எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 27 ஏப்ரல், 2015

பிள்ளைக் கறி:- ( பெண்கள் ராஜ்ஜியம் )

பிள்ளைக் கறி.:-

வராத்திரி பத்து நாளும் கோயிலில் கமலாம்பிகை ஒவ்வொரு அலங்காரத்தில் அருள்பாலித்துக்கொண்டிருப்பாள். எட்டாம் நாள் மஹிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தாள்.

அம்மனைப் பிரதிஷ்டை செய்து கோயிலைக் கட்டியிருந்த ராமராஜ உடையாருக்கு இரு மனைவியர் இருந்தும் பிள்ளைகள் இல்லை. நித்தமும் கடவுள் சேவைக்கே தன் சொத்து முழுவதையும் அர்ப்பணித்திருந்தார். கட்டிக் கொண்ட மனைவியும் கூட்டிக்கொண்ட மனைவியும் ரொம்ப ஒற்றுமையாயிருந்து அவரது இறைத் தொண்டுக்குப் பக்கபலமாய் இருந்தார்கள்.

அவரது இரண்டாம் மனைவி ஏதோ ஒரு கோயிலில் நடனமாடியபோது பார்த்து மயங்கித் தாரமாக்கிக் கொண்டார் என்ற பேச்சும் உண்டு. அள்ளி முடிந்த கூந்தலும் செக்கச் செவேலென்ற நிறமுமாய் பெரிய ஒரு ரூபாய் சைஸுக்குச் சிவந்த குங்குமத்தை வைத்துக் கொண்டு வெற்றிலை போட்ட வாயோடு வெளியே வந்தார் என்றால் அம்பிகையே நேரில் வந்தது போலிருக்கும். கையெடுத்துக் கும்பிடத் தோன்றும்.

வீட்டு வாசலிலேயே கோயிலைக் கட்டி விட்டதால் அதன் முன்னேயே கொட்டகையைப் போட்டு மேடை அமைத்திருந்தார்கள். இந்த நவராத்திரி சமயங்களில் மட்டும் கோயிலைச் சுற்றிக் கூட்டமான கூட்டமாக இருக்கும். கோயில் உபன்யாசகர் சீராளனைச் சமைத்து ஈசனுக்குப் படைத்த கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். செங்கமலப் பாட்டிக்குக் கோபமாய் வந்து கொண்டிருந்தது. நல்ல வேளை முடிக்கும்போது கடவுள் சீராளனுக்கு உயிர் கொடுத்து விட்டார். இல்லாவிட்டால் பாட்டியே ஈசனைப் பிடித்து உலுக்கி ஏன் இப்படிச் செய்தாய் எனக் கேட்டு இருப்பாள்.

கதை முடிந்து தீபம் காட்டும்போதுதான் பாட்டிக்குத் தன் பேத்தி கமலா ஞாபகம் வந்தது. அடடா பிள்ளை பசியோடு இருக்குமே. பக்கத்தில் விறகுக் கடை வைத்திருக்கும் அழகேசன் செங்கமலப் பாட்டி எங்கேனும் செல்ல நேர்ந்தால் பாட்டி வரும்வரை பார்த்துக் கொள்வார்.  ஒண்டிக்கட்டை அவர். தானே சமைத்துச் சாப்பிட்டுக் கொள்ளுவார். ஏதும் கொடுத்தாரோ என்னவோ. பிஸ்கட்டு கூடக் கொடுத்துட்டு வராமல் வந்துட்டமே என்று பரபரப்பாக நடையை எட்டிப் போட்டாள். 

