திங்கள், 9 ஜூன், 2014

இளம் குடிமகன்களும் குடிமகள்களும் :-

இளம் குடிமகன்களும் குடிமகள்களும் :-
 "மது லோகா " இது பெங்களூருவில் இருக்கும் ஒரு மதுபானக் கடை.. ஆணுக்குப் பெண் சளைத்தவரில்லை எனக் காட்ட இங்கே இரு பாலாரும் மதுப் புட்டிகளைக் க்யூவில் சரிசமமான அளவில் நின்று வாங்கும் கண் கொள்ளாக்காட்சியைக் காணலாம். பெற்றவர்கள் பிள்ளைகளைப் படிக்கவும் வேலை செய்யவும் அனுப்பி வைக்க அவர்கள் இங்கே வெளிநாட்டுக் கலாச்சாரப்படி உடை உடுத்தி வெளிநாட்டுப் பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொண்டிருக்கிறார்கள். வெளிநாடுகளில் குளிரான க்ளைமேட்டுக்காகக் குடிக்கிறார்கள் நம் ஊர் க்ளைமேட்டுக்கு வேஷ்டியும் புடவையும்தான் சரி என்பதை விடுத்து ஏசி ரூமில் பணிபுரிவதால் லெகின்ஸ், ட்யூப்ளாய்டு ட்ரெஸுக்கு மாறிய சாஃப்ட்வேர் மக்கள் சாஃப்ட் ட்ரிங்ஸுக்கும் மாறிவிட்டார்கள்.

 ஆணோ பெண்ணோ க்யூவில் நின்று ரிலையன்ஸ் ஃப்ரெஷில் காய்கறி வாங்குவது மாதிரி ஹைக்ளாஸ் சரக்குகளை வாங்க ( இங்கே பருக அனுமதி இல்லை ) . காரில் காத்திருக்கும் நட்புகள் அதிலேயே அமர்ந்து அதை அருந்துகிறார்கள். அதன்பின் என்னன்ன கசமுசவோ நடந்ததும் அவரவர் பிஜியில் ( பேயிங் கெஸ்டாகத் தங்கியிருக்கும் இடம் ) பிரிகிறார்கள்.

கல்லூரி செல்ல ஆரம்பித்தவுடனே தங்களுக்கு குடிக்க அனுமதி வழங்கப்பட்டதாக நினைத்துக் கொள்ளும் இளம் குடியர்கள் அதிகரித்து விட்டார்கள். கல்லூரி விடுதிகளிலும் தனியார் விடுதிகளும் தங்கிப் பயிலும் 75 சதவிகித  மாணவர்கள் இளம் குடிகாரர்களாகி விட்டதாக மெட்ரோ நகரங்களில் எடுக்கப்பட்ட சர்வே ஒன்று சொல்லுகிறது.

உத்யோகம் புருஷலக்ஷணம் என்பார்கள். அது பெண்ணுக்கும் என்றான பிறகு சேர்ந்து குடிப்பதும் இருவருக்குமான லக்ஷணம் ஆகிவிட்டது. சாஃப்ட்வேரில் பணிபுரியும் பெரும்பாலானவர்கள் பார்ட்டி என்ற கலாச்சாரத்தில் சிக்குண்டு சீரழிகிறார்கள். ப்ரமோஷன் கிடைச்சா, வண்டி வாங்கினா, திருமணம் ஆனா, குழந்தை பிறந்தா , வீடு வாங்கினா என்று இருந்த ட்ரீட் கொடு கோஷம் இப்ப எதுக்குன்னு இல்லாம எதுக்காச்சும் கூட இருக்கு. லவ் ஃபெயிலியரா, வீடு வித்தியா, வெளிநாடு போறியா, வேலை மாற்ரியா ட்ரீட் கொடு என்பதற்கெல்லாம் கூட. இது காலத்தின் கட்டாயம் மாதிரி ஒரு கூட்ட மனநிலை ஆகிவிட்டது. விருப்பம் இருக்கிறதோ இல்லையோ டீம் ஸ்ப்ரிட் என்ற பெயரில் இது கட்டாயமாக்கப்பட்டுவிட்டது. என்னடா கஞ்சனா இருக்கானே என்ற பெயரைத் தவிர்க்கவும் வேறு வழியில்லாமல் இதைத் தொடர்ந்து வருகிறார்கள். 

