புதன், 30 செப்டம்பர், 2009

பூவரசம்பூ

பயாலஜி லாப்பில்
தவளைக்கும் எலிக்கும்
இனப்பெருக்க உறுப்பும்

இதயம் இணைந்த
சுவாச உறுப்பும்
இருக்கிறதா என

ஆணியும் குண்டூசியும்
மாட்டி தேடிக்
கொண்டிருந்தோம்...

தாவரவியல் பாடத்துக்காக
ஹெர்பேரியம் செய்ய
உன் வீட்டில் இருந்து...

பூவரசம் பூக்களைப்
பாடம் செய்து எனக்காகக்
கொண்டு வந்தாய்...

ஒரு பூவரசம் பூவில்
மட்டும் சின்னதாக
ஒரு சிவப்பு
இதயத்தையும் வரைந்து...

இருவரின் கைகளும்
பூப் பரிமாற்றத்தின் போது
உரசிக் கொண்டதில்
இதயம் வாய்க்கும்
வயிற்றுக்குமாகத் துடித்தது...

இன்று ஆர்ட் கேலரியில்
உன் ஆலிலைப் படக்
கண்காட்சியைப் பார்த்த
போது நினைத்தேன்...

இன்னும் விடவில்லையா
நீ பாடம் செய்தவற்றில்
படம் வரைவதை ...

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

செடிச் சம்பங்கி [பன்னீர்ப்பூ]

நலுங்கிலும் ஊஞ்லிலும்
இப்போதுதான் அமர்ந்து
அப்பளம் உடைத்து
தேங்காய் உருட்டியது
போலிருக்கிறது...

அன்று அணிந்திருந்த
அதே போன்ற
சம்பங்கி மாலை
அணிந்து நீ...

தாய்மையின் பூரிப்பில்
மஞ்சளும் சந்தனமும் தடவி
கை நிறைய வளையல் மாட்டி...

தலை நிறைய பூக்கள் சூடி
பழக்கமில்லாத பட்டு அணிந்து
பதுமையாய் அமர்ந்து நீ...

பெண் பார்த்த பொழுதை விட
திருமணத் தருணத்தைவிட
ஹனிமூன் தனிமைகளைவிட...

தாய்மை மூடிய
உன் உருவம்
என்னை மயக்குகிறது...

நானே உன் குழந்தையாய்
உன்னுள் குடி
கொண்டிருப்பது போல்...

சித்ரான்னங்கள் சாப்பிட்டு
தாம்பூலங்கள் வாங்கி
வந்தவர்கள் ஆசீர்வதித்து
சென்றபின் என்
அருகு வந்தாய்...

வயிற்றில்என்
குழந்தையின் விரலோ
என மயங்கினேன்...

அட... அது உன் மாலையில்
இருந்து இடுப்பில் பதிந்த
சம்பங்கி .......

கொடிச் சம்பங்கி

பூக்களுக்கு அனுமதி
இல்லாத இடங்களிலும்
நீ நுழைந்து விடுவாய்
பூப்போல...

பஸ்ஸின் நெரிச்சலில்
எரிச்சலில்
அலுவலகத்துக்கு நானும்
பள்ளிக்கு நீயும்...

சீருடையையும்
சிரமத்தையும் மீறி
தோழிகளுடன் சிரிப்பு ..
என் எரிச்சலுக்கு
மருந்தாய்..

நெருக்கமான
மோதிரம் போல்
கோர்க்கப்பட்ட
சம்பங்கி சூடி...

பச்சைக் காம்பும்
மஞ்சள் பூவும்
உன் கருவிழியும்
பார்வையும் போல்...

இறக்கையைப் போல்
என் மேல்
தத்தித் தத்தி...

பஸ் திரும்பும்
போதெல்லாம்
உன் மேல் மோதி
காற்று சம்பங்கி மணத்தை
என் மேல் அப்பியது..

நீ இறங்கிச் சென்றபின்
சம்பங்கி சூழ
நான்...

திங்கள், 28 செப்டம்பர், 2009

மேரி கோல்டு [தங்க அரளி]

நாட்டியப் பள்ளி வாசலில்
பூத்துஇருந்தது
மேரி கோல்டு...

உன் சாரதியாய்
வந்த நான்
வெளியில் காரில்...

உள்ளே சலங்கை கட்டி
நீ ஜதிஸ்வரத்துக்கேற்ப
ஆடிக் கொண்டிருந்தாய்...

விஜயதசமியில்
தேவிகளுக்கு
அர்ப்பணமாய்...

நெற்றியில்
வியர்வை
சந்தனமாய்..

ஒரு எல்லையில்லா
பெருவெளிக்கு
உன் பாதச்சந்தம் ஒரு
சுருதிலயத்தோடு குழைத்தது...

கூட்டுப் புழுவிலிருந்து
வண்ணத்துப் பூச்சியாக
உருமாறியிருந்தாய்...

ஜல் ஜல் என்ற உன்
சலங்கை ஒலிக்கேற்ப
விழுந்து கொண்டிருந்தது...

வெளியில் அமர்ந்திருந்த
என்மேல் மேரி கோல்டு
ஒவ்வொன்றாய்...

செண்பகப்பூ

காண்டாமணி ஒலிக்க
கலியுகத் தெய்வம்
ஐயனாரும் சாத்தையனும் ...

கருவிழி முறுக்கு
மீசையுடன் கருப்பரும்
எடுப்பான புரவிகளுடன்
அமர்ந்த கோயில்...

குலதெய்வம் கும்பிட
வருஷம் ஒருமுறை
விடுப்பெடுத்துக் குடும்பத்துடன்....

காதுகுத்து, மொட்டை,
பொங்கல் என்று
நீ வருவாய்...

நீ நன்றாக இருக்கின்றாயா
எனப் பார்க்கும் ஆவலில்
நானும் வருவேன்...

ஒருவரைப் பார்த்து
ஒருவர் மகிழ்ந்து கொள்ளும்
உன்னதத் தருணம் அது...

கிடா வெட்டு, படையல் ,
சாமி கும்பிட்டு முடித்து
நீ காரேறி சென்ற பின்னும்...

உடைந்த உன்
வளையல் துண்டும்
கூந்தலிலிருந்து உதிர்ந்து
காய்ந்த செண்பகப்பூவும்...

