வியாழன், 20 ஆகஸ்ட், 2015

என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள். - சுமதிஸ்ரீயின் நூல் ஒரு பார்வை.

கண்ணீர் கசியவைக்கும் நெஞ்சை நெகிழவைக்கும் மனசை ஆட்டிப் படைக்கும் எழுத்தை சமீபத்தில் படித்தேன். ஆண் எழுத்தாளர்களே பெரும்பகுதியும் உண்மையைப் பொளேரென அறையும் விதத்தில் எழுதி இருப்பதைப் படித்துப் பிரமித்திருக்கிறேன். ஆனால் ஒரு பெண் எழுத்தைப் படித்துவிட்டு அயர்ந்து போய் இருக்கிறேன் இன்று.

ஆண்குழந்தைகளே ஆன்ம ப்ரதிபலிப்புகள் என்று எண்ணப்பட்டு வரும் ஒரு சமூகப் போக்கில் பெண்ணாகப்பிறந்து தந்தை தாயால் வெறுப்போடு வளர்க்கப்பட்டு அவர்கள் அங்கீகாரமில்லாமலே தன்னைத் தான்விரும்பும் எழுத்து மற்றும் பேச்சுத்துறையில் வளர்த்து இன்று எட்டாத உயரங்களையும் எட்டி இருக்கும் சுமதி ஸ்ரீ என் ஆச்சர்யத்துக்கும் மதிப்புக்கும் உரியவர்.  அவரின் நான்காவது நூல் “என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள் “பிணத்தில் கூட ஆண் பெண் பாகுபாடு பற்றிப் படித்தபோதும் தாய்தந்தையின் உதாசீனத்தினால் தனியளாய்க் கல்வி, உத்யோகம், பேச்சு, எழுத்து ஆகியவற்றில் சாதித்து வருவதைப் படித்தபோதும் கண்கள் கண்ணீரால் கசிந்துகொண்டே இருந்தன.

/// பொதுவாகப் பிணங்களை எரிக்கும்போது ஆண்களின் பிணத்தை விட பெண்ணின் பிணம் விரைவாக எரியுமாம். காரணம் பெண்களின் உடல் சமயலறை நெருப்பிலேயே முக்கால்வாசி வெந்துவிடுகிறது ///

இன்னவாக ஆகப்போகிறாய் என்று மழலைப்பருவத்தில் ஆர்வத்தோடு கேட்டு ரசிக்கப்படும் பெண்மொழி திருமணவயதில் டென்ஷனாக கருதப்படும்போது அவர்களை முடிவானதொரு நிறுத்தத்தில் இறக்கிவிட்டுப் போய்விடுகிறது. அதன்பின் ப்ரயாணம் ஓவர். செக்குமாடு. புது மொழி சொல்வோம்., ஆக்சஸ் ( access ) இல்லாத கம்ப்யூட்டர்.

பெண்களின் எழுச்சி பெருவாரியாக இருந்தாலும் அதை அடைந்தவர்கள் தாம் அதை அடையப்பட்ட சிரமங்களை எழுத்துகளில் பகிர்வதில் நிறைய சிரமம் இருக்கிறது. ஆனால் எந்த மனத்தடையும் இல்லாமல் பொங்கும் வெள்ளம் போல சுமதிஸ்ரீயின் எழுத்துகளில் அதைப் படித்தபோது உவகையும் பெருமிதமும். அதோடு கூடவே ஒரு மனம் கனத்துப் போனதான அழுத்த உணர்வும் ஏற்பட்டது.

தகப்பன் சாமி கவிதை அதில் ஒன்று.

///விடுதிக்குக் கிளம்பும் நாளில்
வாசலடைத்துக்
கோலம் போடச் சொல்வாய்.
வாரம் கடந்தாலும்
அதைப் பெருக்காமல்
இழைகளுக்குள் சிக்கிய
புள்ளிகளில்
என் முகம் பார்த்து
மகிழும்
உன் மனசுக்காகவே
பொய்யெனப் பொய்த்தது
நம்மூர் மழை ////

இதைப் படிக்கும்போது பள்ளி வயதில் நான் உணவு கொண்டு சென்ற தேன்மொழி என்ற பெயர் பொறித்த டப்பாவை என் அப்பா பத்திரப் படுத்தி வைத்திருப்பதும். அதை யார் வீட்டுக்காவது விசேஷ சமயங்களில் உணவு கொடுத்தனுப்பினால் திரும்பி விட்டதா எனப் பார்ப்பதும், வராவிட்டால் அதை அவர்களுக்கு ஃபோன் செய்து நினைவூட்டி எடுத்து வரச் சொல்வதும் ,அதை இப்போதெல்லாம் யாரிடமும் கொடுக்காமல் என்னைப் போலவே பத்திரப்படுத்தி வைத்திருப்பதும் நினைத்து நெகிழ்கிறது நெஞ்சம். நாம் பெரியவர்களாகித் திருமணம் முடித்துச் சென்றதும் நாம் உபயோகப் படுத்தின பொருட்கள் எல்லாம் அவர்களுக்கு நினைவுச் சின்னமல்ல. நாமேதான் .

