12.ஐவகைப் புற்றுநோய்களும் சிகிச்சைமுறைகளும்
மகளிர்க்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானவை மார்பகப் புற்றுநோய்களும், கருப்பைப் புற்றுநோய்களும் ஆகும். கருப்பைப் புற்றுநோய் ஏற்படுவதற்கு எது காரணம் என்று இனம் கண்டுபிடிக்கப்படவில்லை. மரபுரீதியான கோளாறுகள், ஹார்மோன் குறைபாடு, உடல் பருமன் போன்ற காரணங்களால் கர்ப்பப்பைக் கட்டிகள் உருவாகின்றன. கர்ப்பப்பை கட்டியின் அளவு, எண்ணிக்கை ஆகியவற்றைப் பொறுத்து இதன் அறிகுறிகள் மாறுபடுகின்றன. இவற்றில் தீங்கற்ற கட்டிகளும், தீங்கு உருவாக்கும் புற்றுநோய்க் கட்டிகளும் அடக்கம்.
இளம்பெண்களை விட அறுபது வயதான பெண்களே கருப்பைப் புற்றுநோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பாலூட்டும் தாய்மார்களுக்கு மார்பகப்புற்றும் கருப்பைப்புற்றும் ஏற்படுவது குறைவு என்கிறது ஒரு புள்ளிவிபரம். பொதுவாகத் தாய்ப்பால் ஊட்டும்போது கர்ப்பப்பையின் வாய் சுருங்கித் தசைகள் இயல்பு நிலைக்குத் திரும்புகின்றன. உடலுறவின் போது ரத்தக்கசிவு, மாதவிடாய் முற்றிலும் நின்ற சில ஆண்டுகளுக்குப் பிறகு இரத்தப்போக்கு, மாதவிடாய்க்கு இடையே இரத்தப் போக்கு ஆகியன ஏற்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.