எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 20 மார்ச், 2017

இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும் - ஒரு பார்வை.

ராமனுக்கு நிகராகவும் ஒரு துளி அதிகமாகவும் கம்பனே மாந்தி மயங்கிப் புகழும் ஒரு பாத்திரமும் கம்பராமாயணத்தில் உண்டென்றால் அது இராவணன்தான்.  அ. ச. ஞான சம்பந்தனாரின் இராவணனின் மாட்சியும் வீழ்ச்சியும் படித்தேன். சில கருத்துக்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

மாட்சி பற்றிக் கூறும்போது இலங்கையின் மாட்சி பற்றியும் , அவன் செய்த பாவம் அல்லவாம் , “குலஞ்செய்த பாவத்தாலே கொடும்பழி தேடிக்கொண்டான் “என்றும்  “இந்திரப் பெரும்பதம் இழந்தான் “, “இடிக்குநர் இல்லான் “, ”நாளை வா எனப்பட்டான் “ எனவும் வருந்துவது, ”வெலற்கு அரியான்” எனக் கம்பன் பெருமிதம் கொள்வது கூறப்பட்டுள்ளது. அதே போல் தீமை வரும் விதம் அதை அவன் எதிர்கொள்ளும் விதம் எல்லாம் சிறப்பாக ஆய்வு செய்யப்பட்டிருக்கும் இந்நூல் ஒரு பொக்கிஷம்.

வில்லன்களைப் புகழும் சினிமாக்களைப் பார்த்திருப்பீர்கள். உண்மையிலேயே கதாநாயக அந்தஸ்துப் பெற்றிருந்தும், செம்மையான வாழ்வு அமைந்திருந்தும் கூடா எண்ணத்தினால் கேடு அடைகிறான் இராவணன். அதுவும் அவனாக அடைவதில்லை. அவன் சகோதரியாக இருக்கும் சூர்ப்பனகை தன் கணவனைத் தமையன் பொருட்டு இழந்த காரணத்தால் அவள் கோபத்தின் வழி இதெல்லாம் நேர்கிறது என்பது சுட்டப்படுகிறது.

அயோத்தி போல் இலங்கையின் வளமை, மயன் சமைத்த லோகம் , மேலும் ராமனுக்கு ஈடாக கம்பநாடன் இராவணனையும் கருதுகிறான் என இவ்வளவு பெருமைகள் பெற்றிருந்தும் என்ன, உளநலன் கெட்டதால் ஊறு விளைந்து அழிந்தானே என எண்ணும்போது நம்முள்ளும் அவலச் சுவை மிகுகிறது. ராவணன் பற்றிய ஒவ்வாத கருத்துக்கள் கொண்டிருந்தாலும் அந்த அவலச் சுவையை படிக்கும் ஒவ்வொருவரிடமும் உருவாக்குவதால் காப்பியத்தின் மேன்மை அதி உன்னதம் அடைகிறது.

அவலங்கள் ஏற்படும் விதம் பற்றியும், சாதாரண மனிதருக்கும் காப்பியத்தலைவர்களுக்கும் ஏற்படும் அவல நிகழ்வுகளின் வித்யாசத்தைப் பற்றியும்  பிரித்து உரைக்கிறார் அ. ச. ஞா அவர்கள் . மேலும் ஒருவரிடத்தே உள்ள இரு தனிப் பண்புகளுக்குமிடையே  ( காமமும் மானமும் ) இருக்கும் பேதத்தால் உருவாகும்  அவலத்தில் உள்ள வித்யாசத்தையும் பகுத்துக் காட்டியிருக்கு விதம் அற்புதம்.

