எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 9 ஜூன், 2022

ஒற்றைப் பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்கள்

ஒற்றைப் பெற்றோர் எதிர்கொள்ளும் சவால்கள்


”தனியே தன்னந்தனியே நான் காத்துக் காத்து நின்றேன்” என்று ஒரு பாடல் ரிதம் படத்தில் வரும். அந்தப் படத்தில் மீனா ஒரு சோலோ பேரண்டாக ஒரு குழந்தையை வளர்த்து வருவார். அதுவும் அவர் பெற்ற குழந்தை அல்ல. தத்து எடுத்து வளர்க்கும் குழந்தை என்பது க்ளைமேக்ஸில்தான் தெரியவரும்.

பொதுவாக சிங்கிள் பேரண்ட், சோலோ பேரண்ட் என்கின்ற வார்த்தைகள் தனித்துக் குழந்தைகளை வளர்த்து வரும் ஒற்றைப் பெற்றோரான தந்தையுமான தாயைக் குறிப்பதாகத் தோன்றினாலும் இக்காலத்தில் அது தாயுமான தந்தையையும் சுட்டுகிறது. எடுத்துக்காட்டாக நடிகர் இயக்குநர் பார்த்திபன் தன் குழந்தைகளைத் தனியாளாக வளர்த்துத் திருமணம் செய்துவைத்த நிகழ்வைச் சொல்லலாம்.

ஓரிரு குழந்தைகளோடு தனித்து வாழும் விதவை, மனைவியை இழந்தவர், விவாகரத்துப் பெற்றவர், திருமணம் செய்துகொள்ளாமல் முன்னர் சேர்ந்து வாழ்ந்து இப்போது பிரிந்தவர்கள் மட்டுமல்ல, திருமணமாகாமல் தனித்து வாழ்ந்து ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்ப்பவரும் ( சுஷ்மிதா சென் போன்ற மாடல் மங்கையர்) இந்த ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தில் அடங்குவர்.

முன்னர் கூட்டுக் குடும்பமாக இருந்து மைக்ரோ ஃபேமிலீஸ், நியூக்ளியர் ஃபேமிலீஸ் ஆகச் சுருங்கிவரும் குடும்ப அமைப்புகள் பெருகிவிட்டன. வெளிநாடுகளில் மட்டுமே காணக் கிடைத்த இந்த ஒற்றைப் பெற்றோர் இந்திய அளவிலும் பெருகி வருவது இன்றைய காலகட்டத்தின் மாற்றத்தைக் காட்டுகிறது. வெளிநாடுகளில் பள்ளியில் படிக்கும் காலத்தில் ஏற்படும் உறவுகளின் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வதால் ஒற்றைப் பெற்றோர் அதிகரிக்கின்றனர். பதின்ம வயதுக் கர்ப்பம், போதைப் பொருட்களால் ஏற்படும் குற்றங்கள் ஆகியன வெளிநாடுகளில் இந்த ஒற்றைப் பெற்றோர் நிலைக்குக் காரணம் என்றால் இந்தியாவில் சீக்கிரத் திருமணம், இளம் தாய்மார்கள், குறைந்த வருமானம், ஏழ்மை, வறுமை, போதிய கல்வி அறிவின்மையும் காரணமாகின்றன.

தம்பதியருக்குள் மன ஒற்றுமைஇன்மை, பொருந்தாத் திருமணத்தின் பிளவு, விவாகரத்து, பிரிந்து வாழ்தல், குற்றம் புரிந்து விட்டுச் சிறைக்குச் செல்பவரின் குழந்தைகள், தீய பழக்கங்களால் அல்லது தீர்க்க முடியாத நோயால் கணவன் இறந்துவிட குழந்தைகளுடன் வாழ்வை எதிர்கொள்ளுதல், கணவன் அல்லது மனைவிக்குத் திருமணம் தாண்டிய உறவுகளால் கோபம் ஏற்பட்டுப் பிரிதல், வேலை செய்யுமிடத்தில் ஏற்படும் விபத்துக்களால் இறத்தல், பிரசவத்தில் தாய் இறத்தல், போர் & யுத்தம் அழிவுகள், கண்டம் அல்லது நாடு விட்டு நாடு அகதியாக வரும் நிலை, சுனாமி போன்ற பேரழிவுகள், வெள்ளம், மழை போன்ற பேரிடர்கள் ஆகியனவும் இந்த ஒற்றைப் பெற்றோர் குடும்பத்தின் காரணிகள்.


பெற்றோரின் பக்கம் பார்த்தால் மன அழுத்தம், எதிர்மறை சிந்தனைகள், எதிர்காலம் பற்றிய பயம், தங்கள் கனவுகளை செயல்படுத்த முடியாத அளவு நனவின் சுமைகள், உடல் உபாதைகள் ஏற்படும் சமயங்களில் தக்க உதவி இன்மை, குழந்தை வளர்ப்பில் உதவி கிட்டாமல் போதல், வீட்டிலும் வெளியிலும் வேலைப்பளு, வேலையில்லாத ஒற்றைப் பெற்றோர் எனில் பொருளாதார ரீதியாக வாழ்க்கையை நடத்திச் செல்வதில் ஏற்படும் சிரமங்கள்,  உடல் ரீதியாக மன ரீதியாகத் தனிமையாக உணர்தல், ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த இயலாமை ஆகியன முக்கியப் பங்கு வகிக்கின்றன.