பஃபுக்குச் ( PUB) செல்வது  ( முன்பு டிஸ்கோ என்பது அந்தக் கலாச்சாரச்  சீரழிவில் ஒன்று. சாட்டர்டே நைட் என்றாலே இங்கே இரவெல்லாம் கொண்டாட்டம்தான். மப்பும் மந்தாரமுமான மக்களை எங்கெங்கும் காணலாம். குளிரான ஊர் என்ற போர்வை வேறு. வெறும் பீர் மட்டும்தான். வெறும் வோட்கா மட்டும்தான் .. வெறும் பிராண்டி மட்டும்தான் என்ற சால்ஜாப்பெல்லாம் வேறு.

பீர் என்றால் காஃபி மாதிரி அல்லது அதுவும் ஒரு கூல் ட்ரிங்க் மாதிரி என்ற எண்ணம் எல்லாரிடமும் வேரோடிப் போயிருக்கிறது. அதற்கேற்றாற்போல மல்லையாவிலிருந்து மல்டி நேஷனல் கம்பெனி வரைக்கும் டின் பீர்களை சப்ளை செய்கிறார்கள். ஆங்கிலப் படம் நடக்கும் தியேட்டர்களிலும் இவைகளை எடுத்து வருகிறார்கள்.

சில ஃப்ளைட்டுகளில் கூட ஹெனின்கைன் பீர்களைத் தருகிறார்கள்.வெளிநாட்டில் இருந்து யார் வந்தாலும் அவர் தம் நண்பர்களுக்கு, சில உறவினர்களுக்கு இவற்றை வாங்கி வர வேண்டியதிருக்கிறது. பாண்டியில் இதற்குத் தடை இல்லை என்பதால் வீக் எண்டுகளில் பாண்டி நோக்கிப் போகும் கும்பல் அதிகம்.

திருமணம் என்றால் முதல் நாள் தண்ணி பார்ட்டி இல்லாமல் இல்லை. க்ளப்புகள், ரோட்டரி சங்கங்கள் நடத்தும் பார்ட்டிகளில் கூட சரக்குத்தான் மெயின். சரக்கைப் போடாவிட்டால் இவர்களால் ஸ்டெடியாகப் பேசமுடியாதோ எண்ணும் அளவிற்கு போதை அடிமைகள் எங்கெங்கும் பெருகிக் கிடக்கிறார்கள்.

மனிதரைக் கெடுப்பதாக மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை என்ற மூன்றை மட்டும் குறிப்பிடுகின்றார்கள். அதோடு மதுவாசை என்பதையும் நான்காவதாக சேர்த்துக் கொள்ளலாம். காதல் தோல்வி என்றால், நல்ல திருமண வாழ்வு அமையவில்லை என்றால், மேலதிகாரி திட்டினால், பிடிக்காத வேலையில் பணிபுரிய நேர்ந்தால் என்ற காரணங்களோடு சந்தோஷம் வந்தா குடிப்பது, துக்கம் இருந்தா குடிப்பது இதோடு ஒன்றுமே இல்லை அதான் சும்மா குடிக்கிறேன் என்று குடிப்பது என்று தினக் குடிகாரர்கள் பெருகி வருகிறார்கள்.

நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம் இன்னிக்கு ராத்திரிக்குத் தூங்க வேண்டும் ஊத்திக்கிறேன் கொஞ்சம். என்ற சொல்லியபடியே தினமும்தான் அருந்துகிறார்கள். குடிகாரன் பேச்சு விடிஞ்சால் போச்சு என்பது போல விடிந்ததும் மறந்துவிடும் இவர்கள் இதே வார்த்தைகளோடு அடுத்த நாளையும் தொடர்கிறார்கள்.

குடிக்காமல் நல்லவராக இருக்கும் கணவர் குடித்ததும் மனைவியைப் படுத்தும் பாடும் பேசும் பேச்சும் வித்யாசமானவை. வடிவேலு போல காலையில் நல்லவராகவும் மாலையில் அல்லவராகவும் மாற்றும் வலிமை குடிக்கு உண்டு. இதனால் நிறையத் தற்கொலைகளும் கொலைகளும் விவாகரத்துக்களும் ஏற்பட்டிருக்கின்றன. இருந்தும் யாரும் திருந்துவதில்லை.