ட்ரங்குப் பெட்டி
திறக்கும் போதெல்லாம்
உன் மணமாய்...

ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

நந்தியாவட்டை

விடியலின் ஈரத்தில்
புஷ்கரணியில் குளித்து
நந்தவனத்தில் உலா...

தளிர்க் கைகளால்
நந்தியாவட்டைகளைக்
கொய்து கொண்டிருந்தாய்...
என் மனசைக் கொய்வதாய்...

கோயிலில் த்வீதிய பாதம்
என்று கூட்டத்தில்
ஒரே மிதி பாதம்... ..

பறித்த பூ தொடுக்க
ஈரக்கூந்தலுடன்
நடந்துசென்றாய்...

சொட்டுச் சொட்டாய் நீரும்
பூக்குடலை நிரம்பி
நந்தியாவட்டமும் ...

உன் கொலுசுச் சத்தத்துடன்
சிதறிக் கொண்டே சென்றன
என் மனசைப் போல...

செவ்வந்தி

பிறந்ததில் இருந்து
காதலித்துக் கொண்டே
இருக்கிறேன் உன்னை...

ஐந்து வயதில் தான்
என் அருகு வந்து
அமர்ந்தாய் நீ...

இன்று வரை
என்னை விட்டுப்
பிரியவில்லை...

ஆவி சோரச் சேர்ந்த நீ
அதன் பின் என்னை விட்டு
விலகியதுமில்லை...
என்னைக் கைவிடவுமில்லை...

உன்னை விட்டால்
உயிர்த்து இருப்பேனா
தெரியவில்லை...

நெஞ்சகத் துள்ளுறை மாதே...
வலைத்தளத்தில்
அமர்ந்துறை வாழ்வே...

லெட்சுமியும் கொற்றவையும்
சரஸ்வதியுமான தேவி...
என் மனம் எனும்
செவ்வந்தியை
சமர்ப்பிக்கின்றேன்...

உன்னால் உலக
அறிவு பெற்றேன்..
வார்த்தைகள் கற்றேன்..

நீ என் கூடவே இருப்பதால்
சென்ற இடமெல்லாம்
சிறப்பெனக்கு..
என்ன கைம்மாறு
செய்தேனுனக்கு...

குழந்தைகள் தாயை
நேசிப்பது போல உன்னை
வீழும் வரை நேசிப்பேன் ...

சனி, 26 செப்டம்பர், 2009

முருங்கைப்பூ

அவென்யுவின் அழகுக்காய்
பூச்செடிகள் வளர்க்க
வாஸ்துவில் இருந்து
தப்பி வளர்ந்தது
முருங்கை ஒன்றும்..

விழுந்த குப்பையெல்லாம்
கூட்ட வந்த நீ
முருங்கை போல
முறுக்கு ஏறி..

வெட்டணும்னு
சொல்லும்போதெல்லாம்
பூச்சொரிஞ்சு
காய்ச்சு நிற்கும்..

முருங்கைப்பூ பால் கூட்டும்
முளைச்ச பிஞ்சுக்குழம்பும்
பிரசவிச்ச அக்காவோட
சேர்ந்து நானும்
ருசிச்சுருக்கேன்,....

கிளையை யாராவது
ஒடைச்சால் என் கை
ஒடிஞ்சது போல...
துடிதுடிப்பில்
நானும் அதுவும்...

குமிஞ்ச குப்பை
அள்ளிப்போட்டு
குறையொன்னும்
சொல்லாத நீ ...

பல்காட்டி சிரிக்கையிலே
பூத்துருக்கும்
முருங்கைப்பூ...

நீலச்சங்குப்பூ

கறுப்பு வெதை போட்டு
சிறு வயசுப்பசங்க நாம
தினம் தண்ணீ
ஊத்திவந்தோம்...

பச்சையாய்
எலை வந்து
ஆகாயம் போல்
பூப்பூத்துச்சு...

பூத்த சங்கு
எல்லாத்துலயும்
அழகோட
ஓசை கேட்டுச்சு..

ஒத்த இதழால
புன்சிரிக்கும் சங்குப்பூ
உன் சிரிப்பைப்போல...

சங்குப் பூவெடுத்து
சங்குக்கழுத்தழகி
சனீஸ்வரனைச்
சுத்தி வந்த...

ஈஸ்வரன் சன்னதியில்
கண்மூடி ஸ்லோகம் சொல்லி
போட்ட பூ ஒவ்வொண்னும்
பவித்திரமாய் எம் மனசில்...

வெள்ளி, 25 செப்டம்பர், 2009

கனகாம்பரம்

ஊர்த்திருவிழா...
கிலுகிலுப்பை, ஊதல்
சின்னவனுக்கு...
பலூனும், பஞ்சு மிட்டாயும்
பெரியவளுக்கு...

தேரில் வந்த சாமி பார்த்து
தேங்காயுடைச்சு
முடிச்சாச்சு...

கியாஸ் லைட் வெளிச்சத்துல
நாயனமும் மோளமும்
ஒன்னுக்கொன்னு எசை பாட... .

கரகாட்டம் ஆடிவந்த
கறுத்த அழகி கூந்தலிலே
அம்பாரமாய் கனகாம்பரம்...

மெலிஞ்சிருந்த அவள்
கரகம் எடுத்துச்
சுற்றிச் சுற்றி ஆடயிலே
கனகாம்பரம் சுத்துனதுபோல்
ராட்டினமாய் எம்மனசும்...

மாதுளம்பூ

அராபிக் மெஹந்தியும்
கோல்ட் :.பேஷியலும்
வீடியோ வெளிச்சத்தில்
பூச்செண்டுகள் சூழ ரிஸப்ஷன்....

பெற்றோர் நடத்திய
பொருந்திய திருமணம்...

ஜிகினா நாட்கள் முடிந்து
மாயைகளும் மோஹங்களும்
குறைந்த இயல்பான வாழ்க்கை...

இருந்தாலும் உனை நெருங்கி
வரும்போதெல்லாம்
வெட்கத்தில் கவிழும்
உன் கன்னத்தில்...

ரூஜ் இல்லாமலே
எப்படிப் பூத்தன
தீற்றிய சிகப்பில்
மாதுளம் பூக்கள்...

