எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 16 ஜூன், 2014

அடையாளம்.



அடையாளம்.:-
****************************
ராதா முழித்துக் கொண்டது. ரூமுக்குள் இருட்டு. ராதா உருவமில்லாமல் வார்த்தை துப்பியது. கையையும் காலையும் படுக்கையில் தொமால், தொமாலெனத் தூக்கிப் போட்டது. ‘என்ன அம்மா இன்னும் ஓடிவரக் காணோம்.?’

ராதா கட்டிலின் முழு விஸ்தீரணத்திற்கும் புரண்டது. ‘படாரெ’ன மண்டை தரையிடிக்க இசகுபிசகாகக் கட்டிலிலிருந்து கீழே விழுந்தது. வலது முழங்கைப் பக்கம் ஒரு ‘மளுக்’. காய்ங், மூய்ங் என்று கத்திக் கொண்டே இடதுகையால் தரையை அடித்தது. படுக்கை அறையிலிருந்து தம் தம்மென்று அதிர நடந்து சமையற்கட்டு சென்று இரும்பு உலக்கை கொண்டு வந்து தரையில் குத்திப் பேர்த்துக் கொண்டிருந்தது. ஸ்டீல் கட்டிலின் விளிம்பில் நாலு போட்டது.

உலக்கையைக் கடாசிவிட்டு வாசல் கதவை இழுத்தது. கதவு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்தது. அசுரபலத்தோடு இழுத்தும் வரவில்லை. ராதா தொண்டையைப் பிடுங்கிக் கொண்டு கத்தியது.
வெளியே இருட்டிக் கொண்டிருந்தது. ராதாவுக்கு அழுகையோடு பயமாக இருந்தது. கோபம் வந்தது. அருகே இருந்த ஃப்ளவர்வாஸ் கதவில் மோதி சட்னியானது. அதைத் தொடர்ந்து ராஜேசின் ஜ்யாமெட்ரி பாக்ஸ், ரமாவின் ஃபீடிங் பாட்டில், இங்க் பாட்டில், தீபாவளிக்காக வாங்கி வைத்திருந்த ஒரு லிட்டர் கடலெண்ணெய் அத்தனையும்..

ஷெல்ஃபில் இருந்த ஜெயகாந்தன், சுஜாதா, ஜே.கே, ஜே. ஜே., விவேகானந்தர், பாரதியார், மீரா, அபி அனைவரும் பறந்து கதவில் விழுந்தார்கள். கோட் ஸ்டாண்ட் எகிறி விழுந்தது.

சமயற்கட்டுக்குப் போய் சோத்துப்பானையைத் தலைகுப்புறக் கவிழ்த்து ரூமெல்லாம் இறைத்தது. சட்டியில் வைத்திருந்த தோசைமாவைச் சாய்க்க சாக்கடையில் அடைத்துக் கொண்டது.


நல்ல இருட்டு. ராதா ரொம்பப் பயந்து போனது. பல்லி, ‘லக், லக்’ கிட்டது. வெண்டிலேட்டர் வழியாக ஒரு வௌவால் பறந்துவந்து முகத்தில் அடித்தது. கொல்லைக்குப் பின்னாலிருந்த வெட்டவெளியிலிருந்து ‘ஹோ’வென்ற காற்றின் பிரளய அலைச்சல், சில்வண்டின் ‘வீச், வீச்’ ஆரம்பமானது. கொடியிலிருந்த கறுப்பு நைலக்ஸ் புடவை மெல்லச் சரிந்து இறங்கியது. ராதா பயத்தின் உருவாய் நின்றது.

தன்னையறியாமல் சமையற்கட்டிலேயே பாத்ரூம் போனது.


திடீரென ராஜேசின் சிரிப்பொலி. ரமாவின் ‘கக்,கக்’ சத்தம், அம்மா, அப்பாவின் குரல் கேட்டது. ராதா ஓடிவந்து டீப்பாயின்மேல் படுத்துக் கொண்டது. ‘கடக்’ பூட்டுத் திறக்கும் சப்தம். ‘டறடறடற’’ நாதாங்கியும் கழற்றியாயிற்று.