இரவுப் பொழுதில் மட்டும் பார்ட்டிகளில் கலந்து கொண்டு குடிப்பவர்கள் சிலர் இதுவே பழக்கமாகி காலை, மாலை, பகல் இரவு என்று எந்நேரமும் போதையிலேயே இருக்க விரும்புகிறார்கள். ஹைதராபாத சைபர் சிட்டியில் மென்பொறியாளராகப் பணிபுரியும் பெண்கள் சிலர் ஆண்களே அதிர்ச்சி அடையும் அளவுக்கு இதுபோல நாள்பூராக் குடிக்கத் துவங்குகிறார்கள்.

குடி குடியைக் கெடுக்கும் என்று லோகோவைப் போட்டபடி அரசாங்கங்களே விற்கின்றன. இதில் டார்கெட்டுகள் வேறு வைத்து குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. வருடா வருடம் அதிகமாக விற்றோம் என்று லாபம் காட்டி சந்தோஷம் வேறு பட்டுக் கொள்கின்றன. எத்தனை பெண்களின் கண்ணீரையும், குழந்தைகளின் கல்வியையும் இந்தக் குடி காவு வாங்கி இருக்குமோ. விஷ சாராயம் , வார்னிஷ் சாராயம் குடித்து இவ்வளவு பேர் பலி என்ற எண்ணிக்கையைத் தவிர்க்க அரசாங்கங்களே விற்கிறதோ என்னவோ. பெண்டாட்டி தாலியையும் அடகு வைத்து அடித்து உதைத்துப் பணம் வாங்கி பாக்கெட் சாராயம் குடித்துப் பலர் அழிந்ததையும் பார்த்திருக்கிறேன்.

கள்ளுக் கடை என்பது கேரளாவிலும் ஆந்திராவிலும் ஒரு குடிசைத் தொழில் போலவே செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆந்திர கிராமத்தையும் மாலை சமயம் பேருந்துகளில் தாண்டும்போது ஒரு மாதிரி கெட்ட பழ வாசனையை உணரலாம். இன்னும் கேரள கிராமங்களில் அராக் ஷாப் என்ற பேரோடு ஒவ்வொரு ஊரிலும் கடைகள் உண்டு. என் கேரளத் தோழி ரஜிதாவிடம் இது பற்றி சொன்ன போது கிண்டலாக " கள்ளுண்ணாத மனுஷனும் ஒரு மனுஷனா என்று பெண்டாட்டிகள் மதிக்கமாட்டார்கள் என்பதற்காகவே அவர்கள் குடிப்பதாகச் சொன்னார். "

சொண்டி சோறு என்ற ஒன்று சென்னை பீச்சுகளில் சில காலம் முன்பு சக்கைப் போடு போட்டுக் கொண்டிருந்தது. மண்ணில் புதைத்து வைக்கப்பட்ட பானையில் சோற்றுடன் பழங்கள், பாட்டரி செல், ஏதேதோ விதைகள் இவற்றையும் போட்டுப் புதைத்துப் புளிக்க வைத்துக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இதைத் தின்றால் போதை அதிகம் என்பதால் இப்படியாம். 

சினிமாவில் கெட்டவர்கள் எல்லாரும் சாராயம் காய்ச்சுவார்கள். நல்லவர்கள் எதிர்த்துப் போராடுவார்கள். நிஜவாழ்வில் சாராயம் விற்பவர்கள் பரிதாபமாக இருப்பார்கள். இந்த நல்லவர்கள் அவர்களிடம் வாங்கிச் சாப்பிடுவார்கள். இதிலும் மதுபானக் கடைகளில் குடிக்கக் கூடாது என்று போர்டு போடாமல் குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்களைக் காவலர்கள் பிடிப்பது என்பது மிக வேடிக்கையான விஷயம். குடித்துவிட்டு வண்டி ஓட்டி பல விபத்துக்கள் நிகழ்ந்து இருந்தும் இந்தக் குடிகாரர்கள் குடித்துவிட்டு வண்டி ஓட்டுவதை விட்டதேயில்லை.