காக்கரட்டை மல்லி [காட்டு மல்லி]

மூக்கிலே புல்லாக்கு...
முகம் நெறைய மேக்கப்பு...
கார்பாவும் தாண்டியாவும்
பாங்ராவும் ஆடிய நீ ....
கோலாட்டம் கும்மியிலே
என் மனசை சேர்த்தடிச்சே...

பள்ளிக்கூட ஆண்டு விழா...
கரகமா, காவடியா...
கதகளியா, மோகினி ஆட்டமா...
ஒடிஸியா, குச்சுப்புடியா,,,
எதையாடப்போறே நீ...?

சந்திரப்பிரபை, சூர்யப்பிரபை,
நெத்திச்சுட்டி, ஜடைபில்லை,
சுற்றித்தச்ச காக்கரட்டை...
சுழன்றாடும் சாட்டை ஜடை ...
செதுக்கி வச்ச தங்கச் செலை....

பரதத்துலே தில்லானா
பதம் பிடிச்சு நீ ஆட
பார்த்துருந்த என்னை
வாசமில்லா காக்கரட்ட
வாசமாகி சுத்துதடி...

முல்லை

வரவேற்பறையில்
முகமகன்கள்கூறி
அவரவர் ப்ரபஞ்சத்தில்
ஆழ்ந்திருந்தோம்...

கணினித்திரையில்
அவசரச் செய்திகள்..
மயில் மேல் முருகனாய்
உலாவியில் சுற்றி
உடனுக்குடன் முடித்து
உலகு மீண்டோம்...

களைத்த கண்களும்
களைத்த கைகளும்
எந்திரம் போல
தினசரி வாழ்க்கை...

வீடு புகுதலும்
அலுவலகம் புகுதலும்
வருமானம் வரும்
வேட்கையில்லா உயிர்ப்பு...

கேபினில் இருந்து
நிமிர்ந்த ஒரு கணம்
உத்யோக நிமித்தம்
சிரிப்பதை விடுத்து
உள்ளன்போடு புன்னகைத்தாய்...

தெறித்த மின்னலில்
பச்சரிசிப்பற்களில்
உதிர்ந்த முல்லைகளில்
வசந்தத்தின் வாசனையில்
வாழும் வேட்கையில்
உயிர்த்தேன் நான்....

வியாழன், 24 செப்டம்பர், 2009

ஆவாரம் பூ

பொங்கலுக்குப் பொங்கல்
விடுமுறையில் ஊர் வாரேன்..
புது நெல்லு வாசத்தில் நீ
வெல்லமிட்ட பொங்கல் தின்ன...

காணும் பொங்கலன்னிக்கு
கன்னுப்புள்ளையும் நெக்கதிரும்
ஆவாரம் பூவும் சொமந்த காலம்
என் நெனைப்பில் ஓடுதடி...

கண்ணுக்குத் தெரியாத
கயிறுவச்சு இழுக்குறீயே....
மஞ்சு வெரட்ட விட்டுப்பிட்டு
அடி..! என் மஞ்சக்கெழங்கு ஒன்னோட
பூப்பறிக்க வந்தேன்டி....

கொப்பும் குலையுமா
கொள்ளைச் சிரிப்போட
காடாட்டம் பூத்திருக்கும்...
ஆவாரம்பூ அலைஅலையா...
என் அயித்தைமக ஒன்னப்போல...

கூட நெறைய அள்ளி வந்து
குதிர் எரம்பக் கொட்டி வச்சோம்...
யார் கூட எப்பிடியோ
ஒங்கூட நெறைஞ்சு மகிரும்...

அள்ள அள்ளக் கொறையாத
அழகுப்பாதகத்தி...
அடுத்த பொங்கலுக்குக் காத்துருக்கேன்
அடி..! சேர்ந்து நாம் பூப்பறிக்க...!

மகிழம்பூ

அக்ரஹாரத்தின்
நீண்ட தெருக்களில்
வாழையும் தென்னையும்
மாடும் கன்றும் செறிந்த
உன் வீட்டின் எல்லைச்
சுவரோரம் மகிழமரம்...

பூத்திருப்பது தெரியாவிட்டாலும்
முற்றத்தில் அமர்ந்து
உதிர்ந்த மகிழம்பூக்களை நீ
கோர்த்துக்கொண்டிருப்பது தெரியும்...

நெக்லஸ் வட்டங்களைப் போல
லாவகமாய் முடிச்சுப்போட்டுத்
தெருவின் விளிம்பில் இருக்கும்
ஆஞ்சநேயருக்கு கிழமை தவறாமல்
சாற்றி வந்தாய்...

பேதை பெதும்பை
அரிவை தெரிவை கடந்து
இளம்பெண்ணாய் மணமுடித்து
சென்றபின் ஹனுமார்
தனிமையிலே...

நெஞ்சினிலே உன் பூ அல்லாது
வெறும் வெண்ணைக்காப்புடன்...

உன் வீட்டைக் கடந்து செல்லும்
போதெல்லாம் உன் வாசமாய்
மகிழம்பூ வாசம்...

வாடாமல்லி

உருவத்தில் ஆணாகவும்
உள்ளத்தில் பெண்ணாகவும்
பருவ வேறுபாடு இல்லாத
பச்சிளம் குழந்தை நீ...

எல்லோருடனும் சேர்ந்து
வாழும் ஆசையில்
கதம்பத்தில் இணைந்தாய்...

தனித்துத் தெரிவது
உன் நிறம் மட்டுமல்ல
குரலும்தான்...

விதையில்லாமல்
பூ உதிரும் திசையெல்லாம்
பூத்துக்கொண்டே சென்றாய்...

சிகண்டியாகவும்...
பிருகன்னள்ளையாகவும்... .
பெண்மையிலும் போர்க்குணம்...
ஆண்மையிலும் நளினம்...

யாதுமான இறைவன்
நீயுமாகி நின்றான்...

புதன், 23 செப்டம்பர், 2009

செம்பருத்தீ

செம்பருத்தித் தைலத்தில்
தோய்ந்த என் கூந்தல்
மிகப்பிரியம் உனக்கு...

கார்மேகத்தையும்
கடலலைகளையும்
கைகளால் அளையும்
ஆசையில் நீ பின்தொடர...

நீ துரத்துவதுபோல்
நான் வேகமாய்
முன்னேறி...