தான் என்பதால் தன்னுடைய பெருமிதம் மட்டுமல்ல தன்னுடைய சிறிய குறைகளையும் குற்றங்களையும்கூட அம்பலத்தில் ஹாஸ்யத்தோடு தெரிவிக்க அவர் எழுத்தில் தயக்கமில்லை. இன்னாரைக் குளிர்விக்கவேண்டும் என்றோ இன்னாரைக் காயப்படுத்தவேண்டுமென்றோ இல்லாமல் சரளமாக நிகழ்ந்தவைகளை நிகழ்ந்தபடி சொல்லிச் செல்வதால் இந்த எழுத்து அர்த்தமுள்ளதாகிறது.

முகநூலில் ஒரு சினிமா பாடல் பகிர்ந்திருந்தார். மிக அற்புதமான வரிகளோடு இருந்த அப்பாடலை மிகவும் ரசித்தேன். அகநானூறு , புறநானூறு என்று இலக்கியத்தையும் பாடலுக்குள் கொண்டு வருவதில் சிறந்தவர். சினிமாப் பாடல்களில் அவரைத் தாமரை போலோ அல்லது இந்தப் புத்தகத்தில் இருக்கும் விஷயங்களை எழுதிய விதத்தில் ராஜு முருகன்போலோ என்றெல்லாம் ஒப்பீடு செய்யத் தோன்றினாலும் அவர் தனது தனித்துவத்தில் சுமதிஸ்ரீயாக இருப்பதே பிடித்தமாகிறது.

சினிமா பாடலாசிரியராகவும், பட்டிமன்றப் பேச்சாளராகவும், கம்பன் கழகங்களிலும் தனது மொழிப்பங்காற்றி வருகிறார். கடல் கடந்து ஃபெட்னா வரை சென்று கௌரவிக்கப்பட்டிருப்பதே இவரது சிறப்பு.

அனைவரின் வாழ்விலும் பகிர முடிந்த மற்றும் பகிர முடியாத பல பக்கங்கள் இருக்கின்றன. அந்தப் பகிர முடியாத பக்கங்களையும் சிறப்பான மொழி வளத்தோடு உலகத்தின் கண்களில் படைத்திருக்கும் சுமதிஸ்ரீக்கு வாழ்த்துகள்.

ஒவ்வொரு பெண்ணின் வெற்றியிலும் ஒரு ஆண் இருக்கிறார். அவர் தந்தையாகவும் இருக்கலாம். கணவராகவும் இருக்கலாம். சுமதிஸ்ரீயின் வாழ்வில் தந்தையாகவும் தாயாகவும் பரிணமிக்கும் கணவர் பென்னிம்மா கிடைத்திருக்கிறார். அவர் இன்று பெற்றிருக்கும் பேறுக்கெல்லாம் சுயமிழக்காமல் இயங்கச் செய்யும் அவரது கணவரே காரணம்.

வாழும் வரை போராடு என்ற தாரக மந்திரத்தில் எனக்கு நம்பிக்கையுண்டு. போராட்டங்களையும் வெற்றிகளையும் நாட்குறிப்பில் பதித்து எல்லாருக்கும் சமாதானத்தை ஒப்புக்கொடுப்பதோடு முடிந்திருக்கும்  இந்த அருமையான  புத்தகத்தைப் படித்துப் பாருங்கள் .

நூல் :- என் நாட்குறிப்பில் எழுதப்படாத பக்கங்கள்.

ஆசிரியர் :- சுமதி ஸ்ரீ

வெளியீடு :- விகடன் பிரசுரம்.

விலை :- ரூ . 80/- 

6 கருத்துகள் :

Nagendra Bharathi சொன்னது…

உணவு டப்பா ஞாபகம் வந்தது

Thulasidharan V Thillaiakathu சொன்னது…

நீங்கள் எழுதியிருக்கும் விமர்சனம் சுமதிஸ்ரீ அவர்களின் வலிகளைச் சொல்லுகின்றது....நல்லதொரு விமர்சனம்...

உண்மைதான் ஆண், பெண் என்ற ஏற்றத் தாழ்வுகள் இந்த சமூகத்தில் இருக்கத்தான் செய்கின்றது. பெண்கள் அதையும் மீறி எதிர்நீச்சல் இட்டுத்தான் வர வேண்டி உள்ளது.

Thenammai Lakshmanan சொன்னது…

உங்களுக்குமா நாகேந்திர பாரதி :)

நன்றி துளசி சகோ. உண்மைதான்.எதிர்நீச்சல் போடத்தான் வேண்டி உள்ளது. :)

Thenammai Lakshmanan சொன்னது…

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

வெங்கட் நாகராஜ் சொன்னது…

உணவு டப்பா.... அலுமினய தூக்கு போசியில் உணவு எடுத்துச் சென்ற நினைவு!.

கவிதையும் நன்று. வாசிக்க முயல்கிறேன்.

Thenammai Lakshmanan சொன்னது…

அஹா நன்றி வெங்கட் சகோ :)

கருத்துரையிடுக

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...