முழுமையும் நல்லவர்களுமில்லை, முழுமையும் அல்லவர்களுமில்லை என்ற கருத்தையும் ஆணித்தரமாக நிறுவி இருக்கிறார் ஆசிரியர். பிறன் மனை நயத்தல் என்ற குண மாறுபாடு ஒன்றே அவனைக் கீழ்மை நிலையில் தள்ளுகிறது. கும்பகர்ணன், விபீஷணன், இந்திரஜித் ஆகியோர் இராவணன்மாட்டுக்  கொண்ட பெருமித எண்ணங்கள் ஆங்கங்கே வெளிப்படுகின்றன. அதே போல் அவனை நேர்ப்படுத்த சகோதரர்கள் இருவரும் முயன்றும் தோற்கின்றனர். ” சிட்டர் செயல் செய்திலை குலச்சிறுமை செய்தாய் ” ” அன்றொழிவ தாயினது அரக்கர் புகழ் ஐய “என வருந்தும் கும்பகர்ணன் சகோதரன் பக்கமே உறுதுணையாயிருக்கிறான். வீடணன் எதிர்க் கருத்துக் கொண்டிருக்கிறான் என்றறிந்தும் அவனைப் போகவிட்டது ராவணனது பெருந்தன்மை என்றும், தூய்மையான அன்பு என்றும்  கூறுகிறான் கம்பன்.

“மூன்று கோடி வாணாளும் , முயன்று பெற்ற பெரிய தவமும், முதல்வனால் முன்னாளில் எக்கோடி யாராலும் வெல்லப்படாய் என்று கொடுக்கப்பட்ட வரமும் , உலகனைத்தையும் செருக்கடந்த புயவலியும் “ என ராவணனது பெருமையைக் கம்பநாடன் வியந்து எழுதுகிறான். தவ வலிமையும் ஆண்மையும் மிக்க அவன் நற்பண்புகள் அழிய அழிய வில்லனிலும் மகா வில்லன், வில்லாதி வில்லன் என்ற பதம் அடையக்கூடியவனாகிறான் இராவணன். பகை வலிமை அறியாமல் மானிடன் தானே என ராமனை இகழ்ச்சியாக எண்ணியே மேலும் மேலும் துன்பத்தை வரவழைத்துக் கொள்கிறான் இராவணன். ஆனால் ஒரு போதும், இழிதகமை ஏற்பட்டாலும் முன் வைத்த காலைப் பின் வைப்பதில்லை. கம்பன் இவ்வாறெல்லாம் முயன்று அவனை மெகா வில்லனாக உருவாக்குகிறான்.

கல்வியும் அறிவும் அவனை நேர்ப்படுத்தவில்லை. உற்றார் சுற்றார் பேச்சைக் கேட்கவில்லை, மகனது அழிவையும் பொருட்படுத்தவில்லை. தமையன்களின் எச்சரிக்கையும் கைக்கொள்ளவில்லை என தவறு மேல் தவறாகச் செய்துகொண்டே போய் முடிவில் அழிந்து படுகிறான். இதை ஆசிரியர் படிப்படியாக நிறுவிக்கொண்டே செல்கிறார், தீமையின் முதற்படி, வளர்ச்சி, முற்றுதல் என.

உரையாடலை நிறுத்த இயலாமல் ”அந்தணர் பாவை நீ; நான் அரசரின் வந்தேன் “ என்று சூர்ப்பனகையிடம் கூறுமிடத்தும், சகோதரனின் எச்சரிக்கையை விடுத்து மனைவிக்காக மாயமானைத் துரத்துவதிலிருந்து, மறைந்திருந்து வாலியைக் கொன்றது வரை பல்வேறு குற்றங்கள் ராமன் பாற்பட்டிருந்தாலும் குற்றங்களின் வீர்யத்தைப் பொருத்தவரை ராமனை விட அதிக அளவில் ராவணனே குற்றவாளி ஆகிறான். பஞ்சமா பாதகங்களில் ஒன்றான ‘பிறன்மனை நயத்தல்’ தவறு என இடித்துரைப்பார் யாருமில்லாமல் கெடுகிறான். இதை ஹேகல் ஆகியோரின் அவலத் தத்துவத்தோடு ஒப்புமை வேற்றுமை கூறிச் செல்வது சிறப்பு. தாயுமானவர், பாரதியார், திருக்குறள், வில்லிப்புத்தூரார் பாரதம், சிலப்பதிகாரம் ஆகியவற்றிலிருந்து தகுந்த மேற்கோள்கள் எடுத்துச் சுட்டப்படுகின்றன.