கமலா கணக்கில் கொஞ்சம் வீக்காக இருப்பதால் ட்யூஷன் வைத்திருந்தாள் பாட்டி. அது முடிந்து வர சில சமயம் லேட்டாகி விடும். கோயிலுக்கு, சில உறவுக்கார வீடுகளுக்கு என்று போகும்போது ஒரோரு சமயம் விட்டு விட்டுப் போனதற்காக கமலா மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொள்வாள். பேசக்கூடப் பிடிக்காதவள் போல உம்மென்று இருப்பாள். காலையில் பின்னிய  இரட்டை சடை கலைந்து ஒரு ரிப்பன் உருவித் தொங்கிக் கொண்டிருக்க வீட்டுப் பாட நோட்டுக்கள் பைக்குள் கொசா முசாவென்று சொருகி இருக்கும்.

அவளைச் சமாதானப்படுத்தினாலும் சரிவராது என முடிந்த வரை சோற்றைப் பிசைந்து ஊட்டிவிட்டுப் படுக்க வைப்பாள். கோபத்தில் கொடுத்த சோற்றை முழுங்காமல் வாயிலேயே துப்பவது போல வைத்திருந்து அதட்டியவுடன் விழுங்குவாள்.

ரொம்ப அவள் சாப்பிடாமலும் ஒன்றும் சொல்லாமலும் படுத்தினால் பாட்டியின் ஆயுதம்.. இதுதான்.. ”என் மக அப்பிடி சொன்னதைக் கேப்பா. அவ இப்பிடி உன்னை எங்கிட்ட விட்டுட்டுப் போயிட்டாளே.. தங்கமான பொண்ணு.. எனக்குக் கொடுத்து வைக்கலை.. நீ போட்டுப் படுத்தி வைக்கிறே..” இந்த அஸ்திரத்தைப் பாட்டி புலம்பல்களோடு ஏவியதும் கமலா ஒன்றும் பேசாமல் சாப்பிட்டுவிட்டு மொட்டை மாடியில் தன்னை அணைத்தபடி படுத்திருக்கும் பாட்டியின் தொடையில் காலைப்போட்டுக் கொண்டு நிலாவையே முறைத்துப் பார்த்தபடி படுத்திருப்பாள்.

இன்றும் அப்படித்தான் முறைத்தபடி படுத்திருந்தவளைப் பார்க்க பாட்டிக்கு என்னவோ போலிருந்தது. ஒருக்கா அரைக்கா கூட கோயில் குளம்னு போகாம எப்பிடி இருக்கது. இவ தாத்தா வேற இல்லாம அம்மாவும் அப்பாவும் இல்லாம இவளைப் பார்த்துக்கிட்டுப் படிக்க வைக்கிறது செங்கமலப் பாட்டிக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. விறகுக்கடை அழகேசன் போலச் சிலர் உதவி இல்லாவிட்டால் என்னதான் செய்வது. பேத்தியை அணைத்தபடி தூங்கிப் போயிருந்தாள் செங்கமலம்.

ருவங்கள் மாறிக் கொண்டிருந்தன. வெய்யிலில் மல்லிக் கொடி மணக்க மணக்கப் பூத்திருந்தது. அது ஒரு சித்திரைக் கடைசி. பொங்கப் பொங்கக் காய்ந்த வெய்யிலில் மல்லியைப் போல மணக்க மணக்கப் பூத்து புஷ்பவதியாயிருந்தாள் கமலா.

பதின்பருவத்தின் ஆரம்பத்திலேயே சீமாட்டி சில்க்ஸ் கடையில் இருக்கும் சீமாட்டி சிலை போல இருந்தாள்.பாட்டிக்குக் கொள்ளவில்லை. மண்டபம் பிடித்துப் பெரிசாகச் செய்ய ஆசை. கோபித்துக் கொண்டாள் கமலா இதென்ன ஷோகேஸ் பொம்மை மாதிரி அலங்காரம் பண்ணிக்கிட்டு என்னால் பலபேர் முன்னாடி நிக்க முடியாது. பெரிய பெண்ணாக ஆனதும் நிஜமான பெரிய மனுஷி போலவே நடந்து கொண்டாள். இதுதான் படிப்பேன் என்று கம்ப்யூட்டர் சயின்ஸ் எடுத்துப் படித்தாள்.

