எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 28 மே, 2011

இறவாப் புகழ் பெற்ற அனுராதா. போராடி ஜெயித்த பெண்கள் ( 9).




இறந்தும் இறவாப் புகழ் பெற்ற ஒருவரை பற்றி இந்த மாதம் பார்ப்போம்.. வாழும் போது போராடியவர் உண்டு.. வாழ்விலும் போராடி., இறந்த பின்னும் மனித குலத்துக்கு தன் உடலையும் ., கண்ணையும் தானமாய் வழங்கி இருக்கும் அனுராதாதான் அவர்.


அனுராதாவின் வயது 47. சென்னையில்தான் பிறப்பு வளர்ப்பு எல்லாம். எல்லாக் குழந்தைகளையும் போலத்தான் வளர்ந்தார். இவருக்கு ஒரு தம்பி ஒரு தங்கை.. அம்மா அப்பா ஒற்றுமை இல்லாத காரணத்தால் அம்மா குடும்பத்தை விட்டு பிள்ளைகளை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். பாட்டி வீட்டிலிருந்து பள்ளி செல்லும் பருவத்தில் ஒரு முறை இவர் கீழே விழுந்து அடிபட்டார். அப்போதுதான் தெரிந்தது இவருக்கு மஸ்குலர் டிஸ்ட்ரோஃபி ( MUSCULAR DISTROPHY) என்னும் சதை இறுகி செயல்பாடு இழக்கும் நோய் உள்ளது என்று. இது போலியோ மாதிரி முதலில் கால் சதையை செயலிழக்கச் செய்யும்.

கிட்டத்தட்ட 16 வயது இருக்கும்போது இது கண்டு பிடிக்கப்பட்டது. அப்போதுதான் தெரிந்தது இதற்கு மருத்துவத் தீர்வு என்பது இல்லை என்பது. இதனோடே பருவம் அடைந்தார். காலில் சதை இறுக்க நோயால் அவதிப் பட நேர்ந்ததால் எதை எடுத்தாலும் அடுத்தவர் உதவியை எதிர் நோக்கியே இருக்க வேண்டி இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நடக்க இயலாமல் கால் சதை செயலிழந்து கொண்டிருந்தது. குளிப்பது., டாய்லெட் செல்வது என்பது அடுத்தவர் உதவியோடுதான். வீட்டில் அம்மா இருந்தால் பரவாயில்லை.. அடுத்தவர்களை எத்தனை காலத்துக்கு எதிர்பார்ப்பது.

எனவே கொஞ்ச காலத்துக்கு பிறகு வீட்டில் இருக்க இயலாமல் ஆந்திர மஹிளா சபாவில் ( சத்யா தியேட்டருக்கு எதிரில் உள்ளது) சென்று சேர்க்கப்பட்டார். கம்ப்யூட்டர் கற்றுக் கொண்டு பிறருக்கும் சொல்லிக் கொடுத்தார்.. அங்கும் அவர் சம்பாதித்ததை விட மஹிளா சபா அவருக்காக அதிகம் செலவு செய்து கவனித்துக் கொண்டது.

தனக்கென ஒரு ஸ்டூலை சக்கரங்களோடு செய்து தன் வேலைகள் செய்வது., குளிப்பது என தன்னை அவரே கவனித்துக் கொண்டார். இந்த நோய் கொஞ்சம் கொஞ்சமாக கால்களில் இருந்து கை தசைகள் மற்றைய உறுப்புகளையும் பாதித்து விடும். என தெரிந்தது. நுரையீரல் வரை வந்து விட்டால் கஷ்டம்தான்..

கிட்டத்தட்ட 4 வருடங்களுக்கு முன் இந்த நோயால் தீவிரமாக பாதிப்படைந்து என்னை கருணைக் கொலை செய்யுங்கள் என குடும்பத்தினரிடமும் மஹிளா சபாவிடமு்ம் கேட்க ஆரம்பித்தார் இவர். இதை அறிந்த விஜய் டி வியின் கதை அல்ல நிஜம் டீம் சென்று இவருடைய நிலையை உலகுக்கு சொல்ல நினைத்தது.