இந்திரஜித்தின் மரணத்திற்குப் பின்பு

 “ சினத்தொடும் கொற்றம் முற்றி இந்திரன் செல்வம் மேவி
நினைத்தது முடித்து நின்றேன்; நேரிழை ஒருத்தி நீரால்
எனக்குநீ செய்யத் தக்க கடனெல்லாம் ஏங்கி ஏங்கி
உனக்குநான் செய்வ தானேன்; என்னின்யார் உலகத் துள்ளார்!. ( கம்பன் - 9224 )

இதை படிக்கும்போது கண்கள் கசிய ஏற்படும் இழிவரல் சொல்லில் அடங்காதது. 

எவ்வளவு சிறப்பிருந்தும் பிறன்மனை நயத்தல் என்னும் கொடும் எண்ணத்தாலும் காமத்தாலும் அழிந்து பட்டான் இராவணன் என்பதை இந்நூல் சிறப்புற நிறுவுகிறது. திருவிக, தெபொமீ ஆகியோர் இதற்கு சிறப்புரை, முன்னுரை வழங்கி இருக்கிறார்கள். !. மற்ற இராமாயணங்களில் இல்லாதபடிக்கு உயர்ந்தோன் ஒருவனை அதி அற்புதமாக உருவாக்கி அவனது மாபெரும் வீழ்ச்சியைப் படிப்படியாகக் கம்பன் தனது மொழிமாட்டு உருவாக்கிச் செல்வதை விவரிக்கும் இந்நூலை வாசித்துப் பாருங்கள்.  கம்பன் இராவணன்பால் கொண்ட பெருவிருப்பும் பெருங்காதலும் பெருஞ்சோகமும் நம்முள்ளும் வழியும்.

நூல் :- இராவணன் மாட்சியும் வீழ்ச்சியும்
ஆசிரியர் :- அ.ச. ஞானசம்பந்தன்
பதிப்பகம் :- கங்கை பதிப்பகம்.


விலை ரூ. 60/-




6 கருத்துகள்:

  1. .....எங்களின் இந்த வருடக் குறும்படம் வாரியர் த க்ரேட்.... ராவணனைப் பற்றியது....

    பதிலளிநீக்கு
  2. நாடகக் கலைஞர் ஆர் எஸ் மனோகரின் இலங்கை வேந்தன் நினைவுக்கு வந்தது இத்தருணத்தில் ராவணன் பற்றிப் பல வேறு கருத்துகள் பல்வேறு ராமாயணங்களில் வருகிறது ஞான சம்பந்தனாரின் நூலை முயன்றுபடிக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  3. அமரர் அ.ச.ஞானசம்பந்தன் அவர்களைப் பலமுறை கம்பன் கழக மேடைகளில் கண்டிருக்கிறேன். இராவணன் மாட்சியும்..என்ற இந்த நூலை க் கல்லூரி நாட்களில் பலமுறை படித்திருக்கிறேன். இந்த நூலும், அவருடைய நண்பரும் எனது உறவினருமான (அமரர்) டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணனின் 'சிறியன சிந்தியாதான்', 'கற்பின் கனலி' ஆகிய நூல்களும் எனக்கும் கமபரமாயனத்தை ஆழ்ந்து படிக்கும் வேட்கையை உண்டாக்கின. நல்லதொரு நூலை நினைவூட்டியதற்கு நன்றி!

    - இராய செல்லப்பா நியூஜெர்சி

    பதிலளிநீக்கு
  4. நன்றி ஜம்பு சார்

    நன்றி துளசி சகோ. அட்வான்ஸ்ட் வாழ்த்துகள்

    நன்றி பாலா சார்

    நன்றி செல்லப்பன் சார்

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

சும்மா ( பத்தி ) உங்க கருத்தையும் பதிவு செய்ங்க :)

Related Posts Plugin for WordPress, Blogger...