விறகுக்கடை அழகேசன் பாதுகாப்பு அவளுக்கு வேண்டியிருக்கவில்லை. பாட்டி எங்கேனும் சென்றால் வீட்டை இறுக்கத் தாளிட்டு உள்பக்கமாகப் பூட்டியும் வைத்துக் கொள்வாள். பாட்டி இரண்டு மூன்று முறை காலிங்பெல் அடித்ததும் கண் திறப்பில் பார்த்துவிட்டுத்தான் திறப்பாள்.

அவளுக்குத் தூரத்துச் சொந்தக்காரனான செல்வம் கூட வந்து அவள் கதவைத் திறப்பதில்லை எனத் துயரப்பட்டுக் கொண்டான். கமலாவைவிடப் பதிமூணு வயது மூத்தவன். அவன் வீட்டில் பெண் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சின்னப் பிள்ளையில் இருந்து இங்கேயே ஆடி ஓடிப் பழகியவன். ஏதும் வேணும்னாலும் வாங்கியாந்து கொடுப்பான். கமலாவுக்கு தூரத்துச் சொந்தத்தில் மாமா பையன் முறை ஆகணும் என்றாலும் அண்ணா என்றுதான் அழைப்பாள்.

வ்வொரு வருடமும் பங்காளிகள் கூடி ஆக்கி உண்ணும் குலதெய்வம் படையலுக்கு இந்த வருஷம் சீட்டு செல்வத்திற்கு விழுந்திருந்தது. அவனுக்குக் கல்யாணமாகி பன்னெண்டு வயசில் ஒரு பையனும் பத்து வயசில் ஒரு பொண்ணும் இருந்தார்கள். நாப்பத்திமூணு வயதில் லேசாக நரை விழுந்து இளங்கிழவனாக உருமாறி இருந்தான் செல்வம்.

விறகுக்கடை அழகேசனுக்கு நாப்பது வயதுக்குமேல்தான் திருமணமாகி இரண்டு முறை குழந்தை தரிக்காமல் மனைவியும் அவருமாக வீடு கட்டிக் கொண்டு அருகேயே குடி இருக்கிறார்கள். விறகுக் கடைக்குப் பதிலாக காஸ் ஏஜென்ஸி எடுத்து நடத்திக் கொண்டிருக்கிறார். கிட்டத்தட்ட அறுபதை நெருங்கிக்கொண்டு வழுக்கைத் தலையும் கண்ணாடியுமாகக் கடையில் ஓய்ந்து அமர்ந்துவிட்டார்.

கமலாவுக்கும் ராஜகோபாலனுக்கும் கல்யாணமாகி டெல்லிக்குப் போய் விட்டாள். இரண்டு மூன்று வருடத்துக்கு ஒரு முறை லீவில் வருவதோடு சரி. அவளுக்கும் ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. ஜ்யோத்ஸ்னா என்று வாயில் நுழையாத ஒரு பேர் வைத்திருந்தாள். போக வர நெடுந்தொலைவு என்பதால் பிள்ளைப்பேறுக்கு செங்கமலத்தால் போக இயலவில்லை. சேரன்குடியில் மருத்துவர் ஆடிக்கொருதரம் அம்மாசிக்கு ஒருதரம் வருவதால் இங்கே பிரசவத்துக்கு வர கமலாவுக்கு விருப்பமில்லை.

இப்போது அவள் கம்லா ராஜ்கோபால் என்று ஏகத்துக்கும் புள்ளிகள் வைத்த பேரைக் கேஜெட்டில் மாற்றிக் கொண்டிருந்தாள். சட்டையும் கால்சராயுமாக மாறி இருந்தது உடை. முடியைக்கூடக் குட்டையாக வெட்டிக் கொண்டிருந்தாள். அவள் மகளும் அவளும் போன லீவுக்கு வந்தார்கள். ஏதோ ஒரு சாம்ராஜ்யத்தின் ராணியும் இளவரசியும் வந்தது போல இருந்தது. 