இதிலிருந்து இவரைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கதை எல்ல நிஜம் டீமை சேர்ந்த எம். கார்த்திகேயன் மற்றும் அருண் இவர்கள் மூலம் இவர் முதல்வரை சந்தித்து தன் போன்றோருக்கு உதவ அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்க நினைத்தார்.



ஹோம் ஸ்வீட் ஹோமை சேர்ந்த டாக்டர் வசந்தி பாபுவும்., கதை அல்ல நிஜம் டீமும் இணைந்து இவரை கோட்டைக்கு க்ளோபல் ஹாஸ்பிட்டல் ஆம்புலன்ஸ் மூலம் கலைஞரை சந்திக்க அழைத்துச் சென்றார்கள்.

அங்கு அவர் முதல்வர் கலைஞரிடம் தன்னைப் போல இந்த நோயால் தாக்கப்பட்டவருக்கு மருந்துகள் கண்டு பிடிக்கவும்., மற்றும் (இவர்களுக்கு கல்வி கற்றுக் கொள்ளும் இடங்கள் இருக்கிறது . ஆனால் தங்குமிடங்கள் இல்லை .. அதை உருவாக்கி) குடும்பத்தில் இருக்க முடியாதவர்களுக்கு ஹாஸ்டல்கள் மற்றும் ஹாஸ்பிட்டல்கள் தனியாக உருவாக்கிக் கொடுக்கும் படியும் கோரிக்கை வைத்துள்ளார்.

முதல்வர் கருணநிதி அவர்களும் இவரின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அதன்படி செய்வதாக உறுதி அளித்துள்ளார். இவரின் கதையை விஜய் டி வியின் கதை அல்ல நிஜம் குழு இவர் சொந்தங்களை எல்லாம் அழைத்து ஒரு நிகழ்ச்சியாக நடத்தியது.

தான் இறக்குமுன் பார்க்க ஆசைப்பட்டதாக இவர் கூறிய சில பிரபலங்களையும் இவரின் அம்மாவையும் பார்க்க கதை அல்ல நிஜம் குழு ஏற்பாடு செய்தது. இவரின் அம்மா., வகுப்பு ஆசிரியை., மத்திய சமூக நலத்துறை அமைச்சர் நெப்போலியன்., நடிகை ரேவதி., த்ரிஷா., முதலமைச்சர் கலைஞர் ஆகியோர்.

இதில் இவர் முதல்வரை முதலில் சந்தித்தார். அதுவும் கதை அல்ல நிஜம் நிகழ்ச்சியில் ஒலிபரப்பானது. பின் நடிகை த்ரிஷா., ரேவதி., நெப்போலியன்., பள்ளியில் படித்த வகுப்பு ஆசிரியை .,ஆகியோரை சந்தித்தார்.

அப்போது வந்த இவரின் தம்பியும் அன்னையும் பின்பு வரவுமில்லை உதவி செய்யவுமில்லை.. ஒரு குழந்தைக்கு தாய் இருந்தால்தான் சிறப்பு. தாய் இருந்தும் இப்படி கவனிக்கப்படாமல் இருப்பது கொடுமை. இருந்தும் இவர் மன உறுதியாலேயே இத்தனை வருடங்கள் தன் நோயையும் தாங்கிக் கொண்டு எதிர் நீச்சல் போட்டு வாழ்ந்திருக்கிறார். நல்ல குடும்பச் சூழல் இருந்து அம்மாவும் கூட இருந்திருந்தால் இன்னும் பல வருடம் வாழ்ந்திருப்பார்.

தன்னைப் பராமரித்துக் கொள்ள அதிகம் செலவு செய்ய முடியாத காரணத்தாலும் நோயின் தீவிரத்தாலும்தான் இவர் தன்னைக் கருணைக் கொலை செய்து விடுமாறு கேட்டார்.. இவருக்கு உதவுவதாக சொன்ன எவரும் பின் சொன்ன அளவு உதவியும் செய்யவில்லை.

நோய் தீவிரமடைந்து நுரையீரலையும்., இதயத்தையும் தாக்கியது. அதற்கு முன் இவர் தன் கண்ணையும் உடலையும் தானமளிக்கும் படி கேட்டுக் கொண்டார். தன் உடலை ஆராய்ச்சி செய்து இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் படி கேட்டுக் கொண்டார். அதன் படி இவர் கண் சங்கர நேத்ரலயாவுக்கும்., உடல் ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் வழங்கப் பட்டது.