இன்றைக்கு வரைக்கும் ஹாட் கேஷ் பரிமாற்றம் உள்ள ஒரே தொழில் இந்த டாஸ்மாக் தான். கடன் என்பதே இல்லை. அநேகமாக எல்லா சினிமா த்யேட்டர்களின் வாசலுக்கு அருகிலும் பெருங்கூட்டம் இருக்கும். எவ்வளவுதான் வரி விதித்தாலும் எதிர்த்துப் பேசாமல் போராட்டம் நடத்தாமல் மனிதர்கள் வாங்கிச் சென்று கொண்டே இருப்பார்கள். மனிதர்களின் பலவீனம் இது என்பதைக் கண்டு கொண்ட நுணுக்கம்  இது. 

காந்தி ஜெயந்தி போன்ற நாட்களில் அகிம்சா வேஷத்தில் விற்பதில்லை என்றாலும் உஷாரான குடிமகன்கள் முதல் சில நாட்களுக்கு முன்பேயே வாங்கி வைத்துக் கொண்டு விடுகிறார்கள். பள்ளி கல்லூரிக்கு அருகில் விற்கக் கூடாது என்று சட்டமிருந்தும் பல கடைகள் இவற்றின் அருகிலேயே இருக்கின்றன. இது ஏன் போன வாரம் ஒரு கோயிலுக்கு அருகிலும், ஒரு ஹாஸ்பிட்டலுக்கு அடுத்ததாகவும் இரு மதுபானக் கடைகளைப் பார்த்தேன். 

முந்தைய கா தமிழ் மக்கள் சோம பானம் சுரா பானம் அருந்தி இருக்கிறார்கள். வேலை செய்த களைப்பு நீங்க. இது என்ன புது விஷயமா என்று சொல்ல வந்திட்டீங்க என்று கேட்டால் ஆமாம் இது புது விஷயம்தான். முன்பு எல்லாம் தந்தை மகன் சேர்ந்து குடிக்கமாட்டார்கள். இலை மறை காயாக தந்தை குடிப்பதே பல வருடங்களுக்குப் பிள்ளைகளுக்குத் தெரியாது. தந்தைக்கும் தன்னைவிடப் பெரியவர்களான பெற்றோர்களிடத்து மரியாதையும் தன் பிள்ளைகளும் இதைக் கற்றுக் கொண்டு விடுவார்களோ என்ற பயமும் இருந்தது. 

இன்று பிள்ளைகள் அப்பாக்களுக்குக் பாட்டில் வாங்கி வருகிறார்கள். தந்தை மகன்கள் சேர்ந்து குடிக்கிறார்கள். மகன்கள் , மகள்கள் தங்கள் தோழ தோழியரோடு குடித்துவிட்டு முகநூலிலும் பகிர்கிறார்கள். அதுல போதை இல்லை இதை அடுத்து ட்ரை பண்ணு என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொள்கிறார்கள். இது ஆரோக்கியமான போக்கல்ல. மேலும் சில பெற்றோர் மட்டுமே அளவாக் குடி என அனுமதிக்கிறார்கள். ! குடிக்கக் கூடாது என்று தடை உத்தரவு போடுவதில்லை.

பெண் குழந்தைகள் குடிப்பழக்கத்தைக் கைக் கொண்டால் அது போதையில் நிதானம் தப்ப ஏதுவாகிறது. யாருடன் வருகிறோம், யாரோடு எங்கே போகிறோம் என்பதெல்லாம் தெரியாமல் தன்னை இழக்க நேரிடுகிறது. ஒரு முறை என் தோழியின் மகள் சொன்னாள். பெங்களூருவில் இரவு நேரத்தில் ஒரு பெண் குடித்து விட்டு வண்டி ஓட்டி வந்திருக்கிறாள் அவள் பின்னேயே அந்த பப்பில் இருந்து இன்னும் நான்கு ஆண் மகன்களும் பின் தொடந்திருக்கிறார்கள் தங்கள் வண்டியில். அந்தப் பெண்ணைப் பின்னாலேயே டீஸ் பண்ணிக் கொண்டே வந்திருக்கிறார்கள்.