கதவைத் திறந்த அம்மா அதிர்ந்து போனாள். ‘இது நம் வீடா..?’ லைட்டைப் போட்டுப் பார்த்தாள்.

படுக்கையின் பஞ்சுப் பறத்தல்கள், தரையின் குழிதோண்டல், எண்ணெய் மொழுகல், சோற்றுச்சிதறல், புத்தக உதறல், பாட்டில் உடைசல்கள், பற்றாக்குறைக்கு சமையற்கட்டில் மூத்திர நாற்றம்..

ராஜேஷ் நோட்டுப்புத்தகமெல்லாம் கிழிந்து கிடப்பதைப் பார்த்து அழ ஆரம்பித்தான். ரமாவுக்குப் பசியெடுத்தது. அது பால் குடிக்கும் நேரம். ‘ங்கா..ங்கா” இட்டது. அப்பாவுக்கு நல்ல பசி.


அம்மா ஆங்காரமாய் சாமியாட ஆரம்பித்தாள். ‘”சனியனே.. சோத்தக் கொட்டுனே.. சரி ஏண்டி மாவையும் தூக்கிச் சாக்கடையில் ஊத்தி வைச்சிருக்கே.. மூதேவி.. மூத்தரம் வேற பேஞ்சு வச்சிருக்கியே..” வார்த்தைக்கு ஒரு மொத்து. பிடறியில் பொடேர், பொடேரென அடி, பின் தொடையில் நிமிண்டல்.


அவ்வளவுக்கும் அழுத்தமாய் அசையாமல் குப்புறக் கிடந்தது ராதா. அது அழவில்லையே என்ற ஆத்திரத்தில் இன்னும் நாலு மடேர்.. “ செத்துத் தொலையேன்..”.

அம்மா சமையற்கட்டைக் கூட்டி டெட்டால் போட்டுக் கழுவி, பால் மாவு கரைத்துப் பிள்ளைக்குச் சங்கில் கொடுத்து, ரவா உப்புமா கிண்டி அப்பாவையும் ராஜேசையும் எழுப்பி சாப்பிடச் சொன்னாள். ‘கொரங்கு. பட்டினியாக் கிடக்கட்டுமே.. ஆக்கினையாப் பண்ணி வைச்சிருக்கு..’



ஏதோ மூளை சரியில்லாத சனியனை எப்பவும் சாயந்திரம் ஆறுக்குத்தானே ஏந்திரிக்கும்னு நெனைச்சுத் தீபாவளித் துணிவாங்கிட்டு வர்றதுக்குள்ள இப்பிடிப் பண்ணிப்புடுச்சே. அக்கம் பக்கத்திலயும் யாரிட்டயும் விட்டுட்டுப் போக முடியாது. வச்சிக்கிடவும் மாட்டாங்க. கூட்டிப் போகவும் முடியாதுன்னு ரூமுல தூங்கப்போட்டுப் போனா வர்றதுக்குள்ள இத்தனை ஆக்கினையா பண்ணி வைக்கும். ‘ சனியன்.. சீண்டரம்.


அம்மாவின் ராதாலஹரி தொடர்ந்தது.

“அன்னைக்கு உங்க மேலதிகாரி வந்திருந்தப்ப அவரு பின்னாடி நின்னு ரெண்டு கையாலயும் அவரோட புஸ்தி மீசையைப் பிடிச்சுத் திருகிட்டு விடமாட்டேன்னு மானத்தை வாங்கிடுச்சு. “


அப்புறம் ராஜேஷோட ஜாமெண்ட்ரி பாக்ஸ்ல கெடக்குற காம்பஸ்ஸ எடுத்து மீனாவுக்கு வெளையாட்டுக் காட்டுதாம். அம்மா நல்லா மொத்துனாங்க அதை.”

“ அருகாமணை, கத்தி, அருவாளை எல்லாம் ஈரக்கொலையில வச்சுக்கிறமாதிரிப் பார்த்துப் பார்த்து மாடில இருக்குற பரண்ல இதுக்குத் தெரியாமப் போட்டிருந்தேன். ஸ்டூலை வைச்சு ஏறிப் பரணைப் புடிச்சிட்டு டான்ஸ் ஆடிக்கிட்டிருக்கு. அது சாகுறவரைக்கும் நம்ம மண்டையைப் புடுங்கிக் கொத்திட்டுத்தான் போகும்போல இருக்கு.”