காலப்பேழைக்குள்
ஒளிந்து கொண்டேன்...
கண்ணாமூச்சியில்
தேடிக்களைத்த நீ
தாடியுடன்...

எதிர்வரிசைக் குடியிருப்பில்
பற்றியெரிந்த தீ அணைக்க
பேழையை விட்டிறங்கி
மாடிக்கு வந்தேன்...

பற்றியெரியும் பெருந்தீ
ஒரு கண்ணிலும்
பரவசமான செம்பருத்தீ
இன்னொரு கண்ணிலும்
ஜொலிக்க நின்றாய் நீ....

மல்லிகை

கல்லூரி வகுப்பறை
நண்பர்கள் பேப்பர்
அம்புகளை எய்து
கொண்டிருந்தபோது...
நீ பார்வை
அம்புகளை எய்தாய்...

உன் பார்வை விடு
தூதில் ஒவ்வொன்றும்
மல்லிகையாய் மெத்தென்று
என் மனதில்...

உன் பார்வைகளில்
உதிர்ந்த மல்லிகைகளை
என் பார்வைகளில்
வாங்கிக் கோர்த்தபோது,
நம் காதலின் கிரீடம்
ஆனது அது..

அதை அணிந்து
உலா வந்தோம்
ஒளி வட்டம் போல
பார்வை வட்டம் சூடி...

செவ்வரளி

அநேகப் பூக்களை
மனிதர் சூட
தெய்வத்துக்கு மட்டுமே
உரிய பூ நீ...

சிவப்பு சிந்தனையிலும்
சித்தாந்தங்களிலும்
செந்நிறமாகவே
பிரசவிக்கப்பட்டவள் நீ...

விதைகளில் எல்லாம்
சயனைடு குப்பி
மாட்டியே பிறந்தாய்...

ஆன்மீகத்திலும்
வேதாந்தத்திலும்
உழன்ற நான் உனைக்
கைக்கொள்ள இயலாமல்
தெய்வத்துக்கும்
மனிதகுலத்துக்கும்
ஒப்புக் கொடுத்தேன்...

குமரி முனையில்
அம்மன் சூடிக்
கடலில் வீசிய
செவ்வரளி
கனல் மூடிய
செந்தீயாய்....

டேலியா

காவலர்களின் பாதுகாவலில்,
டில்லி முகல் கார்டனில்,
பனி பர்தாவில்,
பீட்ரூட் நிறத்தில்,
விரிந்த மயிலாய்....

பூக்களிலே புஷ்டியான
பூ நீதான்...
பிரிய மனமில்லாமல்
பிரிந்து வந்தேன்...

மெர்க்காராவின் எஸ்டேட்டில்,
யூக்கலிப்டஸ் மரங்களும்,
தேயிலைச் செடிகளும் சூழ,

இளஞ்சூரியனில்
பனி பர்தா விலகி
ஈரப் புன்சிரிப்பால்
எனை வரவேற்ற போது

குளிரை விழுங்கியதாய்
ஜிலீரென்றது
எனைப் பின்
தொடர்கிறாயோவென்று...

குளிர் பறைந்தது
எனை வரவேற்க
மழையிலும் பனியிலும்
பூத்துக் காத்திருக்கிறாயென்று...

செவ்வாய், 22 செப்டம்பர், 2009

தாமரைப்பூ

அல்லியும் ஆம்பலும்
குமுதமும் கொட்டிக்கிடக்கும்
குளத்தில் இறங்கி
என்னை மட்டும்
பறித்துச் சென்றாய்...

தனிமைப் படுத்தப்பட்டதாய்ப்
பதறினேன் நான்...

இதழ் இதழாய்
எனை விரித்து
சந்திர கலைகளும்
கங்கையும் வழியும்
உன் சிரசில் சூடினாய்.... .

தீபாராதனை ஒளியில்
கண்ணாடி மாளிகையில்
என் அழகே
எனக்கு வியப்பாய்....

தாழம் பூ

பூஜைக்கு
மறுக்கப்பட்டாலென்ன
பூப்படைந்தபெண்களின்
கூந்தலில்
மடல்மடலாய் நான்...

பிறைசடையில்
இருந்து நழுவி
ஜடை நாகங்களில்
குடியேறி...

சுவாசினிகளின்
மருதாணிக் கரங்களின்
வருடல்களில்
வெட்கத்துடன் நான்...

சூரிய காந்தி

நீ உதித்து
உலா செல்லும்
திசையெல்லாம்
உனைக் காண
முகம் திருப்பி
ஒயிலாகப்புன்னைகைத்து...

நான் மட்டும்
இரவெல்லாம்
தனித்திருந்து
விழித்திருந்து...

விடிந்ததும் தெரிந்தது
நீ ஆவலாய் ஓடிவந்து
அழுத கண்ணீர் என்மேல்
பனித்துளியாய்...

உணர்ந்து கொண்டேன்
எனைச் சுற்றும்
சூரியன் நீ...!!!

சாமந்தி

ஆடி மாசம்
அம்மன் கோயில்
கொடை...

மஞ்சள் பூசி
மஞ்சள் சூடி
மஞ்சள் அணிந்து
மகிமையாய் நீ...

பிரகாரம் எங்கும்
சிதறிக்கிடந்த
சாமந்திப் பூவிதழ்கள்
பேசிக்கொண்டன....

தம்மைத் தாமே
சூடியும் சுமந்தும்
அம்மனைச்
சுற்றி வந்ததாக...!!!

குல்மோஹர்

குல்மோஹரின்
ரத்தச் சிகப்புப்
பூக்களைப் போல
ஒளிர்ந்தது
உன் கண்களில்
என் மீதான காதல்....

கண்வழி
பொறி பட்டது போல்
குல்மோஹரைப்
பார்க்கும் போதெல்லாம்
பற்றி எரிகிறது மனசு....

ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

ரோஜா

நேற்றுப் பெய்த மழையில்
மாடியின் தளத்திலும்
கைப்பிடிசுவற்றிலும்
ஈரப்பூக்கள் பூத்துக்
கொண்டேயிருந்தன...

துணி எடுக்கச் சென்ற நான்
தன்னையுமறியாமல்
கன்னங்களை அழுந்தத்
துடைத்துக் கொண்டேன்...