ஒரு காவல் நிலையத்தைக் கடக்கும்போது அந்தப் பெண்ணின் வண்டி தடுமாற்றத்தோடு சுவற்றில் முட்ட அங்கே இருந்த காவலர்கள் அந்தப் பெண்ணை உள்ளே அழைத்துச் சென்று விபரம் கேட்டால் அந்தப் பெண்ணுக்கு ஒன்றுமே சொல்லத் தெரியவில்லை. அவ்வளவு குழறல். அவர்கள் மாற்றி மாற்றிக் கேள்வி தொடுக்க. அந்தப் பெண் வெளியே வர இந்த நான்கு ஆண்மகன்களும் காத்திருக்கிறார்கள். அதன் பின் அந்தப் பெண் பத்திரமாக தன்னுடைய பிஜிக்குப் போனாளா. அவளுக்குக் காவலர்களால் அல்லது அந்த ஆண்மகன்களால் தொந்தரவு ஏதும் நிகழாமல் இருந்ததா எனத் தெரியவில்லை என்று சொன்னாள் ஒரே பதைப்பாக இருந்தது. இருந்தும் நாம் என்ன செய்யமுடியும்..

 குடிப்பதில் ஆணென்ன பெண் என்ன.. இருவரும் குடிக்கக் கூடாதுதான். குழந்தைப் பேறு ஆணுக்குக் கிட்டுவது தாமதப் படும். அல்லது குழந்தைக்கும் இதன் தீமைகள் போய்ச் சேரும். பெண்ணுக்குக் கர்ப்பம் தரிப்பது தாமதப் படலாம். குழந்தைக்கும் தாயின் மூலம் இதன் தீமைகள் போய்ச் சேரும். பாலருந்தும் குழந்தைகள் இருந்தால் நேரடியாக ஆல்கஹால் அதன் ரத்தத்திலும் கலக்கும். இது போக ஜெனரலாகவே இருவருக்கும் ஹெல்த் கான்ஷியஸ் அவசியம். நேரடியாகக் கல்லீரலைப் பாதிக்கும். லிவர் சிரோசிஸ் என்ற தாக்கம் வந்தால் தப்புவது கடினம். கல்லீரல் மஞ்சள் காமாலையிலும் கொண்டு விடும் இந்தப் பழக்கம்.

இப்போதெல்லாம் தனிப்பட்ட மனிதர்கள் பெருகி வருகிறார்கள். நான் முக்கியம் என் சுகம் முக்கியம் என் சுய நலம் முக்கியம். லைஃப் பார்ட்னர் அல்லது பெற்றோர் யாரும் முக்கியமில்லை. தான் கல்வியறிவிலும் , சம்பாத்தியத்திலும் பெரிய ஆளாகிவிட்டதால் இவர்கள் எல்லாம் தனக்கு அறிவுறுத்தும் அளவு பெரியவர்கள் இல்லை என்ற எண்ணம் வேரோடி இருக்கிறது. திருமணம் வேண்டாம் , குழந்தை வேண்டாம் என ஒதுங்கி விடுகிறார்கள். குடிப்பதற்கு வொர்க் டென்ஷன் என்ற காரணம் வேறு சொல்லிக் கொள்கிறார்கள். தானாகத் திருத்திக் கொள்ளாவிட்டால் இவர்களுக்குத்தான் பாதிப்பு. 

முன்பு மூட்டை தூக்குபவர்களும், ஒரு ஹாஸ்பிட்டலில் துப்புரவுப் பணியில் இருக்கும் ஒரு பெண் ஊழியரும் குடித்ததைப் பார்த்திருக்கிறேன். வேலை பளு மற்றும் அதன் நாற்றம் சகிக்க முடியாமல் குடிப்பதாகக் குறிப்பிட்டார்கள். ஆனால் இந்த மென் பொறியாளர்கள் மற்றும் மேல் தட்டு வேலை செய்பவர்கள் ஃபன்னுக்காகவே குடிக்கத் தொடங்கி தொடர் குடிகாரர்களாகி விடுகிறார்கள். போரடிக்குது ஒரு பீர் அடிப்போம் என்று. இதைக் குடித்தால் மனம் லேசாவதாக பிரச்சனைகளின் கனம் குறைந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறார்கள். ஆக்சுவலாக பிரச்சனை அப்படியேதான் இருக்கிறது தீர்வில்லாமல். அதை இவர்கள் குடித்துப் பெரும் பிரச்சனையாக மாற்றும் வரை.

ஒவ்வொரு ஊரிலும் மதுபானக் கடைகள் தெருக்கள்தோறும் பெருகி வருகின்றன. குளோபலைசேஷன் புரட்சி என எடுத்துக் கொள்ளலாம். அதே போல ஒரு மது அடிமைகள் மறுவாழ்வு மையமாவது அமைக்கவும் பட்டுள்ளது. விஷத்தைக் கொடுத்து முறிவு மருந்தும் கொடுப்பது போல. அங்கே இருக்கும்வரை கட்டுப்பட்டு இருக்கும் அவர்கள் மீண்டு வந்ததும் திரும்ப போதையைப் போட ஆரம்பித்துவிடுகிறார்கள்.