அடுத்த வருடமே செல்வத்திற்கு படையல் சீட்டு விழுந்ததால் பேத்தியையும் பேத்தி மகளையும் பார்க்கும் ஆவலில் வரச்சொல்லிக் கேட்டுக் கடிதமெழுதியபடி இருந்தாள் செங்கமலப்பாட்டி.

ராமராஜ உடையாரும் அவர் மனைவிகளும் இல்லாமல் இப்போதெல்லாம் அவர் பங்காளிகளே சொத்தைப் பராமரித்துக் கொண்டிருப்பதால் ஸ்க்ரீன் கட்டி சினிமாதான் போடுகிறார்கள். மயிலாட்டம், ஒயிலாட்டம் எல்லாம் கிடையாது. ஓரோரு வருஷம் மட்டும் கரகக்காரர்களைக் கூப்பிட்டு நிகழ்ச்சிகள் நடத்தினார்கள். பௌராணிகர்களும், உபன்யாசகர்களும் அருகிப் போயிருந்தார்கள் அல்லது அவர்கள் சொல்வதைக் கேட்க மக்களுக்கு நேரமில்லை. முதலில் சம்பூர்ண ராமாயணம், தெய்வம், திருமகன், புரந்தரதாசர், ராகவேந்திரா  என சாமி, புராணப் படங்களாகப் போட்டார்கள் . பின் தேய்ந்த வருடங்களில் டப்பாங்குத்து டான்ஸ்களோடு புதுப் புதுச் சினிமாக்கள் கோயில் வாசலில் கலர் கலராய் ஆடிக் கொண்டிருந்தன திரையில். கமலாம்பிகையும் மக்கள் விருப்பமே தன் விருப்பம் என சினிமாவுக்கு ஒத்துக் கொண்டது போல மௌனமாகப் புன்னகைத்தபடிதான் இருந்தாள்.

அவளுக்கென விருப்பம் இருக்கிறதா என்ன.. முன்னெல்லாம் பிரசாதத்தைப் படைத்து வருபவர்கள் கை நிறைய நெய்யோடு சர்க்கரைப் பொங்கலோ, கேசரியோ, புளியோதரையோ கொடுப்பார்கள். சூடும் சுவையுமாய் தின்று கழுவியபின்னும் கை மணத்துக் கொண்டிருக்கும். இப்போது அவள் பேர் சொல்லிக் காண்பித்துவிட்டு  சுவையற்றுக் கிடக்கும் அதைப் பாக்கெட்டில் போட்டு விலைக்கு விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

காலையில் இருந்து தலை வலித்துக் கொண்டிருந்தது செங்கமலம் பாட்டிக்கு. டாக்டரிடம் காண்பிக்க செல்வத்தை வரச்சொல்லி இருந்தாள். அவன் டிவிஎஸ் எக்ஸெலில் கூட்டிச் சென்று டாக்டரிடம் காண்பித்து மருந்து வாங்கிக் கூட்டி வருவான். அவ்வப்போது அவனுக்கு பட்ஜெட்டில் துண்டு விழும்போதெல்லாம் பாட்டியிடம் கைமாத்து வாங்கிக் கொள்வான். சரியாகத் திருப்பித் தந்ததாகச் சரித்திரமே இல்லை. பாட்டிக்குச் செய்யும் செலவை மட்டும் சரியாகக் கணக்கெழுதி வாங்கிக் கொள்வான், பெட்ரோல் முதல் கொண்டு. பாட்டியும் தனக்குச் செய்ய யாரிருக்கிறார்கள் என ரொம்பக் கணக்குப் பார்க்காமல் கேட்ட தொகையைக் கொடுத்து விடுவாள். புருஷன் போட்டு வைத்த பணம் போக பேத்தியும் பணத்தை அனுப்பிக் கொண்டிருக்கிறாள்.

