எழுத்தில் எனைக் கண்டு கொண்டேன் !
நான்நாகாவின் நான்மீடியாவுக்காக எனது கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கிறேன். எனது பெயர் தேனம்மைலெக்ஷ்மணன். வலைப்பதிவர், எழுத்தாளர், சுதந்திரப் பத்திரிக்கையாளர். அடையாள அட்டைகளில் மட்டுமே அடையாளமாய் இருந்த என் பெயர் இன்று இணையத்தில் உயிர்ப்புடன் இனங்காணப்படுவதற்கு என் தொடர் எழுத்துக்களே காரணம். ஏழு வலைப்பூக்களிலும், தமிழ் கூறும் நல்லுலகின் பல இணைய மற்றும் அச்சு இதழ்களிலும் பங்களிப்புச் செய்துள்ளேன். அச்சில் 24 நூல்களும் அமேஸானில் 57 நூல்களும் வெளியாகி உள்ளன. 25 இணைய விருதுகளும், 20 க்கும் மேற்பட்ட பட்டயங்களும் சான்றிதழ்களும் என் தொடர் முயற்சிகளுக்கு வழங்கப்பட்ட கௌரவங்கள்.
எனது தொடர் உழைப்புக்கும் எழுத்துலகில் எனது பங்களிப்புக்கும் நான்மீடியா நாகா போன்ற பல மீடியா நண்பர்களும், தோழிகளுமே காரணம். என் மனத் தடைகளை மீறி நான் எழுத வந்தது போல் பல்வேறு தடைகளைத் தாண்டி சாதனை படைத்து வரும் மகளிர் பற்றிய எனது முதல் தொகுப்பே ”சாதனை அரசிகள்”. என் எழுத்துத் திறனைக் கண்டுபிடித்து ஊக்குவித்தவர்கள் என் தமிழாசிரியை சுசீலாம்மா, அடுத்து 24 ஆண்டுகள் இடைவெளிக்குப் பின் இணையத்தில் எழுதத் தொடங்கிய என்னைப் பத்ரிக்கையில் எழுத அழைத்தவர்கள் லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியை கிரிஜாம்மா. இவர்கள் இல்லாமல் இன்று இருக்கும் நான் இல்லை.