மேலும் வேலை செய்யுமிடத்தில் ஏற்படும் இடர்கள், நட்பாய் நெருங்கி குடும்பத்தில் நுழையும் இணைய/எதிர்பால் உறவுகளால் ஏற்படும் சிக்கல்கள், குழந்தைகள் இருக்கும்போதே மணந்து கொள்வதாக ஆசை காட்டி அதன் பின் மோசம் செய்யும் நபர்களால் ஏற்படும் தொல்லைகள், சமூகம் கொடுக்கும் அழுத்தத்தால் இன்னொரு மணம் செய்துகொண்டு அதில் தன் எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் உழலுதல், குழந்தைகளுடன் நேரம் செலவிட இயலாமை, அசையும் அசையாச் சொத்துக்களைத் துணையின் பேரில் வாங்கி இருந்தால் அதைத் திரும்பப் பெறுவதில் ஏற்படும் இடையூறுகள், விவாகரத்துப் பெற மற்றும் குழந்தை வளர்க்க முறைப்படி அனுமதி உள்ள சட்டரீதியான தஸ்தாவேஜுகள் பெறுவதில் தாமதம் என்பவையும் பக்க விளைவுகளாய் ஏற்படுகின்றன.

ஒற்றைப் பெற்றோரிடம் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படும் பயம், பாதுகாப்பின்மை, உளவியல் சிக்கல், சமூகம் ஏற்படுத்தும் அழுத்தம், சக தோழ தோழியரின் குடும்ப அமைப்பு ஏற்படுத்தும் குழப்பம், கல்விகற்பதில் சிரமம், தந்தை அல்லது தாயின் பாசமும் வழிகாட்டுதலும் இல்லாமல் துயருறுதல் ஆகியன முக்கியப் பிரச்சனைகள்.  

குழந்தைகளைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் அன்பையும் ஆதரவையும் நிபந்தனையற்றுத் தெரிவிக்கும் அதே நேரம் உங்கள் பொறுப்பின் சுமைகளையும் அவர்களை உணரச் செய்யுங்கள். கடந்தகால வாழ்வின் கசப்புகளில் தோய்ந்து குழந்தைகளை அவதிக்கு ஆளாக்காதீர்கள். குழந்தைகளை முடிந்தவரை மகிழ்ச்சியாக வைத்திருங்கள்.

நம்பகமான நண்பர்களின் மற்றும் மற்ற குடும்ப உறுப்பினர்களின் உதவி பெறுதல், குழந்தைகளை வீட்டு/வெளி வேலை செய்ய மற்றும் தனியே செயலாற்றப் பயிற்றுவித்தல், சுகாதாரம் போதித்தல், குழந்தைகள் தனித்து இருக்கும் சமயம் அந்நியராலோ, உறவினராலோ ஏற்படக் கூடிய பாலியல் சீண்டல் பற்றி அறிவுறுத்திப் பாதுகாத்தல், பொருளாதாரம் மற்றும் குடும்ப வளர்ச்சி, குழந்தைகளின் வளர்ச்சி பற்றிய தீர்க்கமான திட்டமிடல், தனக்கென நேரம் ஒதுக்குதல், குழந்தைகளுக்கான நேரத்தைக் கொடுத்துத் தொடர்ந்து வழிநடத்துதல், குழந்தைகளுக்கு யதார்த்தத்தைப் புரியவைத்தல், தான் பிரிந்து வந்த வாழ்க்கைத் துணையிடம் தன் குழந்தைகள் அன்பு கொண்டால் அதை ஏற்றுக் கொள்ளும் பக்குவம், சகிப்புத்தன்மை கொள்ளுதல் இன்றிமையாதன.  

நன்கு கற்றறிந்து வாழ்வின் உச்சத்தில் வாழும் ஒரு சாதனைப் பெண் தன் தாய் கடந்து வந்த துயரவாழ்வு பற்றி அறிந்திருந்தும் பல்லாண்டுகளுக்குப் பின் தன் தாயிடம் இப்படிக் கூறினாராம் “என் தந்தையின் அன்பு கிடைக்காததால் நான் எவ்வளவு ஏக்கத்துடன் வளர்ந்தேன் என்பது உங்களுக்குப் புரியாது. இன்னுமே நான் தந்தையன்பிற்காக ஏங்குகிறேன்” என்றாராம். இத்தனைக்கும் அவருக்குத் திருமணம் செய்யும் வயதில் ஒரு பெண்ணும் கல்லூரிக்குச் செல்லும் ஒரு மகனும் இருக்கிறார்கள். எனவே மனதுக்கொவ்வா உறவிலிருந்து தம்பதியர் பிரியலாம். ஆனால் பிள்ளைகளின் பெற்றோராய்ப் பிரிவதற்கு முன் அந்தப் பிரிவு அவசியம்தானா என்பதை மட்டும் யோசித்து முடிவெடுங்கள். 

 

 

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...