பேத்தியை நினைத்ததும் பெருமையில் பூரித்தது மனது அவளுக்கு. படையலுக்காக சாம்பார் பொடி அரைக்க வெய்யிலில் மிளகாய் மல்லி காயவைத்தபடி உட்கார்ந்திருந்ததால் அவளிடமிருந்து காலையில் வந்த கடிதத்தைப் படிக்கவில்லை பாட்டி.

செல்வம் வருவதற்குள் படித்துவிடலாம் எனக் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு முற்றத்தின் பக்கம் சென்று தூணைப்பிடித்தபடி கீழ் வாசலில் காலைத் தொங்கவிட்டு அமர்ந்து கடிதத்தைப் பிரித்தாள் பாட்டி.

பாட்டி, உனக்கு நான் குலதெய்வம் படையலுக்கு வரணும்னு ஆசை. . ராஜ் ஒரு மாசம் அமெரிக்காவுக்குப் போறார். அங்கே ஒரு ப்ராஜெக்ட். ஜ்யோத்ஸ்னாவுக்கும் ஸ்கூல் கட் பண்ண முடியாது. இண்டர்நேஷனல் சிலபஸ் உள்ள அருமையான ஸ்கூல். நான் மட்டும் கூட எப்பிடியாவது வந்திட்டு வரலாம். ஆனா பாட்டி நான் அவளை விட்டுட்டு வர விரும்பலை.

என் படிப்புக்கும் மார்க்குக்கும் வெளிநாடுகளில் டாலர் கணக்கில் நிறைய சம்பளம் தர்றதா சொன்னாங்க. ஆனா அப்போ நான் ஜ்யோத்ஸ்னாவை உண்டாகி இருந்த நேரம். இருந்த வேலையையும் விட்டுட்டு அவள் பிறந்து ப்ளேஸ்கூல் போக ஆரம்பிச்சதும் கம்பெனிக்காரங்க ரொம்பக் கேட்டுக்கிட்டதால வீட்டிலிருந்தபடியே வேலை செய்துகிட்டு வர்றேன்.

உனக்கு ஞாபகம் இருக்கலாம் நீ கோயிலுக்கோ வெளியிலயோ போயிட்டு வரும்போதெல்லாம் நான் மூஞ்சியைத் தூக்கி வைச்சுக்கிட்டு உன்கிட்ட சரியாப் பேசவே மாட்டேன். நீ பக்கத்துல இருக்க அழகேசன் கடையில விட்டுட்டுப் போவே. அவர் மடியில உக்கார வைச்சுக்கிறேன்னு சொல்லி எல்லா இடத்திலும் தொடுவார். நான் கோபமா கையைத் தட்டினா கண்ட இடத்தில் நல்லா கிள்ளி வைப்பார். தேள் கொட்டுனா மாதிரி எரியும்.

ஒரு நாள் நான் கோவமா வீட்டுக்கு ஓடி வந்துட்டேன். அப்போவெல்லாம் செல்வம் அண்ணே வீட்டுக்கு வந்து துணை இருக்கும். ஒரு நாள் அதுவும் நானும் ஆளுக்கொரு லைப்ரரி புக் படிச்சிட்டு இருந்தோம். திடீர்னு பக்கத்துல வந்து கட்டிப் பிடிச்சு முத்தம் கொடுக்குறேன்னு கன்னத்துல கடிச்சு வச்சிருச்சு. கோபத்தோட பிடிச்சுத் தள்ளுனா நகர விடாம அடுப்பாங்கரைப் பரண்கிட்ட சுவத்தோரமா சாய்ச்சு உடம்புமேல உடம்பை வைச்சு அழுத்துச்சு. பெரிய சைஸ் மரவட்டை உடம்புல ஊர்றமாதிரி இருந்துச்சு. திருவிழாவுக்கு நீ காய் அரிய வைச்சிருக்கிற இரும்பு அருவாமணை பரண்ல தலைகீழா சொருகி இருந்துச்சு. வெடுக்குன்னு உருவி விட்டுடு செல்வண்ணேன்னு சொல்லித் தள்ளிவுட்டேன். லேசா அதுங்கையில கீறி ரத்தம் வர ஆரம்மிச்சுருச்சு. கீழே விழுந்த அது பயந்து ஏந்திருச்சு வீட்டுக்குப் போயிருச்சு. அதுக்கப்புறம் நீ வெளிய போனா நான் கதவைத் தாப்பா போட்டுக்கிட்டுத் தனியா இருக்கக் கத்துக்கிட்டேன்.

