கலைமகள் அறிவித்திருந்த “நான் சென்று வந்த இந்து திருத்தலம்” என்ற போட்டிக்கு எனது இந்தக் கட்டுரையை அனுப்பி இருந்தேன். அதற்கு மூன்றாம் பரிசும் 2,000/- ரூபாய் பரிசுப் பணமும் கிடைத்துள்ளது. நன்றி கலைமகள். இதை எனக்கு அறியத்தந்த மங்கையர் சோலை குழுவில் உள்ள சகோதரி திருமதி கல்யாணி ஸ்ரீதர் அவர்களுக்கு நன்றி :)
ஸ்ரீ நரியங்குடி கருங்குளம் பூரண புஷ்கல சமேத ஸ்ரீ ஆதினமிளகி அய்யனார் காட்டுக் கருப்பர் கோயில்
குலதெய்வம் என்பது
மனிதகுலத்தைக் காக்கும் தெய்வம் என்பதால் நாட்டாரும் நகரத்தாரும் சேர்ந்து வழிபடும்
அய்யனார், கருப்பர் கோயில்கள் சிவகங்கைப் பகுதியில் அதிகம். வலசை வந்த நகரத்தார் தாம்
வந்து தங்கியிருந்த ஊர்களில் கழனிகளையும் கம்மாய்களையும் காக்கும் ஊர்க்காவல் தெய்வமாக
நாட்டார்கள் வழிபட்ட அய்யனாரையே தம் தலைமாடு காக்கும் குலதெய்வமாகக் கொண்டனர்.
பட்டமங்கலத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது நரியங்குடி.. ஊர் எல்லையில் கம்மாய்க்கரையில் கம்பீரமாகப் புது மணத்தோடும் வண்ண வண்ண நிறத்தோடும் காத்திருந்தார்கள் கையில் அரிவாளோடு சிங்கப்பற்களுடன் இரண்டு பூதங்களும் பாரிவேட்டைக்குத் தயாரான நிலையில் இரண்டு புரவிகளும். ஏனெனில் 31.5.23 அன்று அங்கே புரவி எடுப்பு..
மாலை நேரத்தில் கண்மாயிலிருந்து மந்தைக்கு மூன்று முறை ஊர் நாட்டார்கள் நவநீதப்பெருமாள் கோயிலின் கொடி, குடை, பரிவட்டம், மாலைகள், கொம்பு, மேளதாளம், வாணவேடிக்கை இவற்றோடு சென்று தகுந்த பூசை,வழிபாடுகள் செய்து பூதங்களையும் புரவிகளையும் தோள்களில் சுமந்து எடுத்து வந்தார்கள். கூடவே பத்துப் பசுக்களையும் ஒரு காளையையும் திருமண வேண்டுதல் வைத்திருந்த காளைகள் சுமந்து வந்தார்கள்.
அடுத்த நாள் கருப்பரை
இதே முறைப்படி மேளதாளம் கொம்பு எக்காளம் புரவிகள் பூதங்கள் சூழப் பறை அதிர, அழைத்து
வந்து மந்தையில் பூசை செய்து பின்னர் கோயிலுக்குக் கொண்டு சென்று அங்கே நிலைநிறுத்தினார்கள். இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கிறது இப்புரவி
எடுப்பு.
இப்புரவி எடுப்புக்காக
வைகாசி மாதம் ஒரு நல்ல நாளில் கம்மாயில் சேங்கை வெட்டி மண் எடுப்பார்கள். அதைப் புரவி
செய்யும் போது பயன்படுத்திக் கொள்வார்கள். இதனால் கம்மாய் தூர் வாரப்படுவதோடு கழனி
செழிக்கும்வண்ணம் அடுத்துப் பொழியும் மழை நீரும் சேகரமாகும். கோயிலைச் சுற்றித் தீர்த்தப்பூரணி
ஐயர் ஊரணியும், முனிஐயா தோப்புஊரணியும் உள்ளது.
