சாண்டர்ஸ் ட்ராகனோ
”காற்றைக் கொஞ்சம் நிற்கச் சொன்னேன் பூப்பறித்துக்
கோர்க்கச் சொன்னேன் ஓடிவந்து உன்னைச் சந்திக்க.. ” ஸாமின் செல்ஃபோன் ரிங்கிட்டது. சமீபகாலமாக
அவன் இந்தப் பாட்டைக்கூட நேசிக்கத் துவங்கி இருந்தான்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் எப்போதடா
ராணியைப் பார்ப்போம் என்றே ஏங்கிக்கொண்டிருந்தது அவன் மனது. காலிங் பெல் அடிக்கும்போதும்
மெல்லவே தட்டுவான். அவள் பயந்துவிடக்கூடாது என்று. சரிந்த வயிற்றோடு மெல்ல மெல்ல நடந்து வந்து அவள்
கதவைத் திறக்கும்போது அவள் வயிற்றில் கதவு இடித்துவிடுமோ என்று பயப்படும் அளவுக்கு
அவனது பிரியம் எல்லை கடந்து கொண்டிருந்தது.
“ஹேய் ஒண்ணுல்லப்பா , குட்டீஸ் முண்டுறாங்க. ரெண்டு பக்கமும் வயிறு அசைஞ்சிச்சு அதான் சொல்ல கூப்பிட்டேன். என்னால அந்த பரவசத்தை தாங்க முடில. “ ஸ்கந்தபுரி எஸ்டேட்டில் இருக்கிறான் ஸாம். அவனது மனமோ பறந்து போய் அவளது வயிற்றைத் தொட்டுப்பார்த்துக் கொண்டிருந்தது.