நேற்று நீ இட்ட முத்தம்
ரோஜாவும் முட்களுமாய்
கன்னம் வழி கசிந்து
பூத்துக்கொண்டிருக்கிறதோவென்று

வெள்ளி, 18 செப்டம்பர், 2009

மனைவி

எந்நேரம் வந்தாலும்
எனக்காக கதவடியில்
காத்திருந்திருப்பாய்..

அதீதப்பேச்சால்
அயர வைத்தது போல்
அன்பாலும்...

பணிக்கான ஓட்டத்தில்
ஊர் விட்டு ஊர் ஓட
என்னுடனே துணை வருவாய்...

தனியாக நான் சென்றால்
என்னுடன் உன் இதயத்தையும்
இறைநம்பிக்கையையும்
என் துணையாய்
அனுப்பி வைப்பாய்...

என் நோவு கண்டால்
ஊர்ச்சாமி ஒன்றுவிடாமல்
பேர் சொல்லி கூப்பிட்டு
உளம்நடுங்க வேண்டி நிற்பாய்...

வகைவகையாய் உணவிட்டு
வந்த விருந்தோம்பி
வரும்விருந்துமோம்பி நிற்பாய்...

குழந்தைகளை படிப்போடும்
பண்போடும் வளர்த்திட்டாய்...

எப்போதும் சேர்ந்து இருக்க
முடியாமல் உன் பேச்சும்
பிரிந்து செல்ல இயலாமல்
உன் நேசமும் எனை அடிக்கும்
அளவுக்கதிகமாய்...

என்றாலும் எனக்கிங்கு
உன் போல ஒருவர் ஏது?
உனைவிட்டு இருந்தாலும்
உன்னுள்ளே நான் இருப்பேன்...!!!

விட்டில்

யார் தடுத்தும் கேளாது
மாயக்கனவுக்குள்
வீழ்ந்து கொண்டு...

வலைகளை விரித்து
எலிகளை இயக்கி...
இன்னும் எனக்கான
பொறிகளைப் பெருக்கி...

ட்விலைட்டின் வேம்பயர் நீ...
உன்னால் உறிஞ்சப்பட
கழுத்தெல்லாம் ரத்தம் சேமித்து...

உன் ஈர்ப்பு விசையாலே
உனைச் சுற்றும்
துணைக்கோளாய்...

உன் நெருப்புப் பொறிபட்டு
நான் கருகி வீழ்வேன்
என்றாலும் உன் கவர்ச்சி..
.
உன் சுயமும் என் சுயமும்
ஒன்றிலொன்று
அழிந்து கொண்டு...

மழைதுளி மட்டும் உண்ணும்
சாகரப் பட்சியாய்
மழையான உனக்கேங்கி...

பால் மட்டும் அருந்தும்
அன்னம் போல்
தனித்திருந்து...

நீ என்றன் பரமாத்மா...
நான் உந்தன் ஜீவாத்மா...
ஓடி ஒளியும் நாள் தீர்ந்து
உனை அடைவது எப்போது...???

வியாழன், 17 செப்டம்பர், 2009

காதல்

மகிழ்ச்சி குமிழ்குமிழாய்
காற்றில் பரவி
வீடு முழுதும்
பொங்கி வழிந்து...

கடலுள் களிக்கும்
டால்பின் மீனாய்
நீச்சல்லில்லாத
மிதக்கும் வட்டாய்...

இதயத்தில் இருந்து
வெடித்துக்கிளம்பி
பார்வைகள் வழியே
ரோஜாக்கள் விரிந்து...

அலையடித்த சிரிப்பு
இருவர் மேலும்
மேலும் மேலும்
மேலும் உரசி...

கஜலும் கவ்வாலியும்
காதில் ஊடுருவி...
கம்பீரமான ஆளுமையில்
கவனத்தை ஈர்த்து...

முகத்தின் ப்ரகாசத்தில்
வீடே ஜொலிப்பாய்...
காதலின் மணத்தில்
நிறைந்த வாசம்...
நெஞ்சத்தில் இதமாய்...

மூளையை இளக்கி
உள்ளுக்குள் வினோத சுனாமி...
உயிருக்குள் பூகம்பம்...
தவிர்க்க இயலாத தவிப்பே,
இதுதான் காதலா...?

புதன், 16 செப்டம்பர், 2009

நட்பு

எல்லா அளவு கோல்களாலும்
அளந்த பின்னும் தொடங்கியது
நமது நட்பு...

தனித்தனியே ஜனித்தாலும்
எண்ணங்களால் இணைந்தோம்
நீண்ட மௌனத்துக்குப்பின்...

பிறகு நாம் நிறுத்தாமல் பேசியதை
இரவு நேரக்கூகையும் அர்த்தசாமச் சேவலும்
விடிகாலைக்காக்கையும் பிறைநிலவும்
பௌர்ணமியும் சொல்லும்...

துன்பங்கள் பகிரப்பட்டதாகவும்
இன்பங்கள் பெருகி விட்டதாகவும்
கூடுவிட்டுக்கூடு பாய்ந்த உயிர்
நாமெனவும் நம்பினோம்...

இன்னும் பகிரப்படாத துன்பங்கள்
ஆழ்மன வடுவாய் ஞாபகங்களில்...

என்னைக்கண்டதும் புன்னகையை
வலிய அணிந்து கொள்கிறாய்..
நேர்த்தியாக உடையணியும் நீ
ஏனோதானோவென்று....

மலுக்கிக் கொள்கிறாயோ என
நான் துயரப்பட நீயோ
மருகிக்கொண்டு இருந்திருக்கிறாய்....

காதலர்களுக்கும் மட்டுமல்ல..
நண்பர்களுக்குள்ளும் பிரிவு
துன்பத்தைத் தருகிறது...

சரியாகப் பேசாமல்
கைகோர்த்து அலையாமல்
உணவு கூட உண்ணப்பிடிக்காமல்...

நதியலையாய் இருந்த நம் வீச்சு
குளம் போலத் தேங்கிவிட்டது...
அலையேதும் இல்லாமல்...

நான் நெருங்க நீ விலக
உன் பிரிவு நெருப்பள்ளிப் போட்டதுபோல்
நெஞ்செல்லாம் வேக்காளம்.....

உன் துக்கம் தெரிந்தாலும்
துடைக்க இயலா நட்பெதற்கு...

