சொன்னது…

ஹிஹிஹி.... மீண்டும் படித்து மகிழ்ந்தேன். நேற்று இரவு சென்னையில் இடி மின்னல் மழை. இன்று நான் மீண்டும் படித்தது பாராட்டு மழை.

ஸ்ரீராம். சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்!!

உங்கள் இந்த வரிகளாலான முத்தாய்ப்புக்குப் பின்னர் பின்னூட்டங்கள் வந்ததுண்டோ? அப்படி வந்தால் இந்த வரிகளை மறுபடி போடுவீர்களா? ஹிஹிஹி.. ஒரு பொது அறிவை வளர்த்துக்கலாம்னு...!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...