இத்தனை உபாதைகளோடும் இத்தனை வருடங்கள் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து எதிர்நீச்சல் போட்டு பின் இறப்புக்கும் பின்னும் வாழும் கண்களோடும் ஆராய்ச்சிக்காக பாதுகாப்பட்டு உடலாயும் இருக்கும் இவர் என்னைப் பொறுத்த வரையில் இன்னும் இறக்கவில்லை. இது போன்ற நோய்கள் கண்டறியப்பட இறந்தும் இறவாமல் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.

அனு தனக்காக வாழும் மனிதர்கள் மத்தியில் எல்லா மனிதர்களுக்காகவும் இறந்தும் வாழ்கிறீர்கள். உங்கள் சேவைகாக மனித குலமே உங்களைப் பாராட்டுகிறது.




13 கருத்துகள்:

  1. உண்மைதான் அவரின் புகழ் காலமெல்லாம் நீங்காமல் நிலைத்திருக்கும், அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்

    பதிலளிநீக்கு
  2. இதைப்படிக்கும்போதே மிகவும் வருத்தமாக இருந்தது. எவ்வளவு ஒரு சோதனை. எத்தனைத்தன்னம்பிக்கையோடு வாழ்ந்துள்ளார்கள். She is Very Great.

    அவரின் தாயாரும் அவரைக்கைவிட்டது தான் மிகவும் கொடுமையானது.

    //இத்தனை உபாதைகளோடும் இத்தனை வருடங்கள் தன்னம்பிக்கையோடு வாழ்ந்து எதிர்நீச்சல் போட்டு பின் இறப்புக்கும் பின்னும் வாழும் கண்களோடும் ஆராய்ச்சிக்காக பாதுகாப்பட்டு உடலாயும் இருக்கும் இவர் என்னைப் பொறுத்த வரையில் இன்னும் இறக்கவில்லை//

    ஆம். அவ்ர் இன்னும் புகழோடு வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறார்.
    அவரின் உடல்தானம் மனிதநேயம் மிக்கது.

    பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அனு தனக்காக வாழும் மனிதர்கள் மத்தியில் எல்லா மனிதர்களுக்காகவும் இறந்தும் வாழ்கிறீர்கள். உங்கள் சேவைகாக மனித குலமே உங்களைப் பாராட்டுகிறது.பதிவுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. ஆழ்ந்த அனுதாபங்கள்.
    மரணம் அவருக்கு விடுதலை அளித்து விட்டது.

    பதிலளிநீக்கு
  5. அவர் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்
    http://zenguna.blogspot.com

    பதிலளிநீக்கு
  6. thanks your comments for my today's post.
    i will see the film "FAST FORWARD AND TAKE THE LEAD" asap.

    பதிலளிநீக்கு
  7. கட்டுரையை பத்திரிகையில் படித்து மனம் கனத்துப்போய்விட்டது.

    பதிலளிநீக்கு
  8. மறக்க கூடாத, மறக்கவே முடியாத மனிதராக.

    பதிலளிநீக்கு
  9. மனத் திண்மைக்கு ஒருவர் உதாரணம்; அவர் குடும்பத்தார் மனிதநேயமும் பாசமும் குறைந்து வரும் சமுதாயத்துக்கு உதாரணம்!!

    பதிலளிநீக்கு
  10. மிகவும் உருக்கமான கட்டுரை..ஆழ்ந்த அனுதாபங்கள்.

    பதிலளிநீக்கு
  11. அவரின் ஆத்மா..சாந்தியடைய.. பிரார்த்திக்கிறேன்..

    பதிலளிநீக்கு
  12. நன்றி இரவு வானம்

    நன்றி கோபால் சார்

    நன்றி மாலதி

    நன்றி ரத்னவேல் சார்

    நன்றி குணசேகரன்

    நன்றி ஸாதிகா

    நன்றி ரமேஷ்

    நன்றி மாதவி

    நன்றி ஜிஜி

    நன்றி விஜி

    நன்றி செந்தில்

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...