ஜென்மஜென்மமாய் நான் உன்னைத்
தொடர்வதும் பின் பிரிந்து அழுவதும் ஏன்.?
நட்பென்றும், உறவென்றும், காதலென்றும்...

ஏமாறாதிருக்க இப்போதே சொல்லிவிடு
அடுத்தும் ஒரு ஜென்மமெடுத்து
நான் உன்னைப்பின் தொடராதிருக்க...

திங்கள், 14 செப்டம்பர், 2009

முகமூடி

பஞ்சுமிட்டாய்க்காரனும்
ஜவ்வுமிட்டாய்க்காரனுமாய்
ஈர்க்கும் கதைசொல்லி...

தெரு கடந்து சென்றபின்னும்
கைக்கெடிகாரம் ஒட்டிய
கையெல்லாம் சர்க்கரைப்பாகு...

தோல்பாவைக்கூத்துக்களில்
கயிறு கட்டி அவன் ஆட்டுவிக்க
காண அமரும் நானும் முகமூடியுடன்...

கதகளி ஆட்டத்திலே
ஒப்பனையாய் அவன் ஆட
காணும் நானும்
வர்ணங்கசியும் முகத்துடன்...

பாலைவனத்திலே ஒட்டகத்தில்
அவன் பயணித்தால்
என் முகமெல்லாம் மணல்
நறநறப்பாய்...

அருவிக்கரை மழையில்
அவன் நனைந்தால்
என் முகமெங்கும் ஈரம்
பிசுபிசுப்பாய்...

என்னுடைய எண்ணங்களையும்
வண்ணங்களில் குழைத்து
அவனே மீட்டுவதால்
வீணை உருவிலிருந்த நானும்
கொட்டாங்கச்சி வாத்தியமாய்
உருவுக்கொவ்வா சத்தத்தோடு...

சமேலியைப் போன்ற
பலநிற முகங்காட்டும்
ஹோலியின் சஹேலி நான்...

எந்தக் கதைசொல்லி வந்தாலும்
ஊருக்கென்றும் ஆளுக்கென்றும்
அணிந்து கதை கேட்க
விதவிதமாய் முகமூடி....

பொய்யான புனைவோ, நிஜமோ,
வகுப்பிலோ, வீட்டிலோ, வெளியிலோ,
நண்பனோ, யாத்ரீகனோ
கதை சொல்லியின்
சூத்திரக்கயிற்றில்
பொம்மையாய் நான்...

வீட்டில் குவிந்து கிடக்கும்
முகமூடிகளுக்குள்ளே
கழற்றிப்போட்டஎன் முகம்
எதுவென்று தேடுகிறேன்....

ஞாயிறு, 13 செப்டம்பர், 2009

வரம்

ஒளிவட்டம் சுழல
இறகை உதிர்த்து
தேவதை பிறந்தாள்
பூங்கொத்துச் சிரிப்புடன்...

ரோஜாப் பாதம்
பஞ்சு இளம் மேனி
நஞ்சில் உதித்த
பாற்குட தேவதை....

பளிங்குக் கண்கள் மிளிர
ஒளிரும் கறுப்பு நிலவுகள்
மினுமினுப்பாய்...
மாதுளம் பூக்கள் கன்னத்தில்...

நட்க்ஷத்திரங்கள் குவியலாய்
என் வாசல் சுட்டியபடி...
தரிசன வரிசையில்
பரிசுகளுடன்....

வளரும் போதே
என்னை வளர்த்தாள்...
ஆணிவேராய்
நானும் கிளைத்தேன். ..

பதின்பருவங்களில் புஷ்பித்தபோது
உபாதை நினைத்து
உளைந்த என்னை
உரமூட்டினாள்...

பருவத்தின் சூரியன்
அவளைச் சுற்றி
கோள்கள் தங்கள்
பாதை மாற்றி...

அறுபத்து நான்கைவிட
அதிகம் கற்று
அதிகம் ஈட்டி
அகிலம் சுற்றி...

திருமணம் எய்தித்
தாயாய் ஆனாள்..
ஜனனத்தின் விளிம்பில்
என் உயிர் அலைய...

எல்லையிலாத்துயர் முடிய
வெடித்துக்கிளம்பிய
விதை மொட்டுப்போல்

இன்னொரு தேவதை
பரிசாய்க்கிடைத்தாள்..!!
புதியதோர் பூங்கொத்து...!!

உய்விக்க வந்த
ஒப்பில்லா சீமாட்டி...!!!

பால் வீதியே
என் வீட்டு வாசலில்
பிரபஞ்சத்தையே பரிசாக்கி...!!!

பேத்தியாய் மகளாய்
தாயாய் ஆகி
பாட்டியாய் நானும்
திரும்ப ஜனித்தேன்...

நிலமாய் இருப்பதும்
வேராய் இருப்பதும்
கிளைகள் ஊன்றி
ஆலமாய் விரிவதும்
தேவதைகளுக்கே கிடைத்த வரம்...!!!

மழை

குளிரும் மழையும் பொருத மாலை,
முணுமுணு தூறலில் சுவரின் ஓரம்,
சொட்டுச்சொட்டாய் தண்ணீர்க்க்ரீடம்....!

மலைமுகடில் முகமறைத்த
இளஞ்சிறு சூரியன் எதிர்ப்பட..
என் மகனின் வண்ணக்கிறுக்கலாய்
எதிர்சுவர் வானில் வானவில்...!

திரைத்துணியின் மஞ்சள் ஆரஞ்ச் கொடிகளாய்
மலைமுகடெங்கும் தங்கம் தழுவிய
தடம் கதகதப்பாய்...

தோட்டம் எங்கும் ஜாதிமல்லி,
சந்தனமுல்லை வாசம்...
சூழ்ந்த குளிர்ந்த சிரிப்பாய்...!!

ஈரத் தரையில் எங்கிருந்தோ
விதையில்லாமல் முளைத்ததுபோல்
துள்ளின தவளைகள்....!!

கூதிர்காலத்தில் இளகின நிலத்தில்
மிளிர்ந்தன மண்புழு...
இயற்கை விவசாயம்...!!

புதுப்புது உயிர்களும் புதுப்புதுப்
பயிர்களும் கிளைக்க வேண்டி
இறைவன் அருளிய இயற்கைப்பாசனம்..!!