கொத்துமல்லியை வறுத்து  அரைத்துக் கொதிக்க வைத்துக் குடிக்கக் கொடுத்தால் குடிக்கும் ஆசை வராது என்று ஒரு நாட்டு மருந்து வைத்தியத்தில் போட்டிருந்தது. தமிழ்நாட்டு சமையலில் தினம் தினம் குழம்பில் அதைத் தானே சேர்க்கிறோம். அதையும் சாப்பிட்டுவிட்டுக் குடிக்கும் குடிமகன்களின் திறமை அசாத்தியமானது. இப்படிப் படுத்தும் குடிமகன்களோடு குடித்தனம் நடத்தும் குடிமகள்களின் திறமையும் அசாத்தியமானது. 

இரவு ஒரு மணி வரைக்கும் நைட் ஹவர்ஸை எக்ஸ்டெண்ட் செய்வதாக பெங்களூரு ஸ்டேட் கவர்ண்மெண்ட் அறிவித்துள்ளது. இதனால் பல ஷாப்பிங் மால்களும் மதுபானக் கடைகளும் உணவு விடுதிகளும் இரவு ஒரு மணி வரை இயங்கலாம். மக்களும் ஷாப்பிங் செய்துவிட்டு ( மது அருந்திவிட்டு ) இரவு ஒரு மணி வரை போலீசின் கெடுபிடி இல்லாமல் திரும்பலாம்.

இது பற்றி பெங்களூரு நகர மக்கள் பலவிதமான கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறார்கள் 24 மணி நேரமும் இயங்கும் பெங்களூரு சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் சிலர் இதைத் தங்களுக்கு வழங்கப்பட்ட சலுகை என மகிழ்கிறார்கள். மிகவும் மிட்நைட்டில் பணி நேரம் முடிபவர்கள் தங்களுக்குத் தேவையானவற்றை லேட் ஹவர்ஸில் ஷாப்பிங்க் செய்ய முடிகிறது என தங்கள் மகிழ்வைத் தெரிவித்திருக்கிறார்கள். போலீஸ் கெடுபிடி இல்லாததால் சுதந்திரமாக உலவ முடிகிறது என்கிறார்கள்.

  இதனால் மிட்நைட் குற்றங்கள் அதிகரிக்கும் என்றும் காவல்துறையினரின் பணி இன்னும் சவால் நிறைந்ததாக மாறும் என்றும் சிலர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். குடித்துவிட்டு கலாட்டா செய்பவர்கள் மட்டுமல்ல. அவர்களிடம் தவறாக நடக்க முயல்பவர்களிடமிருந்தும் அவர்களைக் காக்கும் பெரும் பணி இருப்பதால் போலீசாருக்குத் தலைவலிதான் என்கிறார்கள். பல தேச மக்களையும் மென்பொருள் நிறுவனங்களுக்காக இறக்குமதி செய்திருக்கும் பெங்களூரு அவர்களின் விருப்பத்திற்கேற்பத் தன்னை ஏறுக்கு மாறாக வளைத்துள்ளது என்றே கூறலாம்.

சைபர் சிட்டிக்கள் சைபர் நிறுவனங்களுக்காக தன்னுடைய சி(நெ)ட்டிசன்களை சிக்கலில் ஆழ்த்தி சைபராக ஆக்கிவிடாமல் இருந்தால் சரி.
  

5 கருத்துகள் :

Jeevalingam Kasirajalingam சொன்னது…

சிறந்த ஆய்வுக் கட்டுரை
ஆண்டவா! - இந்த
இளசுகள் திருந்த வாய்ப்பு உண்டா?

visit http://ypvn.0hna.com/

ஸ்ரீராம். சொன்னது…

கொடுமையான விஷயம்தான்!

ராமலக்ஷ்மி சொன்னது…

அவசியமான அலசல். நல்ல கட்டுரை, தேனம்மை.

Thenammai Lakshmanan சொன்னது…

முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜீவலிங்கம் சார்

நன்றி ஸ்ரீராம்

நன்றி ராமலெக்ஷ்மி

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...