“போனமாசம் தோட்டைக் கழட்டி சட்டைப் பைக்குள்ள வச்சிக்கிட்டுத் தெரியலைன்னு சாதிக்குது. பேய் முழி முழிக்கிது.”


“முந்தாநாள் ஏந்தங்கச்சி ரமேசத் தூக்கிட்டு வந்திருந்தா. என்னடா புள்ள விளையாடுற சத்தத்தைக் காணமேன்னு நானும் அவளும் அறையிலேருந்து வந்து பார்த்தா இது புள்ளய கிணத்துக் கட்டை மேல உக்காரவைச்சுப் பார்த்துக்கிட்டு இருக்குது. தங்கச்சி அலறி அடிச்சிக்கிட்டுப் புள்ளய எடுத்துக்கிட்டுப் ஓடுனவதான்.

“சரி.. உள்ளேயே அடைஞ்சு கிடக்கேன்னு போன வாரம் எண்ணெய்க் கடைக்குக் கூட்டிட்டுப் போனா ஒரு டின் தேங்காய் எண்ணெயைக் கவித்து விட்டிருச்சு. கடைக்காரண்ணன் தெரிஞ்சவங்கன்னால வர முடிஞ்சது. இல்லாட்டி அப்பவே வைம்மா பணத்தைன்னு சத்தம் போட்டிருப்பான்.”


“சனியன் இருந்து புடுங்கறத விட போய்ச் சேர்றதே மேல்.” என்று முத்தாய்ப்பாய்ப் புலம்பி முடித்தாள்.

எல்லாரும் படுக்க வந்தபோது ராதா – ராஜேஷுக்கு அடுத்து ராதா – ‘பா’வென்று கையைக் காலைக் கோணலாக விரித்துக் கொண்டு, கண்ணில் கோழையும், மூக்கில் சளியும் வழிய, ‘ஆவ்’ வென்று வாய் திறந்து எச்சி ஊற்றிக் கொண்டு தூங்கி இருந்தது. நடுவில் ‘ கொர், கொர்’ றென்று குறட்டைச் சத்தம் வேற. அம்மா ராதாவைத் தூக்கிப் பாயில் போட்டாள்.

காலை. ரமாவும் ராஜேசும் எழுந்தாச்சு. ராதா எழும்பல. அம்மா அதை அடித்து எழுப்பப் போனாள். ராதா ‘கர் புர்’ ரென்று மூச்சு விட்டுக் கொண்டிருந்தது. அடிபட்ட இடங்கள் கன்றி வீங்கிக் கிடந்தன. அம்மா மனசு நெகிழ்ந்து ராதாவைத் தொட்டாள்.


”ஐயய்யோ ஓடி வாங்களேன். ஒடம்பு பொறியுதே புள்ளைக்கு “


“ அறிவு கெட்டவ நானு புள்ளய நல்லா அடிச்சுப் போட்டனே..” புலம்பித் தீர்த்தாள் அம்மா.

ஆஸ்பத்ரி – பெட் – அலைச்சல் – ஒரு மாசம் – சில ஆயிரம் செலவு – அம்மாவின் வார்த்தைகளை வேதவாக்காக எடுத்துக் கொண்டு அந்த வடிகால் டைபாய்டு ஜுரத்தோடு போனது.

அம்மா கூடத்தில் அது உடைத்த ஃபீடிங் பாட்டில் துண்டைத் திருப்பித் திருப்பிப் பார்த்துவிட்டு ,அ..அ.. உன்னை விட்டுடுவனா. இறுக்கப் புடுச்சுக்கிடுவேன்.. “ எனக் கட்டிப் பிடித்துக் கொள்கிறாள். அப்பாவும் ராஜேசும் கண்ணைத் துடைத்துக் கொள்கிறார்கள்.

டிஸ்கி :- 84 ஆம் வருட டைரியிலிருந்து. 

டிஸ்கி :- இந்தச் சிறுகதை மே 4 , 2014 திண்ணையில் வெளிவந்தது.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...