இரவுப்பூச்சிகளின் நன்றி கானம்...
இசைக்கு அடங்கா, காதுகொள்ளா,
இரும்பூதெய்திய நவீன கானா...!!!

வெது வெது தரையில் பாதுகாப்பாக....
உலக இன்பமெல்லாம் சுற்றிக்கிடக்க...
மானிடராய்ப் பிறந்த மஹத்துவத்தில்...!!!

சனி, 12 செப்டம்பர், 2009

காந்தப்புலன்

சூரியனும் வெளிச்சமுமாய்
உலகைப் புணர்ந்து
உயிர்கள் பெருக்கி...

வால்நட்சத்திரங்கள்விழுங்கும்
வியாழன் கோளாய்
என்னைப் பதுக்கி...

நிலவாய் வந்து
அலையான என்
உன்மத்தம் பெருக்கி...

மழையாய்ப்பொழிந்து
தாகம் அடக்கி
எழிலாய் ஆக்கி ...

காற்றுக்கவசமாய்
என் சுயம் போர்த்தி
கருகி விடாமல்...

பனிமுத்தம் ஈந்து
உயிர்விதை தந்து
துளிர்விடச்செய்து...

தட்பவெப்பம்
தாளாத என்னை
உள்ளங்கையில் வளர்த்து...

உலகம் உள்ளளவும்
உருளச்செய்யும்
அச்சாணியாய்...

ஆதாரமாய்
ஈர்ப்புவிசையாய்
காந்தப்புலனான உன்னுள் நான்...!!

வெள்ளி, 11 செப்டம்பர், 2009

குடி மகன்கள்

தினமும் கேட்கும் பதட்டமான சப்தங்கள் இன்றும்..
எங்கள் அவென்யுவின் எதிர்வரிசை காரை வீட்டை
ஒட்டிய ஒலைக்குடிசையிலிருந்து....

வாழ்வோடும்., வியாதியுற்ற குழந்தையோடும்.,
போராடும் அவள் வாழ்க்கைப்பட்டவனோடும்
போராடிக்கொண்டு...

ஆணாதிக்கக்கொம்புகள் முளைத்த மூர்க்கமிருகமாய்
அருந்திய சாராயம் தந்த அசுர பலத்தில் அவன்...
கொண்டையிட்ட பெண்புலியாய் அவள்...

ஒழுக்கம் சார்ந்த வசவுகள்.,
காற்றில் பரவிய விஷவாயுவாய்.,
நாற்றம் இன்று சகிக்க இயலாததாய்...

பங்குச் சந்தை சரிந்து லாபமோ நட்டமோ.,
எதைக்கொண்டாடவும் ஸ்டார் ஓட்டல்களில்
நண்பர்களுடன் அருந்திய விஸ்கி வாசனையுடன்
வரும் கணவர்களை வரவேற்கும் மேன்மக்கள்...
குழந்தைகளை காதுபொத்தி அழைத்துச்சென்றனர்..
தங்கள் ஒலி வெளியிடாத இறுகிய கதவுகளுக்குள்..

கதவைத் திறக்கும் போது வெளிப்படும்
சென்ட் வாசத்தில் சண்டையிட்ட வார்த்தைகளும்
கலந்து வருவதாய்...

நாளையும் இதெல்லாம் நடக்கலாம்...
ஆனாலும் சிறிது நேரத்தில் வாலறுந்த நரி போல்
கிடந்த அவனுக்குச் சட்டியில் சோறு தருகிறாள்...

ஆலைவாய்க் கரும்பாய்க் கிடந்தாலும்
அவனும் திருந்தப்போவது இல்லை...
அவளும் மாறப்போவது இல்லை....

புதன், 9 செப்டம்பர், 2009

முருங்கை மரம்

காலையின் பசுமை வணக்கம்...
காக்கைகளின் ஊஞ்சல்...
வண்டுகளின் சாமகானம்...

கிளைக்கரங்களால் தழுவுவது
போல் ஆரவார வரவேற்பு..,
பூக்களெனும் புன்னகையும்,
காய்கள் எனும் கனிவும் காட்டி..

இலைகளும் காய்களும்
இரத்த விருத்தி புரத விருத்தி..
பூக்களையும் புசிப்போம்
உதாசீனமும் செய்வோம்..

வாய்க்கு உணவாகலாம்..
வாசலில் மட்டும் ஆகாது...
பசுமைக்கும் உண்டோ பகை...

வேதாளம் உண்டோ
வேண்டிய மட்டும் தேடினேன்..
தட்டுப்படவேயில்லை....
எந்த வழியாகவும்
மூதேவியும் வரவில்லை...

காற்றின் அசைவில்
தனக்குத்தானே தாலாட்டலும்,
தலையாட்டலுமாய்...

நடுஇரவில் விழிக்கும்போதும்,
ஜன்னல்வழி நிலவொளியில்,
ஆதரவாய் கரமசைத்து...

பறித்தாலும் உடைத்தாலும்
வெட்டினாலும் மீண்டும்
எழுந்து கம்பீரமாய்...
எல்லாவற்றுடனும் சமரசம்...

கிடைத்த இடத்தில்
வேர் பாவி..
தண்ணீரைத்தானே
கண்டடைந்து...
சூல்கொண்டு ப்ரசவித்து...

மனிதருக்கும்
மாக்களுக்கும் உணவாகி...
வசந்த ருதுவில்
புஷ்பித்துக் காயாகி..
இலையுதிர் காலத்திலும்
இலையாவது ஈந்து...

உருவிக்கொள்ளும்
மனிதக்கரத்துக்கும் உரமாகி..
ஒற்றைக்கால் தவமாகி..

கூடவே வசிக்கின்ற
ஓர் உயிராய்...
இன்பத்தில் கூத்தாடி
துன்பத்தில் அமைதியாய்
கன்னம் வருடி...

உபயோகித்து வெறுத்தாலும்..,
ஒறுத்தாரைப் பொறுத்து..,
உன் போல் தன்னையே பிறர்க்கீந்து
வாழ வரம் கொடு...!!!

செவ்வாய், 8 செப்டம்பர், 2009

வாஸ்து

வாஸ்துப்படிக்
கட்டிய வீட்டில் மனைவி..,
வெளி நாட்டில் கணவன்...!!!

