அழகியை மீட்ட அழகி
”காதல் என்பது எதுவரை.. கல்யாண காலம் வரும்வரை”
என்று ஜெமினியும் சந்திரபாபுவும் பாடி ஆடிக்கொண்டிருந்தார்கள். யானைகள் செயின்போலக்
கோர்த்தும் வரிசையாகவும் தும்பிக்கை பிடித்தும் அசைந்தாடி வந்துகொண்டிருந்தன. அழகியின்
தந்தை செந்தில்நாதன் முகமலர்ச்சியோடும் சிறிது கவலையோடும் அமர்ந்திருந்தார்.
அவர் கையசைக்கவும் ஹாலில் இருந்த
டிவியை ரிமோட் கொண்டு அணைத்துவிட்டுச் சென்றான் பணியாள். அவரது மனைவியும் மகனும் கூட
அமர்ந்திருந்தார்கள். அழகி தெளிவில்லாத முகத்தோடு நீரில் நனைந்து கசங்கிய ஒரு பூங்கொத்துப்
போல அமர்ந்திருந்தாள். இன்னும் கூட ஹார்மோன்களை இசைபாடத் தூண்டும் அவளது அழகு ஸாமுக்குப்
பிரமிப்பூட்டியது.
கல்யாணகாலம் வரும்வரைதானா காதல்.. என யோசித்தபடி செந்தில்நாதன் அருகில் அமர்ந்திருந்தான் ஸாம். அவனுக்கும் மிகுந்த மகிழ்ச்சியாகவும் சிறிது குழப்பமாகவும் இருந்தது. அழகியுடனான காதல் வாழ்வு.. எத்தனை நாள் ஏக்கம். நாள்கடந்து கிடைத்த வரம். அவனை வெறுமையாக்கியதோடு சிறிது அயர்வையும் தந்தது.