வைகாசியில் கருப்பருக்குப்
புரவி எடுப்பு என்றால் மாசியில் அய்யனாருக்கு சிவன்ராத்திரி சிறப்பு. அன்று இக்கோவிலைக்
குலதெய்வமாகக் கொண்டவர்களும், சுற்றியுள்ள ஊர்க்காரர்களும் சமைத்துண்டு பூசைகள் செய்து
வழிபடுவார்கள். சிவன்ராத்திரிக்கு அடுத்த நாள் பாரிவேட்டை.கோயிலை அடுத்துள்ள கம்மாய்க்கு
அருகிலுள்ள பெரிய புளியமரத்தின் அருகின் பாரிவேட்டைக்கான சம்பிரதாய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
இக்கோயிலுக்குச்
சிவகங்கை மன்னரின் மானிய நிலமும் கூட உண்டு. சிவங்கை மன்னர் இப்பகுதிக்கு நரி வேட்டையாட
வந்தபோது இங்கே உள்ள மக்கள் அன்புடன் உபசரித்ததால் இக்கிராமத்தை கரும்பூனை ரத்தத்தால்
ஓலையில் முறி எழுதி இவ்வூர் மக்களுக்குப் பரிசளித்தாராம்.
நகரத்தார் சமூகத்தைச்
சேர்ந்த சுமார் 108 குடும்பங்களுக்கு இவர்தான் குலதெய்வம். இக்கோயிலின் திருப்பணிகள்
மற்றும் புரவி எடுப்பு ஆகியவற்றுக்கு இவர்கள் பெரும் பங்களிப்புச் செய்துள்ளார்கள்.
இங்கு விடுதியும் சமையல்கூடமும் உள்ளது. அதைச் சவுக்கை என்கிறார்கள். அங்கே உண்மை மட்டுமே
ஒலிக்க வேண்டுமாம்!.
இவ்வூருக்குச்
சதுர்வேத மங்கலம் என்ற பெயரும் உண்டாம். இங்குள்ள உகந்தம் என்னும் குளத்துக்கு இராமாயணத்தோடு தொடர்பு உண்டு என்கிறார்கள். இங்கே
மிதிலைக் கண்மாய் என்ற ஒன்றும் இருக்கிறது. ஆதீனம் அழகிய அய்யனார், அழகிய அய்யனாரைக்
கொண்ட ஆதீனம் அல்லது ஆதீனம் இளகிய அய்யனார் என்பதுதான் மருவி ஆதீனமிளகி அய்யனார் ஆகிவிட்டது
என்பது ஆய்வாளர்களின் முடிவு
கிழக்கு நோக்கிய
மூன்றுநிலை இராஜகோபுரத்தின் முன் சேமக்குதிரை ஓங்கி உயர்ந்து காட்சி அளிக்கிறது. அதில்
பக்கவாட்டில் சுதைச்சிற்பங்களாக விநாயகரும் முருகனும், முன்புறம் அரிவாளோடு கருப்பரும்
காட்சி அளிக்கிறார்கள். சேமக்குதிரையின் பின்பக்கம் மதிலையொட்டி ஒன்பது அரிவாள்கள்
பதிக்கப்பட்டுள்ளன. பார்த்தவுடன் சிலிர்க்கிறது.
உள்ளே நுழைந்தால்
அதைவிட அதிகமாகப் புல்லரிக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளாக எடுத்து வரப்பட்ட பத்துப்புரவிகள்
தெற்குப்பக்கத்திலும் , வடக்குச்சுவரில் சாய்ந்து பத்துப் பூதங்களும் பிரம்மாண்டமாகக்
காட்சி கொடுக்கிறார்கள். இடப்புறம் சுதைத்திருவாட்சியினுள் முன்னோடி காட்சி அளிக்கிறார்.
மற்ற பசுக்களும் காளையும் கோவிலுக்குள் அணிவகுத்து நிற்கின்றன. எங்கெங்கும் புரவிச்
சத்தம். சந்தம்..
கிழக்கு இராஜகோபுரம்
அய்யனார் பூரணா புஷ்கலை சந்நிதிக்கானது. கோயிலும் திருச்சுற்றும் புராதனக் கல்திருப்பணிகள்.
வடக்கு நோக்கிய குதிரைவீரன், கருப்பர் வாயில் காட்டுக்கருப்பர் சந்நிதிக்கானது. இக்கோபுரத்தின்
மேல் மிரட்டும் விழிகள், கொடுவாள் மீசை, அரிவாளோடு கருப்பர் உக்கிரக்காட்சியளிக்கிறார்.