எமக்குத் தொழில் எழுத்து

அதிகமாய் எழுதிய
அலெக்ஸாண்டர் டூமாஸும்...
ஆத்ம சிந்தனையில்
மார்க்க அரேலியரும்
எனை ஈர்க்க...

ஷேக்ஸ்பியரும், தாகூரும்...
பார்த்திபன் கனவும்,
பொன்னியின் செல்வனும்
எனை மயக்க...

ஏழைபடும் பாடும்,
குற்றமும் தண்டனையும்
எழுத அழைக்க...

கண்ணதாசனும், தபூசங்கரும்
உரமூட்ட... யானறிந்தவற்றை
பகிர வந்தேன்.....!!!!

சுஜாதா, ஜெயகாந்தன்,
சுந்தர ராமசாமி, ஸ்டெல்லா புரூஸ்,
லா.ச.ரா, தி. ஜா.ரா.,

அசோகமித்திரன், புதுமைப்பித்தன்,
ஜெய மோகன், நாஞ்சில் நாடன்,
எஸ்.ராமகிருஷ்ணன்,

தஸ்தாயெவ்ஸ்கி
என்று எத்தனை கோடி
இன்பம் வைத்தாய் இறைவா....!!!

மனக்குகை ஓவியங்களாகவும்,
உன்னத உணர்ச்சிகளாகவும்,
உளச் சிக்கல்களையும்
உறவுச் செறிவுகளையும்
உரைக்கும் வரைவுகளாயும்..,

கடலுள் தெரியும்
பனிப்பாறைகளாய்,
தீவுகளாயும், கூட்டங்களாயும்
உலவும் மனித மனதின்
விகாரங்களையும்,

நடப்புகளை விசனிக்கும்
நல்மனங்களையும்,
காலங்களின் உருவங்களைப்
ப்ரதிபலிக்கும் கண்ணாடியாகவும்,

மனத் தேட்டத்துக்கும்,
நன்னம்பிக்கைக்கும்
இட்டுச் செல்லும்
உருவற்ற உருவாகவும்..,

எண்ணங்களை புதுப்பிக்கும்
சிந்தனை சேமிப்பாகவும் இருப்பதால்,
என் சுயம் வெளிப்படுத்தவும்,

சிந்தனைகளை சிற்பமாக்கவும்,
எண்ணங்களை அறிவிக்கவும்
எழுத வந்தேன்...

"எமக்குத் தொழில் எழுத்து" என்ற
பாரதியின் வாக்குதனை
ஏற்றிட்டேன்....!

உங்கள் எண்ணங்களில்
மகர தீபம்
ஏற்றாவிட்டலும்

அகல் விளக்காவது
ஒளிர வைக்கமுடியும்
என்ற நம்பிக்கையில்...!!!

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

சரஸ்வதி வணக்கம்

பேரன்பிற்கினியவளே....
பெருமதிப்பிற்குரியவளே...
கனிவான சரஸ்வதியே...

ஆசிரியப்பெருந்தகையே...
என் இனிய சுசீலாம்மா....!!!
கம்பீரக் குரலழகி... !!!
உலகமெல்லாம் உன்
வீணை ஒலி...!!!

தலை நகரில் உறைந்துள்ள
எங்கள் தலைவியே...
ஏடும் எழுத்தாணியும் கொண்டு
இன்னும் நீயே எழுதுகின்றாய்...

உன்னிடம் கற்ற
நாங்களின்னும் மழலையர்தாம்...
நடைபயின்று வந்தவளை
நடனமாட வைத்து விட்டாய்....

கவி எழுதி வந்தவளை
தினம் படித்து ஊக்குவித்து
தவறுகளைத் தகவமைத்து
வடிவாக வடிவமைத்தாய்...

தமிழின் தாழ்
தளைப்பட்டவளே...
தமிழான தமிழே...
நின் தாழ் சரணம்...

என் வலைப்பூவின்
முன்னோடி...
இன்றும் என் வழி காட்டி...

நீ என்னைக்
கண்டு பிடித்தது போலும்,
நான் உன்னைக்
கண்டடைந்தது போலும்,

தேடி வருவோர்
ஒவ்வொருவருக்கும்
கிடைக்கட்டும்... உன்
போன்ற கலைவாணி...!!!

நான் கொய்யும்
ஒவ்வொரு பூவும்
உன் பாதம் அர்ப்பணித்தேன்...
எழிலான என் அரசி..!!!

இந்த ஆசிரியர் தினத்தில்
மனம் நிறைய
வாழ்த்துகின்றேன்...
வாழ்க நீ தேவி
நூறாண்டு....!!!!!

விருந்து

பவள மல்லியும்,
மகிழம் பூக்களும்
இரவுச்சரத்தை வாசமேற்ற...

தலை கலைந்த பனையும்
நிலவு வருடும் தென்னையும்
சிற்பமாக...

குழந்தைகள் சிரிப்பை
அள்ளி விசிறியதாய்
நட்சத்திரங்களும்...

சில்வண்டின் ரீங்காரமும்,
கருங்கல்லும் விழிக்கும்
செம்மண் சாலையில்...

குற்றுச் செடிகளும்,
குறுக்கில் ஓடும் ஊர்வன,
குரைத்து அலையும்
நாய்கள் தாண்டி...

அண்டை வீட்டில் நடக்கும்
தனது குடும்பத்துக்கான
விருந்தில் கலந்து கொள்ள
அயர்ந்தபோது...

சிறு வயதில் கை பிடித்து
பள்ளி அழைத்துச் சென்ற மகன்
ஆதரவாய்க் கைபிடித்து
அழைத்துச் சென்ற போது...

காற்றின் வழி செல்லும்
சருகு போல் மனம் மாற...
அலையோடு செல்லும்
நுரைபோல் உடல் மாற...
கண்களின் வழியே
தாய்மை கசிய...

இருப்பதற்கும்
வாழ்வதற்குமான பற்றுக்கோடு
இதயத்தில் தளும்ப...

பால் ஊற்றிய
நிலவுப் பாதையில்...
நிலத்தில் போகிறோமோ,
நிலவில் போகிறோமோ
என தாய் நெகிழ...

உணர்வின் கதகதப்பில்...
உறவின் கலகலப்பில்...
நெருங்கி வந்தது
உணவிற்கான வீடு..!