துணை.:-
விஷ்க் என்று காதுப்பக்கம் சுத்திக்கொண்டிருந்தது ஒரு ஈ. காலையில் விழிப்பு வந்ததில் இருந்து இந்த ஈ ஒரு பண்டம் போல அவனை மொய்த்துக்கொண்டிருந்தது. விலகிக்கிடந்த போர்வையின்வழி காலில் அமர்ந்து கூசியது. காலை அசைத்தான்.
மெல்ல அசங்கியபடி பறந்து அடுத்த காலில் அமர்ந்தது.
கீழ்வீட்டின் நாயைப் பார்த்து வீட்டுக்காரர் சத்தம்போட்டுக்கொண்டிருந்தார். லோப்ல லேது என்று எத்தி கதவைச் சாத்திக்கொள்வார். எதற்கு வளர்ப்பு மிருகம். மனிதனுக்குள்ளே பல மிருகங்கள் உலவிக்கொண்டிருக்கின்றன. மற்றொரு மனிதனைப் பார்த்துக் கத்தினால் பதிலுக்கு குதறிவிடுவான், அதை நன்றியுள்ள நாய் செய்யாது என்பதாலா.
பாவம் அதன் வாயை வேறு அவ்வப்போது சிவப்பு ரிப்பன் கொண்டு கட்டிவிடுகிறார்கள். அது அவனைப்பார்த்தால் ஓடிவந்து குலவ வருகிறது . அவனுக்கும் ஃபாத்திமாவுக்கும் வளர்ப்புப்பிராணிகள் என்றால் அலர்ஜி. படி இறங்கிப்போகும்போது அது ஓடிவந்தால் அப்படியே மூச்சைப்பிடித்தது போல நின்று கொள்வார்கள் சாலமனும் ஃபாத்திமாவும்.
வீட்டுக்காரர் பையன் வந்து “ டர்னா மத் அங்கிள். குச் பீ நஹி கரேகா” என்று சொல்லி காலிடுக்கில் அதன் சங்கிலியை மிதித்துப் பிடித்துக்கொள்வான்.