உள்ளே சிறு கோபுரங்கள் கொண்ட தனிச்சந்நிதிகளில் பிள்ளையார், முருகன் வள்ளி தெய்வானை மற்றும் பைரவர் அருள் பாலிக்கிறார்கள்.. ஆலயத்தின் தெற்குப்பகுதியில் வடக்கு நோக்கிய கோஷ்ட தெய்வங்களாகக் காட்டுக் கருப்பருக்கு வலப்பக்கம் நொண்டிக்கருப்பர், ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ பேச்சிஅம்மன், ஸ்ரீ ராக்காச்சிஅம்மன் அகியோர் ஒரு சன்னிதியிலும், காட்டுக்கருப்பருக்கு இடப்பக்கம் இன்னொரு சன்னிதியில் சின்னக்கருப்பர் வீரபத்திரர், சப்தகன்னியர், அரசமுகம், சன்னியாசி ஆகியோரும் காட்சியளிக்கிறார்கள்.
அய்யனார் சந்நிதிக்கு
எதிரே அய்யனாரின் வாகனமான யானையும் அதன்பின் பலிபீடமும் உள்ளது. கருப்பர் சந்நிதியின்
முன்னும் சுதையாலான யானைகளும் புரவிஎடுப்பில் கொண்டுவந்து வைக்கப்பட்ட அரிவாளும் கதையும்
ஏந்திய கருப்பர் சிலைகளும் காட்சியளிக்கின்றன. அய்யனார் சந்நிதியின் பக்கவாட்டில் ஒன்பது
மணிகள் கட்டப்பட்டுள்ளன. பூசை நேரத்தில் அவை ஓங்கிஒலிப்பது நமக்குள் சன்னதம் பெருக்கும்.
முழுக்க முழுக்க
ஊராரின் பொறுப்பிலேயே கோவில் இருந்தாலும் கும்பாபிஷேகத்தின்போது நகரத்தார்கள் மருந்துசாத்திக்
கும்பம்வைத்துச் செபம்செய்து, யாகசாலை, கும்பாபிஷேகம், அன்னதானம் ஆகியவற்றையும் ஏற்றுச்
செய்கிறார்கள். ஆகையால் இவர்களுக்கு விபூதி, காளாஞ்சி என்று முதல்மரியாதையை ஊரார் அளிக்கிறார்கள்.
நகரத்தார் வீடுகளில் குழந்தை பிறந்தால் பங்காளிகளுடன் இங்குவந்து குழந்தைக்கு முடியிறக்கித்
தொட்டில்கட்டிப் பெயரிடுகிறார்கள்,
இக்கோவிலில் இருக்கும்
ஸ்ரீ வீரமாகாளனாகிய காட்டுக்கருப்பர் பேரில் சிந்து, விருத்தம், அழைப்பு, கொலு முதலியன
யாக்கப்பட்டுள்ளன. 1928 இல் தேவகோட்டை அண்ணாமலை செட்டியாரவர்கள் குமாரர் அழகப்ப செட்டியார்
இவற்றை இயற்றியுள்ளார். யாழ்ப்பாணத்து நல்லூர், ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரவர்கள் மாணாக்கரின்
மாணாக்கரும், தமிழ்ப் பண்டிதருமான யாழ்ப்பாணம் துன்னாலை ஸ்ரீலஸ்ரீ கா. இராமநாதப் புலவரவர்களால்
இவை மேற்பார்வை செய்யப்பட்டன. இதில் விநாயகர், முருகன், சரஸ்வதி, அய்யனார், முன்னோடி
ஆகியோரின் துதிகளும் உள்ளன.
நெற்கழனிகளைக்
காக்கும் அய்யனாருக்குப் பிரியமான விஷயம் அன்னதானம் செய்வது. ஆகையால் ஐயனாரைக் குலதெய்வமாக
வணங்கும். நகரத்தார்களும் மகேசுவர பூசையை நடத்தி அன்னதானம் வழங்குகிறார்கள். அய்யனாரின்
அழகிய ஆதீனத்தைத் தரிசிக்க சிவன்ராத்திரியிலோ, புரவியெடுப்பின்போதோ வந்துபாருங்கள்.
நாள் முழுவதும் தரிசிக்கலாம். !
சிறப்பு..
பதிலளிநீக்குமகிழ்ச்சி..
நன்றி..
நன்றி துரை சார்
பதிலளிநீக்கு