நீ ஒரு நாள் சீராளனைப் பிள்ளைக் கறியாக சமைச்ச கதையைச் சொன்னே. கடவுள் வந்து அவனை உயிர்ப்பிச்சாருன்னு. இங்கே இந்தச் சூழ்நிலையில நாமதான் நம்மளை உயிர்ப்பிச்சுக்கணும். கடவுள் என்பதே நம்மோட தன்னம்பிக்கைதான். தன்னம்பிக்கை உயிர்பெற்று எழும்போதெல்லாம் நாம எதையும் சாதிக்கும் துணிச்சலை அடையிறோம்.

ஜ்யோத்ஸ்னாவுக்கு ஏழு வயசுதான் ஆவுது. இங்கேயும் குடும்ப நண்பர்கள் நிறையப்பேர் இருக்காங்க. எல்லாரும் நல்லவங்கதான். ஆனா சந்தர்ப்பம் எப்பிடி இருக்கும்னு சொல்ல முடியாது. அவளுக்கு இன்னும் கொஞ்சம் விவரம் தெரிஞ்ச பின்னாடி நான் அவளைத் தனியா விட்டுட்டு வருவேன். தனியா இருக்கக் கத்துக்கிட்டா அல்லது தனியாவே வரக் கத்துக்கிட்டா அவளே உன்னைப் பார்க்க இவ்ளோ தூரத்திலேருந்து தனியா வருவா. கமலாம்பிகைகிட்டயும் குலதெய்வத்துக்கிட்டயும் எங்களுக்காகவும் சேர்த்து சாமி கும்பிட்டுக்க.

மஹிஷாசுரமர்த்தினிதான் துர்க்கை ரூபத்துலயும் உன் அன்பு வடிவத்துலயும் எனக்கு என்னிக்கும் துணை இருக்கா பாட்டி , அன்பு முத்தங்களுடன் கம்லா ராஜ்கோபால்.”

கடிதத்தைப் பாட்டி படித்து முடிக்கவும் வாசலில் நிழலாடியது.  டாக்டர் வீட்டுக்கு அழைத்துப் போக செல்வம் வந்திருந்தான். 

டிஸ்கி :- இந்தக் கதை அக்டோபர் 2014 பெண்கள் ராஜ்ஜியத்தில் வெளியானது. 
 

7 கருத்துகள்:

  1. கதை அருமை. பாராட்டுகள்.

    //இந்தக் கதை அக்டோபர் 2014 பெண்கள் ராஜ்ஜியத்தில் வெளியானது.//

    மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். :)

    பதிலளிநீக்கு

  2. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    பதிலளிநீக்கு
  3. நன்றி கோபால் சார்

    நன்றி தனபாலன் சகோ

    மே தின வாழ்த்துகள் புதுவை வேலு சகோ

    பதிலளிநீக்கு
  4. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு
  5. கதை அ;ருமை! அதுவும் அந்த செல்வம், அழகேசன் குணங்கள் அந்தக் கடிதத்தில் வெளியானது ட்விஸ்ட்.....முடிவு ஹா....அருமை...பாட்டி கண்டிப்பாக அதன் பிறகு செல்வத்துடன் போவதையும், பணம் கொடுப்பதையும் நிறுத்தியிருப்பார்....

    பதிலளிநீக்கு
  6. ஆமாம் துளசி சகோ.. பாட்டியை துர்க்கையாக்க நினைத்தேன். வாசிப்பவர்கள் துர்க்கையாய் துவம்சம் செய்யட்டும் என விட்டு விட்டேன் :)

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...